ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why is the far-right benefiting from the crisis of capitalism?

முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து அதிவலது ஏன் இலாபமடைகிறது?

Barry Grey
28 September 2017

ஜேர்மனியில் ஞாயிறன்று நடந்த தேர்தல், அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் வளர்ச்சியையும், உத்தியோகபூர்வ இடது கட்சியினதும் சமூக ஜனநாயகக் கட்சியினதும் பொறிவையும் கண்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் 90 க்கும் அதிகமான பிரதிநிதிகளுடன், AfD உள்நுழைவதானது மூன்றாம் குடியரசு முடிவுற்றதற்குப் பின்னர், முதல்முறையாக பாசிசவாதிகளும் இனவாதிகளும் நேரடியாக தேசிய நாடாளுமன்றத்தில் பங்குபற்றுவதை குறிக்கிறது.

அசாதாரணமானது என்பதற்கு பதிலாக, ஜேர்மனியில் நவபாசிசவாத கட்சியின் இந்த தேர்தல் வெற்றியானது, ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு வடிவத்தின் பாகமாகும்.

பிரிட்டனில், அதிவலது, புலம்பெயர்வு-விரோத இங்கிலாந்து சுதந்திர கட்சி (UKIP) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான கடந்த ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பில் முன்னணி அரசியல் சக்தியாக மேலெழுந்தது. பிரான்சில், தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் 2002 இல் அவர் தந்தை பெற்ற வாக்குகளை விட இருமடங்கு அதிகமாக 34 சதவீத வாக்குகள் பெற்று, இந்தாண்டு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் நுழைந்தார். ஆஸ்திரியாவில் அடுத்த மாதம் நடவிருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நவபாசிசவாத சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தினுள் நுழையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில், பாசிசவாத பில்லியனரும் நிலம்/மனை விற்பனைத்துறையின் ஊகவணிகரும் மற்றும் தொலைக்காட்சி பிரபலமுமான டொனால்ட் ட்ரம்ப் 2016 தேர்தலை வென்றதால், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது.

இந்த அபிவிருத்திகள் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகின்றன: 1930 களுக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரிய நெருக்கடி ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையையும் அண்மித்து வீழ்ச்சிக்குட்படுத்தி உள்ள நிலையில், சர்வதேச அளவில் கடுமையான சிக்கன மற்றும் இராணுவவாத கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகையில், இந்நெருக்கடியை தொடர்ந்து வந்த இந்த தசாப்தம் ஏன் வலதுசாரி கட்சிகள் சீராக பலமடைவதைக் கண்டுள்ளது? சமூக ஜனநாயக கட்சிகளும் மற்றும் தொழிற்கட்சிகளும் மற்றும் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும், சமூக வேலைத்திட்டங்களை வெட்டி தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை வறுமைக்குட்படுத்தியதன் விளைவாக, அவற்றால் ஆதரவைப் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக அவை ஏன் தோல்விக்கு மேல் தோல்வியை தழுவி உள்ளன?

கடந்த தசாப்தத்தை பொறுத்த வரையில் —அதற்கும் அப்பால், கடந்த நான்கு தசாப்தங்களாக, குறிப்பாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர்— இடது அரசியலாக காட்டிக்கொண்டவை முதலாளித்துவத்திற்கான எந்தவொரு எதிர்ப்பிலிருந்தும் முற்றிலுமாக விலகி இருந்துள்ளன. பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆகட்டும், ஆஸ்திரேலிய தொழிற்கட்சி, பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி ஆகட்டும் அனைத்துமே தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அல்லது தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் சமூக பிரச்சினைகள் மீது அக்கறை கொண்ட எந்தவொரு நோக்குநிலையையும் கைவிட்டுள்ளன. அவை, ஒரு போலியான மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் அடித்தளத்தில், இனவாத மற்றும் பாலின அடையாளத்தை நோக்கிய ஒரு நோக்குநிலையைக் கொண்டு வர்க்க பிரச்சினைகளைப் பிரதியீடு செய்துள்ளன.

மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகள், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எந்த சவாலும் இல்லை என்பதிலிருந்து உருவான வெற்றிடத்தை சுரண்டியே, பெருந்திரளான மக்களின் பிரதிநிதிகளாக முன்வந்துள்ளன. அவை சமூக அதிருப்தியை வலதுசாரி, தேசியவாத திசையில் திருப்பிவிட வேலை செய்கின்றன. அவற்றின் வெகுஜனவாத தோரணை முற்றிலும் வெறுக்கத்தக்கவை. இதே சக்திகள் தான் இன்னும் அதிக கடுமையான சமூக வெட்டுக்களையும், பெருநிறுவன உயரடுக்கிற்கு அதிக வரி சலுகைகளையும் கோருகின்றன.

பெருந்திரளான தொழிலாளர்கள் இனவாத மற்றும் பாசிசவாத கொள்கைகளை ஆதரிக்கின்றனர் என்று கிடையாது. இக்கட்சிகளுக்கான வாக்குகள் பெரிதும் ஸ்தாபக கட்சிகளுக்கு எதிரான வாக்குகளாகும், அவை சமூக அதிருப்திக்கு எந்த முற்போக்கான பாதையும் வழங்கவில்லை. அதற்கும் மேலாக, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் கோரிய சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் “இடது" கட்சிகள் நேரடியாகவே உடந்தையாய் இருந்துள்ளன என்பதை பெருந்திரளான மக்கள் நன்கறிவார்கள்.

பிரிட்டனில், மார்கரெட் தாட்சரும் அவரை அடுத்து ஜெயித்து வந்த டோரி ஜோன் மேஜரும் தொடங்கி வைத்த வேலைநிறுத்த-விரோத "சீர்திருத்தங்கள்" மற்றும் சமூக வெட்டு கொள்கைகளை, டோனி பிளேயர் பின்னர் கோர்டன் பிரௌனின் கீழிருந்த தொழிற்கட்சி தொடர்ந்து விரிவாக்கியது.

பிரான்சில், பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளைத் தாக்கி தொழிற்சட்ட "சீர்திருத்தங்களின்" முதல் சுற்றைத் திணித்ததுடன், செல்வந்தர்களுக்கு வரி வெட்டுக்கள் மற்றும் ஒரு நிரந்த அவசரகால நிலையை கொண்டு வந்தது. ஹோலாண்ட் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து, அவரை அடுத்து ஆட்சிக்கு வந்த இமானுவல் மக்ரோன், உத்தரவாணைகளைக் கொண்டு இன்னும் கூடுதலாக தொழிலாளர் சட்ட "சீர்திருத்தத்தை" திணித்ததுடன் ஆழ்ந்த சமூக வெட்டுக்களைக் கோரி வருகிறார்.

ஜேர்மனியில், 1998-2005 சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கட்சி கூட்டணி அரசாங்கம் தான் அதன் 2010 திட்டநிரல் மற்றும் ஹார்ட்ஸ் சட்டங்களைக் கொண்டு இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய நலன்புரி அரசை அழிக்க தொடங்கியது. இந்த தேர்தலில், சமூக ஜனநாயகக் கட்சி, AfD க்கு ஒரு மாற்றீட்டை வழங்குவதற்கு பதிலாக, இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தல், புலம்பெயர்ந்தவர்கள் மீது கூர்மையான தாக்குதல்கள் மற்றும் பொலிஸைப் பலப்படுத்துவதற்கு அழைப்புவிடுப்பதில் நவ-பாசிசவாதிகளை மிஞ்ச முனைந்ததிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அதன் தாக்குதலை அதிவலதி மீது தொடுக்கவில்லை, மாறாக "இடதுசாரி தீவிரவாதம்" என்றழைக்கப்படுவதன் மீது தொடுத்திருந்தது.

 “இடதால்" திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரிதான் கிரீஸில் உள்ள சிரிசா அரசாங்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கட்டளைகளுக்கு அறைகூவல் விடுக்க வாக்குறுதி அளித்து 2015 இல் அதிகாரத்திற்கு வந்த அது, சந்தர்ப்பம் கிடைத்ததும் சிக்கன கொள்கை ஆட்சிக்கு முத்திரை குத்தும் அரசாங்கமாக மாறியது. அடுத்ததாக, அதற்கு முந்தைய பழமைவாத மற்றும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் திணித்த நடவடிக்கைகளை விட மிகக் கடுமையான நடவடிக்கைகளைத் திணித்த அது, வெட்டுக்களுக்கு எதிராக மக்களின் ஒரு சர்வஜன வாக்களிப்பையும் புறக்கணித்தது.

அமெரிக்காவில், “மாற்றத்தை நீங்கள் நம்பலாம்" என்று வாக்குறுதி அளித்து அதிகாரத்திற்கு வந்த ஜனநாயக கட்சியின் ஒபாமா நிர்வாகம், வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை விரிவாக்கியதோடு, சமூக சேவைகள் மற்றும் மருத்துவ கவனிப்பை தாக்கியதுடன், அமெரிக்க வரலாற்றில் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு மிகப் பெரியளவில் செல்வ வளத்தைக் கைமாற்றுவதை மேற்பார்வையிட்டது.

இப்போது ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் தாக்குதலில் இருந்து புலம்பெயர்ந்தோரை எந்தவிதத்திலும் பாதுகாப்பதை கைவிட்டுள்ளதுடன், அவரது புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட பயணத் தடை மீது மவுனமாக உள்ளனர். அவர்கள் செல்வந்தர்களுக்கான வரி வெட்டுக்கள் மற்றும் மருத்துவக் கவனிப்பு மீதான புதிய தாக்குதல்கள் உட்பட பொருளாதார கொள்கைகள் மீது ட்ரம்புடன் சேர்ந்து செயல்பட தயாராக இருப்பதை அவர்கள் அறிவித்துள்ளனர்.

வட கொரியாவுக்கு எதிரான அணுஆயுத இனப்படுகொலை மற்றும் ஈரானுக்கு எதிரான போரைக் கொண்டு வெள்ளை மாளிகை அச்சுறுத்துகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சி பிடிவாதமாக ரஷ்யாவுக்கு எதிரான அதன் மக்கார்த்தியிச பிரச்சாரம் மீது ஒருங்குவிந்துள்ளது. இதில் அது இராணுவ/உளவுத்துறையின் செல்வாக்கான கன்னைகளது "அரசுக்குள் அரசுடன்" (deep state) அணிசேர்ந்துள்ளது, அவை மாஸ்கோவிற்கு எதிராக ட்ரம்ப் இன்னும் ஆக்ரோஷமான கொள்கைகளைப் பின்தொடருமாறு கோரி வருகின்றன.

ட்ரம்பின் பதவியேற்பு அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் வரவேற்கப்பட்டிருந்த போதினும் (இதை ஜனநாயகக் கட்சியினர் ஒடுக்கி, அவர்களின் போர்நாடும் ரஷ்ய-விரோத சிலுவைப்போருக்குப் பின்னால் திசைதிருப்ப இயங்கிய நிலையில்), அரசியல் நடவடிக்கைகள் இன்று குடியரசு கட்சியிலும் மற்றும் அதைச் சுற்றியும் உள்ள மிகவும் வலதுசாரி சக்திகள் வசம் வந்துள்ளது.

ட்ரம்பும், அவரது முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகர், ப்ரைய்ட்பார்ட் நியூசின், ஸ்டீபன் பானனும், அமெரிக்காவில் ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு அடித்தளம் உருவாக்க இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அலபாமாவின் செனட் ஆசனத்திற்காக குடியரசுக் கட்சியின் முதல் சுற்றில் செவ்வாயன்று வெற்றி பெற்ற அதிவலது கிறிஸ்துவ அடிப்படைவாத ரோய் மூர் க்காக இந்த வாரம் பானன் ஒரு பாசிசவாத பிரச்சார உரை வழங்கினார், அதில் அவர் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட அடுக்குகளின் சமூக குறைகளுக்கு முறையிட்டார். மில்லியனரும் முன்னாள் கோல்ட்மன் சாச்ஸ் முதலீட்டு வங்கியாளருமான அவர், "பெருநிறுவனர்கள், நன்கொடையாளர்கள், ஆலோசகர்கள், வாஷிங்டனின் பிரபலமான கே வீதி தரகர்கள், செல்வாக்கான மத்தியஸ்தர்கள், அரசியல் வர்க்கத்தினரை" கண்டித்ததுடன், “இந்நாட்டில் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொருளாதாரரீதியில் வெறுப்பார்ந்த குற்றங்கள் நடந்துள்ளதாக" தெரிவித்தார்.

 “அவர்கள் இந்நாட்டை சீரழித்துவிட்டனர்,” என்றவர் அறிவித்தார். “அவர்கள் உற்பத்தி வேலைகளை அழித்து, அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டனர்,” என்றார். அவர் ஓபியோய்ட் போதைப்பொருள் பழக்க நெருக்கடியை "சீனாவுக்கு வெளியேற்றப்பட்ட ஆலைகள் மற்றும் வேலைகளுடன்" தொடர்புபடுத்தியதுடன், "தொழிலாளர்கள் முற்றிலுமாக அவநம்பிக்கையில் விடப்பட்டிருப்பதாக" குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியினருக்கும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இருகட்சி ஆட்சிமுறைக்கும் —ஐரோப்பா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் சமூக ஜனநாயக மற்றும் "இடது" தேசியவாத கட்சிகளுக்கும்— தொழிலாள வர்க்கம் அடிபணிய செய்யப்பட்டிருக்கும் வரையில், பாசிசவாதம் மேலெழுவதற்கான ஒரு நிஜமான அபாயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ட்ரம்ப்க்கு எதிரான போராட்டத்தையும், முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதையும் பிரிப்பதென்பது திவாலானது என்பதையே அதிவலதின் வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும், இதே பிரச்சினைகள் மிகப்பெரும் அவசரத்துடன் முன்நிற்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கம் தவிர வேறொன்றும் வலதுசாரியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. ரஷ்ய அக்டோபர் புரட்சிக்கு ஒரு நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த வரலாற்று சம்பவத்தை வழிநடத்திய இந்த முன்னோக்கு மீட்டுயிர்ப்பிக்கப்பட வேண்டும். முதலாளித்துவம் மீதான ஒரு நேரடியான தாக்குதலே ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக நெருக்கடிக்கான ஒரே பதில் என்று போல்ஷிவிக்கள் வலியுறுத்தினர்.

அன்றைக்கு போலவே இன்றும் தொழிலாள வர்க்கம், நிதியியல் உயரடுக்கின் செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து சமூக சமத்துவமின்மையை பாரியளவில் குறைப்பதற்காக அதை பயன்படுத்த வேண்டும். நல்ல சம்பளம் வழங்கும் வேலைகள், கல்வி, வீட்டுவசதி, மருத்துவக் கவனிப்பு மற்றும் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான ஓய்வூகாலம் வழங்குவதற்காக பிரதான தொழில்துறைகள் மற்றும் வங்கிகளும் பொதுவுடைமையின் கீழ் ஜனநாயக கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.