ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan Tamil leaders back suppression of oil workers strike

இலங்கைத் தமிழ் தலைவர்கள் எரிபொருள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்குவதை ஆதரிக்கின்றனர்

By S. Jayanth
4 August 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரனும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன (CPC) தொழிலாளர்களின் சமீபத்திய வேலை நிறுத்தத்தை அடக்குவதற்கு கொழும்பு அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியதை நியாயப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாகவும் அவர்கள் தொழிலாளர்களை குற்றம் சாட்டினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து அமெரிக்-சார்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறது.

பெற்றோலியத் துறையை அத்தியாவசிய சேவையாக ஆக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரகடனத்தின் மீது ஜூலை 27 அன்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போதே சம்பந்தனும் சுமந்திரனும் இந்த ஜனநாயக விரோத கருத்தை வெளியிட்டனர்.

ஜூலை 24, எரிபொருள் தொழிலாளர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர். அதே நாள் இரவு, அரசாங்கம் முக்கிய விநியோக மையங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்காக இராணுவத்தை அணிதிரட்டியது. சி.பி.சி. வளாகத்தில் படையினர் நுழைந்து தொழிலாளர்களை துரத்தினர். வேலைநிறுத்தம் ஒடுக்கப்பட்டபோது, தொழிற்சங்க தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தொழிற்சங்க நடவடிக்கையை உத்தியோகபூர்வமாக முடித்துக்கொண்டனர் (பார்க்க: இலங்கை அரசாங்கம் எரிபொருள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை அனுப்பியது).

சம்பந்தன், அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கையை ஜனநாயகமானது என்று சித்தரித்ததோடு தொழிற்சங்க நடவடிக்கையை ஜனநாயக விரோதமானது என குற்றம் சாட்டினார். விவாதத்தில் கலந்துகொண்டு, சி.பி.சி. தொழிலாளர்களுக்கு எதிரான சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களை எதிரொலித்த சம்பந்தன், “தொழிற்சங்க நடவடிக்கை எரிசக்தி விநியோகத்தை முடக்கியதுடன், எந்தவொரு தடைமின்றி மக்களுக்கு இந்த சேவைகளை வழங்குவதற்கே அத்தியாவசிய சேவை உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்," என்று பிரகடனம் செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவின் "சதியே" இந்த சி.பி.சி. வேலைநிறுத்தம் என்று அவர் வஞ்சத்தனமாக முத்திரை குத்தினார். இது தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தினதும் குற்றச்சாட்டு ஆகும். "வேலைநிறுத்தங்கள் மூலம் நீங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது" என்று சம்பந்தன் தொழிலாளர்களை எச்சரித்தார். தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்கு "தைரியமான முடிவுகளை எடுக்க" வேண்டும் என அவர் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். "நான் இந்த அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாடு கடன்களில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்."

தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு அரசாங்கம் தோல்வியுற்றால், " [இராஜபக்ஷ குழு என அழைக்கப்படும்] கூட்டு எதிர்ப்பை அது ஊக்குவிக்கும்," என அவர் மேலும் கூறினார்: "நீங்கள் திறமையாகவும் விளைபயனுடனும் நிர்வகிக்கின்றீர்கள் என்பதை நிரூபித்து, கூட்டு எதிரணியை மௌனியாக்க வேண்டும்".

இராணுவத்தை சமாதானப்படுத்த, முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் தற்போதைய அரசாங்க அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஒரு முன்மாதிரித் தலைவராக சம்பந்தன் பாராட்டினார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட இறுதி இராணுவத் தாக்குதலை பொன்சேகா தலைமை தாங்கினார். இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசிய சில சி.பி.சி. தொழிலாளர்கள், சி.பி.சி. வளாகத்தை கைப்பற்றுவதற்காக எரிபொருள் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையானது பொன்சேகாவின் உதவியுடன் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தனர்.

தனது தலைவரின் அறிக்கைகளுக்கு எண்ணெய் வார்த்த சுமந்திரன், "வேலைநிறுத்தம் என்பது இறுதி ஆயுதம்" என்று அறிவுரை கூறியதுடன், "தொழிலாளர்கள் அதைத் துஷ்பிரயோகம் செய்தால், அவர்களது சொந்த உரிமைகள் ஆபத்துக்குள்ளாகும்" என்று எச்சரித்தார். தொழிற்சங்கங்களை பொறுப்பற்றவை என்று குற்றம் சாட்டிய அவர், சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு மாற்றீடுகள் அரசாங்கத்துக்கு கிடையாது," என்று அவர் முடித்தார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் (GMOA) போராட்டங்களை குற்றவியல் நடவடிக்கை என பண்புமயப்படுத்திய சுமந்திரன், "நோயாளிகளின் உயிர்களை ஆபத்தில் தள்ளுவதாக" கூறினார். மருத்துவ பட்டங்களை வழங்கும் தராதரத்தில் இல்லாததால் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று GMOA தொடர்ந்து கோரிவருகின்றது.

தமது உரிமைகளை காப்பதற்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் மீது நச்சுத்தனமான தாக்குதல்கள் நடத்தும் தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள், நாட்டில் அரசாங்கத்தையும் முதலாளித்துவ அமைப்பு முறையையும் பாதுகாப்பதற்கான சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

முக்கிய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, போலி இடதுகள் மற்றும் கல்வியாளர்களுடனான ஒருங்கிணைந்து, 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு முன்னணியில் செயற்பட்டது. சிறிசேன மற்றும் அவரது ஆதரவாளர்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிரான வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டனர்.

இராஜபக்ஷவுக்கு பதிலாக சிறிசேனவை பதிலீடு செய்வதற்காக கொழும்பில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வாஷிங்டன் மற்றும் புது தில்லி தலையிட்டதை மூடிமறைக்க, அவர்கள் "நல்ல ஆட்சி" என்ற சாக்குப் போக்கை பயன்படுத்தினர். இந்த நாடுகள் இராஜபக்ஷவின் யுத்தத்தையும், அவரது ஜனநாயக விரோத ஆட்சியையும் ஆதரித்த போதிலும், அவை இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கு விரோதமாக இருந்தன. அவை சீனாவை தமது பொருளாதார மற்றும் மூலோபாய போட்டியாளனாக கருதுகின்றன. சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைக்கும் அமெரிக்கா, இலங்கையை இந்து சமுத்திரத்தில் ஒரு மூலோபாய தளமாக வைத்துக்கொள்ள விரும்புகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக-விரோத மற்றும் தொழிலாள வர்க்க-விரோத நிலைப்பாடுகள் முதலாளித்துவ தமிழ் தேசியவாதத்தின் பிற்போக்கு சீரழிவின் வெளிப்பாடு ஆகும். அண்மைய காலப்பகுதியில், தமிழ் கூட்டமைப்பின் பங்காளியான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும், அரசாங்கத்துடன் சமரசமாக இருப்பதாக சம்பந்தனையும் சுமந்திரனையும் விமர்சித்து வந்துள்ளன. சி.பி.சி. தொழிலாளர்கள் மீதான தமிழ் கூட்டமைப்பின் தாக்குதலைப் பற்றி அவர்கள் மௌனமாக இருப்பதன் மூலம் இந்த தாக்குதலை பகிர்ந்துகொள்கின்றனர்.

இலங்கையின் அனைத்து ஊடகங்களும் விரைவில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை மேற்கோள் காட்டியிருந்த அதேவேளை, தமிழ் நாளிதழ்கள் அவர்களது உரைகளை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன. தமிழ் நாளேடான வீரகேசரியின் ஆசிரியர் தலையங்கம் இரு தலைவர்களின் அறிக்கைகளையும் ஆதரித்தது.

வலதுபக்கம் நகர்ந்து ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்ந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முதலாளித்துவத்தின் ஏனைய பிரிவுகளும், சிங்கள ஆளும் உயரடுக்குடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதில் தங்களுடைய சிறப்புரிமைகளை தக்கவைக்க முயல்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொழும்பு அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்ததுடன் எந்தவொரு போர்க்குற்ற விசாரணைகளையும் ஒடுக்குவதற்கு உதவியது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குள் அரசாங்கம் உழைக்கும் மக்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்திருக்கிறது. தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீமுமாக இலங்கை முதலாளித்துவம், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டங்களை அபிவிருத்தியடைவது பற்றிய அச்சத்தில் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தத்தால் ஏற்பட்ட பேரழிவு நிலைமைகளுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் இன பாகுபாடுகளுக்கு எதிராக சர்வதேச ஐக்கியத்துக்காக போராடுவதற்கான புறநிலை நிலைமைகள் அபிவிருத்தியடைந்துள்ளன. சோசலிச தீர்வுக்காக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் ஏனைய தட்டினரை அதைச் சூழ அணிதிரட்டவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகின்றது. தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதே இந்த சோசலிசத் தீர்வாகும்.