ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s “Mein Kampf” tirade at the United Nations

ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்பின் " Mein Kampf" வெறிப் பேச்சு

Bill Van Auken
20 September 2017

நியூ யோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தொடக்க அமர்வில் செவ்வாயன்று டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய உரை, ஐக்கிய நாடுகள் சபையிலும் சரி அல்லது அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்தவர்களது உரையிலும் சரி, முன் உதாரணமற்றதாக உள்ளது.

மனிதயினத்தை "போர் இடர்களிலிருந்து" விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக பாசாங்குத்தனமாக கூறப்படுவதும், நாஜி தலைவர்களின் நூரெம்பேர்க் வழக்குகளில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் மீது நிறுவப்பட்டதுமான அந்த ஓர் உலக அமைப்பின் முன் பேசுகையில், அமெரிக்க ஜனாதிபதி, மனிதயினப்படுகொலை கொள்கை ஒன்றை பகிரங்கமாக ஏற்றிருந்தார். வட கொரியாவையும் அதன் 25 மில்லியன் மக்களையும் "முற்றிலுமாக அழிக்க" அவர் "தயாராக இருப்பதாக, விரும்புவதாக, செயல்படுத்தும் வல்லமையுள்ளதாக" அறிவித்தார்.

அச்சபையில் ட்ரம்பை ஒரு போர் குற்றவாளியாக கைது செய்யுமாறு கோரவோ, அல்லது அந்த பாசிசவாத மிரட்டல்வாதியை வாயை மூடி உட்கார சொல்லவும் கூட எவரும் முன்வரவில்லை என்ற உண்மையானது, ஐக்கிய நாடுகள் சபையின் திவால்நிலைமைக்கே ஒரு அளவுகோலாக உள்ளது.

“அமெரிக்காவிடம் மிகப்பெரும் பலமும், பொறுமையும் இருந்தாலும், அது தன்னையோ அல்லது அதன் கூட்டாளிகளையோ பாதுகாக்க நிர்பந்திக்கப்பட்டால், வட கொரியாவை முழுமையாக அழிப்பதல்லாமல் எங்களுக்கு வேறு தேர்வில்லை,” என்று ட்ரம்ப் அக்கூட்டத்தில் அறிவித்தார். “ராக்கெட் மனிதர் [இது வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் க்கு ட்ரம்ப் வைத்த முட்டாள்தனமான புனைபெயர்] தன்னைத்தானும் மற்றும் அவர் ஆட்சியையும் அழித்துக் கொள்ளும் ஒரு தற்கொலை திட்டத்தில் உள்ளார். அமெரிக்கா தயாராக உள்ளது, விரும்புகிறது, அதனால் அதை செய்ய முடியும்...” என்றார்.

அவரது ஒவ்வொரு பொது உச்சரிப்பிலும், ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான கருத்துக்கள் கடந்த நவம்பரில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் அமெரிக்காவின் செல்வசெழிப்பை மீட்டமைப்பதற்காக என்று கூறப்படுபவைகளுடன் தொடங்கின, அவர் வாதத்தின்படி பார்த்தால், அது வோல் ஸ்ட்ரீட் பங்குச்சந்தைக் குமிழியிலும், 700 பில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவு திட்டத்தை நிறைவேற்றியதிலும் தான் வெளிப்பாட்டை கண்டன.

அவரது "அமெரிக்கா முதலில்" சித்தாந்தத்தை ஊக்குவிப்பதே ட்ரம்ப் உரையின் மையத்தில் இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேசியவாத ஊக்குவிப்பை இப்புவியின் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக முன்வைத்தார். “மனிதயின நிலைமைகளை உயர்த்துவதற்கு தேசிய-அரசு சிறந்த வாகனமாக திகழ்கிறது,” என்றவர் ஓர் உரையில் பிரகடனப்படுத்தினார், அதில் "இறையாண்மை அரசு" அல்லது "இறையாண்மை" என்ற வார்த்தைகள் 21 முறை திரும்ப திரும்ப கூறப்பட்டன.

ஒவ்வொரு நாட்டு இறையாண்மைக்கும் அவர் ஆதரவு இருப்பதாக அறிவித்த அதேவேளையில், வாஷிங்டனின் கட்டளைக்கு அடிபணிய மறுக்கும் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அவர் நிர்வாகம் போர் தொடுக்க தயாராக இருப்பதையும் ட்ரம்ப் தெளிவுபடுத்தினார்.

நெடுந்தொலைவுக்கு பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுத சோதனைகளுக்காக வட கொரியாவை எரித்து சாம்பலாக்க அச்சுறுத்தியதற்கு மேலாக, ஈரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை "குழப்பமானது" என்று விவரித்து, அதை விட்டொழிக்கவும் அச்சுறுத்தினார். இவ்விதத்தில் அவர் அமெரிக்காவை ஈரானுக்கு எதிரான போர் பாதையில் நிறுத்தினார், ஈரான் அரசாங்கத்தை ஒரு "ஊழல் சர்வாதிகாரம்” என்றும், ஒரு "தான்தோன்றித்தனமான அரசு", ஒரு "கொலைகார ஆட்சி" என்றும் அவர் விவரித்தார்.

வெனிசூலாவையும் அவர் பிரத்யேகமாக சுட்டிக்காட்டினார், அதன் உள்நாட்டு நிலைமை "முற்றிலுமாக ஏற்கத்தக்கதல்ல, நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அந்த ஆட்சியை பொறுப்புணர்வுடன் கொண்டு வர, அமெரிக்கா முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெனிசூலா மக்கள் மீது எதேச்சதிகார ஆட்சியைத் திணிக்க வெனிசூலா அரசாங்கம் அதன் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருந்தால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவத் ஜரீஃப் ட்வீட் செய்தியில் விடையிறுத்து கூறுகையில், “ட்ரம்பின் அர்த்தமற்ற வெறுப்பு உரை —21 ஆம் நூற்றாண்டு ஐ.நா. சபைக்குரியதல்ல— மத்தியக்காலத்திற்குரியது, ஒரு பதிலளிக்கும் அளவுக்கு கூட மதிப்புடையதல்ல,” என்றார்.

வெனிசூலா வெளியுறவுத்துறை அமைச்சர் Jorge Arreaza, “பலவந்த ஆட்சி மாற்றத்திற்கு" முயல்வதாக ட்ரம்பைக் குற்றஞ்சாட்டினார், அவர் "அவரது சொந்த நாட்டையே ஆள முடியாத போது, உலகை ஆள விரும்புகிறார்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எல்லா நாடுகளது தேசிய இறையாண்மையை அவர் கையிலெடுப்பதற்கும், எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருத்தமாக உணர்ந்தால், குண்டு வீசவும், படையெடுக்கவும் அல்லது ஆட்சி மாற்றத்தை நடத்தவும் அதற்கு "உரிமை" இருப்பதாக அவர் வலியுறுத்துவதற்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டைக் குறித்து விவரிக்க ட்ரம்ப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அவர் உரைக்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் ஒரு மூத்த அதிகாரி செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி அவர் உரையின் "ஆழ்ந்த மெய்யியல்" குணாம்சத்தை சிந்திக்க நிறைய நேரமெடுத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

என்னவொரு பிதற்றல்கள்! அவ்வுரையின் "மெய்யியல்,” உள்ளவாறே, பாசிச சித்தாந்தத்திலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வட கொரியாவுக்கு எதிராக ட்ரம்ப் உச்சரித்த இந்த விதமான அச்சுறுத்தல் பேச்சை, அடோல்ப் ஹிட்லர் 1939 இல் நாடாளுமன்ற ஆட்சிபீடம் ஏறி ஐரோப்பிய யூதர்களை நிர்மூலமாக்க எச்சரித்ததற்குப் பின்னர், எந்தவொரு உலக தலைவரும் பேசியதில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்ப் முன்வைத்த ஒருவிதமான தேசியவாத கோட்பாடு, 1930 களில் ஹிட்லர் மற்றும் முசோலினியின் நிலைப்பாடுகளை தனித்துவமாக எதிரொலிக்கின்றன. லியோன் ட்ரொட்ஸ்கி, "தேசியவாதமும் பொருளாதார வாழ்வும்" என்ற அவரது 1934 கட்டுரையில் எழுதினார்:

“இத்தாலிய பாசிசவாதம் தேசிய 'பரிசுத்தமான தன்னலத்தை' அதன் தனித்துவமான ஆக்கக்கூறாக பிரகடனப்படுத்துகிறது. ஜேர்மன் பாசிசம், மனிதயினத்தின் வரலாறை தேசிய வரலாறாக குறைத்த பின்னர், தேசத்தை இனமாகவும், இனத்தை இரத்தமாகவும் குறைக்க முன்நகர்ந்தது... முசோலினி மற்றும் ஹிட்லரால் கண்டுபிடிக்கப்பட்ட, தேசத்தின் நித்தியமதிப்பானது, 19 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகம் மற்றும் சோசலிசம் என்ற மதிப்புகளுக்கு எதிராக போலி மதிப்புகளாக இப்போது எதிரீடு செய்யப்படுகிறது.”

இந்த சமாந்தரங்கள் தற்செயலானவை அல்ல. ட்ரம்ப் உரையின் எழுத்துக்கள் கண்கூடாக ட்ரம்பின் பாசிசவாத மூத்த கொள்கை ஆலோசகரும் உரையாசிரியருமான ஸ்டீபன் மில்லரின் கைரேகைகளைத் தாங்கியுள்ளது, வரவிருக்கும் நாட்களில் இவர் ஹிட்லரின் எனது போராட்டத்தின் (Mein Kampf) ஒரு தொகுதியைச் சிறப்பாக எழுதுவாரென தெரிகிறார்.

1930 களில் இதேபோன்ற பிற்போக்கு தேசியவாதத்தின் ஊக்குவிப்புத்தான் உலக முதலாளித்துவத்தின் சித்தாந்த வெளிப்பாடாக இருந்து, உலகப் போருக்குள் இறங்க செய்தது, இன்றும் அவ்வாறே உள்ளது.

பியொங்யாங் உடன் வர்த்தகம் செய்வதற்காக சீனா மற்றும் ரஷ்யா மீதான ட்ரம்பின் சுற்றி வளைத்த கண்டனங்களில் அவர் சுட்டிக்காட்டி உள்ளவாறும், தென் சீனக் கடல் மற்றும் உக்ரேன் குறித்த அவர் கருத்துக்களில் அவர் குறிப்பிட்டுள்ளவாறும், வட கொரியா மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப் பரந்த புவிசார்மூலோபாய நோக்கங்களுடன் பிணைந்துள்ளன. அனைத்திற்கும் மேலாக, ஈரான் மீதான தாக்குதல்களும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிவதென்ற அச்சுறுத்தல்களும் தெஹ்ரான் அரசுக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக ஈரானுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உடன்படிக்கைகள் மீது ஏற்கனவே இலாபத்திற்கான புதிய ஆதாரவளங்களைப் பெற முயன்று வருகின்ற மேற்கு ஐரோப்பாவில் உள்ள சமீபம் வரையில் வாஷிங்டனின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளை நோக்கமாக கொண்டதும் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தொடக்க அமர்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் கலந்து கொள்ளாததும் குறிப்பிடத்தக்கதாகும். வரவிருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர் என்பதோடு, அவர்கள் அரங்கில் அமர்ந்திருப்பது ட்ரம்பின் பழியுரைக்கு ஒப்புதல் வழங்குவதாக பார்க்கப்பட்டு அதனால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் விளைவுகளைக் குறித்து அவர்கள் அஞ்சினார் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

ட்ரம்ப்க்குப் பின்னர் சிறிது நேரத்தில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" ஊக்குவித்து வலதுசாரி உரையொன்று வழங்கினார், ஆனால் இராணுவத் தீவிரப்படுத்தலுக்கு எதிராக எச்சரித்தும் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்புவிடுத்தும் வட கொரியா மீதான அமெரிக்க நிலைப்பாட்டை நேரடியாக எதிர்க்க அவர் நிர்பந்திக்கப்பட்டார். ஈரான் சம்பந்தமாக, அணுசக்தி உடன்படிக்கையை எந்தவிதத்திலும் இல்லொழிப்பதை அவர் எதிர்த்தார். பிரெஞ்சு ஊடகங்கள் இந்த பிளவை புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிற்கு எதிரான போர் முனைவின் போது எழுந்த பதட்டங்களுடன் ஒப்பிட்டன.

ஆனால் இன்றிருக்கும் அச்சுறுத்தல்கள், அதனினும் மிகப் பெரியது. ட்ரம்ப் தலைமை கொடுத்து வரும் அரசாங்கம் குற்றவாளிகளை (criminals) உள்ளடக்கி உள்ளது என்பதை ட்ரம்பின் உரை தவறுக்கிடமின்றி உலகிற்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மண்ணில் வரையப்பட்டுள்ள பல கோடுகளின் அடிப்படையில், நடைமுறையளவில் ஒவ்வொரு கண்டத்திலும் போர் அச்சுறுத்தல்களுடன், ட்ரம்பின் சொந்த வீராவேசம், ஏறத்தாழ தவிர்க்க முடியாதவாறு இராணுவ தீவிரப்பாட்டிற்கும் இராணுவ நடவடிக்கைக்கும் இட்டுச் செல்கிறது.

அமெரிக்க இராணுவம் இனியும் பொதுமக்கள் கட்டுப்பாட்டுக்கு அடிபணிந்து இருக்காது என்று உலகிற்கான ஓர் எச்சரிக்கை வரியையும் அவ்வுரை உள்ளடக்கி இருந்தது. ட்ரம்ப் அறிவித்தார், “இப்போதிருந்து, அரசியல்வாதிகள் அமைத்துள்ள நியாயமற்ற வரம்புகளும் கால அட்டவணைகளும் அல்ல, நமது பாதுகாப்பு நலன்களே, இராணுவ நடவடிக்கைகளின் விஸ்தீரணத்தையும் அளவையும் கட்டளையிடும்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல, இராணுவமே தீர்மானிக்கும்—இதுதான் இராணுவ சர்வாதிகாரத்தின் அடிப்படை குணாம்சமாகும். இந்த "கோட்பாடு" அமெரிக்க காங்கிரஸால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அது 700 பில்லியன் டாலர் பென்டகன் வரவு-செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய அதேவேளையில், போர் பிரகடனத்திற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரம் மீது மறுஉரிமைகோருவதற்காக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டதிருத்தத்தை வாக்கெடுப்பில் நிராகரித்தது என்பது அமெரிக்க ஜனநாயகத்தில் துர்நாற்றம் வீசும் ஒரு நடவடிக்கையாகும்.

அதன் தலைமையில் டொனால்ட் ட்ரம்ப் போன்ற அருவருக்கத்தக்க நபரைக் கொண்ட இதுபோன்றவொரு அரசாங்கம் ஸ்திரப்படுவதானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்கம் சரிவதை மாற்றும் நோக்கில் தொடுக்கப்பட்ட முடிவில்லா போர்கள் மற்றும் இராணுவ தலையீடுகளுடன் சேர்ந்து, ஒருகால் நூற்றாண்டு பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவின் விளைவாகும்.

தேசியவாதத்திற்கான ஹிட்லரிய வசந்தகால ட்ரம்ப் உரையில் முன்வைக்கப்பட்ட கண்ணோட்டத்திற்கு முரண்பட்ட விதத்தில், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பொதுச்சபைக்கான அவரது உரையில் "சுக்குநூறாக்கிடக்கும் ஓர் உலகம்" என்று விவரித்து, அமெரிக்க ஜனாதிபதியை முந்திச் சென்றார்.

“மக்கள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளனர்,” என்று அவர் எச்சரித்தார். “அவர்கள் பாதுகாப்பின்மை அதிகரிப்பதை, சமத்துவமின்மை வளர்ந்து வருவதை, மோதல் பரவி வருவதை, காலநிலை மாறி வருவதை பார்க்கிறார்கள்.” அவர் தொடர்ந்து கூறுகையில், “அணுஆயுதங்கள் மீதான உலகளாவிய கவலைகள், பனிப்போர் முடிவுக்குப் பின்னர் அதன் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன,” என்றார்.

இந்த மறுக்கவியலாத யதார்த்தம், மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட நிதி மூலதன மேலாளுமை இன்று மிகப்பெரியளவில் கொண்டுள்ள ஒரு நாடான வெனிசூலாவின் நெருக்கடியை, அவரது உரையில் சோசலிசத்தை கண்டனம் செய்வதற்காக சுரண்ட முயன்ற அவர் முயற்சியில் மறைமுகமான வெளிப்பாட்டை கண்டது.

“எங்கெல்லாம் உண்மையான சோசலிசமோ அல்லது கம்யூனிசமோ ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோ, அது வேதனையான, பேரழிவுகரமான தோல்வியையே வழங்கியுள்ளது,” ட்ரம்ப் தெரிவித்தார். “இந்த மதிப்பிழந்த சித்தாந்தங்களின் ஒழுக்கநெறிகளை போதிப்பவர்கள், இத்தகைய குரூர அமைப்புகளின் கீழ் வாழும் மக்கள் தொடர்ந்து துன்புறுவதற்கு மட்டுமே பங்களிப்பு செய்கிறார்கள்,” என்றார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, மார்க்சிசம் தோற்றுவிட்டது முதலாளித்துவம் வென்றதென பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் முன் ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் இராணுவவாத ஆவேச உரை வழங்கும் ஓர் அமெரிக்க ஜனாதிபதியின் முதன்மையான முன்னீடுபாடாக சோசலிச அச்சுறுத்தல் மாறியுள்ளது.

அமெரிக்க நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த அடுக்கு, அதுவே சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உணர்கின்ற நிலையில் ட்ரம்ப் அதற்காக பேசுகிறார். அது, அதிகரித்து வரும் மக்கள் கோபத்தை கண்டு அஞ்சுகிறது. அது, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்குள் ஒரு பரந்த சமூக ஆதரவுத்தளம் இந்த இலாபகர அமைப்புமுறைக்கு ஆழ்ந்த விரோதமாகவும் சோசலிசத்திற்கு அனுதாபமாகவும் உள்ளது என்பதை 2016 தேர்தலின் போது எடுத்துக்காட்டியதால், அதன் மையத்திலேயே ஆட்டம் கண்டுள்ளது.

இறுதி பகுப்பாய்வில், போர் மற்றும் அணுஆயுத நிர்மூலமாக்கல் குறித்த ட்ரம்பின் ஆக்ரோஷ அச்சுறுத்தல்கள், அமெரிக்க ஆளும் வர்க்கம் உள்நாட்டில் பின்பற்றும் வர்க்க கொள்கையினதும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே அரசியல் மற்றும் சமூக பதட்டங்களின் மிகவும் அபிவிருத்தி நிலையினதும், உலக அரங்கில் வெளிப்படும் முன்வரைவுகளாகும்.