ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump threatens “fire and fury” against North Korea

வட கொரியாவிற்கு எதிராக ட்ரம்ப் "குண்டுகள் சீறுமென" அச்சுறுத்துகிறார்

Peter Symonds
9 August 2017

கொரிய தீபகற்பத்தில், அதுவும் அப்பிராந்தியத்தை மற்றும் உலகையே வேகமாக சூழக்கூடிய, ஒரு போர் அபாயத்தை மிகப்பெரியளவில் அதிகரித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வட கொரியாவிற்கு எதிராக இரத்தம் உறைய வைக்கும் ஓர் அச்சுறுத்தல் விடுத்தார். “அமெரிக்காவிற்கு இனியும் அச்சுறுத்தல் விடுக்காமல் இருப்பதே வட கொரியாவுக்கு நல்லது,” என்றவர் எச்சரித்தார். “குண்டுகள், சீற்றம் மற்றும், வெளிப்படையாக, பலம், இவற்றைக் கொண்டு இதற்கு முன்னர் இந்த உலகம் ஒருபோதும் கண்டிராதவற்றை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

கடந்த மாதம் வட கொரியா இரண்டு தொலைதூர ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, வட கொரியா பொருளாதாரத்தை முடக்க அச்சுறுத்தும் விதத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவை தண்டிக்கும் வகையிலான தடையாணைகளை திணித்ததற்குப் பின்னர் வந்துள்ள ட்ரம்பின் இந்த கருத்துக்கள், ஒரு கூர்மையான பதட்ட நிலைமையை எரியூட்ட மட்டுமே செய்யும். ஒரு சிறிய மற்றும் வறிய நாட்டை சாம்பலாக்க ட்ரம்ப் அச்சுறுத்துவது, அடாவடித்தனத்தின் உச்சக்கட்டமாக உள்ளது.

அமெரிக்கா ஆட்சி மாற்றத்தையோ அல்லது ஓர் இராணுவ தாக்குதல் தொடங்குவதற்கான ஒரு சாக்குபோக்கையோ தேடவில்லை என்று வட கொரியாவுக்கு மறுஉத்தரவாதம் வழங்கியதன் மூலமாக, கடந்த வாரம் பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளம் அமைக்க முயன்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனின் முயற்சிகளுக்கு ட்ரம்ப் வேண்டுமென்றே திட்டமிட்டு குழிபறித்துள்ளார். வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவிடமிருந்து ஒரு பாரிய தாக்குதலை அது முகங்கொடுக்கிறது என்று மட்டுமே பியொங்யாங்கில் உள்ள அந்த ஸ்திரமற்ற, நெருக்கடி-நிறைந்த ஆட்சி அனுமானிக்க முடியும். அது ஆத்திரமூட்டும் அதன் சொந்த வாய்சவடால்களைக் கொண்டு விடையிறுத்து வருகிறது.

நேற்று ஒரு அறிக்கையில் வட கொரியா அறிவிக்கையில், மத்திய தூர ஏவுகணைகள் மற்றும் தொலைதூர ஏவுகணைகளுடன் குவாமில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களைத் தாக்க அது "செயல் திட்டத்தை ஆராய்ந்து வருவதாக" அறிவித்தது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள், அமெரிக்கா வட கொரியாவுக்கு எதிராக முன்கூட்டிய தாக்குதல்களை நடத்த அதற்கு வேண்டிய காரணங்களை வழங்குவதோடு, ட்ரம்ப் நிர்வாகத்தின் கரங்களில் நேரடியாக சாதகமாக்கிக் கொள்ளப்படும்.

1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், உலகம் இந்தளவுக்கு அணுஆயுத போர் விளிம்பின் நெருக்கத்தில் இருந்ததில்லை. ஒரு சம்பவமோ அல்லது தற்செயலான விபத்தோ, அது சிறியதோ பெரியதோ, அது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற ஏனைய அணுஆயுத சக்திகளையும் வேகமாக அதற்குள் இழுத்து, கணக்கிடவியலா விளைவுகளுடன் ஒரு மோதல் தூண்டப்படலாம்.

1962 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி அந்த நெருக்கடியை தணிக்க முனைந்து, கியூபாவில் இருந்த ரஷ்ய ஏவுகணை தளங்கள் மீது குண்டு வீச வேண்டுமென்ற அவரது பாசிசவாத விமானப்படை தலைமை தளபதி ஜெனரல் குர்டிஸ் லீமே இன் கோரிக்கைகளை நிராகரித்து போலில்லாமல், இப்போது ட்ரம்ப் வேண்டுமென்றே வட கொரியா நெருக்கடியை தீவிரப்படுத்தி வருகிறார். அவரின் அச்சுறுத்தல்கள் ஒரு அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து முன்னொருபோதும் வந்திராத வகையில் உள்ளது. ஏதேனும் சமாந்தரத்தை காணவேண்டின், ஒருவர் ஹிட்லரின் பாசிசவாத கோபங்களைத் தான் திரும்பி பார்க்க வேண்டியிருக்கும்.

ட்ரம்பின் அறிக்கைகளை ஏதோ வெற்று வாய்சவடால் என்று எவரும் ஒதுக்கிவிடக்கூடாது. மேற்கொண்டு வட கொரியா பரிசோதனைகள் நடத்தினால், அதை நிர்மூலமாக்கலைக் கொண்டு அச்சுறுத்தி இருப்பதன் மூலம், ட்ரம்ப் அவர் பின்வாங்க முடியாத ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளார். அனைத்திற்கும் மேலாக, உள்நாட்டு அரசியல் கொந்தளிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு ஒரு வழிவகையாக, வட கொரியா மீது ட்ரம்ப் ஒரு ஈவிரக்கமற்ற தாக்குதலை தொடுக்க முனையலாம் எனும் அளவிற்கு அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் ஆழ்ந்த நெருக்கடியும், உட்பூசல்களும் நிலவுகின்றன.

அமெரிக்க நகரங்கள் வட கொரியாவின் ஓர் அணுஆயுத தாக்குதலின் உடனடி ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க பொது மக்களை நம்ப வைக்கும் நோக்கில், ட்ரம்ப் நிர்வாகம், பணிவடக்கத்துடன் கூடிய ஊடகங்களது உதவியோடு, ஏற்கனவே ஒரு பிரச்சார நடவடிக்கையை நடத்திக் கொண்டிருக்கிறது.

“வட கொரியா வேகமாக ட்ரம்பின் சிவப்பு கோட்டை அணுகி வருகிறது,” என்று தலைப்பிட்டு வாஷிங்டன் போஸ்ட் நேற்று ஒரு கட்டுரை வெளியிட்டது. பியொங்யாங் "அது பரிசோதித்து வரும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் தொலைதூர ஏவுகணைகளில் (ICBM) ஒன்றின் உள்ளே பொருத்தக்கூடிய ஒரு சிறிய குண்டை" தயாரித்துள்ளதாக "முன்னரே பாதுகாப்பு உளவுத்துறை இரகசிய முகமை ஆய்வில்" கூறப்பட்டதை அக்கட்டுரை விமர்சனபூர்வமின்றி வெளியிட்டது.

அந்த கூற்றுகள், ஈராக் மீதான சட்டவிரோத படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் குறித்த பொய்களை ஜோடித்த அதே அமெரிக்க உளவுத்துறை ஸ்தாபகத்திடம் வந்ததாகும். அவற்றை முகமதிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. வட கொரியாவின் ICBM கள் என்றழைக்கப்படுவை செல்லக்கூடிய தூரம், துல்லியத்தன்மை, சுமக்கும் குண்டுகளின் எடையளவு, பூமியின் சூழலுக்குள் மீண்டும் நுழைந்து தப்பித்திருக்கக்கூடிய திறன் என அவை குறித்து கூறப்படும் ஒவ்வொன்றின் மீதும் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

வட கொரியா உடனான ஒரு போரின் விளைவாக ஏற்படக்கூடிய மிகப்பெரும் உயிரிழப்புகள் குறித்து ட்ரம்ப் முற்றிலும் அலட்சியமாக உள்ளார். அந்த மோதல் கொரிய தீபகற்பத்திற்கு உள்ளேயே மட்டுப்பட்டு இருந்தாலும் கூட, மில்லியன் கணக்கானவர்கள் அதில் கொல்லப்படுவார்கள். ஒரு மதிப்பீட்டின்படி, அந்த சண்டையின் ஆரம்ப ஒருசில மணிநேரங்களில் தென் கொரிய தலைநகரம் சியோல் மக்கள்தொகையில் மட்டுமே மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

NBC "Today" நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசுகையில், வலதுசாரி குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்செ கிரஹாம் ட்ரம்ப் சிந்தனை மீது சிலிப்பூட்டும் உட்பார்வையை வழங்கினார். “[கிம் ஜொங்-யுன்] ஐ தடுப்பதற்கு ஒரு போருக்குள் இறங்க வேண்டியிருந்தால், அது அங்கேயே முடிந்துவிடும்,” என்றார். “ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் அங்கேயே கொல்லப்படுவார்கள். அவர்கள் இங்கே கொல்லப்பட போவதில்லை—இதை அவர் என் முகத்திற்கு நேராக என்னிடம் கூறினார்,” என்றார்.

வட கொரியா அதன் ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்தாவிட்டால்—வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க கோரிக்கைகளுக்கு முழுமையாக அடிபணியாவிட்டால், போர் “தவிர்க்கவியலாதது” என்று கிரஹாம் அறிவித்தார். “ஒரு ICBM ஐ கொண்டு அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவைத் தாக்க முயன்றால், அவர்கள் ஏவுகணை திட்டத்தின் மீது வட கொரியாவுடன் ஒரு போர் நடக்கும். [ட்ரம்ப்] இதை என்னிடம் தெரிவித்துள்ளார், நான் அவரை நம்புகிறேன்,” என்றார்.

ஆசியாவில் இந்த கடுமையான போர் அபாயம் வெறுமனே பாசிசவாத ட்ரம்ப் ஒருவரால் ஏற்பட்ட விளைவல்ல, மாறாக இது உலகளாவிய மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த மற்றும் தீர்க்கவியலாத நெருக்கடியின் வெளிப்பாடாகும். ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் அமெரிக்க நிர்வாகங்கள், ஒருபோல, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியை மாற்றி, அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை நிறுவும் பெரும்பிரயத்தன முயற்சியில் இராணுவ ஆக்கிரமிப்பைப் புகலிடமாக ஏற்றுள்ளன.

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த போர்கள், இப்போது உலகின் பிரதான பொருளாதார சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி மோதலாக ஒன்றுதிரண்டு வருகின்றன. ஒபாமா நிர்வாகத்தின் "ஆசிய முன்னெடுப்பானது", வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களின் மத்திய இலக்கில் உள்ள சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்பில் இந்தோ-பசிபிக் எங்கிலும் ஒரு மிகப்பெரும் இராணுவ ஆயத்தப்படுத்தலை உள்ளடக்கி இருந்தது.

அமெரிக்கா ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்து வரும் நிலையில், அது, ஐரோப்பாவில் ஒன்று மாற்றி ஒன்றாக இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அதேவேளையில் ரஷ்யா அதன் சொந்த பரந்த போர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கில், அமெரிக்காவும் ரஷ்யாவும் இராணுவரீதியாக சிரிய மோதலின் எதிரெதிர் பக்கங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த வெடிப்பு-புள்ளிகளில் ஏதேனும் ஒன்று, அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போருக்கு தூண்டுதலாக அமைந்துவிட்டால், அது பில்லியன் கணக்கான மக்களை இல்லையென்றாலும், மில்லியன் கணக்கானவர்களை கொன்று, நாம் அறிந்த நாகரீகத்தையே அழித்துவிடக்கூடும்.

இந்த அசாதாரண பதட்டமான சூழல் அதீத ஆபத்தானது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் ஏதாவது ஒருநாள் காலையில், வட கொரிய இராணுவ நிலைகள் மற்றும் தொழில்துறை மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்களை தொடங்கியது என்பதையும், சியோல் மற்றும் டோக்கியோவை தாக்கி பியொங்யாங் பதிலடி கொடுத்துள்ளது என்பதையும், சீனாவும் ரஷ்யாவும் மற்றும் ஏனைய பிரதான சக்திகளும் அவற்றின் அணுஆயுதங்களை உயர் எச்சரிக்கை நிலையில் நிறுத்தி அவற்றின் சொந்த அச்சுறுத்தல்களை அறிவித்துள்ளன என்பதையும் கேட்க எழவே முடியாத நிலையில் காண்பர்..

போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அவசர பணியாகும். இந்த அரசியல் முன்னோக்கிற்காக தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) போராடிக் கொண்டிருக்கின்றன.