ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China and Russia forge closer ties against US

அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் நெருக்கமான உறவுகளை உருவாக்குகின்றன.

By Peter Symonds
6 July 2017

வடகிழக்கு ஆசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் உருவாகும் அமெரிக்க இராணுவ கட்டமைப்பு, சிரியாவில் அதன் இராணுவத் தலையீடு மற்றும் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் தொடர்பான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள சீனாவும், ரஷ்யாவும் முயற்சிக்கின்ற வேளையில், இந்த வாரம் மாஸ்கோவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வதானது, அவர்களுக்கு இடையே வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

செவ்வாயன்று பியோங்யாங் நடத்திய நீண்டதூர ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளும், அதிலும் குறிப்பாக சீனா வட கொரியா மீது நெருக்கும் பொருளாதாரத் தடைகளை திணிக்கவேண்டும் என்பது போன்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு, ஜி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரின் கூட்டு பதிலிறுப்பின் மூலம் வாஷிங்டனுக்கு எதிரான இரண்டு அரசாங்கங்களின் கடினமான நிலைப்பாடு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை ஸ்தாபிப்பதற்காக, பியோங்யாங் அதன் ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை நிறுத்துமானால், அமெரிக்காவும், தென் கொரியாவும் முக்கிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சீனாவின் முன்மொழிதலுக்கு பின்னால் புட்டினும் தன்னை முழுமையாக நிறுத்திக்கொண்டார். ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே இந்த முன்மொழிதலை திட்டவட்டமாக நிராகரித்ததோடு, “சரியான சூழ்நிலையின்” கீழ் மட்டுமே, அதாவது அணுஆயுத ஒழிப்புக்கான அமெரிக்க கோரிக்கைகளை பியோங்யாக் முன்கூட்டியே ஒப்புக்கொள்ளுமானால், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துமெனவும் அறிவித்தது.

தென் கொரியாவில் நிறுவப்பட்டுவரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு பாட்டரியான ஒரு முனைய அதிஉயர பகுதி பாதுகாப்பானது (Terminal High Altitude Area Defence-THAAD) “ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிராந்திய சக்திகளின் மூலோபாய நலன்களை தீவிரமாக பாதிப்பதாக” கூறி, அதனை நீக்குமாறு அமெரிக்காவுக்கு புட்டினும், ஜி யும் அழைப்பு விடுத்தனர். THAAD இன் சக்திவாய்ந்த X-Band ரேடார், ஏவுகணை சோதனைகள் நடத்தப்படுவதை கண்டுபிடிக்க சீனா மற்றும் ரஷ்ய பிராந்தியங்களுக்குள் ஆழமாகப் பாயும் திறன் கொண்டதாக இருப்பதுடன், சாத்தியமானதொரு அமெரிக்க அணுஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அவர்களது திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

வட கொரியாவுக்கு எதிரான வாஷிங்டனின் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டிற்கு ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்ப்பானது நேற்றைய ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் காட்டப்பட்ட போதும், ரஷ்யாவிற்கு ஜி விஜயம் செய்ததும் கூட அவர்களின் பொருளாதார மற்றும் பரந்த மூலோபாய உறவுகளை பலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

செவ்வாயன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசியபோது, ஜி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் “முன்னெப்போதும் அவர்கள் கொண்டிராத வகையில் இருந்தன” என்று உற்சாகம் அடைந்தார். மேலும் அவர் பின்வருமாறு தொடர்ந்து கூறினார்: “சர்வதேச சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், எங்களது மூலோபாய பங்காண்மையை அபிவிருத்தி செய்வதற்கும், ஆழமடையச் செய்வதற்குமான எங்களது உறுதிப்பாடும், நம்பிக்கையும் இன்னும் அசைக்க முடியாதவையாகும்.”

“அனைத்து முக்கிய சர்வதேச பிரச்சினைகள் குறித்து ரஷ்யாவும், சீனாவும் உண்மையாகவே மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துக்களையே கொண்டுள்ளன” என்று புட்டின் அறிவித்தார். ரஷ்யாவின் ஒரு கூட்டாளியான சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட வாஷிங்டனின் சட்டவிரோத இராணுவத் தலையீட்டை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒரு குறிப்புடன், “சிரியாவின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் மதிக்கும்” என ஒரு கூட்டு அறிக்கை அழைப்பு விட்டது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்திற்கும் (Russian Direct Investment Fund) மற்றும் ரஷ்யாவின் அரசு வளர்ச்சி வங்கியான Vnesheconombank க்கும் 11 பில்லியன் டாலருக்கும் மேலாக நிதியளிப்பை விரிவுபடுத்துவதன் மூலமாக, ஜி புட்டினுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்தார். இரு நாடுகளுமே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் கீழுள்ள நிலையில், சீன வளர்ச்சி வங்கியினால் வழங்கப்படும் நிதி ரென்மின்பி இல் (சீன யுவான் நாணயம்) மதிப்பு வகைப்பாடு செய்யப்படுகிறது, அதனால் அமெரிக்க தலைமையில் அமுல்படுத்தப்படும் தடைகளில் இருந்து தப்பிக்கின்றது.

யுரேசிய நிலப்பகுதி முழுவதும் ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் போக்குவரத்து, தகவல்தொடர்பு மற்றும் ஏனைய இணைப்புகளை கொண்ட ஒரு விரிவான வலையமைப்பை ஸ்தாபிக்க முனையும் சீனாவின் இலட்சியமான ஒரே இணைப்பு ஒரே பாதை (One Belt One Road - OBOR) திட்டத்தின் ஒரு பகுதியாகவுள்ள எல்லை கடந்த திட்டங்களில் இந்த நிதிகள் முதன்மையாக முதலீடு செய்யப்படுகின்றன. ஏனைய முதலீடுகள் ரஷ்யாவிற்குள், ஆற்றல், தொழில் மற்றும் போக்குவரத்து போன்றவற்றில் மேற்கொள்ளப்படும்.

மாஸ்கோவால் மேலாதிக்கம் செய்யப்படும் அதன் சொந்த யுரேசிய பொருளாதார ஒன்றியத்தை (Eurasian Economic Union-EEU) ஸ்தாபிப்பதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் முழுவதையும் குறைக்கக்கூடிய சாத்தியத்தை இந்த OBOR திட்டங்கள் கொண்டுள்ளன. மாஸ்கோ அதன் பாரம்பரிய செல்வாக்கு மண்டலமாக கருதும் மத்திய ஆசிய குடியரசுகளில் (Central Asian Republics) அதை கீழறுக்கும் சீனாவின் திட்டங்களின் கவனம் ரஷ்ய விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.

ஒரு “பனி பட்டுப் பாதை” திட்டத்திற்கு அழைப்பை விடுத்து அத்தகைய கவலைகளை மட்டுப்படுத்த ஜி முயற்சித்தார், அதாவது, போக்குவரத்து மற்றும் ஏனைய உள்கட்டமைப்புகளும் ரஷ்யா ஊடாக செயல்படுத்தப்படும் என்பதாகும். இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும், பிரதான உற்பத்தி திட்டங்களை தொடங்க வேண்டும், மேலும் கசான் மற்றும் மாஸ்கோ இடையே முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அதிவேக இரயில் இணைப்பு உட்பட, இரயில் ஒத்துழைப்பை பலப்படுத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மே மாதம், பெய்ஜிங்கில் நடந்த சீனாவின் OBOR கருந்தரங்கில் புட்டின் பங்கேற்றிருந்த போதிலும், குறிப்பாக, சீனாவின் OBOR திட்டங்களை ரஷ்யாவின் EEU உடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து எந்தவொரு உடன்பாடும் அடையப்படவில்லை. ஒரு மிகப்பெரும் சச்சரவின் வலுவான மையமாக இருக்கும் விடயம் தொடர்பாக சாத்தியமானவரை மிகச்சிறப்பாக முகம் காட்டுவதில், “கருத்துக்களின் ஒரு ஆழமான பரிமாற்றம்” “ஒரு மிகுந்த உறுதியான வழிநடத்துதலை” தொடங்கி வைத்தமையானது, ஒரு பரந்த யுரேசிய கூட்டணியை அமைப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று புட்டின் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா மீதான அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகளை அடுத்து பொருளாதார ரீதியாக ரஷ்யா அதிகரித்த அளவில் சீனாவையே நம்பியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக வளர்ச்சி குறித்தே புட்டினும், ஜி யும் குறிப்பிடுகின்றபோதும், ஒரு தெளிவான சமநிலையின்மையே உள்ளது. சீனா ரஷ்யாவின் உயர் மட்ட வர்த்தக பங்குதாரராகும், ஆனால் சீனாவின் முதல் பத்து வர்த்தக பங்குதாரர்களில் ஒருவராக ரஷ்யா மதிப்பிடப்படவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்யா மிகப்பெருமளவில் எரிசக்தி ஏற்றுமதிகளில் தங்கியுள்ளது, அது சரிந்து வரும் விலைகளினால் பாதிக்கப்பட்டுள்ளது, அதனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கிறது. 2014 ஆம் ஆண்டின் ஒரு முக்கிய குறிக்கோளாக கருதப்பட்டு, முன்னோக்கி செல்லும் சீனாவிற்கான எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை விரிவாக்கம் 2019 ம் ஆண்டு இறுதிக்குள் சைபீரியாவிலிருந்து ஒரு எரிவாயு குழாய்த் திட்டம் முடிவடையும் நிலையில் இருப்பதாக புட்டின் வலியுறுத்தினார்.

எனினும், குறிப்பாக விலைகள் மீதான நீடித்த பேரம்பேசுதல் காரணமாக 2014 ஒப்பந்தம் உருவாக்கப்படுவதற்கு நீண்டகாலம் எடுத்தது. ரஷ்யாவின் மீது அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகள் திணிக்கப்பட்டு, ஐரோப்பாவில் அதன் சந்தைகள் சுருங்கத் தொடங்கிய பின்னரே, மாஸ்கோ சீனாவை நோக்கி திரும்பியது.

ஜி விஜயத்தின் போது இராணுவ ஒத்துழைப்பு குறித்து தெளிவாக விவாதிக்கப்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் எண்ணற்ற இராணுவ பயிற்சிகளிலும், அத்துடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation-SCO) அங்கத்தவர்களின் ஈடுபாட்டிலும், அது தெளிவாக உள்ளது. மத்திய ஆசிய குடியரசுகளை இழுக்கவும், வளம் நிறைந்த பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்த முனையும் அமெரிக்க முயற்சிகளைத் தடுக்கவும், 2001 இல் ரஷ்யா மற்றும் சீனாவால் SCO ஸ்தாபிக்கப்பட்டது.

ரஷ்ய மற்றும் சீன கடற்படைகள் இந்த மாத இறுதியில் பால்டிக் கடலில் ஒரு கூட்டு கடற் பயிற்சியை நடத்த திட்டமிட்டு வருகின்றன. ஒரு அழிப்புக்கப்பல், ஒரு பீரங்கிக்கப்பல் மற்றும் ஒரு துணைக் கப்பல் ஆகியவை உள்ளிட்ட சீன போர்க்கப்பல்களின் ஒரு குழு, அமெரிக்கா அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்த ஒரு பெரிய வருடாந்திர பயிற்சியை அங்கு மேற்கொண்ட சில வாரங்களுக்கு பின்னர், ரஷ்யாவின் பால்டிக் கடற்படையுடன் சேர்ந்துகொள்ளும். 2015 இல், சீன போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலில் ரஷ்ய கருங்கடல் கடற்படையுடன் பயிற்சிகளை நடத்தின.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஆசியாவில் வளர்ந்து வரும் பதட்டங்கள் காரணமாக அதன் ஆயுதப்படைகளை நவீனமயமாக்க முற்படுகின்ற நிலையில், அதிநவீன ரஷ்ய இராணுவ தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களில் அதிகளவு அணுகலை சீனா பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான அழுத்தங்களை உருவாக்கிய முரண்பாடான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களும் உள்ளன. எனினும், ஒரு ஆக்கிரோஷமான மற்றும் முன்கணிக்கவியலாத ட்ரம்ப் நிர்வாகத்தை முகங்கொடுக்கையில், வட கொரியா, சிரியா மற்றும் சாத்தியமுள்ள ஏனைய அபாயகரமான வெடிப்பு புள்ளிகள் குறித்து அமெரிக்காவை வெளிப்படையாக எதிர்கொள்ள தயாராகவுள்ள ஒரு வலுவடையும் கூட்டணி உருவாவதையே ஜி இன் விஜயம் குறிப்பிடுகின்றது.