ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European governments condemn Trump’s statements on Charlottesville

ஐரோப்பிய அரசாங்கங்கள் சார்லட்வில் மீதான ட்ரம்பின் அறிக்கைகளை கண்டிக்கின்றன

By Alex Lantier
18 August 2017

சார்லட்வில்லில் எதிர்-ஆர்ப்பாட்டக்காரர் ஹீதர் ஹெயர் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற வெள்ளையின மேலாதிக்கவாத போராட்டங்கள் மற்றும் நாஜிக்களை டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பது, ஐரோப்பாவில் ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை தூண்டியுள்ளது. இரண்டாம் உலக போரின் போதைய பாசிசவாத ஆட்சிக்குப் பின்னர், "சுதந்திர உலகில்" வாஷிங்டன் தலைமையோடு, பல தசாப்தங்களாக ஜனநாயகத்தைக் கட்டமைத்து வந்திருப்பதாக தங்களைக் காட்டிக் கொள்ளும் ஐரோப்பிய அரசுகள், வெள்ளை மாளிகையிடமிருந்து தங்களைத்தாங்களே தொலைவில் நிறுத்திக் கொள்வதிலும் மற்றும் ட்ரம்பின் நாஜி-சார்பு கருத்துக்களைக் கண்டிப்பதிலும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன.

அதிவலது போராட்டங்களின் "மிக அருமையானவர்களை" ட்ரம்ப் பாராட்டியமையும் மற்றும் சார்லட்வில்லின் "இரு தரப்புகளையும்" அவர் கண்டித்தமையும் ஐரோப்பிய அதிகாரிகளிடம் இருந்து சரமாரியாக வெள்ளமென விமர்சனங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் Deutschlandfunk க்கு கூறுகையில், “அது பயங்கரமானது, அது தீயது. அது இனவாத அதிவலது வன்முறையாகும். அது உலகில் எங்கே நடந்தாலும், முழு பலத்துடன் தீர்மானகரமாக கையாளப்பட வேண்டும்,” என்றார்.

ஜேர்மன் பொது தேர்தல்களில் மேர்க்கெலின் பிரதான எதிர்போட்டியாளரான சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) மார்டின் சூல்ஸ், வாஷிங்டனுக்கு "தலைவணங்கி" கொண்டிருப்பதற்காக மேர்க்கெலை தாக்கினார். அவர் கூறுகையில், “நீங்கள் ட்ரம்பிடம், 'பாருங்கள், இது இவ்வாறு நடப்பதில்லை' என்று கூறினால், ட்ரம்பிடம் இருந்து நீங்கள் நிறைய வெற்றிகொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்,” என்றார். ஜேர்மன் தேர்தல் பிரச்சாரத்தின் போது இனவாதம் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த பின்னர், சூல்ஸ் ட்வீட்டரில் எழுதினார், “நீங்கள் நாஜிக்களுக்கு எதிராக எழுந்து நின்று போராட வேண்டும். ட்ரம்ப் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அது பயங்கர ஆபத்தானது. வன்முறை மற்றும் வெறுப்பைக் குறைத்துக்காட்டுபவர்கள் நமது மேற்கத்திய மதிப்புகளைக் காட்டிக்கொடுக்கிறார்கள்.”

சார்லட்வில் சம்பவங்களை "கொடூரமானது" என்று குறிப்பிட்ட பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே அறிவிக்கையில், “இனவாத கண்ணோட்டங்களை முன்வைப்பவர்களுக்கும் மற்றும் அவற்றை கண்டிப்பவர்களுக்கும் இடையே எனக்கு சமநிலை தெரியவில்லை. அதிவலது கண்ணோட்டங்களை எங்கே செவியுற்றாலும் அவற்றை கண்டிக்க வேண்டியது, பதவியில் இருப்பவர்களின் முக்கிய பொறுப்பு என்பதே என் கருத்து,” என்றார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சார்லட்வில் குறித்து ட்வீட்டரில் எழுதுகையில், "இனவாதம் மற்றும் இனவெறிக்கு எதிராக போராடுபவர்கள் பக்கம் இருக்கிறேன். நேற்றும் சரி, இன்றும் சரி, அது நமது பொதுவான போராட்டம்,” என்றார்.

சார்லட்வில் படுகொலையானது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அபாயகரமான திருப்புமுனையைக் குறிக்கிறது. கனரக ஆயுதமேந்திய நூற்றுக் கணக்கான நாஜிக்கள் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் நாடுதழுவிய ஒரு "வலதை ஐக்கியப்படுத்துவோம்" பேரணி, ஒரு அமெரிக்க நகரை தற்காலிகமாக ஆக்கிரமித்து, எதிர்ப்பாளர்களை பீதியூட்ட வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் படுகொலையை நடத்தியது. அமெரிக்க உள்துறை உளவுச்சேவைக்கு முன்தகவல் இல்லாமல் இது நடந்திருக்க முடியாத இந்நடவடிக்கை, அமெரிக்க அரசின் குறிப்பிடத்தக்க கன்னைகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றுள்ளது என்பதையே ட்ரம்பின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இருப்பினும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகம் அடிப்படையில் ட்ரம்பிடம் இருந்து வேறுபட்டதைப் போல காட்டிக்கொள்ள அவை வெற்றுத்தனமாக "மேற்கத்திய மதிப்புகளை" துணைக்கு இழுப்பது, மையத்திலேயே பொய் மற்றும் பாசாங்குத்தனத்தைக் கொண்டுள்ளது. சில ஊடகங்கள், ட்ரம்ப் தேர்வானதற்கு பின்னர் மேர்க்கெலை "சுதந்திர உலகின் தலைவியாக" குறிப்பிட்டிருந்த நிலையில், சார்லட்வில் சம்பவங்கள் போன்றவை ஐரோப்பாவிலும் கூட எளிதாக நடக்கலாம் என்பதே உண்மையாகும்.

ஐரோப்பிய கண்டம் எங்கிலும், பாதுகாப்பு சேவைகளிலும் மற்றும் ஆயுதப்படைகளிலும் அதிவலதுகள் வேகமாக அவற்றின் செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறனர். கிரீஸின் நாஜி-சார்பு கோல்டன் டௌன் கட்சி மற்றும் பிரான்சின் நவ-பாசிசவாத தேசிய முன்னணி (FN) ஆகியவை முறையே அவற்றின் நாடுகளில் பொலிஸ் படையில் பாதி வாக்குகளை கொண்டுள்ள நிலையில், ஜேர்மன் அரசோ, கண்மூடித்தனமாக படுகொலை நடத்தி அவற்றை புலம்பெயர்ந்தவர்கள் மீது பழி சுமத்த திட்டமிடும் நவ-நாஜி படை அதிகாரிகளின் ஒரு வலையமைப்பை விசாரணை செய்து கொண்டுள்ளது.

2011 இல் பெரும்பாலும் சமூக ஜனநாயக இளைஞர்களான 77 பேரை நோர்வேஜிய பாசிசவாத Anders Behring Breivik கொன்றதில் இருந்து, கிரேக்க ஹிப்-ஹாப் இசையமைப்பாளர் Pavlos Fyssas இன் கோல்டன் டௌன் படுகொலை, 2013 இல் பிரான்சின் பாசிச-எதிர்ப்பு மாணவன் Clément Méric மீது புரட்சிகர தேசியவாத இளைஞர் அமைப்பின் படுகொலை, 2016 இல் இங்கிலாந்து தொழிற் கட்சி நாடாளுமன்றவாதி Jo Cox பாசிசவாதி தோமஸ் அலெக்சாண்டர் மையரால் கொல்லப்பட்டது வரையில், ஐரோப்பிய பாசிசவாத குழுக்கள் மீண்டும் மீண்டும் அரசியல் படுகொலைகளை நடத்தி உள்ளன.

சார்லட்வில் சம்பவங்கள் ஒரு திருப்புமுனையைக் குறிப்பது ஏனென்றால், அதிவலதின் இதுமாதிரியான படுகொலை நடவடிக்கைக்கு அரசு தலைவரிடம் இருந்து நேரடியாக ஆதரவு கிடைப்பதென்பது முன்னொருபோதும் நடந்திராததாகும். 20 நூற்றாண்டு ஐரோப்பாவில் செய்ததைப் போலவே, ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் அவற்றின் ஆட்சிக்கு அடித்தளத்தை அமைக்க ஒரு பாசிசவாத இயக்கத்தை முடுக்கிவிடுவதற்கு செயற்பட்டு வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பாரம்பரிய பெரும்நிலமெங்கிலும் தீவிரமடைந்துவரும் முதலாளித்துவ ஜனநாயக சிதைவைக் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் விளங்கப்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அதை குறிப்பிடவும் கூட முடியாமல் இருக்கின்றன என்பதுடன், அதற்கு பதிலாக அவை ட்ரம்புக்கு எதிராக தனிப்பட்டரீதியில் தார்மீக பழிகளைச் சுமத்துகின்றன.

ட்ரம்பை "தார்மீக எல்லைக்கு வெளியில்" இருப்பவராக கண்டிக்கும் ஒரு தலையங்கத்தில், பிரிட்டிஷ் கார்டியன் எழுதியது: “இனவாதம், யூத-எதிர்ப்புவாதம், வெள்ளையின மேலாதிக்கவாதம் மற்றும் நாஜிசம், புதியதோ அல்லது பழையதோ, தவறானதே. இதை தெளிவாகவும் தங்குதடையின்றியும் கூற முன்வராத ஒரு தலைவர், எதுகுறித்தும் தெளிவில்லாதவர். தார்மீக அதிகாரம் மீதான அவர் உரிமைகோரலையும் மற்றும் தலைவராக மதிக்கப்பட வேண்டுமென்ற அவர் உரிமையின் பெரும்பகுதியையும் இழக்கிறார். எது எவ்வாறிருப்பினும் திரு ட்ரம்ப் தன்னை அவ்விடத்தில் கொண்டு வந்துள்ளார். அமெரிக்கா அதன் மதிப்புகள், அமைப்புகள் மற்றும் குறைபாடற்ற சமூக கண்ணியத்துடன் எவ்வாறு 2020 க்குள் நுழைய போகிறது என்பது தான் இத்தகைய சம்பவங்களை அடுத்து அது முகங்கொடுக்கும் கேள்வியாகும்.”

“வெள்ளையின அமெரிக்காவின் தீய கொடூரங்களை" சாதகமாக்கிக் கொள்வதற்கான ட்ரம்பின் முயற்சிகள் "முன்னொருபோதும் இல்லாத அத்துமீறல்கள்" என்று பிரான்சின் Le Monde பழிசுமத்தியது. இருந்தபோதினும், அது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரும் கவலைகளை நேரடியாக சுட்டிக் காட்டியது: “எப்போதும் போல முன்னுக்குப்பின் முரணாகவும் மற்றும் முன்கணிக்கவியலாமலும் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் பிற்போக்குத்தனம், அவர் அரசியல் எதிர்ப்பாளர்களின் முகாமையும் கடந்து, அவருக்கு எதிராக ஒரு கடும்சீற்றத்தின் அலையை ஐக்கியப்படுத்தும் அபாயத்தை முன்னிறுத்துகிறது.”

ஆனால் நவ-நாஜி இயக்கத்தின் "மிக அருமையானவர்களுக்கு" ட்ரம்ப் அவர் அனுதாபத்தைக் காட்டுகையில், அவர் செய்யும் கணக்கீடுகளை ஐரோப்பாவில் இருந்து புரிந்து கொள்வது ஒன்றும் மிகச் சிரமம் இல்லை. ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையில் மக்கள் மதிப்பிழந்த ஒரு கால் நூற்றாண்டு ஏகாதிபத்திய போர்கள், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஐரோப்பாவை போலவே அமெரிக்காவிலும் தொழிலாள வர்க்கம் மீதான இடைவிடாத சமூக தாக்குதல்களுக்குப் பின்னர், முதலாளித்துவ அரசியலை உத்தியோகபூர்வ ஜனநாயக அலங்காரங்களில் அலங்கரிப்பது இனியும் அதிக சாத்தியமில்லாது உள்ளது. அரசியல் உயரடுக்கிடம் இருந்து அன்னியப்படலும் கோபமும் தயவுதாட்சண்யமின்றி அதிகரித்து வருகின்ற நிலையில், ஆளும் வர்க்கம் அதன் ஆட்சிக்கு வேறொரு அடித்தளத்தை அமைக்க முயன்று வருகிறது.

உண்மையில் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை என்னவாக இருந்துள்ளது? 2011 இல் நாசகரமான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கு எதிராக கிரீஸில் கோபம் அதிகரித்த போது, ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பன்திரேயோவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பழமைவாதிகள் மற்றும் பாப்பன்திரேயோவின் சமூக ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து அதிவலது Popular Orthodox இயக்க கூட்டணியின் அடிப்படையில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு தொழில் நிபுணர்களின் அரசாங்கத்தை நிறுவியது. மேலும் இப்போது கண்டம் எங்கிலும் உள்ள, தங்களை அதிவலதிற்கு விரோதமாக காட்டிக்கொள்ளும் சக்திகள், அவர்களின் தேசியவாத நிலைப்பாடுகளை சட்டபூர்வ விவாதத்திற்குரிய கூறுபாடுகள் என்று வாதிடுகின்றன.

குட்டி-முதலாளித்துவ "இடதின்" அன்புக்குரியதும், சிக்கன திட்டங்களுக்கு சார்புடையதுமான சிரிசா கட்சி (“தீவிர இடதின் கூட்டணி"), கிரீஸில் பதவியேற்ற போது, அது அதிவலது சுதந்திர கிரேக்கர்களுடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைத்தது. ட்ரம்பின் மற்றும் இனவெறியின் ஒரு எதிர்ப்பாளராக இன்று பாசாங்குத்தனமாக தன்னை காட்டிக்கொள்ளும் மக்ரோன், அவரது தேர்தல் வெற்றி உரையில், பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் அரசியல் வழிதோன்றலான தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு ஒரு "குடியரசு வணக்கம்" செலுத்திய பின்னர் தான் அவரது ஜனாதிபதி பதவிகாலத்தைத் தொடங்கினார்.

இறுதியாக, இனவாதத்தைக் கண்டிக்கும் மற்றும் ட்ரம்புடன் ஒரு மோதலுக்கு கோரிக்கைகள் விடுக்கும் சூல்ஸ், மேர்க்கெலின் பரந்த தலைமையைக் கடந்து வர ஜேர்மன் தேர்தல்களில் இனவாதத்திற்கு முறையீடுகள் செய்ய முயன்று வருகிறார்—லைப்சிக்கில் வாழ்ந்து வரும் புலம்பெயர்ந்தவர்கள், “இந்நாட்டில் யார் திட்டநிரலை வகுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு, அவர்கள் முகத்தில் நல்ல ஒரு அறை" கொடுக்க வேண்டுமென அவர் நினைப்பதாக அறிவித்தார். ட்ரம்ப்பை நோக்கிய சூல்ஸின் மனோபாவம் என்னவாக இருந்தாலும், இதுபோன்ற பிற்போக்குத்தனமான அழுக்குகள் ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அதிவலது அரசியலை மட்டுமே பலப்படுத்தும்.

சார்லட்வில் குறித்த ட்ரம்ப் கருத்துக்களில் வெளிப்பட்ட பாசிசவாத அபாயம், அமெரிக்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு நீள்கிறது. அதன் வேர்கள் ட்ரம்பின் தனிப்பட்ட குணநலன்களிலோ அல்லது "வெள்ளையின அமெரிக்காவின்" பாவங்களிலோ கிடையாது, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறையின் உலகளாவிய சீரழிவிலேயே வேரூன்றியுள்ளது. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்ததைப் போலவே, பாசிசவாதத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரம் மற்றும் போர் அபாயத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரமான சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே முன்செல்வதற்கான ஒரே பாதையாகும்.