ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

British National Health Service faces escalating crisis due to chronic underfunding

நீடித்த நிதிப் பற்றாக்குறையால், பிரிட்டிஷ் தேசிய மருத்துவ சேவை அதிகரித்து வரும் நெருக்கடியை முகங்கொடுக்கிறது

By Dennis Moore
5 January 2018

பிரிட்டிஷ் தேசிய மருத்துவ சேவை (NHS) நீடித்த நிதிப் பற்றாக்குறையாலும் மற்றும் இக்குளிர்காலத்தில் தேவை அதிகரித்திருப்பதாலும் ஏற்பட்டுள்ள ஒரு அதிகரித்து வரும் நெருக்கடியின் மத்தியில் உள்ளது. நோயாளிகள் மிகவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதுடன், பல மருத்துவமனை அறக்கட்டளைகள் போதிய கவனிப்பை வழங்க இயலாமல் உள்ளன.

பல்வேறு மருத்துவமனைகளுக்குப் பொறுப்பான குறைந்தபட்சம் 21 அறக்கட்டளைகள், அவை "மீண்டும் அபாயத்தில்" இருப்பதாக இவ்வாரம் அறிவித்துள்ளன, அதாவது, அவற்றால் நோயாளிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது மற்றும் அவற்றின் அனைத்து சேவைகளையும் வழங்க முடியாது என்பதே இதன் அர்த்தம். வேறு பல மருத்துவமனைகளோ கடுமையான சிரமத்தில் உள்ளன.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே மற்றும் மருத்துவத்துறை செயலர் ஜெர்மி ஹன்ட் இருவருமே அதிகரித்து வரும் மக்கள் சீற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இவ்வாரம் அறிக்கைகளை வெளியிட்டனர்.

இலண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி குழு தலைவர் பாப் கேர்ஸ்லேக் (Bob Kerslake), இங்கிலாந்தின் மிகப் பெரிய NHS அறக்கட்டளைகளில் ஒன்றிலிருந்து ஞாயிறன்று இராஜினாமா செய்தார். “தேசிய மருத்துவச் சேவை மற்றும் அறக்கட்டளை எந்தளவிலான சவாலை முகங்கொடுத்து வருகின்றன என்பது குறித்து அரசும் நெறிமுறை ஆணையமும் யதார்த்தத்திற்கு முரணாக உள்ளன. பணியாளர்களுக்கும் மற்றும் அவர்கள் நோயாளிகளை சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கும் நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றவர் ட்வீட் செய்தார்.

தேசிய மருத்துவ சேவைக்கு கூடுதலாக எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்ற யதார்த்தத்தை அமைச்சர்கள் நிராகரிக்கிறார்கள் என்று கூறிய கேர்ஸ்லேக், வெளியேறுவதற்கு முன்னதாக நிதி விவகாரங்கள் குறித்து NHS கண்காணிப்பு ஆணையத்துடன் ஒரு நீண்ட விவாதம் நடத்தி இருந்தார். பிரிட்டிஷ் அரசியலில் ஒரு மூத்த பிரமுகரும் ஏறத்தாழ சமீபத்தில் 2015 இல் பொதுமக்கள் சேவைகளுக்கான தலைவராக இருந்த அவர், இங்கிலாந்தில் மருத்துவச் சேவைகளுக்கான நிதியாதாரங்களை நெறிப்படுத்தும் NHS கண்காணிப்பு ஆணையத்தின் (NHS Improvement) இந்தாண்டு வரவு-செலவை சமாளிக்க கிங்ஸ் மருத்துவக் கல்லூரியால் முடியவில்லை என்பதால், அக்கல்லூரியை அது "சிறப்பு நடவடிக்கைகளுக்குள்" கொண்டு வரவிருந்த வெறும் ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அவர் இராஜினாமா செய்தார்.

இந்தாண்டு மருத்துவமனைக்கு 38 மில்லியன் பவுண்ட்டுகள் பற்றாக்குறை இருக்கும் என்ற NHS கண்காணிப்பு ஆணையத்தின் ஒரு திட்டத்திற்கு அந்த மருத்துவமனை ஒப்புக் கொண்டிருந்தது. அதற்கு பதிலாக, பற்றாக்குறை 96 மில்லியன் பவுண்ட்டுகள் அளவில் இருக்கலாம்.

யதார்த்தத்திற்கு ஒத்துவராத விதத்தில் மருத்துவமனைகளிடம் செலவு குறைப்பு இலக்குகளைப் பூர்த்தி செய்ய கோரப்பட்டு வருவதால் தாம் பதவி விலகுவதாக கார்டியனில் எழுதிய ஒரு கட்டுரையில் கேர்ஸ்லேக் விவரித்திருந்தார்.

கிங்ஸ் மருத்துவக் கல்லூரி அதன் பணியாளர் மற்றும் ஆலோசகர்களுக்கான செலவுகளைக் கடுமையாக குறைத்துள்ளது. மேலும், ப்ரோம்லே இல் 2014 இல் சிக்கலில் இருந்த பிரின்சஸ் ராயல் மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னர் இருந்து, ஒட்டுமொத்த நிதி நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்த மருத்துவமனை 80 மில்லியன் பவுண்ட் செலவை குறைத்துள்ளது, இது மற்ற மருத்துவமனைகளின் சராசரியைக் காட்டிலும் இரண்டு மடங்காகும், இருப்பினும் அது முகங்கொடுக்கும் நிதியியல் நெருக்கடியை எவ்வழியிலும் அதனால் தீர்க்க முடியவில்லை.

தென்கிழக்கு இலண்டனில் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு சேவையாற்றும் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி, மிகவும் பரபரப்பான மருத்துவமனை அறக்கட்டளைகளில் ஒன்றாகும். பல துறை சிறப்பு வல்லுனர்களுடன் மருத்துவ நிபுணத்துவத்தின் மையமாக கருதப்படும் இது, புற்றுநோய் சிகிச்சைக்கான காத்திருப்பு நேரங்களைச் சிறப்பாக கையாண்டுள்ளது என்பதோடு, நாட்டிலேயே சில சிறந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. 

இம்மருத்துவமனை பல தரப்பினருக்கும் மற்றும் பெரும்பாலும் கைவிடப்பட்ட சமூகத்திற்கும் சேவையாற்றுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் மற்றும் இலண்டன் பாலத்தின் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கும் மற்றும் கிரென்ஃபெல் கோபுர தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளித்த அத்தலைநகரின் முன்னணி சிகிச்சை மையங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இங்கிலாந்து எங்கிலும் உள்ள பல மருத்துவமனைகளைப் போலவே, கிங்ஸ் மருத்துவமனையும் சேவைகளுக்கான அதிகரித்த தேவைப்பாடுகளை முகங்கொடுக்கின்ற அதேவேளையில், மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களுக்காக அதிகரித்த செலவுகளையும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

தேசிய மருத்துவச் சேவை சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி சைமன் ஸ்டீவன்ஸ், அரசிடம் ஆண்டுக்கு கூடுதலாக 4 பில்லியன் பவுண்ட் கோரியிருந்தார். கருவூலத்துறை தலைவர் பிலிப் ஹம்மாண்ட் இன் சமீபத்திய வரவு-செலவு திட்டக்கணக்கில் என்ன வழங்கப்பட்டதோ அது இதை விட மிகவும் குறைவாக, வெறும் 1.6 பில்லியன் பவுண்டாக இருந்தது. முன்னெப்போதும் விட அதிக தேவைப்பாடுகளை முகங்கொடுத்துள்ள சமூக பராமரிப்புக்கான நிதிவழங்கல் அதிகரிக்கப்படவில்லை, இது 2.5 பில்லியன் பவுண்ட்டுகள் நிதிப் பற்றாக்குறையுடன் முறியும் புள்ளியில் உள்ளது. 

வரவு-செலவு திட்டக்கணக்கைத் தொடர்ந்து, ஸ்டீவன்ஸ் கூறுகையில், 2018-19 க்கு தேசிய மருத்துவச் சேவைக்குத் தேவைப்படும் 4 பில்லியன் பவுண்ட்டுகள் தொகையை நிராகரிப்பதானது, கவனிப்பை அதிகரித்தளவில் குறைக்கவும், காத்திருப்பு நேரம் அதிகரிப்பதற்கும் இட்டுச் செல்லும், மேலும் பண நெருக்கடியில் உள்ள மருத்துவச் சேவைகள் எதை ஏற்பது மற்றும் எதை ஏற்காமல் விடுப்பது என்பதை "வலியுடன்" தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

Health Foundation சிந்தனை குழாமின் ஆராய்ச்சித்துறை இயக்குனரான பேராசிரியர் அனிதா சார்லஸ்வொர்த், தேசிய மருத்துவச் சேவையில் நிலவும் நிதி பிரச்சினைகள் நிதிக் குறைப்பினால் ஏற்பட்டது என்ற கேர்ஸ்லேக்கின் வாதத்தை ஆதரித்தார். “தேசிய மருத்துவச் சேவைகளில் உள்ள மருத்துவமனைகள் மிக மிகக் சிக்கலான நிலைமைக்குள் சிக்கி உள்ளன. இந்தாண்டின் முதல் பாதியில் அவசர சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 3.4 சதவீதம் அதிகரித்துள்ளன, அங்கே 30,000 செவிலியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது, மேலும் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அனுப்பப்படக்கூடியவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு தொடர்ந்த சமூக கவனிப்பு உதவி தேவைப்படுவதால் இவர்களை வீட்டிற்கு அனுப்பமுடியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது,” என்றவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் 240 அறக்கட்டளைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தேசிய மருத்துவச் சேவை சம்மேளனம், தேசிய வருவாயில் ஒரு பெரும் பங்கை பெறுவதற்கு அது தகுதி உடையதெனக் கூறி, தேசிய மருத்துவச் சேவைக்கு சிறிய அதிகரிப்புகளை வழங்கும் அதன் கொள்கையைக் கைவிடுமாறு அரசை வலியுறுத்தி உள்ளது. 

இந்த சம்மேளனத்தின் தலைவர் நெய்ல் டிக்சன் கூறுகையில், ஹம்மாண்ட் இன் 1.6 பில்லியன் பவுண்ட்டுகள் உயர்வானது, வரவிருக்கும் 2018-19 ஆம் ஆண்டில் NHS நின்றுபிடிப்பதற்கு மட்டுமே அவசியப்படுகிறது என்றார். இங்கிலாந்தில் 2017-18 ஆண்டுக்கான மொத்த மருத்துவத்துறை செலவு அண்மித்து 124 பில்லியன் பவுண்ட்டுகள் ஆகும், பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்து பார்த்தால், 2020-21 வாக்கில் இது 127 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

2016 இல் “தேசிய மருத்துவ சேவையின் நிதி பேணும் தகைமை" என்ற தேசிய கணக்கு வழக்கு அலுவலகத்தின் அறிக்கை ஒன்று, 2015-16 ஆண்டுகளைப் பொறுத்த வரையில், 66 சதவீத NHS அறக்கட்டளைகளும் மற்றும் NHS ஸ்தாபக அறக்கட்டளைகளும் (238 இல் 156) பற்றாக்குறையில் இருந்ததைக் கண்டறிந்தது.     

2020 வாக்கில் 22 பில்லியன் பவுண்ட்டுகள் சேமிக்குமாறு பல ஆண்டுகளுக்கு முன்னரே NHS க்கு கோரப்பட்டது.

மருத்துவ அமைப்பான Nuffield மற்றும் கிங்ஸ் நிதியகத்தின் மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் இறுக்கமான செலவுகளும், சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதும் "நோயாளிகள் கவனிப்பு செலவு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். “சில சிகிச்சைகள் பங்கிட்டு குறைத்து வழங்கப்படுவது மீதும், சில சேவைகளின் கவனிப்பு தரம் குறைந்து வருவதற்கும் சான்றுகள் அதிகரித்து வருகின்றன" என்பதையும் அவர்கள் சேர்த்துக் கொள்கின்றனர்.

அரசின் இலையுதிர்கால வரவு.செலவு திட்டக்கணக்கிற்கு விடையிறுப்பாக, இந்த மூன்று அமைப்புகள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை, ஏழாண்டு கால செலவு குறைப்பு நடவடிக்கைகளின் தாக்கம் குறித்தும், சேவைகளின் தேவை அதிகரித்து வருவது குறித்தும், இது தேசிய மருத்துவச் சேவையை நாசப்படுத்தி வருவது குறித்தும் பெரும் கவலைகளை வெளியிட்டது. கவனிப்பு தரத்திற்கான ஆய்வு மையம் (Care Quality Commission CQC) இன் 2017 ஆண்டுக்கான கவனிப்பின் நிலை குறித்த அறிக்கை, மருத்துவம் மற்றும் கவனிப்பு சேவைகள் முழு அளவில் இழுக்கப்பட்டுள்ளன என்றும், சில சேவைகள் சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் எச்சரித்துள்ளது. முக்கிய காத்திருப்பு நேர தரமுறைகள் ஆண்டு முழுவதும் வழமையாக தவறவிடப்பட்டு வருகின்றன, A&E இல் நோயாளிகளைச் சிகிச்சை பார்ப்பதற்கான நான்கு மணி நேர காத்திருப்பு நேரம், ஜூலை 2015 இல் இருந்து அடையப்படவில்லை.

அவசர பரிந்துரையை அடுத்து புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்குவதற்கான 62 நாள் வரையறை, மூன்றாண்டுகளாக அடையப்படவில்லை. 

ஜூலை 2017 இல், அங்கே சிக்கலான மனநல மருத்துவ தேவைகளுடன் 900 நோயாளிகள் இருந்தனர், அவர்கள் உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் இல்லாமல், பொருத்தமற்ற முறையில் அவர்களின் வாழ்விடத்திற்கு வெளியிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து எங்கிலுமான நோயாளிகள் பெறுகின்ற கவனிப்பு, சவாலான சூழலிலும் இரக்கத்துடன் கவனித்துக் கொள்ளும் NHS பணியாளர்களின் முயற்சிகளாலேயே பெரும்பாலும் நன்றாக இருப்பதாக CQC குறிப்பிடுகிறது. இருப்பினும் முறையான நிதி சேவைகள் இல்லாமல் பெரும் பணிச்சுமை ஏறிய NHS பணியாளர்களின் இரக்க உணர்வின் அடிப்படையில், நல்ல தரமான கவனிப்பை எதிர்பார்க்க முடியாது.

தேசிய மருத்துவ சேவையின் செயல்திறன் உண்மையில் ஆண்டுக்கு 1.7 சதவீதம் அதிகரித்து வருவதற்கும் மற்றும் முற்றுமுழுதான பொருளாதாரத்தை விட சிறப்பாக இயங்குகின்றது என்ற உண்மைக்கு முற்றிலும் எதிர்விதத்தில், இலக்குகள் மற்றும் திறணின்மையின் தரங்கள் குறித்து உத்தியோகபூர்வ சொல்லாடல்கள் எதிர்விதமாக பரப்புரை செய்தன. எவ்வாறிருப்பினும், இது நிதி பற்றாக்குறை என்ற அடியில் அமைந்துள்ள நெருக்கடியைத் தீர்க்க போவதில்லை.

Nuffield அறக்கட்டளையின் மூத்த பகுப்பாராய்ச்சியாளர் Sally Gainsbury கூறுகையில், “இது கிங்ஸ் குறித்த ஒரு செய்தி என்று நான் நினைக்கவில்லை. கிங்ஸ் எதிர்வரவுள்ள மோசமான நிலைமைக்கான முன்அறிகுறியாகும் என்றுதான் நான் நினைக்கிறேன்,” என்றார்.

2011 க்கு பின்னர் இருந்து நிஜமான வரையறைகளில் ஆண்டுக்கு 4 சதவீதம் அளவுக்கு அவற்றின் செலவுகளைக் குறைக்குமாறு மருத்துவமனைகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தன, இது "ஒரு நோயாளிக்காக, 2010 இல் 1000 பவுண்ட்டுகள் செலவிட்டிருந்தால், நிஜமான வரையறைகளில் இந்தாண்டு 750 பவுண்டு செலவிடுவதற்கு சமமாகும்.”