ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian students speak out against imperialist war drive

இந்திய மாணவர்கள் ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு எதிராக பேசுகின்றனர்

By our correspondents
19 August 2017

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள், தமிழ்நாடு மாநில தலைநகரமான சென்னையில் ஆகஸ்ட் 27 ம் தேதி நடைபெறவுள்ள ஒரு பொதுக் கூட்டத்திற்கான பிராச்சாரத்தின் போது, நகரக் கல்லூரிகளின் மாணவர்களிடம் பேசினர். இந்த கூட்டம், தெற்காசியாவில் சீனாவிற்கு எதிராக அதிகரித்துவரும் போர் அபாயம் குறித்தும், மேலும் இந்த பேரழிவை தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு தேவையான அரசியல் மூலோபாயம் குறித்தும் விவாதிக்கும்.

இந்திய பசிபிக் பிராந்தியம் முழுவதும், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா அதன் அரசியல் ஆத்திரமூட்டல்களையும், இராணுவ கட்டமைப்பையும் முடுக்கி விட்டுக்கொண்டிருக்கின்றது. இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது நாட்டை சீனாவுக்கு எதிரான ஒரு “முன்னணி” நாடாக மாற்றியுள்ளார் என்பதுடன், வாஷிங்டனின் பூகோள மூலோபாய செயற்பட்டியலில் இராணுவத்தை மேலும் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்க போர் விமானங்களும், போர்க்கப்பல்களும் இந்தியாவின் இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதோடு, தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான ஆக்கிரோஷமான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு மோடி அரசாங்கம் ஆதரவளித்தும் வருகின்றது. இந்தியா, ஆசிய பசிபிக்கில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளுடன் அதன் உறவுகளையும் விரிவடையச் செய்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு அணுஆயுத சக்திகளிடையேயான பதட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. பூட்டானுக்கும், சீனாவுக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பிராந்தியமான டோக்லாம் பீடபூமியில் சீனத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் சாலை விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான இந்திய துருப்புக்களின் சமீபத்திய தலையீடு இராணுவ மோதலுக்கான அபாயத்தைக் காட்டுகின்றது.  

சென்னையில், பிரசிடென்சி, பச்சையப்பா மற்றும் அம்பேத்கர் கலைக் கல்லூரி போன்ற பல கல்லூரிகளிலும், அத்துடன் பல பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் ICFI ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர். 

அமெரிக்கத் தலைமையிலான போர் உந்துதல் குறித்தும், மற்றும் வாஷிங்டனுக்கு புது தில்லியின் ஆதரவு குறித்தும் மாணவர்கள் மத்தியில் விரோதம் வளர்ந்து வருகின்றது. மோடியின் பாரதிய ஜனதாக கட்சி தலைமையிலான அரசாங்கம், சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான இராணுவக் கட்டமைப்பு தொடர்பாக பெருமளவு நிதியை செலவழிப்பதையும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதையும் மாணவர்கள் எதிர்க்கின்றனர்.  


பிரசிடென்சி கல்லூரியின் ஒரு மாணவர் குழு. ஒரு துண்டு பிரசுரத்துடன் அதிவலது பக்கம் இருப்பவர் ராபின் மற்றும் இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்துள்ளவர் பிரவீன் குமார்.

ராபின் என்ற பிரசிடன்சி கல்லூரி மாணவர் ஒருவர் பினவருமாறு கூறினார்: “மோடி அரசாங்கத்தின் இந்த போர் உந்துதலை நான் எதிர்க்கின்றேன். போர் வெடிக்குமானால், அது பேரழிவுகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எந்தவொரு போரும் இந்திய மக்களை பாதுகாப்பதாகவே இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் உணவு, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கான மானியங்களில் மேற்கொள்ளப்படும் அரசாங்க வெட்டுக்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரங்களில் சீரழிவு அதிகரித்து வருவதைத் தான் நாம் காண்கின்றோம்.”  

“மக்களின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துகையில், மக்களை பாதுகாப்பதைப் பற்றி அரசாங்கம் எவ்வாறு பேச முடியும்? இந்த போர்வெறி முழக்கங்களின் மூலமாக, அரசாங்கத்திற்கு விரோதமான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பவே அவர்கள் விரும்புகிறார்கள்.”

போரின் ஆபத்தான விளைவுகளைப் பற்றி எந்தவொரு இந்திய அரசியல் கட்சியும் விவாதிக்கவில்லை என்று ராபின் கூறினார். ஏகாதிபத்திய போருக்கு எதிராக போராடும் ஒரே அமைப்பாக ICFI மட்டுமே இருந்தது ஏன் என்பதை அறிய அவர் விரும்பினார். சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற 2016 ICFI இன் அறிக்கை பற்றி பிரச்சாரகர்கள் அவருக்கு தெரிவித்த பின்னர், ராபின், உலகளவிலான ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான போராட்டத்தை அவர் வரவேற்றதோடு, பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.

பிரவீன் என்பவர் ICFI ஆதரவாளர்களிடம், பேச்சு சுதந்திரம் மீது அதிகரித்து வரும் அரசாங்க தாக்குதல்கள் குறித்து கவலைப்பட்டார். அவர், “மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் குண்டர்கள் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுவார்கள், மேலும் அவர்கள் மக்களுக்காக போராடுகிறார்கள் என்றால், அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து அதிகாரமும் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது” என்றும் தெரிவித்தார்.

1923 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்ட குண்டர்கள் சட்டம், இந்திய அரசாங்கத்துக்கும், பொலிஸுக்கும் ஒரு கும்பலின் உறுப்பினராக கருதப்படும் எவரையும் கைது செய்யவும், ஒரு வருட காலம் வரை அவரை பிணை அனுமதியின்றி காவலில் வைக்கவும் அசாதாரண அதிகாரத்தை வழங்குகின்றது. காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.

பிரேம் என்ற முதலாம் ஆண்டு பி.காம். மாணவர், “(இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே) போர் வெடித்தால், இரு நாடுகளின் மக்களும் பாதிக்கப்படுவர், ஏனென்றால் பேரழிவு தரக்கூடிய அணுஆயுத உலகப் போராக உருவெடுக்கும் சாத்தியத்தை அது கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கமான இராணுவ உறவுகள் குறித்து நான் அறிந்துள்ளேன், மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இந்தியா இணைந்து செயல்படுத்திய மலபார் கடற்படை பயிற்சிகள் பற்றியும் அறிந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.   

இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மீதான மோடி அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களை பிரேம் கண்டனம் செய்தார். மேலும், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கியதையும், அதன் மூலம் “கருப்பு பணத்தை” பறிமுதல் செய்த பின்னர், இந்தியாவில் “ஒவ்வொரு ஏழைக்கும்” 1.5 மில்லியன் ரூபாய் கொடுக்கவிருப்பதாகவும் அரசாங்கம் விடுத்த தவறான வாக்குறுதிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜேபி இரண்டுமே முதலாளித்துவத்தின் நலன்களுக்காக பணியாற்றியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

ஹரி என்ற பி.எஸ்ஸி தாவரவியல் பயிலும் மாணவர், “நான் போரை எதிர்க்கிறேன், ஏனென்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியபோது, அப்பாவி மக்கள் தானே கொல்லப்பட்டனர்.”

ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை ஹரி எதிர்ப்பதுடன், மேலும் அவர் பின்வருமாறு சேர்த்துக் கூறினார்: “நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருந்தபோது (நூறாண்டுகள் பழமை வாய்ந்த காளை-ஓட்டப் போட்டிகள் தடை செய்யப்படுவதற்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம்), பொலிஸ் எங்களை கொடூரமாக தாக்கியது. அதிலும் வளர்மதி என்றொரு மாணவி கடுமையான குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், ஏனெனில் அவர் தென் தமிழ்நாட்டில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் நடைமுறையில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் மக்களை அணிதிரட்டுவதற்கு பிரச்சாரம் செய்தார்.”

பயாஸ், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்ஸி. பயிலும் மாணவர் பின்வருமாறு கூறினார்: “இந்த போர் உந்துதலை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். வழக்கமான வழிமுறைகளோடு போராடியதும் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் இராணுவ டாங்கிகளை பயன்படுத்தியதுமான முந்தைய போரைப் போலன்றி, வரவிருக்கும் இந்தப் போர் ஆணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும், மிகப்பெரிய அழிவுக்கு காரணமானதாகவும் இருக்கும். இந்த போருக்காக கூடுதலான வரிகள் மூலம் மக்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவர்.”  

முஸ்லீம்கள் மீதான மோடி அரசாங்கத்தின் பாரபட்சமான அணுகுமுறைகளை பயாஸ் எதிர்த்தார். மேலும் அவர், “முஸ்லீம்கள் மாட்டிறைச்சி சாப்பிட முடியாதென சொல்லி வருகின்றார்கள்,” “மக்களுடைய மிக அடிப்படையான உரிமைகளில் மோடி தலையிடக் கூடாது. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

கணேஷ் என்பவரும் போருக்கு எதிராக பேசினார். அவர், “இந்திய, சீன மற்றும் பாகிஸ்தானிய தொழிலாளர்கள் தங்களது முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக ஐக்கியப்படுவதற்கு நீங்கள் அழைப்பு விடுப்பது சரி என்றே நான் கருதுகின்றேன்,” என்றும் “மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் பொலிஸ் விவசாயிகளை கொன்றதையும், முஸ்லீம்களையும், தலித்களையும் அரசாங்கம் தாக்குவதையும் நான் எதிர்க்கின்றேன்” என்றும் தெரிவித்தார். 

ஜாகீர் என்ற பி.ஏ. பொருளாதாரம் பயிலும் மாணவரும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் இளைஞர் பிரிவான DYFI இன் உறுப்பினருமான இவர் பின்வருமாறு கூறினார்: “சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இந்திய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள், ஆனால் சீனாவுடனான ஒரு போர் நிகழுமானால் அதற்கு இந்திய அரசாங்கத்திற்கு DYFI அதன் ஆதரவை அறிவித்துள்ளது. உங்களது உலக கட்சி பற்றி நான் மேலும் அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.”

ஸ்ரீநிவாசன், பச்சையப்பா கல்லூரி மாணவரான இவர், இந்தியாவிற்கும், சீனாவிற்கும், மற்றும் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் பற்றியும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சிகள் பற்றியும் ஊடகங்கள் மூலமாக அவர் அறிந்திருப்பதாக விளக்கினார். மேலும் அவர், இந்திய மற்றும் சீன இராணுவ படையினர் இரு நாடுகளிலும் உள்ள மக்களின் நலன்களை பாதுகாக்க முனையவில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். 

“ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகையில் பொலிஸ் இரக்கமற்ற முறையில் மாணவர்களையும், மக்களையும் எப்படித் தாக்குகிறார்கள் என்பதை நாம் கண்களால் காண்கிறோம். உண்மையில், பொலிஸால் நிலைமை கையாள முடியவில்லை என்றால், இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு அவர்கள் இராணுவத்தை கொண்டு வருவார்கள்.”

ஐயனார், பச்சையப்பா கல்லூரியின் மற்றொரு மாணவரான இவர், இந்தியாவும், சீனாவும் தங்களது வலுவான படைகள் பற்றி பெருமை பேசுகின்றன, ஆனால் எந்தவொரு எதிர்கால போரும், இந்த பிராந்தியத்திற்கு மட்டும் பேரழிவுகரமானதாக இராது, உலகின் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து தான் அழிவுகரமானதாக இருக்கும். எனவே, இந்த பிராந்திய மக்கள் இந்த நிகழ்வை தடுக்க ஐக்கியப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.  

சென்னை பொதுக் கூட்டம் – “அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்போம்” – இந்த முக்கியமான விவாதத்தை மேலும் வளர செய்யும்.

தேதி மற்றும் நேரம் : ஆகஸ்ட் 27, காலை 10.00 மணி

இடம்: முதல் மாடி, பெரியார் ஈ.வி. ராமசாமி-நாகம்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, (HPM பாரடைஸ் கல்யாண மஹால் எதிரில்)

277/2, சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலை, அம்பத்தூர், சென்னை-600098.