ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

François Ruffin runs populist campaign in Amiens for France’s legislative election

பிரான்சுவா ரூஃபான் பிரான்சின் நாடாளுமன்ற தேர்தலுக்கு அமியான் இல் ஜனரஞ்சக பிரச்சாரம் மேற்கொள்கிறார்

By Antoine Lerougetel
17 June 2017

திரைப்பட இயக்குநரான பிரான்சுவா ரூஃபான் (François Ruffin) நாளை நடைபெறவிருக்கும் பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் சுற்றில், வடக்கு பிரான்சில் அமியான் ஐ சுற்றியிருக்கும் ஒரு தொகுதியில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் குடியரசை நோக்கி முன்னேறுவோம் (LREM) கட்சியின் வேட்பாளரான நிக்கோலோ டுப்போனுக்கு எதிராக போட்டியிடுகிறார். சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் அமைச்சரும் அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் தலைவருமான ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியோரின் ஆதரவு இவருக்கு உள்ளது.

ஒரு “எதிர்க்கட்சி” ஆளுமையாக ரூஃபானின் செல்தகைமை எத்தனை இழிவானதாக இருக்கிறது என்பது தொலைக்காட்சியில் மக்ரோனுக்கு வாக்களிப்பதை அவர் வழிமொழிந்தார் என்ற உண்மையால் அடிக்கோடிடப்படுவதாய் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் மெலோன்சோன், மக்ரோனை தான் ஆதரித்தார் என்பதை தெளிவாகக் காட்டினார் என்றாலும் கூட மக்ரோனையோ அல்லது தேசிய முன்னணியின் வேட்பாளரான மரின் லு பென்னையோ உத்தியோகபூர்வமாக வழிமொழிய மறுத்து விட்டிருந்தார் என்ற நிலையில், ரூஃபான் கூறினார்: “நான் வாக்குப் பெட்டியில் அளிக்கும் வாக்கு இமானுவல் மக்ரோனுக்காய் தான் இருக்கும்.” ஆயினும் “அடுத்த நாள் காலையிலேயே நான் மக்ரோனுக்கு ஒரு உறுதியான எதிரியாக இருப்பேன், ஏனென்றால் அவர் இந்தப் பகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்வார் என்று நான் கருதவில்லை.”

ரூஃபான் ஒரு வெற்றிகரமான சுதந்திரமான திரைப்பட இயக்குநராவார், க்ளூர் குடும்பத்தின் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்து கொண்டு அவர்களை வேலையிலிருந்து நீக்கிய தொழிலதிபர் பேர்னார்ட் அர்னோல்ட்டை கூனிக்குறுகச் செய்வதாக இருந்த அவரது மேர்சி பத்ரோன் (நன்றி முதலாளி) படம் சீசர் விருதை வென்றது. அவரது படத்தின் வெற்றி ஒருபக்கம் இருப்பினும், ரஃபானின் தேர்தல் போட்டி என்பது பழைய PS உடன் தொடர்புடைய —PS சிதறி இன்னும் அதிக வலது-சாரியான, தடையில்லா வாணிப வேலைத்திட்டத்தை முன்வைக்கும் LREM இனால் உறிஞ்சப்படுகிறது என்ற போதும்— அரசியல் ஸ்தாபகத்துடன் நெருக்கமாகப் பிணைந்ததாகும், அது தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு புதிதாக எதுவொன்றுமில்லை.

உண்மையில், அமியான் பிராந்தியத்தில் தொழிற்துறைமயத்தின் சிதைவை மேற்பார்வை செய்த PS மற்றும் அதன் கூட்டாளியான PCF ஐ பல தசாப்தங்களாக சுற்றிச் சுழன்று வந்த பல்வேறு அரசியல் சக்திகளின் திவால்நிலையையே இது எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது. ரூஃபான் போட்டியிடும் தொகுதியில் அமியான் மற்றும் ஆப்வில் இன் பெரிய நகரங்களும் நீயேவ்ர் பள்ளத்தாக்கின் முந்தைய தொழிற்துறை கிராமங்களது ஒரு வரிசையும் வருகின்றன, இவை அனைத்தும் PCF இன் கோட்டைகளாக இருந்தவையாகும். 2011 வரை இத்தொகுதி PCFக்கு வாக்களிப்பதையே வழக்கமாய் கொண்டிருந்தது.

1980கள் மற்றும் 1990களின் போதான சிக்கன நடவடிக்கைத் திட்டங்களில் PS உடன் PCFம் நெருங்கி வேலை செய்தநிலையில், இந்தப் பகுதியின் தொழிற்சாலைகள் 1970களின் முடிவு முதலாகவே மூடப்படத் தொடங்கின. அமியானில் Goodyear தொழிற்சாலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பாய் மூடப்பட்டது, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களாலும் PS மற்றும் PCF ஆகியவையாலும் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது அங்கிருக்கும் Whirlpool மற்றும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்படும் அச்சுறுத்தலை முகங்கொடுக்கின்றன.

பல தசாப்தங்களாக, அமியானிலும் வடக்கு பிரான்சின் பழைய தொழிற்துறைப் பேட்டைகள் எங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் சமூக துன்பம் தொடர்ந்து ஆழமடைந்து சென்ற நிலையிலும் எந்த அரசியல் போக்கும் ஒரு இடது-சாரி இயக்கத்தைக் கட்டியெழுப்ப முனையவில்லை. இது இந்தப் பிராந்தியமெங்கிலும் நவ-பாசிச தேசிய முன்னணி செல்வாக்கையும் வாக்குகளையும் பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கியது.

PSக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்துச் சென்ற நிலையிலும் கூட இந்த சக்திகள் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப திறனற்றவையாக இருந்தன என்றால், அதற்குக் காரணம், தொழிலாளர்களை செவிமடுக்கச் செய்ய அவற்றுக்கு சாத்தியமில்லாமல் இருந்தது என்பதால் அல்ல, மாறாக PSக்கும், மக்ரோனுக்கும், அவர்களைப் போன்ற சக்திகளுக்கும் எதிரான ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் விரும்பவில்லை என்பதேயாகும். PS மற்றும் அதுபோன்ற பிற்போக்கு சக்திகளுடன் தங்களையும் உடனிருக்க அனுமதிக்கின்ற வகையில், தொழிலாளர்கள் மத்தியில் வரம்புபட்ட செவிமடுப்பை மட்டும் வெல்வதற்கே அவர்களது ஜனரஞ்சக வாய்வீச்சு நோக்கம் கொண்டிருக்கிறது.

ஆயினும் ரஃபானின் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை அமைத்துத் தரும் நோக்கமுடையதாக இல்லை. அரசியல் அமைப்பின் கைகளில் சிக்கி ஏழை மக்கள் தவறாக நடத்தப்படுவதை இன்னும் நிறைய அம்பலப்படுத்துகின்ற ஒரு குத்திக்காட்டுபவராய் சேவைசெய்வதற்கு வாக்குறுதிகள் மற்றும் ஜனரஞ்சகமான விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆதரவை வென்றெடுக்க அவர் விரும்புகிறார். அவரது பிரச்சாரம் PCF, பசுமைக் கட்சி மற்றும் இதேபோன்ற போலி-இடது சக்திகள் உருக்குலைவதை தடுக்க முனைகின்ற அதேநேரத்தில், FN அதன் வாக்கு வங்கியை வலுப்படுத்துகின்ற நிலையில் அதனுடன் கூடிசெயல்படுவதற்கான ஒரு அடிப்படையையும் செய்து கொண்டிருக்கிறது.

சென்ற மாதத்தில், ரூஃபான் அவரது FN போட்டியாளருடன் ஒரு காப்பி அருந்துமிடத்தில் கைகுலுக்கிக் கொள்ளும் காணொளி எடுக்கப்பட்டது, இருவரும் புகைப்படம் எடுக்கப்படுவதற்கும் உடன்பட்டிருந்தார்கள்.

.அமியானில் இருந்து வெளியாகும் அவரது நையாண்டி இதழான ஃபக்கீர் (Fakir) இல் அவர் தனது பிரச்சாரத்தை தொடக்கிய சமயத்தில், பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை சூறையாடி வந்திருந்த அரசியல் கட்சிகளுக்கு அவர் அனுதாபம் காட்டுவது குறித்து எந்த கூச்சத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர் எழுதினார்: “முன்னதாக PCF மற்றும் PSக்கு வாக்களித்திருந்த ஒவ்வொரு இடத்திலுமே, இப்போது FN முன்னிலையில் இருக்கிறது, சென்ற பொதுத் தேர்தலில் 35 சதவீதம். கம்யூனிஸ்ட் பட்டியலில் 6.5 சதவீதம் தான், பசுமைக்கட்சிக்கு 5 சதவீதம். எத்தனை திகைப்பூட்டுவதாய் இருக்கிறது!”

இந்த சூழ்நிலைக்கு பிரான்சின் முந்தைய ஜனாதிபதி PS இன் பிரான்சுவா ஹாலண்டின் மீது அவர் குறைகூறினார், ஹாலண்ட் அவர் வாக்குறுதியளித்திருந்த விதத்தில் வங்கிகளுக்கு எதிராகப் போராடவில்லை என்றும் தேசிய நாடாளுமன்றத்தில் இருந்த PS பிரதிநிதிகளும் அதை எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறினார். “ஏனென்றால் பிரதிநிதிகள் ஹாலண்டை ஆதரித்தனர். ஏனென்றால் அவர்கள் தங்கள் பிரச்சார வாக்குறுதிகளைக் கைவிட்டனர். ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்தை பதவியிறக்கவில்லை.” PS உடன் இணைந்த கட்சிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் “பந்தம் முறிந்து விட்டது, விவாகரத்து பூர்த்தியாகி விட்டது” என்றாகியிருக்கும் ஒரு நிலையை தலைகீழாக்குவதே அவரது நோக்கம் என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

தான் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கவில்லை என்று வலியுறுத்திய அவர், மாறாய் “யுத்த காலத்திற்கு, ஒரு குழுவை உருவாக்கி, அதனை ஒன்றாய் ஒட்டவைத்து, புயலில் தோளுடன் தோள் நின்று, அந்தத் தருணத்திற்கான மட்டுமான தோழமையாக” இருக்கக் கூடிய ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்ததாகக் கூறினார். இத்தகைய ஒரு “சாகசம்” ஊடகங்களில் இன்னும் பரவலான தோற்றத்தை உருவாக்கவும் இன்னும் சொந்தமாய் தனக்கென ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது வானொலி நிகழ்ச்சியைப் பெறவோ கூட அனுமதிக்கக் கூடும் என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

அவருக்கு வாக்களிக்க யோசிக்கும் எவரொருவருக்கும் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி சாத்தியமானது என்பதில் இருக்கக் கூடிய நம்பிக்கையை குறைப்பதற்கு ரூஃபான் தன்னால் இயன்ற அத்தனையையும் செய்கிறார், இந்த பிராந்தியமானது PS, PCF மற்றும் அவற்றுடன் தொடர்புடைய போலி-இடது போக்குகளுடன் நெருக்கமான உறவுகளைத் தொடர வேண்டும் என்று அவர் நம்புவதையும் தெளிவாக்கி விடுகிறார்.

பிரான்ஸ் இன்ஃபோ நேர்காணல் ஒன்றில், அவர் இந்தக் கட்சிகளுடன் சேர்ந்து வேலைசெய்யும் காரணத்தை இவ்வாறு விளக்கினார், “அவர்கள் எனக்கு அடிப்படை விவரங்களை, உதாரணத்திற்கு எனது பிரச்சாரக் கணக்குகளை பராமரிப்பது எப்படி என்பது போன்ற விவரங்களைக் கொண்டுவந்து தருவார்கள். அது எப்படி வேலைசெய்கிறது என்று எனக்கு எந்த விபரமும் தெரியாது. ஆனால் நான் எப்போதும் வேலை செய்வது அந்த வழியில் தான்: நான் முயற்சி செய்கிறேன். சினிமாவை அந்த வழியில் தான் செய்கிறேன், என்னுடைய சிறிய கேமராவைக் கொண்டு, தானாகச் செய்யும் தீர்வுகளைக் கொண்டு செய்கிறேன். இப்போது அரசியலிலும் ஆரம்பிக்கிறேன். நான் இம்சைப்படுத்த மாட்டேன் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.”

அபேவில் இல் நடந்த சமீபத்திய தேர்தல் கூட்டத்தில், ரூஃபான் FN இன் எழுச்சி குறித்தோ அதற்கு எதிராய் எப்படிப் போராடுவது என்பது குறித்தோ வாயே திறக்கவில்லை. FN நிர்வாகிகளுடன் அவர் கைகுலுக்கிக் கொண்டது பிரச்சினையே அல்ல என்பதைப் போல அணுகப்படுகிறது. அந்தக் கூட்டம் அடிப்படையில் மக்ரோன் ஆதரவுக் கூட்டமாய் இருந்தது. ரூஃபான் அவர் மீதான எந்த விமர்சனத்திலும் இறங்கவில்லை. பிரதான பேச்சாளரான, அவசரகால மருத்துவர்களது தொழிற்சங்கத் தலைவரும் நையாண்டி இதழான சார்லி ஹெப்டோவில் முன்னாளில் பங்களிப்பு செய்து வந்திருந்தவருமான, Patrick Pelkoux,  அறிவித்தார்: “குடியரசின் ஜனாதிபதிக்கு எதிராக நாங்கள் சொல்ல ஏதுமில்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டிருக்கிறார், ஆனால் சமூகம் மானுடத்திற்கே முதலிடம் தரவேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள், ஒன்றாக வாழும்படி ஆக்கப்பட்டவர்கள்.”

ஊடக அறிக்கைகள் கொடுப்பதற்கு இன்னும் ஒரு பெரியதான மேடையை ரஃபானுக்கு கொடுப்பதைத் தவிர, ரூஃபான் வெற்றி பெற்றால் தொழிலாளர்களுக்குக் கிடைக்கக் கூடியதாக, அவரது பிரச்சார அறிக்கைகளில் எதுவொன்றுமில்லை. ஒரு சமீபத்திய பிரச்சார துண்டறிக்கை பிரகடனம் செய்தது: “தேசிய நாடாளுமன்றத்தில் நான் மும்முரமாய் செயல்படுபவனாக இருப்பேன்...அவையில் பிரதிநிதிகளை தூங்க விடாமல் செய்கின்ற ஒரு கொசுவாய் இருப்பேன்.”