ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump makes another reckless threat against North Korea

ட்ரம்ப் வட கொரியாவுக்கு எதிராக மற்றொரு பொறுப்பற்ற அச்சுறுத்தல் விடுக்கிறார்

By Peter Symonds
27 September 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றிலும் பொறுப்பற்ற மற்றொரு நடவடிக்கையில், வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு வட கொரியா முற்றிலும் அடிபணியாவிட்டால் அது அழிக்கப்படுமென நேற்று மீண்டும் அச்சுறுத்தினார். இராணுவ நடவடிக்கை ஒரு வாய்ப்பாக வைக்கப்பட்டிருக்கவில்லை மாறாக உடனடியாக ஏற்கத்தக்கதாக உள்ளதென அறிவித்ததன் மூலம், அவர் பொறுப்பற்றரீதியில் கொரிய தீபகற்பம், ஆசியா மற்றும் உலகையே பெரும் அழிவுகரமான போரின் விளிம்பிற்கு தள்ளி வருகிறார்.

ஸ்பானிய பிரதம மந்திரி அருகில் நிற்க ட்ரம்ப் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், “நாங்கள் அதை [இராணுவ முடிவை] தேர்ந்தெடுக்க முற்றிலுமாக தயாராக உள்ளோம். அதுவொரு விருப்பமான தேர்ந்தெடுப்பாக இருக்காது. நாங்கள் அந்த முடிவை எட்டினால், அது பேரழிவுகரமாக இருக்கும். அதை என்னால் கூற முடியும். வட கொரியாவுக்கு பேரழிவுகரமாக இருக்கும். அது தான் இராணுவ விருப்பத்தெரிவு. அதைத்தான் நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், நாங்கள் தேர்ந்தெடுப்போம்,” என்றார்.

மீண்டும் மீண்டும் அவரது ஆத்திரமூட்டும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், அவர் எதை "முன்னுரிமையான தேர்ந்தெடுப்பாக" கருதுகிறார் என்பதை உச்சரிக்கவில்லை. அவர் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். ஈரானுடனான 2015 அணுஆயுத ஒழிப்பு உடன்படிக்கைக்கு எதிரான அவரது வெறிப்பேச்சுக்கள் நடைமுறையளவில் பியொங்யாங் உடன் அதுபோன்றவொரு உடன்பாட்டை எட்டவியலாமல் செய்துள்ளன.

வட கொரியா அதன் அணுஆயுத தளவாடங்களை விட்டொழித்து விட்டு, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாஷிங்டனின் போக்கை அடியொற்றி மேற்கொண்டும் தொடர்ந்து முடிவில்லா கோரிக்கைகளுக்கு முன்மாதிரியாக இருந்து, காலத்திற்கும் விரிவடைந்து கொண்டிருக்கும் பலவந்த சோதனை முறைக்கு அது அடிபணிந்திருக்க வேண்டுமென ட்ரம்ப் எதிர்பார்க்கிறார் என்று மட்டுமே ஒருவரால் தீர்மானிக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பியொங்யாங் தானே முன்வந்து ஓர் அமெரிக்க ஏவலாளராக மண்டியிட வேண்டும் என்றாகிறது.

அனைத்திற்கும் மேலாக, அதுபோன்றவொரு எதிர்காலத்திற்கு வட கொரியா சம்மதித்தாலும் கூட, அது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அந்த இராணுவத்துடனான ஒரு போரைத் தடுத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பியொங்யாங் ஆட்சி, ஈராக் மற்றும் லிபிய தலைவர்களின் தலைவிதியை மிகவும் நன்றாகவே அறிந்துள்ளது, அத்தலைவர்கள் பாரிய பேரழிவு ஆயுதங்கள் என்று அழைக்கப்பட்டதை, உண்மையில் அவை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவற்றை கைவிட ஒப்புக் கொண்ட பின்னரும், அமெரிக்க தலைமையிலான இராணுவ தாக்குதலையே எதிர்கொண்டனர்.

இதற்கும் மேலாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் வட கொரியாவுடனான விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டை "இராஜாங்கரீதியிலோ" அல்லது "சமாதானமாகவோ" முடித்துக் கொள்ள பேசினாலும், அதுவும் எப்போதும் போர் அச்சுறுத்தல்களுடன் நிறைந்தே உள்ளது. பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் நேற்று இந்தியாவில் பேசுகையில், அமெரிக்கா ஓர் இராஜாங்க தீர்வை விரும்புவதாக வலியுறுத்தினார். அதேநேரத்தில், “நமது இராஜாங்க அதிகாரிகளுக்கான" இராணுவத்தின் ஆதரவு "இந்த இராஜாங்க நடவடிக்கைகளை எவ்வளவு காலத்திற்கு சாத்தியமோ அதுவரையில் வைத்திருக்க" மட்டுமே ஒத்துழைக்கும் என்றார்.

மாட்டிஸ் அவரே கூட பியொங்யாங் விட்டுக்கொடுப்பதற்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளார். வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் Ri Yong-ho மற்றும் அந்நாட்டின் தலைவர் கிம் ஜொங்-யுன், இருவரும் "இன்னும் நீண்டகாலத்திற்கு இருக்க மாட்டார்கள்" என்று திங்களன்று ட்ரம்ப் அப்பட்டமாக Ri Yong-ho ஐ எச்சரித்தார்.

பியொங்யாங் அமெரிக்காவிடம் இருந்து ஓர் உடனடி தாக்குதலை எதிர்கொள்கிறது, அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை மட்டுமே பியொங்யாங் எட்ட முடியும். Ri திங்களன்று பதிலளித்தார். ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் வாஷிங்டன் போரை அறிவித்துவிட்டது என்பதையே அர்த்தப்படுத்துகின்றன, இராணுவ எதிர்நடவடிக்கைகள் எடுக்க வட கொரியா நிர்பந்திக்கப்படும் என்றவர் எச்சரித்தார்.

வட கொரியாவின் பொருளாதாரத்தை பொறிந்து போக செய்து, பியொங்யாங்கில் கடுமையான ஓர் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் நடைமுறையளவில் முழுமையான தடை எனும் அளவுக்கு, ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியாவைச் சுற்றி பொருளாதார சுருக்குக் கயிறையும் இறுக்கி வருகிறது. பியொங்யாங் சர்வதேச நிதியியல் அமைப்புமுறையை அணுகுவதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை நேற்று எட்டு வட கொரிய வங்கிகள் மற்றும் 26 தனிநபர்கள் மீது கடுமையான புதிய தடைகளை அறிவித்தது.

இந்த தடையாணைகள் வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை இலக்கில் வைத்துள்ளனவே தவிர ஒட்டுமொத்தமாக அந்நாட்டையோ அதன் மக்களையோ இலக்கில் கொள்ளவில்லை என்று வாஷிங்டன் இப்போதெல்லாம் ஒரு சிறிய பாசாங்குத்தனம் கூட செய்வதில்லை. வட கொரியாவுடன் வியாபாரம் செய்யும் எந்தவொரு நாட்டையும் அல்லது நிறுவனத்தையும் அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையிலிருந்து வெட்டுவதற்கு அமெரிக்க நிதித்துறைக்கு அதிகாரமளிக்கும் ஒரு கடுமையான நிர்வாக உத்தரவாணையை கடந்த வாரம் ட்ரம்ப் அனுப்பினார். இந்த உத்தரவு குறிப்பாக இதுவரையில் வட கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான இருக்கின்ற சீனாவுக்கு எதிராகவும், பத்தாயிரக் கணக்கான வட கொரியர்களை தற்காலிக தொழிலாளர்களாக பணியில் நியமிக்கும் ரஷ்யாவுக்கு எதிராகவும் நோக்கம் கொண்டிருந்தது.

சமீபத்திய தடைகளை அறிவிக்கையில், நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் அறிவித்தார்: “உலகெங்கிலும் வட கொரிய வங்கிகளுக்கான பிரதிநிதிகளாக செயல்படும் வட கொரிய வங்கிகள் மற்றும் நிதி ஊக்குவிப்பாளர்களை நாங்கள் இலக்கில் வைத்துள்ளோம்.” ஆனால் இந்த தடைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இவ்விதமாக செயல்படும் நாடுகளையும் இலக்கில் வைக்கிறது — பெயரிட்டு கூறுவதானால், சீனா, ரஷ்யா, லிபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இந்நாடுகள் அனைத்தும் இப்போது அவற்றின் பொருளாதாரங்களுக்கு எதிராக அமெரிக்க அபராதங்கள் விதிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

ஏற்கனவே பல சீன நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இதுபோன்ற எதேச்சதிகார அமெரிக்க தடையாணைகள் எடுத்துக்காட்டும் உண்மை என்னவென்றால், வட கொரியாவை அச்சுறுத்துவதில், அமெரிக்கா அதன் உலக மேலாதிக்கத்திற்கு அது பிரதான தடையாக கருதும் சீனாவுடன் மிகப் பெரிய மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது.

இது அமெரிக்காவின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டால் எடுத்துரைக்கப்பட்டது, அவர் நேற்று காங்கிரஸில் கூறுகையில், சீனா "அனேகமாக 2025 வாக்கில் நமது நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்,” என்றார். அவர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இராணுவ விரிவாக்கத்தை மேற்கோளிட்டார், ஆனால் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடுகையில் இப்போதும் கீழாகவே உள்ளது.

கொரிய தீபகற்பம் மீதான பதட்டங்களைக் குறைக்குமாறு நேற்று சீனா மீண்டும் முறையிட்டது. வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் Lu Kang கூறுகையில், “கண்மூடித்தனமாக வார்த்தைகளைக் கொண்டு ஒருவரின் பலத்தை பறைசாட்டுவதும், பரஸ்பர ஆத்திரமூட்டலும் மோதல் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கும் என்பதோடு, கொள்கை உத்திகள் கையாள்வதற்குரிய வாய்ப்பை குறைக்கும்" என்பதை வாஷிங்டனும் பியொங்யாங்கும் உணருமென பெய்ஜிங் நம்புகிறதென வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் லு கான்ங் தெரிவித்தார். “கொரிய தீபகற்பத்தில் நடக்கும் ஒரு போரில் யாரும் வெற்றியாளர்கள் இருக்க மாட்டார்கள், அது அப்பிராந்தியத்திற்கும் அப்பிராந்திய நாடுகளுக்கும் படுமோசமாக அமையும்,” என்றவர் எச்சரித்தார்.

லு இன் கருத்துக்கள் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன் ஞாயிற்றுக்கிழமை கருத்துக்களை எதிரொலித்தன. அமெரிக்கா இதை தணிக்கவில்லை என்றால், “நாம் மிகவும் அனுமானிக்கவியலாத ஒரு பள்ளத்தில் வீழ்வோம், மேலும் நூறாயிரக் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் பத்தாயிரக் கணக்கான அப்பாவி தென் கொரிய மக்கள், அவர்கள் மட்டுமின்றி வட கொரியர்களும், நிச்சயமாக, ஜப்பானும் பாதிக்கப்படும் — ரஷ்யா மற்றும் சீனாவும் அருகில் உள்ளன,” என்று லாவ்ரோவ் அறிவித்தார்.

அவற்றின் வாசலில் போர் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவும் சீனாவும் அதற்கேற்ப தயாரிப்பு செய்து வருகின்றன. கடந்த வாரம் ரஷ்ய மற்றும் சீன கடற்படைகள் வட கொரியாவுக்கு அருகிலுள்ள பசிபிக் பகுதிகளில் எட்டுநாள் கூட்டு பயிற்சிகளைத் தொடங்கின. இந்த வாரம் ரஷ்ய ஆயுதப்படைகள் ரஷ்யாவின் கிழக்கே தொலைதூரத்தில், வட கொரியா உடனான அதன் எல்லைக்கு அருகே, மிகப்பெரிய விமானப்படை ஒத்திகை ஒன்றை தொடங்கியது.

அதன் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்கள் மூலமாக, ட்ரம்ப் நிர்வாகம் வேண்டுமென்றே வட கிழக்கு ஆசியாவில் ஒரு வெடிப்பார்ந்த சூழலை உருவாக்கி உள்ளது. இராஜாங்கரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மற்றும் இராணுவ ரீதியிலும் வட கொரியாவைத் தனிமைப்படுத்துவதன் மூலம், பியொங்யாங்கில் உள்ள அந்த ஸ்திரமற்ற ஆட்சி பெரும்பிரயத்தனத்துடன் நடவடிக்கைகள் எடுக்க சீண்டப்படுகையில், அதையொரு குற்றகரமான நிர்மூலமாக்கல் போரைத் தொடங்க வாஷிங்டன் சுரண்டிக்கொள்ளும், இது சீனா மற்றும் ரஷ்யா போன்ற பிற அணுஆயுத சக்திகளை விரைவிலேயே உள்ளிழுக்க கூடியதாகும்.