ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US threatens Pakistan as part of new Afghan war drive

புதிய ஆப்கான் போர் முனைவின் பாகமாக அமெரிக்கா பாக்கிஸ்தானை எச்சரிக்கிறது

By Keith Jones
24 August 2017

பாக்கிஸ்தான் அதன் எல்லை பகுதிகளிலிருந்து செயல்பட்டு வரும் ஆப்கான் கிளர்ச்சியாளர்களை ஒடுக்காவிட்டால், அதை தண்டிப்பதென்ற ட்ரம்ப் அச்சுறுத்தலின் அர்த்தத்தை அமெரிக்க அரசு அதிகாரிகள் வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். ஆப்கான் போரில் சண்டையிடுவதில் ஒத்துழைத்ததற்காக அதற்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் மற்றும் உதவிகளின் வெட்டுக்களை மட்டும் இத் தண்டனைகள் உள்ளடக்கி இருக்கவில்லை, மாறாக பாக்கிஸ்தானின் பரம-போட்டியாளரான இந்தியா ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய பாத்திரம் வகிக்க வேண்டுமென்ற ஊக்குவிப்பும் மற்றும் ஏழு தசாப்தகால காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு சார்பான நிலைப்பாட்டை ஏற்றிருப்பதும் சேர்ந்திருந்தது.

பாக்கிஸ்தானுக்குள் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது, தெற்காசியாவின் இந்த போட்டி அணுஆயுத சக்திகளுக்கு இடையே முற்றுமுழுதான போரைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றபோதினும் கூட, இந்தியா அதன் தயார்நிலை குறித்து மீண்டும் மீண்டும் பெருமைபீற்றியுள்ளது.

வாஷிங்டனின் அச்சுறுத்தல்களால் கதிகலங்கிய இஸ்லாமாபாத், அதன் ஆதரவிற்காக பெய்ஜிங்கை நோக்கி திரும்பியுள்ளதால், இது, 1962 எல்லை போருக்குப் பின்னர் இந்தியா மற்றும் சீனா அவற்றின் எல்லையில் மிகவும் கடுமையான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டில் ஈடுபட்டுள்ளதும், இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய கட்டுப்பாட்டிலான காஷ்மீரைப் பிரிக்கின்ற எல்லை கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் வழமையாக இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய துருப்புகள் பேராபத்தான குண்டுவீச்சு நடத்தி வருகின்றதுமான ஒரு பகுதியில் மேற்கொண்டும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் அவரின் திங்கட்கிழமை மாலை உரையில் ஆப்கான் போரின் ஒரு பாரிய அமெரிக்க தீவிரப்படுத்தலுக்கான திட்டங்களை விவரிக்கையில், பாகிஸ்தான் "உடனடியாக" போக்கை மாற்றிக் கொண்டு, “குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடமளிப்பதை" நிறுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். செவ்வாயன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் இது குறித்து விவரிக்கையில், இனிமுதல் இஸ்லாமாபாத் உடனான வாஷிங்டனின் உறவுகள் ஆப்கான் போரின் நடத்தை விதிகள் மீதான அமெரிக்க கோரிக்கைகளை அது கவனத்தில் கொண்டுள்ளதா என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்றார். பயங்கரவாதிகளுக்கு "பாதுகாப்பான புகலிடம்" வழங்குபவர்களுக்கு "வரவிருப்பதைக் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்த அவர், “எச்சரிக்கப்பட்டது (மற்றும்) முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது" என்றார்.

ஒத்துழைக்க மறுத்தால் இஸ்லாமாபாத் நிதியியல்ரீதியில் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதோடு, உறவுகள் இன்னும் குறையும் அல்லது மோசமடைவதில் போய் முடியுமென ரில்லர்சன் அறிவுறுத்தினார். கீழ்படியாத பாகிஸ்தானுக்கு எதிராக வாஷிங்டன் என்ன குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென வினவிய போது, அவர், “நாம் அவர்களுக்கு வழங்கும் உதவி மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் அளவு அத்தோடு நேட்டோ கூட்டணியில் இடம்பெறாத பங்காளியாக அவர்களுக்கு அந்தஸ்து வழங்குவது ஆகியவை நம்மிடம் உள்ள சில நிறைவேற்று வழிவகைகளாகும், அவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ரில்லர்சன் குறிப்பிடவில்லை என்றாலும், பாக்கிஸ்தானை "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாக" முத்திரை குத்தி அச்சுறுத்த பரிசீலிக்கப்பட்டதை மூத்த ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருந்தனர். அதுபோன்று முத்திரை குத்துவது தானாகவே சகல அமெரிக்க நிதி உதவிகளையும் இழக்க செய்யும் மற்றும் அனைத்து அமெரிக்க ஆயுத விற்பனைகளையும் நிறுத்தும், மற்றும் அரசாங்க, இராணுவ அதிகாரிகள் மீது தடைவிதிப்பதற்கும் இட்டுச் செல்லக்கூடும்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெள்ளை மாளிகையின் மூத்த இயக்குனரும் மற்றும் ஜனாதிபதியின் துணை உதவியாளராக கடந்த மாதம் பெயரிடப்பட்டவருமான லிசா கர்டிஸ், சென்ற பெப்ரவரியில் ஹெரிடேஜ் பவுண்டேசன் அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடுகையில், "பயங்கரவாத அரசு" என்று முத்திரை குத்துவதை ட்ரம்ப் நிர்வாகத்தின் "முதலாம் ஆண்டுக்குப்" பின்னர் பயன்படுத்துவதற்காக கையிருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆயிரக் கணக்கான படைத்துறைசாரா பாக்கிஸ்தானிய மக்களைக் கொன்றுள்ள மற்றும் பாக்கிஸ்தானின் கூட்டாட்சி முறையில் நிர்வகிக்கப்படும் பழங்குடி பகுதியின் வறிய மக்களைப் பீதியூட்டிய டிரோன் தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என்பதையும் ரில்லர்சன் குறிப்பிட்டார். செவ்வாயன்று பத்திரிகையாளர் சந்திப்பில், அப்பட்டமான சர்வதேச சட்டமீறலான டிரோன் தாக்குதல்கள் குறித்த ஒரு கேள்விக்கு அந்த எக்ஸான் நிறுவன முன்னாள் தலைமை செயலதிகாரி நேரடியாக பதிலளிக்க மறுத்தார். ஆனால் அந்த கேள்வியை விட்டுவிட்டு, அவர் அறிவிக்கையில், “பயங்கரவாதிகள் எங்கே வாழ்ந்தாலும் அவர்களை நாங்கள் தாக்க இருக்கிறோம்,” என்றார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகம், ஆப்கான் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்ட தாலிபான் மற்றும் அதன் கூட்டாளிகளைக் குறிப்பாக ஹக்கானி வலையமைப்பை பாக்கிஸ்தான் ஒடுக்க தவறியதன் மீது நீண்டகாலமாக அதை குறைகூறி வருகிறது.

வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும், இரவுநேர தேடல்வேட்டைகள், டிரோன் தாக்குதல்கள் மற்றும் ஏனைய பயங்கர நடவடிக்கைகளைக் கொண்டு காபூலின் ஒரு ஊழல்பீடித்த மற்றும் அவர்களுக்கு பிரியமான ஒரு கைப்பாவை அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து, ஒரு மூர்க்கமான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு போரை நடத்தி வருகின்றன.

தாலிபானின் பிற்போக்குத்தனமான இஸ்லாமியவாத சித்தாந்தம் ஒருபுறம் இருக்க, இதன்விளைவாக, அது பரந்த மக்களிடையே ஆதரவைப் பெற முடிந்துள்ளது. அமெரிக்கா சுமார் ஒரு ட்ரில்லியன் டாலர் செலவிட்டு, 2,400 க்கும் அதிகமான துருப்புக்களை இழந்து, கடந்த 16 ஆண்டுகளாக உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான அதன் மீது படுகொலைகளைக் குவித்த பின்னரும் கூட, அக்டோபர் 2001 இல் அமெரிக்க படைகள் அந்நாட்டின் மீது படையெடுத்ததற்கு பின்னர் இருந்ததை விட தாலிபான் கிளர்ச்சிகள் பலமாகவே உள்ளன.

செவ்வாயன்று ரில்லர்சன், பாக்கிஸ்தானுக்கான வாஷிங்டனின் இரட்டை அச்சுறுத்தலின் மற்றொரு கூறுபாட்டை சுருக்கமாக குறிப்பிட்டு சென்றார்: அதுவாவது, ஆப்கானிஸ்தானில் குறிப்பாக பொருளாதார உதவி வழங்குவதில் இந்தியா இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டுமென ட்ரம்ப் அழைப்புவிடுக்கிறார்.

படைத்துறைசாரா பகுதிகளை இலக்கில் வைப்பதில் மற்றும் வேறுவழியில்லை என்றால் அமெரிக்க தளபதிகளுக்குப் பொருத்தமாக தெரிந்தால் அமெரிக்க போர் எந்திரத்தை பயன்படுத்துவதில் அவர்களுக்கு உள்ள சகல கட்டுப்பாடுகளையும் நீக்குவதை அதன் மைய கூறுபாடுகளில் உள்ளடக்கி உள்ள ட்ரம்பின் புதிய ஆப்கான் போர் மூலோபாயத்தை வரவேற்பதில் இந்தியா சிறிதும் தாமதம் காட்டவில்லை.

“ஆப்கானிஸ்தான் முகங்கொடுக்கும் சவால்களை மற்றும் அது எதிர்கொண்டிருக்கும் பாதுகாப்பு புகலிட பிரச்சினைகளை மற்றும் பயங்கரவாதிகள் அனுபவிக்கும் எல்லை-கடந்த ஆதரவின் ஏனைய வடிவங்களையும் அந்நாடு கடந்து வருவதற்காக முயற்சிகளை விரிவாக்குவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தீர்மானமாக இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.

ட்ரம்பின் ஆப்கான் உரையில் அவர் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு "முக்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பங்காளியாக" அங்கீகரித்திருந்ததை இந்திய பெருநிறுவன ஊடகங்கள் புகழ்ந்தன. “தெற்காசிய செல்வாக்கு வட்டத்தை அதிகரிப்பதற்கு, டொனால்ட் ட்ரம்பின் ஆப்கானிஸ்தான் கொள்கை இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது" என்று தலைப்பிட்ட ஒரு துணை-தலையங்கத்தில் Firstpost இன் மூத்த பதிப்பாசிரியர் ஸ்ரீமொய் தலுக்தார், ட்ரம்பின் ஆப்கான் கொள்கையை ஒரு "பலமான" அங்கீகாரமாக வரையறுத்தார்—இது வர்த்தக சீனாவுடன் இந்தியா செல்வாக்கிற்காக முட்டிமோதிக் கொண்டிருக்கும் தெற்காசியாவில் இந்தியாவுக்கு முக்கிய உட்குறிப்புகளைக் கொண்டுள்ளது.

பாக்கிஸ்தான் ஆளும் உயரடுக்கை தைரியமிழக்க செய்வதற்காக, புது டெல்லி கடந்த டஜன் கணக்கான ஆண்டுகளாக இஸ்லாமாபாத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான பிராந்திய கூட்டாளியாக புறந்தள்ளியுள்ளது. சீனாவுக்கு எதிர்பலமாக இந்தியாவைக் கட்டமைக்கும் நோக்கில் வாஷிங்டன் இந்தியாவுக்கு மூலோபாய உதவிகளை மழையென பொழிந்துள்ளது.

நரேந்திர மோடி மற்றும் அவரது மூன்றாண்டுகால இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கத்தின் கீழ், இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டணி பண்புரீதியிலான ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. தென் சீனக் கடல் மற்றும் வட கொரிய பிரச்சினைகளில் இந்தியா மீண்டும் மீண்டும் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகளையே கிளிப்பிள்ளை போல ஒப்பித்து வந்துள்ளதுடன், அமெரிக்காவின் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் அதன் இராணுவ-மூலோபாய கூட்டுறவை விரைவாக அதிகரித்தது, அமெரிக்க போர்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள் வழமையாக இந்திய துறைமுகங்கள் மற்றும் விமானத்தளங்களை பயன்படுத்துவதற்கு அவற்றை திறந்துவிட்டுள்ளது.

அமெரிக்க ஸ்தாபகம், அது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர் மற்றும் ட்ரம்ப் தளபதிகளின் சதிக்கூட்டத்தில் உள்ள ஏனையவர்கள் ஆகட்டும் அல்லது நியூ யோர்க் டைம்ஸின் தாராளவாதிகள் ஆகட்டும், இஸ்லாமாபாத் “இரட்டை நிலைப்பாடு" கொண்டு விளையாடுவதாக —அதாவது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போருக்கு தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்குவதுடன் பாக்கிஸ்தான் தாலிபானுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்ற அதேவேளையில், பாக்கிஸ்தானின் உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள ஹக்கானி வலையமைப்பு மற்றும் தாலிபானின் பிற கூறுபாடுகளை இரகசியமாக பாதுகாத்து வருவதாக— அதை குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது உண்மையிலேயே தன் குற்றத்தை மறைத்துவிட்டு அடுத்தவரை குறை கூறுவதாகும். இஸ்லாமிய போராளிகள் குழுவை பினாமி படைகளாக பயன்படுத்துவதில் சிஐஏ தான் பாகிஸ்தான் ISI க்கு அறிவுறுத்தியது. ஆப்கான் உள்நாட்டு போருக்குள் சோவியத் ஒன்றியத்தை இழுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முஜிஹிதீன்களை, அமெரிக்காவின் சார்பாக, இஸ்லாமாபாத் ஒழுங்கமைத்து, பயிற்சியளிக்க உதவியது, பின்னர் அது அதற்கடுத்த தசாப்தத்தில் இராணுவரீதியில் இரத்தம் சிந்த வைத்தது.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கா மீண்டும் மீண்டும் இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களைப் பயன்படுத்தி உள்ளது, லிபியா மற்றும் சிரியாவின் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும். அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இராணுவ தலையீடுகள் செய்யவும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்தளவில் தாக்குதல் நடத்தவும் சாக்குபோக்காக கையிலெடுத்திருந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் தான் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக எரிச்சலூட்டும் விதத்தில் கூறியவாறே அவர்களை அது பயன்படுத்தியது.

தாலிபான் பிரிவுகளுடன் பாக்கிஸ்தான் பேணிவரும் உறவுகளானது, ஆப்கான் போரில் ஏற்படும் எந்தவொரு அரசியல் தீர்வில் தனது குரலை பாதுகாத்து கொள்வதற்கான அதன் மூலோபாய நோக்கத்துடனும் மற்றும் "உலகளாவிய இந்தோ-பசிபிக் மூலோபாய கூட்டணி" மீதான அதன் அதிகரித்துவரும் மனக்கவலைகளுடன் பிணைந்துள்ளன.

இந்தியாவுடனான வாஷிங்டனின் மூலோபாய அரவணைப்பு, தெற்காசியாவில் ஆயுத மற்றும் அணுஆயுத போட்டியை எரியூட்டி, இந்திய விரோத மனோபாவத்தை ஊக்குவித்து கொண்டிருப்பது குறித்து இஸ்லாமாபாத், பல ஆண்டுகளாக, வாஷிங்டனை எச்சரித்து வருகிறது. ஆனால் இந்த எச்சரிக்கைகள் ஒரேயடியாக உதறிவிடப்பட்டுள்ளன. அதிகபட்சம், ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் அபிலாஷைகளை ஏதோவிதத்தில் கட்டுப்படுத்தி வைக்கவாவது வாஷிங்டன் உடன்பட்டிருக்கலாம். இப்போது இதுவும் ஓரங்கட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்கா பாகிஸ்தான் உடனான அதன் உறவுகளைக் குறைத்து கொண்டதால், இஸ்லாமாபாத் இந்திய அழுத்தத்தை சரிகட்ட அதன் "எல்லா காலத்திற்குமான நண்பர்" சீனாவை நோக்கி அதிகரித்தளவில் திரும்பி உள்ளது. பெய்ஜிங், அதன் பாகத்திற்கு, முதலீடு வழங்கல்களைக் கொண்டு புது டெல்லியை நீண்டகாலமாக ஈர்க்க முனைந்தது, அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை யுரேஷியா உள்கட்டமைப்பு-கட்டுமான திட்டத்தில் ஒரு முன்னணி பாத்திரம் வழங்குவதும் அதில் உள்ளடங்கி இருந்தது. ஆனால் மோடியின் கீழ் சீனாவுக்கு எதிராக வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா ஒரு முன்னணி நாடாக எழுச்சி கண்டிருந்த நிலையில், பெய்ஜிங் நிலைப்பாடு குறிப்பிடக்கூடிய விதத்தில் மாறியுள்ளது.

நீண்டகாலமாக பெய்ஜிங் கட்டுப்பாட்டில் உள்ளதும் ஆனால் பூட்டானால் உரிமைகோரப்படும் தொலைதூர இமாலய மலை உச்சியிலிருந்து இந்தியா அதன் துருப்புகளை திரும்பப் பெறவில்லை என்றால் ஒரு எல்லைப் போரைக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக சீன அரசாங்க அதிகாரிகளும் மற்றும் அதன் அரசு ஊடகங்களும் அதை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளன.

சீனாவுக்கு எதிராக தனது போர் முனைவுக்குள் இந்தியாவை அணிதிரட்டும் அமெரிக்க முனைவானது தெற்காசியாவை வல்லரசு மோதலின் சுழலுக்குள் இழுத்துள்ளது மற்றும் அப்பிராந்தியத்தை ஒருபுறம் இந்தியா-அமெரிக்கா மறுபுறம் சீனா-பாக்கிஸ்தான் என்று துருவமுனைப்படுத்தி வருகிறது என்பதை அடிக்கோடிடும் வகையில், ட்ரம்பின் ஆப்கான் போர் உரையை அடுத்து பெய்ஜிங் இஸ்லாமாபாத்திற்கு ஒரு பலமான ஆதரவைக் காட்டியுள்ளது.

முதலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி ஒருவர் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் அந்நாடு "மிகப்பெரும் தியாகங்களை" செய்துள்ளதாக மற்றும் "முக்கிய பங்களிப்புகளை" வழங்கியுள்ளதாக கூறி, பாக்கிஸ்தானின் பாதுகாப்பிற்கு வந்தார். பின்னர் முன்பே திட்டமிடப்பட்டிருந்த ஒரு விஜயமாக ஏற்கனவே பாக்கிஸ்தானில் இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், பாக்கிஸ்தானிய தலைமையுடனான கூட்டங்களில் உயர்மட்ட இராணுவ-பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டுறவின் "உத்வேகத்தைப் பேணுவதற்கு" ஒப்புக் கொண்டார். "உருவெடுத்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய நிலைமைகளில்" பெய்ஜிங்கும் இஸ்லாமாபாத்தும் கொள்கை ஒருங்கிணப்பை அதிகரிப்பதும் மற்றும் 50 பில்லியன் டாலர் சீன பாகிஸ்தான் பொருளாதார பாதையின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதும் இதில் உள்ளடங்கும்.

ஆப்கான் போரைத் தீவிரப்படுத்தும் மற்றும் பாகிஸ்தானை மிரட்டும் வாஷிங்டன் திட்டங்களுக்கு ரஷ்யாவும் அதன் எதிர்ப்பை தெளிவுபடுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய ஜனாதிபதி தூதர் Zamir Kabulov செவ்வாயன்று கூறுகையில், “[பாகிஸ்தான்] மீது அழுத்தமளிப்பது தீவிரமாக அப்பிராந்தியம் எங்கிலும் பாதுகாப்பு நிலைமையை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி, ஆப்கானிஸ்தானுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என்றார்.

பாரம்பரியரீதியில் இந்தியாவுடன் ரஷ்யா மிக நெருக்கமான உறவுகளை அனுபவித்துள்ளது என்றாலும், வாஷிங்டன் உடனான புது டெல்லியின் அணிசேர்க்கை இந்தோ-ரஷ்ய மூலோபாய பங்காண்மையை கடும் நெருக்கடியில் நிறுத்தி வருகிறது.