ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron goes to Greece: “Radical left” Tsipras welcomes ex-banker turned French president

மக்ரோன் கிரீஸ் செல்கிறார்: முன்னாளில் வங்கியாளராக இருந்து பிரான்சின் ஜனாதிபதியானவரை “தீவிர இடது” சிப்ராஸ் வரவேற்கிறார்

By Alex Lantier
12 September 2017

சிரிசாவால் (”தீவிர இடதுகளின் கூட்டணி”) திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளைப் பாராட்டுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலம் குறித்து விவாதிப்பதற்கும் இம்மானுவல் மக்ரோன் சென்ற வாரத்தில் கிரீஸ் பயணம் மேற்கொண்டார்.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்காக மக்ரோன் என்ன வைத்திருக்கிறார் என்பதை கிரீசுக்கான அவரது பயணம் தெளிவாய் காட்டுகிறது. செப்டம்பர் 24 அன்று நடைபெறவிருக்கும் ஜேர்மன் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் சமயத்தில் பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தால் ஈட்டப்பட்ட சமூக உரிமைகளை இல்லாது செய்வதை திணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு ஜேர்மனியும் பிரான்சும் நோக்கம் கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது தாக்குதலில் குட்டி-முதலாளித்துவ “தீவிர இடதினை” ஒரு முக்கியமான அரசியல் கருவியாக பயன்படுத்திக் கொள்வதற்கு நிதியப் பிரபுத்துவம் நோக்கம் கொண்டுள்ளது.

சிப்ராஸ் டுவிட்டரில் மக்ரோனுடன் கூட்டுசேர்ந்துள்ளார்

முன்னாள் வங்கியாளரான மக்ரோனுக்கும் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸுக்கும் இடையிலான சுமூகமான சந்திப்பு மக்ரோனுக்கு பிரான்சின் போலி-இடதுகள் காட்டுகின்ற சம்பிரதாய எதிர்ப்பை தோலுரித்துக் காட்டுவதாகவும் இருக்கிறது. மக்ரோனை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் ஜோன்-லூக் மெலோன்சோனும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியும் சிப்ராஸ் ஆட்சிக்கு வந்ததைப் போற்றின. மெலோன்சோன் வைத்த ஆலோசனைமொழிவின் படி இவர்கள் மக்ரோனின் கீழ் ஆட்சியதிகாரத்தை எடுத்திருப்பார்களேயாயின், இவர்களது வர்க்க நிலைப்பாடு சிப்ராஸின் நிலைப்பாட்டில் இருந்து முக்கியமான வித்தியாசம் எதனையும் கொண்டிருந்திருக்காது.

கிரேக்க ஜனாதிபதி புரோகோப்பிஸ் பாவ்லோபுவ்லோஸ் உடனான தனது முதல் சந்திப்பின் போது, மக்ரோன், கிரீசில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவை புகழ்ந்தார்: “உங்களது அரசாங்கங்கள் நடத்தி வந்திருக்கின்ற சீர்திருத்தங்களுக்கு இந்த இடத்தில் நான் வணக்கம் தெரிவிக்க விரும்புகிறேன், வெகு விரைவில் இது தொடர்பாய் பிரதமர் சிப்ராஸ் உடன் பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். ஆயினும் உங்களது நாட்டின் கடன்கள் மாற்றி எழுதப்படுவதை அனுமதிப்பதற்கு, இந்த சீர்திருத்தங்கள், தொடரும் கட்டாயம் கொண்ட ஒரு கூட்டான பங்கெடுப்புடன் கைகோர்த்து செயல்பட்டாக வேண்டும்.”

கிரேக்க மக்களின் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதில் சிரிசாவும் கிரேக்க ஆளும் வர்க்கமும் காட்டிய “துணிச்சலை” மக்ரோன் பாராட்டினார்: “நீங்கள் காட்டிய தடுப்பு, பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீங்கள் கொண்டிருந்த துணிச்சல், உங்கள் கோட்பாடுகளை மறந்து விடக் கூடாதென்ற விருப்பம், உங்களைச் சுற்றிய பல தீவிரப்பட்டவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு உங்களை நெருக்கிக் கொண்டிருந்த நிலையில் கிரீசை ஐரோப்பாவிலேயே வைத்திருப்பதற்கு நீங்களும், உங்கள் அரசாங்கமும் மற்றும் உங்கள் பிரதமரும் எப்போதும் காட்டிய இந்த விருப்பம் தான் நாங்கள் மிகவும் மதிப்பிற்குரியதாக வைத்திருக்கும் இந்த ஐரோப்பாவுக்கு இன்னும் அதிகமான இலட்சியம் கொள்வதற்கு எங்களை கடமைப்பட்டவர்களாக்குகிறது.”

உண்மையில், பரந்த மக்களின் கோபத்தில் இருந்து இராணுவமும் கலகத் தடுப்பு போலிசும் தங்களைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில், சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு அளித்த வாக்குறுதிகளைக் கைவிட்டதும், வங்கிகளின் கோரிக்கைகளை அடிமைத்தனமாக நிறைவேற்றியதும் தான் சிப்ராசும் சிரிசாவும் கொண்டிருந்த ஒரே “துணி்ச்சல்” ஆகும்.

2008 முதலாக வரிசையாக வந்த பல அரசாங்கங்கள் ஓய்வூதியங்கள் மற்றும் குறைந்தபட்ச ஊதியங்களின் மீது நடத்திய வெட்டுகளின் ஒட்டுமொத்த விளைவாக ஓய்வூதியங்களும் ஊதியங்களும் 40 சதவீத சராசரி வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. சிறுவணிகங்களின் திவால்நிலைகள் மற்றும் வேலைக்குறைப்புகள் மற்றும் பொதுத் துறை தொழிலாளர்களில் பாரிய வேலைநீக்கங்களது ஒரு அலை ஆகியவை, 25 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது (இளைஞர்களிடையே இது 60 சதவீதமாகும்).

ஏதன்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் அவை உருவாக்கிய சமூகப் பேரழிவை —கிரேக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 1930களில் பெருமந்தநிலையின் போது மிக மோசமான பாதிப்பைச் சந்தித்த நாடுகளில் போல கால் பங்கு சரிவைச் சந்தித்தது— தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகளைக் கிழித்துப் போடுவதற்காய் பயன்படுத்திக் கொண்டன. குறைந்தபட்ச ஓய்வூதிய அளவை மாதத்திற்கு 382 யூரோக்கள் என்ற பரிதாபகரமான அளவுக்கு குறைத்தமை அத்தோடு வேலைவாய்ப்பற்றோருக்கு பொது சுகாதாரப் பராமரிப்பை அகற்றியமை ஆகியவையும் இந்த தாக்குதல்களில் இடம்பெற்றிருந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதான போலியான வாக்குறுதிகளின் அடிப்படையில் சிரிசா 2015 ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. கருத்து வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்க “வேண்டும்” என்று வாக்களிப்பு கிட்டும்; அது தன்னை இராஜினாமா செய்ய அனுமதிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவளித்தற்கான பழியை மக்கள் மீது போட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் ஜூலை 25 அன்று சிக்கன நடவடிக்கைகள் மீதான ஒரு கருத்துக்கணிப்புக்கும் அது ஏற்பாடு செய்தது. ஆனால், பெரும்பாலும் தொழிலாளர்களிடம் இருந்தாய், ஒரு திட்டவட்டமான 62 சதவீத “வேண்டாம்” வாக்கு கிட்டிய நிலைக்கு முகம்கொடுத்த சிரிசா மக்கள் கருத்தை காலில் போட்டு மிதித்து விட்டு நெருக்கடி தொடங்கிய சமயத்தில் இருந்தான மிகப்பெரும் சிக்கன நடவடிக்கைகளது  தொகுப்பைத் திணித்தது.

இன்று பிரான்சில் மெலோன்சோனும் NPA உம் செய்வதைப் போலவே, சிக்கன நடவடிக்கைக்கு எதிராக தனது நாட்டின் தொழிலாளர்களை பாதுகாக்க சிப்ராஸ் ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்க மறுத்தார். உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்திருந்ததைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பதற்கிருக்கின்ற ஒரேயொரு உருப்படியான மூலோபாயத்தை சிரிசா நிராகரித்தமையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான சமூக வேலைத்திட்டத்தை அது அடிப்படையாக அங்கீகரித்ததில் -ஐரோப்பிய ஒன்றியம் எங்குமான அதன் கூட்டாளிகளும் இதனைப் பகிர்ந்து கொண்டனர்- இருந்து எழுந்திருந்தது.

மக்ரோன் கிரீஸ் சென்றது, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை அங்கீகரிப்பதற்காக மட்டுமல்ல, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களை முன்னெடுப்பதற்காகவும் தான். அவரது விஜயம் உலகப் போரின் எழுந்து வரும் அபாயத்துடன் நெருக்கமாகப் பின்னியதாக இருந்தது. ட்ரம்ப் தேர்வானதற்கு பின்னர் அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பிளவுகள் பெருகிவரும் நிலையிலும், அத்துடன் கொரியா தொடர்பாக அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யா இடையில் போர் ஆபத்துகள் வெடித்தெழுகின்ற நிலையிலும், கிரீசானது பிரதான சக்திகள் இடையே செல்வாக்குப் போட்டிக்கான ஒரு யுத்தக்களமாக ஆகிக் கொண்டிருக்கிறது.

"சீனா அல்லது அமெரிக்கா போன்ற பெரும் சக்திகளால் நாம் ஆளப்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு உயிர்வாழ அனுமதிக்கின்ற ஒரு ஐரோப்பிய இறையாண்மையை நான் நம்புகிறேன்” என்று ஏதென்ஸில் பார்த்தெனோன் அருகிலுள்ள Pnyx மலையில் அவர் ஆற்றிய உரையின் போது மக்ரோன் தெரிவித்தார்.

மக்ரோனின் உள்நாட்டுக் கொள்கையைப் போலவே, அவரது வெளிநாட்டுக் கொள்கையும் முழுக்க முழுக்க கழிசடையான பிற்போக்குத்தனமேயாகும். நேட்டோவின் மத்திய கிழக்கு போர்களுக்கு தப்பி கிரீசுக்கு ஓடிவருவதில் இருந்து அகதிகளைத் தடுப்பதில் சிப்ராஸுக்கு உதவிசெய்ய ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துவதற்கு அவர் வாக்குறுதியளித்தார். “இந்தக் காரணத்திற்காக, சமீப ஆண்டுகளில் உங்களது நாடு முகம்கொடுத்த பெரும் குடியேற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நம்மை அனுமதிக்கின்றதான ஒரு நிரந்தரமான திட்டமிட்ட ஒத்துழைப்பை நாம் முன்னெடுக்க அவசியமாயுள்ளது.”

அகதிகளது தஞ்சம் கோரும் உரிமையை மறுப்பதும் பிராந்தியத்தில் கடலோர ரோந்துகளை அதிகப்படுத்துகின்ற அதேநேரத்தில் மத்தியத் தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதும் -ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறப்பதற்கு இது இட்டுச் சென்றுள்ளது- தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான அகதிக் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.

மேலும், கிரேக்க நெருக்கடியால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக தூண்டப்பட்ட மோதல்களையும் மக்ரோன் லேசாக சூசகமாய் பேசினார், அவர் கூறினார்: “சின்னச்சின்ன கருத்துபேதங்கள் தொடர்பாக ஒரு உள்நாட்டுப் போரின் அளவுக்கு சண்டையிடுவதை நமது யூரோ மண்டலம் விட்டு விட வேண்டும்”. அதன்பின் அவர் நீண்டகாலமாக ஜேர்மனியால் எதிர்க்கப்பட்டு வருகின்ற நிதிக் கொள்கைகளை முன்மொழிந்தார். அவர் கிரீசின் கடன்களை மறுசீரமைக்க மட்டுமல்லாது, கிரீசின் மீது திணிக்கப்படுகின்ற சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை வகுப்பதில், பாத்திரம் வகிப்பதில் இருந்து சர்வதேச நாணய நிதியத்தை தள்ளி வைப்பதற்கும் ஆலோசனையளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் அளவுக்கு மிருகத்தனமானவை என்பதால், இங்கே பணயமாக இருப்பது சிக்கன நடவடிக்கைகள் குறித்த கருத்துபேதங்கள் அல்ல, மாறாக வெடிப்பான ஏகாதிபத்தியங்கள்-இடையிலான போட்டிகளே ஆகும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்னெப்போதினும் பகிரங்கமாக மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கு மக்ரோன் நோக்கம் கொண்டிருக்கின்ற அதேநேரத்தில்,  அமெரிக்காவுக்கு எதிராய் பிரான்ஸ் ஆதரவளிப்பதற்கு பிரதிபலனாக கிரீஸ் விடயத்தில் பேர்லினிடம் இருந்து நிதியியல்ரீதியான விட்டுக்கொடுப்புகளை அவர் கோருகிறார்.

தனது பயணத்தின் போது மக்ரோன் பிரான்சின் பெருவணிகங்களது தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் உயர் நிர்வாகத்தின் ஒரு பெரும் பிரதிநிதிகள் குழுவை உடன் அழைத்து வந்திருந்தார். துறைமுகத்தை நிர்வகிக்கும் Terminal-Link நிறுவனமும் இந்த நிறுவனங்களில் ஒன்று, இது தெசலோனிக்கி துறைமுகத்தை தனியார்மயமாக்குவதன் மீதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறது. சீன கப்பல் நிறுவனமான கோஸ்கோ (COSCO) ஏதன்ஸில் இருக்கும் பிரேயஸ் துறைமுகத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருக்கிற நிலையிலும், சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கின்ற சீன ஆட்சியின் “ஒரே இணைப்பு, ஒரே பாதை” உள்கட்டமைப்பு இணைப்புப் பின்னலில் கிரேக்கத்தை ஒரு முக்கியமான கணுப்புள்ளியாக ஆக்குவதற்கு சீனா விரும்புகின்ற நிலையிலும், சீனாவுடன் போட்டிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரீசின் நிலைக்கு மக்ரோன் தனது ஆதரவை மறுஉறுதி செய்வார் என்றும், கிரீசில் ஜேர்மனிய மற்றும் சீன முதலீட்டை “சமநிலைப்படுத்த” பிரெஞ்சு முதலீட்டாளர்களுக்கு அழுத்தமளிப்பார் என்றும் ஏதென்ஸ் நம்புகிறது என கிரேக்க வருணனையாளர் கோஸ்டாஸ் லோர்டானிடிஸ் கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.