ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Public meeting in Chennai, India: Oppose the US-led imperialist war drive!

சென்னை, பொதுக் கூட்டம்:  அமெரிக்கா தலைமையிலான  ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்போம்!

7 ஆகஸ்ட் 2017

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள், ஆகஸ்ட் 27 ம் தேதி சென்னையில் ஒரு  பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கின்றனர், இதில் சீனாவிற்கு எதிராக  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சியடையும் போர் அபாயம் பற்றியும்  இந்த  பேரழிவை தடுப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட  தேவையான  அரசியல் மூலோபாயம் பற்றியும் விவாதிக்கப்படும்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான இராணுவ கட்டியெழுப்புதலில் இந்தியாவின் அதிகரித்துவரும் ஈடுபாடு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் நிகழ்கிறது.  ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட இந்தியாவில் "இடது" என்று அழைக்கப்படுபவர்கள், வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்திற்கான பொறுப்பற்ற உந்துதலினால் எழும் பிரமாண்டமான ஆபத்துக்கள் பற்றி மூடி மறைக்கின்றனர்.

2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதம மந்திரி நரேந்திர மோடி சீனாவிற்கு எதிரான ஒரு "முன்னிலை" நாடாக இந்தியாவை  மாற்றியமைத்துள்ளார், மேலும் நாட்டின் இராணுவத்தை வாஷிங்டனின் திட்டங்களுக்குள் ஒருங்கிணைத்துள்ளார்.

அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் இந்தியாவின் இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன மற்றும் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு  மோடி அரசாங்கம் ஆதரவளிக்கிறது. ஆசியா பசிபிக்கில்  ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுடனும் இந்தியா அதன் உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இரு அணு ஆயுத சக்திகளான  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே  பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பூட்டான் மற்றும் சீனாவுக்கு இடையில் ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாக இருக்கும் டோக்லாம் பீடபூமியில் சீனத் தொழிலாளர்களின் சாலை விரிவாக்கப் பணியை நிறுத்துவதற்கு சமீபத்தில்  இந்தியத் துருப்புகள் மேற்கொண்ட தலையீடு இராணுவ மோதலுக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் அனைத்து பிரிவுகளும் ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பூகோளரீதியான போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும் படி தொழிலாள வர்க்கத்திற்கு  அழைப்பு விடுத்தன. ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கு மற்றும் ஆசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதற்கு இந்திய தொழிலாளர்களை ஆசியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் முயற்சி செய்கின்றனர்.

சென்னையில் எங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, இந்த முக்கியமான விவாதத்தில் கலந்துகொள்ளும்படியும்  தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையுள்ள அறிவுஜீவிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

தேதி: ஆகஸ்ட் 27

நேரம்: காலை 10 மணி

இடம்: முதல் மாடி, பெரியார் ஈ.வி. ராமசாமி-நாகம்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (HPM பாரடைஸ் கல்யாண மஹால் எதிரில்)

277/2 சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலை, அம்பத்தூர், சென்னை -600098