ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain threatens potential military takeover of Catalonia as referendum looms

சர்வஜன வாக்கெடுப்பு நெருங்கி வருகையில், ஸ்பெயின் சாத்தியமான இராணுவ கைப்பற்றலைக் கொண்டு கட்டாலோனியாவை அச்சுறுத்துகிறது

By Alejandro López
18 September 2017

கட்டலான் சுதந்திரம் மீது அக்டோபர் 1 அன்று நடக்கவுள்ள சர்வஜன வாக்கெடுப்பு மீதான அதன் ஒடுக்குமுறையை ஸ்பெயினின் பழமைவாத மக்கள் கட்சி (PP) அரசாங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரதம மந்திரி மரீனோ ரஹோய் அந்த வாக்கெடுப்பைத் தடுப்பதற்காக, ஸ்பானிய அரசியலமைப்பின் ஓர் அவசரகால சட்ட உட்பிரிவை நடைமுறைப்படுத்த அச்சுறுத்தி வருகிறார்.

வெள்ளியன்று பார்சிலோனா பயணித்த ரஹோய், கட்டலோனியர்கள் “தவறு செய்து வருகிறார்கள், நாங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு செல்ல, எங்களை நீங்கள் நிர்பந்திக்க இருக்கிறீர்கள்,” என்றார். கடந்த வாரம், மக்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு செய்தி தொடர்பாளர் Rafael Hernando உம் நீதித்துறை அமைச்சர் Rafael Catalá உம் தனித்தனியே அச்சட்ட வழிவகையைக் கையிலெடுக்குமாறு அழைப்புவிடுத்தார்கள்.

ஒரு பிராந்திய அரசானது "அரசியலமைப்பு அல்லது பிற சட்டங்கள் அதன் மீது சுமத்தும் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்யத் தவறினாலோ, அல்லது ஸ்பெயினின் பொது நலன்கள் மீது ஆழமாக தப்பெண்ணங்களை விதைக்கும் விதத்தில் நடந்து கொண்டாலோ, ஸ்பெயின்" அதன் "கடமைப்பாடுகளை" பூர்த்தி செய்ய அல்லது "பொது நலன்களைப்" பாதுகாக்க பிராந்திய அரசின் மீது கட்டுப்பாட்டை எடுக்கலாமென பரவலாக “அணுசக்திக்கு ஒத்த விருப்பத்தெரிவாக" விவரிக்கப்படும் ஷரத்து 155 குறிப்பிடுகிறது.

இந்த ஷரத்து இதுவரையில் ஒருபோதும் கையிலெடுக்கப்பட்டதில்லை. அது கட்டாலோனியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருதரப்பிலும் தொழிலாளர்களிடையே ஒரு சமூக வெடிப்பிற்குக் களம் அமைக்கும் என்று அஞ்சி, சமீபம் வரையில், ரஹோயும் ஸ்பானிஷ் இராணுவமுமே கூட அதை கையிலெடுக்குமாறு அழைப்புவிடுக்க தயங்கி வந்தனர்.

ரஹோயின் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கான எதிர்ப்பு ஸ்பானிஷ் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்கு வெளியே அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியக்கூறு மற்றும் ஸ்பெயினின் உடைவு ஆகிய இரண்டுக்குமாறு சாத்தியக்கூறு குறித்து ஸ்பானிஷ் சோசலிச கட்சியும் (PSOE) சம அளவில் அஞ்சுகிறது. PSOE தலைவர் Pedro Sánchez ரஹோயை ஆதரித்து பார்சிலோனாவில் அவர் கருத்துக்களுக்கு விடையிறுக்கையில், “என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் [ரஹோய்] செய்வீர்கள்,” என்றார். வரலாற்றுரீதியில் PSOE உடன் நெருங்கிய El Pais பத்திரிகையில் சனியன்று வெளியான பதட்டமான ஒரு தலையங்கம், “ஜனநாயக ஒழுங்கமைப்பும் குழப்பங்களும் ஒருசேர இருப்பது சாத்தியமில்லை. அது ஸ்திரமாக இல்லை. அது நிலைநிற்க கூடியதாக இல்லை. அனைத்திற்கும் மேலாக, அது ஏற்கத்தக்கதாக இல்லை. அரசு மேற்கொண்டும் தன்னை நிலைநிறுத்துவதற்கு இந்த இணை சட்டபூர்வத்தன்மையை அனுமதிக்க முடியாது…" என்று குறிப்பிட்டது.

மாட்ரிட்டின் ஆத்திரமூட்டும் மொழியும் நடவடிக்கைகளும், 1939 இல் இருந்து 1978 வரை ஆட்சி செய்த பிராங்கோயிச சர்வாதிகாரத்தின் அடாவடித்தனத்தை நினைவூட்டுகின்றன. இது சர்வஜன வாக்கெடுப்பு நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறை மட்டுமே அதிகரிக்கிறது.

ஸ்பானிய நிதித்துறை அமைச்சர் Cristobal Montoro தகவல்படி, “சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒரு யூரோவும் செலவிடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்காக" இவ்வாரம் கட்டாலோனியாவின் நிதிகள் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்து, மாட்ரிட் முன்பில்லாத ஒரு படியை எடுத்துள்ளது.

கட்டாலன் அரசாங்கத்தின் துணை ஜனாதிபதியும் கட்டலோனிய இடது குடியரசு (ERC) கட்சியின் தலைவர் Oriol Junqueras, இந்நடவடிக்கையானது "நாட்டின் அமைப்புகளை [அதாவது கட்டலோனியாவை] கலைப்பதற்கான ஒரு கோழைத்தனமான வழி, அரசியலமைப்பின் ஷரத்து 155 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு கோழைத்தனமான வழி" என்று கூறியிருந்தார். பிரிவினைவாத கட்சிகளான கட்டாலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PdeCAT), ERC, மற்றும் மக்கள் ஒற்றுமையின் வேட்பாளர்கள் அமைப்பு (CUP) ஆகியவை "ஆம்" வாக்குகளுக்கு அழைப்புவிடுக்கும் பொது பேரணிகளை நடத்தி, அந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாரிப்பு செய்வதை இதுவரையில் தொடர்ந்து வருகின்றன.

துணைஇராணுவ மக்கள் காவல்படை அச்சுக்கூடங்களில் இருந்து சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவான குறைந்தபட்சம் 1.3 மில்லியன் துண்டறிக்கைகள் மற்றும் விளம்பர அறிக்கைகளைக் கைப்பற்றியுள்ளது, சர்வஜன வாக்கெடுப்பை ஊக்குவிக்கும் 10 வலைத்தளங்களை முடக்கியுள்ளது, மற்றும் கட்டாலன் செய்தி பதிப்பாசிரியர்கள் அவர்களின் பத்திரிகைகளிலோ அல்லது அவர்களின் வலைத்தளங்களிலோ அந்த சர்வஜன வாக்கெடுப்பு விளம்பரங்களை பிரசுரித்தால் அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்படுமென அச்சுறுத்தி உள்ளது. உள்ளூர் பொலிஸூம் வீதிகளில் சர்வஜன வாக்கெடுப்பு ஆவணங்களைக் கைப்பற்றியும், சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவான ஆவணங்களுடன் உள்ளவரை அடையாளம் கண்டும் வருகின்றன.

தங்களின் நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் வாக்குபெட்டிகள் வைப்பதற்குப் பொது இடங்களை வழங்கியுள்ள 700 நகர முதல்வர்கள், அந்த வாக்கெடுப்பைப் பகிரங்கமாக ஆதரித்திருப்பதற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு இப்போது அழைக்கப்பட்டுள்ளனர். இணங்க மறுத்தால் கைது செய்யப்படுவார்களென அவர்கள் அச்சறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தருணம் வரையில், கட்டாலன் பிரதமர் Carles Puigdemont ஐ கைது செய்ய நீதித்துறை முயற்சிக்கவில்லை. ஆனால் ஸ்பெயினின் அரசு தலைமை வழக்குதொடுனர் José Manuel Maza வலதுசாரி நாளிதழான El Mundo க்கு அளித்த ஒரு பேட்டியில் அவ்வாறு செய்ய அச்சுறுத்தி உள்ளார், அவர் தொடர்ந்து கூறுகையில் "சிறை தண்டனைகள் கோருவதை நான் முழுவதுமாக விட்டுவிடவில்லை,” என்றார்.

ஒரேயொரு முன்மாதிரி இருக்கிறதென்றால் அது அக்டோபர் 1934 இல் இரண்டாம் குடியரசின் கீழ் உள்ளது, அது தான் இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த அச்சுறுத்தல்கள், இப்போதைய இந்த நெருக்கடியின் அடியிலிருக்கும் பாரிய அரசியல் பதட்டங்கள் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கொரு எச்சரிக்கையாகும். 1934 இல், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவை பாசிசம் கைப்பற்றிய சூழலில், அதிகாரத்திலிருந்த ஸ்பானிஷ் பழமைவாத அரசாங்கம் பாசிசவாத அமைச்சர்களைப் பதவிக்குக் கொண்டு வந்தது, இது தொழிலாள வர்க்கத்தில், குறிப்பாக அஸ்டுரியஸ் பகுதியில் தொழிலாளர்கள் ஒரு கம்யூன் நிறுவ முயன்ற போது, புரட்சிகரமான போராட்டங்களைத் தூண்டிவிட்டது.

கட்டாலோனியாவில், அப்போதைய பிராந்திய அதிகாரிகள் ஸ்பானிஷ் குடியரசு கூட்டாட்சிக்குள்ளே ஒரு கட்டாலன் அரசைப் பிரகடனப்படுத்தினர். அந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவு இல்லாததாலும், அப்பிராந்தியத்தின் பெரும்பாலான தொழிலாளர்கள் ஆதரித்திருந்த அரசு வேண்டா-தொழிற்சங்கவாத (anarcho-syndicalist) அமைப்பான CNT (தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பு) கட்டாலன் அரசை ஆதரிக்கவில்லை என்பதாலும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

அதற்கடுத்து நடந்த ஒடுக்குமுறையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் இடதுசாரி அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அரசியல் மையங்கள் மூடப்பட்டு, பத்திரிகைகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன, கட்டாலோனியாவில், அப்பிராந்திய ஜனாதிபதி Lluis Companys கைது செய்யப்பட்டார் மற்றும் அப்பிராந்தியத்திற்கு ஓரளவிற்கு சுய-அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவும் இரத்து செய்யப்பட்டன.

கட்டாலன்-எதிர்ப்பு பிரிவினைவாத கட்சியான குடிமக்கள் கட்சியின் (Citizens Party) தலைவர் Albert Rivera மற்றும் மக்கள் கட்சியின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் José Manuel Garcia Margallo இருவரும் 1934 சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

“குடியரசு ஏற்கனவே கட்டாலனின் சுய-அதிகாரத்தை இடைநிறுத்திவிட்டது" (OkDiario), “முதல் 'கட்டாலன் அரசு' 11 மணி நேரமே நீடித்திருந்து, கம்பிகளுக்குப் பின்னால் போய் முடிந்தது" (El Confidencial), “அக்டோபர் 6, 1934: சேற்றில் மூழ்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி" (Libertad Digital), அல்லது "34 இன் கட்டாலன்: Companys இல் இருந்து Puigdemont வரை" (ABC) என்பது போன்ற கட்டுரைகளில் வலதுசாரி பத்திரிகைகள் இன்று கட்டாலன் பிரிவினைவாத முனைவை கண்டித்து வருகின்றன.

1930 களைப் போலவே மீண்டுமொருமுறை, முதலாளித்துவ நெருக்கடியானது ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதத்தின் அதிகரிப்பு என்ற வடிவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இடைவிடாத தாக்குதல்களைக் காட்டி வருகிறது.

மாட்ரிட்டில் உள்ள ஆளும் உயரடுக்கு மற்றும் கட்டாலோனியாவில் உள்ள முதலாளித்துவ வர்க்க பிரிவினைவாதிகள் இந்த இரு தரப்பின் மீதான எதிர்ப்புடன், தொழிலாள வர்க்கம் அவர்களின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஸ்பானிஷ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக, சுயாதீனமாக அணிதிரள்வதே முக்கிய பிரச்சினையாகும். ஸ்பெயினைப் பால்கன்மயப்படுத்துவதும் சரி, அல்லது மாட்ரிட்டை மையமாக கொண்ட ஒரு ஒடுக்குமுறை பொலிஸ் எந்திரத்தின் வளர்ச்சியும் சரி, தொழிலாளர்களுக்கு எதுவும் வழங்காது.

கட்டாலன் பிரிவினைவாதிகளோ ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக தங்களை மோசடியாக காட்டிக்கொண்டு எதிர்வினையாற்றி வருகின்றனர். அப்பிராந்தியத்தில் அவர்களின் அடுத்தடுத்த சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக தொழிலாளர்களும் இளைஞர்களும் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஒடுக்கியுள்ள அதே சக்திகள், இப்போது "ஒடுக்குமுறைக்கு" எதிராக "ஜனநாயகத்தின்" பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்கின்றன. Puigdemont, மாட்ரிட் உடனான அவரின் பிரிவினைவாத இயக்க போராட்டத்தை ஸ்பெயினின் 1936-39 உள்நாட்டு போருடனும், வியட்நாம் போருடனும் கூட இணைக்கிறார். ஒரு தொலைக்காட்சி பேட்டியில், அவர் “ஒவ்வொரு நாளும் ஒரு வியட்நாம்” என்றுரைத்தார்.

பெடெமோஸ் கட்சி ஆழமாக பிளவுபட்டுள்ளதுடன், இப்போதைக்கு, ஒதுங்கி நிற்கிறது. அக்கட்சி ரஹோயின் ஒடுக்குமுறை அளவை எதிர்க்கின்ற அதேவேளையில், இந்த சர்வஜன வாக்கெடுப்பு சட்டப்பூர்வமானதல்ல என்றாலும் "குடிமக்களின் அணிதிரள்வாக" அதை ஆதரிப்பதாக கூறுகிறது. ஸ்பானிஷ் ஏகாதிபத்தியத்தின் மற்றும் சர்வதேச அளவில் அதன் புவிசார் அரசியல் நலன்களின் உறுதியான பாதுகாவலர்களாக விளங்கும் அவர்கள், பிரிவினைவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றாலும், பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்க பத்திரிகைகளைப் போல, பிரிவினைவாத முனைவைத் தடுப்பதற்காக கட்டாலன் தேசியவாதிகளுக்கு விட்டுக்கொடுப்புகளை வழங்க வேண்டுமென முன்மொழிகின்றனர்.

பெடெமோஸ் கட்சி தலைவர் பப்லோ இக்லெஸியாஸ், மக்கள் கட்சியின் நடவடிக்கைகள் ஸ்பானிஷ் நலன்களை ஆபத்திற்குட்படுத்தி வருவதாக தெரிவிக்கிறார்: “நாம் ஊழல்வாதிகளால் மட்டும் ஆளப்படவில்லை, நமது ஜனநாயகத்தை அசாதாரண நிலைக்குக் கொண்டு வரும் பிரயோஜனமற்ற கொடூரவாதிகளாலும் ஆளப்பட்டு வருகிறோம்,” என்றார்.

இந்த சிறுபான்மை மக்கள் கட்சி அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு எதிராக தன்னைத்தானே கொளுத்திக் கொள்ளும், இது அதிகரித்து வரும் சமூக கோபம் மற்றும் கட்டாலன் பிரிவினைவாத முனைவு இரண்டையும் சிறந்த முறையில் தணிக்கக்கூடிய ஒரு "முற்போக்கான" பெடெமோஸ்-சோசலிச கட்சி கூட்டணி அரசாங்கத்திற்குக் கதவைத் திறந்துவிடுமென பெடெமோஸ் நம்புகிறது.