ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amazon pays warehouse workers $233 per month in India

இந்தியாவில் அமேசன் நிறுவனம் சேமிப்பு கிடங்குத் தொழிலாளர்களுக்கு 233 டாலர் தொகையையே மாத ஊதியமாக வழங்குகிறது

By Sasi Kumar and Moses Rajkumar
28 June 2017

ஜூன் 25 அன்று, வாஷிங்டன் DC இல் அமேசன் தலைமை நிர்வாக அதிகாரி (Amazon CEO) ஜெஃப் பெஸோஸ் ஒரு டஜன் ஏனைய பெருநிறுவன தலைவர்களுடன் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியை சந்தித்தார். கூட்டத்திற்குப் பின்னர், அது “மகத்தான” கூட்டமாக இருந்ததாகவும், “இந்தியாவின் நன்னம்பிக்கை மற்றும் கண்டுபிடிப்புக்களினால் அவருக்கு புத்துணர்வூட்டப்பட்டதாகவும்” பெஸோஸ் ட்வீட் செய்தார். மேலும், 2013 இல் தொடங்கப்பட்டு, இந்தியாவில் செயல்பட்டுவரும் அதன் நிறுவனங்களில் அமேசன் ஏற்கனவே செய்துள்ள முதலீடான 5 பில்லியன் டாலர் ($5 billion) தொகையினை அதிகரிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அமேசன் நிறுவனம் இந்தியாவில் வேலை செய்வதில் மகிழ்ச்சியடைகிறது, ஏனென்றால் அதனால் தொழிலாள வர்க்கத்தை சுரண்டவும் அதன் தொழிலாளர்களை பட்டினி நிலையில் வைக்கும் சம்பளங்களை வழங்கவும் முடிகிறது. சர்வதேச அமேசன் தொழிலாளர்கள் குரல் (International Amazon Workers Voice - IAWV) இந்திய அமேசன் தொழிலாளர்களுடன் பேசியது, அவர்கள் சேமிப்பு கிடங்குத் தொழிலாளர்களுக்கு வெறும் 233 டாலர் தொகையே ($233) மாத ஊதியமாக வழங்கப்படுவதாக கூறினார்கள்.

இந்தியாவில் 28 வயதான ஒரு அமேசன் தொழிலாளியான அப்துல் என்பவர் IAWV இடம், “பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டில் தொழிலாளர்களை மலிவு கூலியாக சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்ஸிலும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கின்றது, அங்கே அரசாங்கங்கள் தங்கள் நாடுகளில் வந்து முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை வழங்குவதாகவும் வாக்களித்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.


இந்தியாவில் உள்ள ஒரு அமேசன் ஏற்பாட்டியல் மையம்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பூகோள மின்-வணிக கூட்டு நிறுவனமான அமேசன் நிறுவனத்திற்கு, இந்தியா இரண்டாவது மிகப்பெரிய இணையதள மையமாக மாறியுள்ளது. இது 13 இந்திய மாநிலங்களிலுள்ள 41 பூர்த்தியான மையங்களுடன், நாடு முழுவதிலும் 35 மில்லியன் பொருட்களை விநியோகிப்பதாக கூறப்படுகிறது.

மாதத்திற்கு 233 டாலர் தொகையினையே சம்பாதிக்கும், பொருட்களை பெட்டியில் இட்டு நிரப்பும் தொழிலாளர்களை கொண்டு, இந்த இராட்சத பெருநிறுவனம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய ஆர்வம்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நிறைவான உணவு வகைகளை (Whole Foods) அமேசன் விலைக்கு வாங்கல் திட்டத்தை அறிவித்த பின்னர் ஜூன் மாத தொடக்கத்தில் ஒரே நாளில் மட்டும் பெஸோஸ் 2.8 பில்லியன் டாலர் தொகையினை சம்பாதித்துள்ளார். அதே அளவு தொகையினை ஒரு இந்திய அமேசன் தொழிலாளி சம்பாதிக்க 1,001,430 ஆண்டுகள் ஆகலாம்.

வெறும் 233 டாலர் தொகையினை ஒரு மாத வருமானமாகக் கொண்டு, உணவு, தங்குமிடம் மற்றும் பிற தேவையானவற்றை வாங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு மலிவான புதிய சிறிய காருக்கான விலையே 5,000 டாலர் ஆகவுள்ளது, அதாவது ஒரு சேமிப்பு கிடங்குத் தொழிலாளரின் வருடாந்திர ஊதியமான 2,796 டாலர் தொகையினை போல கிட்டத்தட்ட இருமடங்காகும்.

ஏப்ரல் 27 அன்று மாலையில், வேலை நேர வர்த்தகத்திற்கு பின்னர், ஒரு சில மணி நேர இடைவெளியில் ஜெஃப் பெஸோஸ் 3.3 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். பெஸோஸ் ஒரு நிமிடத்தில் சம்பாதித்த இந்த 24,000 டாலர் தொகையை ஒரு இந்திய அமேசன் சேமிப்பு கிடங்குத் தொழிலாளர் சம்பாதிக்க, அவர் ஆண் அல்லது பெண் எவரானாலும் 8 வருடங்களுக்கு உழைக்கவேண்டும், அதாவது இந்தியனின் சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பான 68 வருடத்தில் பத்தில் ஒரு பாகத்தை செலவிட நேரிடும். மற்றொரு வகையில் சொல்வதானால் ஒரு இந்திய அமேசன் சேமிப்பு கிடங்குத் தொழிலாளர் 7 வாரங்களில் சம்பாதிப்பதை பெஸோஸ் ஒவ்வொரு நொடியிலும் (396 டாலர்) வரையில்  சம்பாதிக்கிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமேசன் போக்குவரத்து சேவைகள் பிரைவேட் லிமிடெட் (Amazon Transportation Services Pvt. Ltd.) நிறுவனத்திற்கு IAWV நிருபர்கள் விஜயம் செய்தனர். 2014 இல் அமைக்கப்பட்ட இந்த மையம், ஒரு மேலாளர், அணித் தலைவர்கள் மற்றும் பொருட்களை பெட்டியில் இட்டு நிரப்பும் தொழிலாளர்களுடன் செயல்படுகின்றது. இதில் மேலாளருக்கு மாதத்திற்கு சுமார் 60,000 ரூபாய் ($932) வழங்கப்படுவதுடன், அணித் தலைவருக்கு கிட்டத்தட்ட 40,000 ரூபாயும் ($621), பொருட்களை பெட்டியில் இட்டு நிரப்பும் தொழிலாளருக்கு கிட்டத்தட்ட 15,000 ரூபாயும் ($233) வழங்கப்படுவதாக IAWV அறிந்துகொண்டது.

அமேசன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை சுரண்டுகிறது, அடிமட்ட மலிவான கூலிகள் மற்றும் குறைந்தபட்ச நலன்களை வழங்கும் போட்டியில் அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது.

ஒரு அமேசன் செய்தித் தொடர்பாளர் உற்சாகமாக இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் சந்தை குறித்து ஊடகங்களில் பின்வருமாறு கூறி பெருமைபட்டுக் கொண்டார்: “இந்தியாவில் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து நாங்கள் பெற்றுள்ள மிகப்பெரிய பதிலிறுப்பைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்காவிற்கு வெளியே அமேசனின் பல புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்தியா தற்போது மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்தியாவை ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையாக நாங்கள் தொடர்ந்து பார்ப்பதோடு, ஒரு நீண்ட கால கண்ணோட்டத்துடன் தொடர்ந்து வலிந்து முதலீடு செய்வதையும் தொடர்கிறோம்.

பல தொழிலாளர்களுக்கு 233 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுவதாக அப்துல் கூறினார்: “இங்கு அமேசன் நிறுவனம், போக்குவரத்துக்கு மகேந்திராவுடன் (ஒரு பெரிய இந்திய நிறுவனம்) ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. விற்பனையாளர்கள் மகேந்திரா நிறுவனத்திற்கூடாக வருகின்றனர். அமேசன் நிறுவனத்துடன் எங்களுக்கு எந்தவித நேரடித் தொடர்பும் கிடையாது. அமேசன் நிறுவனம் தொழிலாளர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யவேண்டுமென விரும்புகிறேன். ஆனால், நிறுவனம் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இருவருமே ஒப்பந்த தொழிலாளர்களை சுரண்டுவது தான் நடந்துகொண்டிருக்கிறது. நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தக்காரர்கள் தொகையை பெறுவதுடன், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைவாகவே ஊதியம் வழங்குகின்றனர். அவர்கள் மாத ஊதியமாக கிட்டத்தட்ட 12,000 ரூபாய் ($186) மட்டுமே பெறுகின்றனர்.”

தலைநகர் தில்லி, மேற்கில் மும்பை மற்றும் புனே, தெற்கில் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமேசன் நிறுவனம் மையங்களை அமைத்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே, இந்நிறுவனம் அதன் பெரிய வளாகமாக அறிவித்த ஹைதராபாத் மையத்தில் 14,000 க்கு நெருக்கமான தொழிலாளர்களும், பெங்களூருவில் கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்களும் உள்ளனர்.

ஒரு பத்திரிகை செய்தியின்படி, இந்தியாவுக்கென்று சிறப்பான கண்டுபிடிப்புகளில் அமேசன் முன்னிலை வகிப்பதுடன், பல புதிய செயல் திட்டங்களான கிரானா நவ், மளிகைக் கடை, உதான் திட்டம், விற்பவர்கள் மற்றும் அமேசன் வணிகத்திற்குமான ஒரு திறன் அபிவிருத்தி முன்னெடுப்பு, சிறிய மற்றும் நடுத்தர வணிக விநியோக கொள்முதலுக்காக ஒரு B2B மொத்தவியாபார சந்தைவெளி போன்றவற்றை எல்லாம் அறிமுகப்படுத்தியது.

ராயப்பேட்டை வசதியில், சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிறுவனத்தின் நேரடி சம்பளப் பட்டியலில் இல்லாதவர்கள். ஒவ்வொரு பணிசுழற்சியிலும் 90 தொழிலாளர்களைக் கொண்டு மூன்று பணிசுழற்சிகளுடன் இந்த மையம் செயல்படுகின்றது. 300 தொழிலாளர்களில், 90 பேர் ஒரு பணிசுழற்சிக்கு வருகிறார்கள்.

அமேசன் போக்குவரத்து சேவைகள் பிரைவேட் லிமிடெட் இன் 37 வயதான ஒரு வாகன ஓட்டுனரான ரங்கன் என்பவர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றியுள்ளார். அவர் வேலையிலுள்ள பரிதாபகரமான நிலைமைகள் பற்றி பின்வருமாறு உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தார்: “நாங்கள் ஒரு சாதாரண அல்லது மருத்துவ விடுப்பை எடுத்தாலும், எங்களுக்கு ஊதியம் தரப்படமாட்டாது. வார விடுமுறையும் கிடையாது. அமேசன் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே, சேமநல நிதி (Provident Fund-PF), பணியாளர் அரசு காப்பீடு (Employee State Insurance-ESI), ஊதியத்துடன் கூடிய விடுமுறை போன்ற சலுகைகள் பொருந்தும்.” தொழில்நுட்ப ரீதியாக இதற்கு தகுதியானவர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள சுமார் 60 பேருக்கு மட்டுமே இவை வழங்கப்படுகின்றது.

“போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவர்கள் நிர்வாக விருப்பத்தின் பேரில் நிரந்தரப் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், பல தொழிலாளர்கள் பணிச்சுமை மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக பணியிலிருந்து விலகியுள்ளனர்.”

இந்த இராட்சத பெருநிறுவனத்திற்கு எதிராக சமீபத்தில் ஒரு குறுகிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பாவை சார்ந்த அமேசன் தொழிலாளர்கள் உடனான ஒற்றுமையை ரங்கா வெளிப்படுத்தினார்.

“அமேசன் நிறுவனம் பூகோளரீதியாக செயல்படுவது எனக்குத் தெரியும். ஆனால், சர்வதேச அமேசன் தொழிலாளர்கள் குரல் மூலம் ஜேர்மனி அமேசன் தொழிலாளர்களின் போராட்டம் பற்றி இப்போது தான் எனக்கு தெரிய வந்தது.”

அமேசன் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒரே வர்க்க நலன்களை கொண்டுள்ளனர். இந்திய தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் வரை, ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள அமேசன் தொழிலாளர்களை குறைந்த ஊதிய நிலைக்கு தள்ளும் பொருளாதார அழுத்தம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். உலகம் முழுவதிலுமான அமேசன் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்கான தேவையை இது எழுப்புகிறது. இந்த சர்வதேச பெருநிறுவனங்களுக்கு எதிராக ஒரு “தேசிய” அடிப்படையில் போராட முடியும் என்று தொழிற் சங்கங்களினால் முன்வைக்கப்படும் பொய்களை தொழிலாளர்கள் நிராகரிக்கவேண்டும். தேசியவாத விஷத்தைக் கொண்டு தொழிலாளர்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் பெருநிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே உதவுகின்றன.

முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான, அவர்களது சொந்த குழுக்களை தொழிலாளர்கள் கட்டியெழுப்பவேண்டும், சர்வதேச அளவில் தங்களது சக பணியாளர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் இணைப்புகளை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில்தான் அமேசன் மற்றும் இதைப் போன்ற பெருநிறுவன திமிங்கலங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட முடியும்.