ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mélenchon and Socialist Party launch symbolical delivery legal challenge to French labor law reform

மெலோன்சோனும் சோசலிஸ்ட் கட்சியும் பிரெஞ்சு தொழிற்சட்ட சீர்திருத்தத்திற்கு அடையாள சட்டபூர்வ சவாலைத் தொடுக்கின்றனர்

By Anthony Torres
7 August 2017

உத்தரவாணைகள் மூலமாக தன்னிச்சையாக தொழிற்சட்டங்களைச் சீர்திருத்துவதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு வழிவகை செய்யும் ஒரு சட்டமசோதாவிற்கு எதிராக, தேசிய நாடாளுமன்றத்தில் ஜோன்-லூக் மெலோன்சோனின் குழு ஒரு சட்டபூர்வ சவாலை தொடுத்துள்ளது. அது, சோசலிஸ்ட் கட்சி (SP) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றுடன் சேர்ந்து, நாடாளுமன்றம் மற்றும் செனட்டில் இப்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ள அந்த சட்டமசோதாவிற்கு எதிராக அரசியலமைப்பு குழுவிற்கு ஒரு முறையீட்டு மனு அனுப்பியது.

இதுதான், மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கான மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம், சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிச PCF இன் எதிர்வினையாகும். BFM-TV க்கான Elabe கருத்துக்கணிப்பு பயிலக தகவல்களின்படி, பிரெஞ்சு மக்களில் 61 சதவீதத்தினர் ஜனாதிபதி முன்மொழிந்துள்ள தொழிற்சட்ட சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர். மக்ரோன் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர், வெறும் 36 சதவீத செல்வாக்கு விகிதத்தையே பெற்றுள்ளதாக YouGov இன் கருத்துக்கணிப்பு குறிப்பிட்டது; இது, 1993 இல் ஜாக் சிராக்கிற்குப் பின்னர், கடந்த 20 ஆண்டுகளில் மிக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியின் மிகக் குறைந்த மட்டமாகும்.

மக்ரோன் இப்போது முன்மொழிய உத்தேசிக்கும் இந்த பிற்போக்குத்தனமான தொழிற்சட்டத்தை முதலில் முன்வைத்ததும், ஆனால் மக்ரோன் இப்போது முன்மொழிந்து வரும் நடவடிக்கைகளைப் பாரிய போராட்டங்களை எதிர்கொண்டு பின்வாங்கியதுமான சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்வதென்ற மெலோன்சோனின் முடிவானது, தொழிலாளர்களுக்கு அவர் வலை விரித்து வருகிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இந்த சட்டபூர்வ சவால், ஓர் எரிச்சலூட்டும் பிரச்சார சூழ்ச்சியாகும். சோசலிஸ்ட் கட்சி அதுவே முன்மொழிந்த ஒரு நடவடிக்கையை, மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கீழ் நடத்தப்பட்ட சிக்கன கொள்கையை தொடரும் ஒரு நடவடிக்கையை தடுக்கும் உத்தேசம் அதற்கு கிடையவே கிடையாது.

இந்த முறையீடு, “பிரதானமாக உத்தரவாணைகளில் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மீதும் மற்றும் சட்டவிரோத வேலைநீக்கங்களால் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக திரும்ப வழங்குவதற்கான உரிமை மீதும் தெளிவு இல்லை” என்பதற்கே இந்த முறையீடு என்று மெலோன்சோன் (LFI குழு), André Chassaigne (PCF குழு), மற்றும் Olivier Faure (புதிய இடது-சோசலிஸ்ட் கட்சி குழு) ஆகியோரால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை குறிப்பிட்டது.

அவர்கள் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்த சட்டத்தை ஏற்கும் நடைமுறை, அரசியல்ரீதியில் குறிப்பிட்ட பாத்திரம் வகிப்பதிலிருந்து நாடாளுமன்றத்தைத் தடுத்த சடரீதியிலான நிலைமைகள் மற்றும் தாமதங்களால் சிதைக்கப்பட்டது, மேலும் குறிப்பாக நாடாளுமன்ற விவாதத்தில் தெளிவுபடுத்துவதற்கான மற்றும் சிரத்தையோடு இருக்க வேண்டும் என்பதன் மீதான கோரிக்கையால் நசுக்கப்பட்டது. தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் மீது குழப்பத்தை விதைப்பதன் மூலம், இச்சட்டம் … தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல், விருப்பம் போல் தொழிற்சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு முழு சுதந்திரத்தை வழங்குகிறது,” என்றனர்.

அரசியலமைப்பு குழுவிற்கு ஒரு முறையீட்டை அனுப்ப, குறைந்தபட்சம் 60 பிரதிநிதிகள் வாக்குகளாவது அவசியமாகும். “அரசியலமைப்பு குழுவிற்கு முறையிடுவதற்கு எங்கள் குழுக்கள் அனுமதிக்கப்படுவதற்கும் மற்றும் பெரும்பான்மையினர் வாக்களித்த இச்சட்டமசோதாக்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டவையே என்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு கூட்டு முயற்சி மட்டுமே ஒரே வழியாக உள்ளது,” என்று LFI, PCF மற்றும் PS தொங்குதசைகள் கூட்டாக விவரித்தன.

அரசியலமைப்பு குழு ஒரு தீர்மானத்தை எட்ட இப்போது அதற்கு ஒரு மாதகால அவகாசம் உள்ளது. ஆனால், மக்ரோனின் சிக்கன கொள்கைகளுக்கு ஆளும் வர்க்கத்தினுள் அதிகரித்த ஆதரவு நிலவுகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கடும் தாக்குதல்களை இந்த முறையீடு வெற்றிகரமாக தடுப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இச்சீர்திருத்தத்தின் கதி மீது எந்தவொரு நிச்சயமற்றத்தன்மையையும் தவிர்ப்பதற்காக, அரசியலமைப்பு குழு விரைவிலேயே, இம்மாதம் முடிவதற்கு முன்னரே, ஒரு தீர்ப்பை வழங்கிவிடுமென எதிர்பார்க்கப்படுவதாக பல செய்திகள் சுட்டிக்காட்டின.

வெகுஜனவாத தொனியில் "இடதின்" மரணத்தை அறிவிக்கின்ற அதேவேளையில், மெலோன்சோன், மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சி உடனான அவர் உறவுகளைப் பேணி வருகிறார் மற்றும் ஹோலாண்டின் நடவடிக்கைகளால் அது மதிப்பிழந்துவிட்ட பின்னரும் அதை ஒரு எதிர்கட்சியாக கொண்டு செல்ல முயன்று வருகிறார். அவசரகால நிலையைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு இல்லாமல், தொழில் விதிமுறைகளைத் தாக்கி, சோசலிஸ்ட் கட்சி அதன் தொழிற்சட்டத்தை திணித்தது. பிரான்சின் அவசரகால நிலையின்கீழ் கலகம்-ஒடுக்கும் பொலிஸை அணிதிரட்டி, கடந்த வசந்தகாலம் மற்றும் கோடைகாலத்தின் போராட்டங்களை, குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களது போராட்டங்களை, அது காட்டுமிராண்டித்தனமாக நசுக்கியது.

சரீரரீதியிலான ஒடுக்குமுறையைக் கொண்டு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பீதியூட்ட முடியாமல் போனதும், அப்போதைய பிரதம மந்திரி இமானுவல் வால்ஸ் அச்சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்த போராட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுமென அச்சுறுத்தினார். இது ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் அடிப்படை தாக்குதலாகும், வேலைநிறுத்தமானது இதுவரையில் அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இலையுதிர்காலத்தில் ஒரு அடையாள போராட்டத்திற்கு அப்பாற்பட்டு, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உடனடியாக மேற்கொண்டு போராட்டங்களை நிறுத்திக் கொண்டதால், இத்தாக்குதல் அதன் குறிக்கோளை எட்டியது.

சோசலிஸ்ட் கட்சி அதன் தொழிற்சட்டத்தைத் திணிப்பதில் வெற்றி அடைந்தது என்றாலும் கூட, அநியாயமாக வேலையிலிருந்து நீக்கினால் முதலாளிமார்கள் மீது விதிக்கப்படும் அபராத வரம்புகள் மற்றும் துறைசார்ந்த உடன்படிக்கைகள் மற்றும் தேசிய தொழில் விதிமுறைகளை மீறுவதற்கான நிறுவனங்களின் உரிமை போன்ற சில குறிப்பிட்ட கூறுபாடுகளை அது நீக்க வேண்டியிருந்தது, இவற்றை உத்தரவாணைகள் மூலமாக இப்போது மக்ரோன் மீண்டும் அறிமுகப்படுத்த நோக்கம் கொண்டுள்ளார்.

மெலோன்சோன் உடன் ஒரு கூட்டு முறையீடு செய்வதென்ற சோசலிஸ்ட் கட்சியின் முடிவானது, மக்ரோன் இப்போது மீண்டும் திணிக்க முயன்று வரும் புள்ளிகள் மீது அதன் நிலைப்பாட்டில் எதையேனும் மாற்றிக் கொண்டுள்ளது என்பதை குறிப்பிடவில்லை. இவ்விதத்தில், புதிய இடது/சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதி Le Parisien க்கு கூறுகையில், மக்ரோன் மீதான மெலோன்சோனின் விமர்சனங்களை அவர் எதிர்ப்பதாக தெரிவித்தார்: “LFI எடுக்கும் தொனியை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதில் நாங்கள் நிச்சயமாக இல்லை. அதற்கு அப்பாற்பட்டு, அரசாங்கத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பதில் எங்களுக்குள் ஒரே மாதிரியான கருத்துருவும் இல்லை,” என்றார்.

மக்ரோனுக்கு எதிராக கட்டமைக்க மெலோன்சோன் கடந்த மாதம் சூளுரைத்த எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் குணாம்சம் இதுவரையில் தெளிவாக இல்லை. இது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை அணிதிரட்டுவது குறித்த பிரச்சினை கிடையாது, மாறாக ஹோலாண்டின் கீழ் மதிப்பிழந்த பழைய தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி அதிகாரத்துவங்களின் பாத்திரம் குறித்து பிரமைகளை மற்றும் பொய் நம்பிக்கைகளை விதைப்பது சம்பந்தமான பிரச்சினையாகும்.

நாடாளுமன்றத்தில் சிறிய, பலவீனமான LFI சிறுபான்மையின் பலத்தை அதிகரிப்பதற்காக, பாரம்பரிய அதிகாரத்துவங்களது கட்டுப்பாட்டின் கீழ் அணிதிரட்டப்பட்ட, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு குறிப்பிட்ட அடுக்குகளை மெலோன்சோன் சுரண்ட திட்டமிட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் உள்ள இந்த சிறுபான்மை, இராணுவத்திற்கு நேரடியாகவும் அனுதாபமாக உள்ளது, முன்னாள் முப்படை தளபதி ஜெனரல் பிலிப் டு வில்லியே இன் வரவு-செலவு திட்டக்கணக்கு மீதான கோரிக்கைகளை ஆதரித்துள்ளது. ஒருசில போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை மெலோன்சோன் ஒருங்கிணைக்க முயன்று வரும் அதேவேளையில், மக்ரோன் அவர் உத்தரவாணைகளை கொண்டு தொழிற்சங்கங்களுக்கு வழங்க நோக்கம் கொண்டுள்ள "தொழிற்சங்க காசோலை முறை" மற்றும் ஏனைய போலி-சட்ட வகைமுறை கையூட்டுகள் மீதும் பேரம்பேசி வருகிறார்.

மெலோன்சோனின் முன்னோக்கு இந்த வசந்தகால ஜனாதிபதி தேர்தலின் போது அவர் வகித்த கோழைத்தனமான பாத்திரத்தில் இருந்து நேரடியாக பெருக்கெடுக்கிறது. மெலோன்சோன் வரவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான போக்கில் அணித்திரட்டுவதற்காக, மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கு இடையிலான தேர்தலைப் புறக்கணிப்பதற்கு அழைப்புவிடுப்பதை நிராகரித்தார். இவ்விதத்தில் அவர் அரசியல் கடமைப்பாடுகளை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவர் லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிப்பதை மறைமுகமாக ஆதரித்திருந்தார்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்தை எதிர்க்கும் வகையில், மெலோன்சோன் பின்னர், LFI கட்சி சட்டமன்ற தேர்தல்களை ஜெயித்து, அவரே பிரதம மந்திரியாக இருந்து மக்ரோன் மீது அதன் கொள்கையைத் திணிக்கும் என்ற பிரமைகளைப் பரப்பினார். ஆனால் அந்நிகழ்வில், சோசலிஸ்ட் கட்சியும் மெலோன்சோனும் இருதரப்பும் ஒட்டுமொத்தமாக சட்டமன்றத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையை தான் ஜெயிக்க முடிந்திருந்தது.

தொழிலாளர்களை நிலைகுலைப்பதும் கட்டுப்படுத்துவதுமே மெலோன்சோனின் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் நோக்கமாகும். சோசலிஸ்ட் கட்சியுடனான அதன் கூட்டணி எடுத்துக்காட்டுவதைப் போல, அதன் தேசிய மற்றும் நாடாளுமன்ற நோக்குநிலை தான் அதன் மைய குணாம்சமாகும். இந்த மூலோபாயம், வரவிருக்கும் மாதங்களில் மற்றும் வருடங்களில் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வெடிக்க உள்ள போராட்டங்களின் அபிவிருத்திக்கு ஒரு தடங்கலாக இருக்கும் என்பதைத் தவிர வேறொன்றுமாக இருக்காது, இருக்கவும் முடியாது.