ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN chief warns against the march to world war

ஐ.நா. தலைவர், உலக போரை நோக்கிய அணிவகுப்புக்கு எதிராக எச்சரிக்கிறார்

Bill Van Auken
8 September 2017

கொரிய தீபகற்பத்தைச் சுற்றி அபிவிருத்தி அடைந்து வரும் மோதல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதலாம் உலக போர் வெடிக்க இட்டுச் சென்ற சம்பவங்களுடன் அதிகரித்தளவில் ஒத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) செவ்வாயன்று வெளியிட்ட எச்சரிக்கை மிகத் தீவிரமாக கவனத்தில் எடுக்கவேண்டியதாகும்.

அவர் தெரிவித்தார், “வழமையாக, கட்சிகள் போருக்குச் செல்வதென்று முடிவெடுத்த உடனேயே போர்கள் தொடங்கப்படுவதில்லை.” “முதலாம் உலக போர் வரலாறைப் பார்த்தீர்களேயானால், அது படிப்படியாக நடந்தது, ஒரு கட்சி ஒன்றைச் செய்யும், மற்றொரு கட்சி இன்றொன்றைச் செய்யும், பின்னர் ஒரு மோசமடைதல் நிகழும்... வட கொரியா நிலைமை சம்பந்தமாக இந்த அபாயத்தைத்தான் நாம் தவிர்க்க வேண்டியுள்ளது,” என்றார்.

முன்பினும் அதிக பொறுப்பற்ற அமெரிக்க ஆத்திரமூட்டல் கொள்கையை மேற்பார்வையிட்டு வருகின்ற டொனால்ட் ட்ரம்பையும் பதவியிலிருக்கும் மற்றும் ஓய்வூபெற்ற தளபதிகளின் சதிக்கூட்டத்தையும் பெயரிட்டு குறிப்பிடாமல், அவர்களை குறிப்பிடுகையில் அந்த எச்சரிக்கையில் குட்டெரெஸ், “மோதல்தன்மையிலான வீராவேச பேச்சுக்கள் எதிர்பாரா விளைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். தீர்வு அரசியல்ரீதியாக இருக்க வேண்டும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இராணுவ நடவடிக்கையால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானவை,” என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய குற்றங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை, கையாள்வதில் பின்னடிப்பதாக குட்டெரெஸ் அக்கறையோடு வாய்சவடால் பேசுகிறார் என்றாலும், அவரது கருத்துக்களின் முக்கியத்துவம் தவறுக்கிடமற்றது. வட கொரியாவுக்கு எதிராக "தாக்கும் திறனை முன்கூட்டித்தாக்கும் போர்" (preventive war) எனப்படுவதை தொடங்க, வாஷிங்டனில் இருந்து வரும் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களின் "எதிர்பாரா விளைவுகள்", ஓர் உலகளாவிய போராக தீவிரமடையும், ஓர் இராணுவ மோதலாக நிரூபணமாகி விட சாத்தியமுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக சாசனத்தின் முதல் வாக்கியமே, “போர் தொல்லைகளில் இருந்து வரவிருக்கும் தலைமுறைகளைக் காப்பாற்றுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்,” “அது, நமது வாழ்நாளில் இரண்டு முறை, கூறவியலாத துயரத்தை மனிதயினத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்கிறது. முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போரின் மனிதயின படுகொலைகளை விஞ்சிய அளவிற்கு மூன்றாம் முறையாக அதுபோன்றவொரு "கூறவியலாத துயரத்தை" மனிதயினம் முகங்கொடுத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் எச்சரிக்கிறார் என்பது ஏதோ சிறிய பொதுநலன் சார்ந்த விடயமல்ல என்பதை ஒருவர் சிந்திக்கலாம்.

குட்டெரெஸ் இன் கருத்துக்கள் தனித்த கருத்துக்கள் இல்லை. கடந்த மாதம் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல் அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பற்ற நிலையை முதலாம் உலக போருக்குள் ஐரோப்பா இறங்கியதுடன் ஒப்பிட்டார். அவர் கூறுகையில், "முதலாம் உலக போரைப் போலவே, நாம் தூக்கத்தில் நடப்பவர்களைப் போல போருக்குள் செல்வோம். இந்த முறை ஒருவேளை அது ஓர் அணுஆயுத போராக இருக்கலாம்,” என்பது தான் அபாயம் என்றார்.

இதேபோல, இந்தாண்டு ஜனவரி வரை அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக இருந்த ஜேம்ஸ் கிளாப்பர், கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிடுகையில், கொரிய தீபகற்பத்தின் நிலைமை "ஏதோவிதத்தில் எனக்கு முதலாம் உலக போர் வரலாற்றையும், அதற்குள் உலகம் எவ்வாறு மடத்தனமாக இருந்தது என்பதையும் நினைவூட்டுகிறது. இங்கே வரலாற்றிலிருந்து மக்கள் கற்றுக் கொள்வார்களென நான் நம்புகிறேன், மீண்டும் அதை செய்யாதீர்கள்,” என்றார்.

ஆனால் இந்த கூர்மையான எச்சரிக்கைகள் எல்லாம் பெரிதும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாக உள்ளன. அங்கே அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களில், அணுஆயுத போர் அச்சுறுத்தல் குறித்தும் அமெரிக்க மற்றும் ஒட்டுமொத்த உலக மக்கள் மீதான அதன் பாதிப்புகள் குறித்தும் கவலை கொண்ட எந்த அறிவிப்புகளோ அல்லது ஆழ்ந்த கருத்துரைகளோ வருவதில்லை. குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சி ஆகட்டும் அவற்றில் உள்ள எந்தவொரு முக்கிய பிரமுகரும், வட கொரியா சம்பந்தமாக ட்ரம்ப் நிர்வாகம் பின்பற்றி வரும் ஆழ்ந்த அபாயகரமான ஆத்திரமூட்டும் போக்கைக் குறித்து எச்சரிக்கவும் இல்லை அல்லது ஒரு விவாதத்திற்கு அழைப்புவிட்டதும் கிடையாது.

ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டத்தில் உள்ள போலி-இடதின் பல்வேறு அமைப்புகள் மற்றும் பிரசுரங்கள், போர் அபாயம் மீது இறுக்கமான மவுனத்தைப் பேணுகின்றன. இதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு இயக்கத்தை ஒழுங்கமைக்க போராடவில்லை என்றாலும், அமெரிக்க மக்கள் மீதுள்ள இந்த அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவதிலும் கூட அவர்களில் யாருக்கும் எந்த ஆர்வமும் கிடையாது.

என்ன தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறதோ அதன் கொடூரமான யதார்த்தம், இராணுவ சிந்தனை குழாம்கள் மற்றும் அதன் பிரசுரங்களில் தான் மிகவும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொரியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான முப்படைகளது தலைமை தளபதியின் துணை உதவியாளராக சேவையாற்றிய ஒரு முன்னாள் விமானப்படை தளபதி ரோப் கிவன்ஸ் (Rob Givens) எழுதிய அதுபோன்றவொரு கட்டுரையில், “ஒருசமயம் கற்பனையும் செய்து பார்க்கவியலாததாக இருந்த” கொரிய தீபகற்ப போர் "அதிக சாத்தியக்கூறாக மாறி வருகிறது" என்று எச்சரித்தார்.

அவர் எழுதுகிறார், அதுபோன்றவொரு மோதல் ஏற்பட்டால் "உலகெங்கிலும் இருந்து அமெரிக்க குண்டுவீசிகள்" கொண்டு வரப்படும், அவற்றைக் கொண்டு "வட கொரியாவின் ஒவ்வொரு சதுர அடியும் தாக்குதலுக்கான விரிவெல்லையில் வைக்கப்படும்."

“வட கொரியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மலைப்பூட்டும் அளவிற்கு இருக்கும்,” என்றவர் எழுதுகிறார். “ஒவ்வொரு நாள் மோதலிலும் நம்மால் வடக்கில் 20,000 பேர் காயப்படுவார்களென மதிப்பிடப்படுகிறது.” அதேநேரத்தில், அவர் எழுதுகிறார், “முதல் ஒருசில நாட்களில் வட கொரியா சியோலில் மட்டும் நாளொன்றுக்கு 20,000 பேரைக் காயப்படுத்தும்" என்றும் மதிப்பிடப்படுகிறது.

பாரியளவிலான மனித உயிரிழப்புகளைத் "தவிர்க்க முடியாது" என்றவர் எச்சரிக்கிறார்.

“கால்பந்தாட்ட மைதான அளவிற்கு குண்டுத்துகள்களைப் பரவலாக வீசும் கொத்தணிக் குண்டு ஆயுதங்களை (cluster weapons) நாம் பயன்படுத்துவோம்,” என்றவர் எழுதுகிறார். “எதிரியின் வெடிகுண்டுகள் வீசப்படும் இடங்களில் எல்லாம் நாம் பதிலுக்கு பீரங்கி குண்டுகளை வீசுவோம். இராணுவ நிலைமைகளுக்காக பயன்தரும் வகையில் குண்டுகளைப் பயன்படுத்தும் போது, நாம் நகர்புற பகுதிகளின் மையத்தில் உள்ள இலக்குகளைத் தாக்குவோம்; படைத்துறைசாரா மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பது சாத்தியமில்லை. நடைமுறையளவில் சண்டையிடுவதற்கு, அண்டைபகுதிகளின் இதயதானத்தில் உள்ள கட்டளை மையங்கள் மீது நாம் குண்டுவீச வேண்டியிருக்கும். இடம்நகரும் குண்டுவீசிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாக்ககூடிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட அவற்றின் மீது நாம் ஏவுகணைகளை வீசி அழிப்போம். நமது தரைப்படைகள், அதீத சேதாரம் குறித்து கருத்தில் கொள்ளாமல் எதிரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும். ஆம், நாம் சமீபத்திய தசாப்தங்களை விட மிகப் பரந்தளவிலான இலக்குகள் மீது குண்டுவீசுவோம்,” என்றார். “கடந்த 16 ஆண்டுகால நமது செயலூக்கமான மத்திய கிழக்கு எல்லைகள் மீதான தாக்குதலுடன் ஒப்பிடுகையில்" கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம், ஊனமுற்று இருக்கலாம் என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்.

ஹிட்லரிய பரிமாணங்களில் ஒரு போர் குற்றம் இங்கே விவரிக்கப்படுகிறது. ஆனால், ஒரு புதிய கொரிய போர் அணுஆயுத தாக்குதல் பரிவர்த்தனையை உள்ளடக்கி இருந்தாலும் சரி அல்லது வட கொரியாவின் எல்லையை ஒட்டியுள்ள, தென் சீனக் கடலில் இருந்து சிரியா மற்றும் கிழக்கு ஐரோப்பா வரையில் வாஷிங்டனுடன் பதட்டமான மோதல்களில் சிக்கியுள்ள அணுஆயுத நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவை இது உள்ளிழுக்கும் என்றாலும் சரி, நவீன ஏகாதிபத்திய போர் திட்ட வகுப்பாளர்களின் பித்துப்பிடித்த கணக்கில், இது "சிறந்த சூழலுக்குரிய விடயமாக" உள்ளது.

THAAD ஏவுகணை தடுப்பு அமைப்புமுறை உண்மையில் சீனாவை இலக்கில் வைத்துள்ளதுடன், அதற்கு எதிராக ஓர் அணுஆயுத முதல் தாக்குதலுக்கு அது அனுகூலமாக இருக்கும் என்ற பெய்ஜிங்கின் கண்டனங்கள் மற்றும் தென் கொரியாவில் மக்கள் போராட்டங்கள் என இவற்றிற்கு முன்னாலேயே, அமெரிக்கா அதன் THAAD ஏவுகணை தடுப்பு அமைப்புமுறையில் வியாழனன்று கூடுதல் குண்டுவீசிகளை நிலைநிறுத்திய நிலையில், கடந்த இரண்டு நாட்களில் தெளிவுபடுத்தப்பட்டதைப் போல, பேரழிவுகரமான அசம்பாவிதம் அனேகமாக தவிர்க்கவியலாதளவிற்கு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், சீனா அதன்  வட கொரிய எல்லைக்கு அருகே தன் சொந்த ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையைப் பரிசோதித்தது. அந்த பயிற்சி, அமெரிக்காவுடனான மோதலுக்கு தயாரிப்பு என்பதற்கு சமிக்ஞை அளிக்கும் விதத்தில், தென் சீன மார்னிங் போஸ்ட் பெய்ஜிங்கை மையமாக கொண்ட ஒரு கடற்படை வல்லுனர் கூறியதை மேற்கோளிட்டிருந்தது, அவர், “சீனா தயாராக உள்ளது, இப்பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டை அச்சுறுத்துகின்ற எந்தவொரு சக்தியையும் அதனால் தடுத்து நிறுத்த முடியும்,” என்பதை அந்த பயிற்சி எடுத்துக்காட்டுவதாக தெரிவித்திருந்தார்.

முதலாம் உலக போரின் படுகொலை களங்களை உருவாக்கிய, 1914 ஜூன் மற்றும் ஆகஸ்டுக்கு இடையே நடந்த இராணுவ மோதலின் விரைவான தீவிரப்பாடு, ஐயத்திற்கிடமின்றி, பல்வேறு ஆட்சியிலிருந்த இராஜ்ஜியங்கள் மற்றும் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களின் பாகத்தில் "எதிர்பாரா விளைவுகளையும்" “மடத்தனங்களையும்" உள்ளடக்கி இருந்த நிலையில், அப்போருக்கான காரணம் ஒட்டுமொத்தமாக பூகோளமயப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாட்டில், அதாவது அனைத்திற்கும் மேலாக மனிதயினத்தின் உற்பத்தி சக்திகளது உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைவுக்கும் அந்த முதலாளித்துவ அமைப்புமுறை வேரூன்றியுள்ள எதிர்விரோத தேசிய அரசு அமைப்புமுறையால் பூமி தொடர்ந்து பிளவுபட்டிருப்பதற்கும் இடையே வேரூன்றியிருந்தது.

அப்போரின் நடுவில் 1915 இல் எழுதப்பட்ட, போரும் அகிலமும் படைப்பில் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, முதலாளித்துவ சக்திகள் "இந்த முரண்பாட்டை, புத்திசாலித்தனமாக, மனிதயினத்தின் அனைத்து உற்பத்தியாளர்களது ஒழுங்கமைந்த கூட்டுறவு" மூலமாக தீர்க்க முயலவில்லை, “மாறாக வெற்றிபெறும் நாட்டின் முதலாளித்துவ வர்க்கம், உலக பொருளாதார அமைப்புமுறையை சுரண்டுவதன் மூலமாக" தீர்க்க முயன்றன. அவர் எழுதினார், “ஒரு பொருளாதார அமைப்புமுறை அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்டு அதன் வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமான உடைவை" அப்போர் பிரதிநிதித்துவம் செய்தது.

ஒரு நூற்றாண்டுக்கு பின்னரும், இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படுவதற்கு பதிலாக, தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம், முன்பினும் அதிக ஆக்ரோஷமான மற்றும் பொறுப்பற்ற இராணுவ பலத்தைப் பிரயோகித்து அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக உலக முதலாளித்துவ அரங்கில் அதன் வீழ்ச்சியை எதிர்கொள்ள, அது இடைவிடாது முனைந்து வருவதாலும் மற்றும் முதலாளித்துவ பூகோளமயமாக்கலாலும் இது தீவிரமடைந்துள்ளது.

ஆனால் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளது ஒரே வெளிப்பாடு போர் மட்டுமே இல்லை. அவை சமூக புரட்சிக்கான சடரீதியில் புறநிலை அடித்தளங்களையும் அமைக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்னர் போல்ஷிவிக் கட்சி தலைமையின் கீழ் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைபற்றிய போது, முதலாம் உலக போரின் மரண ஓலம் ஒலித்தது.

முடிவாய் மனிதயினமே உயிர்பிழைக்காது போகக்கூடிய ஓர் அணுஆயுத மோதலில் மட்டுமே போய் முடியக்கூடிய மூன்றாம் உலக போர் வெடிப்பதைத் தடுப்பதே இன்று தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பணியாகும். போர் மற்றும் அதற்கு ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே மிக அவசர பணியாக உள்ளது.