ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Twitter warns users: We’re watching you

டுவிட்டர் பயனர்களை எச்சரிக்கிறது : நாங்கள் உங்களைக் கண்காணிக்கிறோம்

By Andre Damon
22 January 2018

ஒரு வெளிப்படையான அரசியல் ஆத்திரமூட்டலில், சமூக ஊடக தளமான டுவிட்டர் சனிக்கிழமை நூறாயிரக் கணக்கான பயனர்களுக்கு அவர்கள் “ரஷ்ய பிரச்சாரத்தை” பகிர்ந்திருக்கின்றார்கள் அல்லது பின்தொடர்ந்திருக்கின்றனர் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

ஆதாரமின்றி இக்கூற்றுக்களை டுவிட்டர் வைப்பதுடன், அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் சமூக ஊடக அமுலாக்கத்துறையினரிடம் மாட்டிக் கொண்டு தாங்கள் பகிர்ந்து கொண்ட அல்லது கண்ட விஷயம் துல்லியமாக என்னவென்று அதன் பயனர்களுக்குச் சொல்ல மறுக்கிறது. மின்னஞ்சல் பெற்றவர்களுள் செனெட்டின் இரண்டாம் உயர்நிலையிலுள்ள குடியரசுவாதி, ஜோன் கோர்னினும் இருந்தார்.

“2016ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டுவிட்டரில் ரஷ்ய தொடர்புடைய நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதில் எமது அண்மைய வேலையின் ஒரு பகுதியே,“ என டுவிட்டரால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் கூறுகிறது, “ரஷ்ய அரசாங்கம் தொடர்புடைய அமைப்பு எனத்தெரியவரும் இணைய ஆய்வு முகவாண்மையால் முன்னெடுக்கப்படும்  பிரச்சாரத்துடன் உள்ளுறை ரீதியில் தொடர்புடைய கணக்குகளை நாம் அடையாளம் கண்டு தற்காலிக நீக்கம் செய்துள்ளோம்.”

நட்புரீதியான எச்சரிக்கை என்ற வேடத்தில், டுவிட்டர் தொடர்ந்தது, “வெளிப்படைத்தன்மைக்கு எமது அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியான விதத்தில், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் விடுத்தோம் ஏனெனில் நீங்கள் ஒன்றில் இந்தக் கணக்குகளில் ஒன்றைப் பின்பற்றினீர்கள் அல்லது தேர்தல் காலகட்டத்தின்பொழுது திரும்ப டுவீட்டர் செய்தீர்கள் அல்லது விரும்பினீர்கள் என்று நம்புவதற்கு எங்களிடம் காரணம் இருக்கின்றது.”

வேறுவார்த்தைகளில் சொன்னால், டுவிட்டர் தனது பயனர்களை சமூக ஊடகத்தில் எதைப் பார்க்கிறார்கள் மற்றும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று துல்லியமாய் அது அறியும் என்று எச்சரிக்கின்றது. அது குறிப்பதாவது அவர்கள் எதையாவது இடுகையிட்டு அமெரிக்க அரசாங்கத்தில் சிக்கிக் கொண்டால், அவர்கள் விசாரணைக்கு அல்லது வழக்குத் தொடுக்க நேருவர் என்பதாகும்.

டுவிட்டரின் நடவடிக்கையானது, 2016 தேர்தலின் பொழுது கிளிண்டன் பிரச்சாரத்திற்கு பரந்த மக்களின் குரோதத்தைத் தாமே வெளிப்படுத்திய சமூக எதிர்ப்பின் வளர்ச்சி அமெரிக்க சமூகத்தில் “பிளவுகளை விதைப்பதை” நோக்கமாகக் கொண்ட “ரஷ்ய பிரச்சாரத்தின்” விளைவாகும் என்று வாதிடுவதற்கு ஜனநாயகக் கட்சி, நியோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் உளவுத்துறை முகமைகளால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தில் சமீபத்திய அடிவைப்பாகும்.

செனெட்டின் உளவுத்துறை குழுவில் அந்தஸ்தில் உள்ள ஜனநாயகக் கட்சிக்காரர் மார்க் வார்னர் மற்றும் மன்ற உளவுக்குழுவில் அந்தஸ்தில் உள்ள ஜனநாயகக் கட்சிக்காரர் ஆடம் சிஃப் உள்பட சட்டமியற்றுபவர்கள், தாங்கள் “ரஷ்ய பிரச்சாரம்” என்று அழைக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ள கணக்குகள் மற்றும் தனிநபர்களின் பட்டியல்களை பெறுமாறு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கோரியுள்ளனர். தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு உடன்பட்டுள்ளன.

சமூக ஊடக நிறுவனங்கள் இணையத் தணிக்கையை பெரும் அதிகரிப்புடன் முன்னெடுப்பதற்கு மத்தியில் டுவிட்டரின் நடவடிக்கை வருகிறது. கடந்தவாரம் முகநூல், டுவிட்டர் மற்றும் கூகுளின் யூடியூப்பிலிருந்து வந்த பிரதிநிதிகள் செனெட் குழுவின்முன் “தீவிரவாதக்” கருத்துக்களுக்கு எதிராகப் போரிடும் தங்களின் முயற்சிகள் பற்றியதில் சாட்சியமளித்தனர்.

முகநூலில் உலகக் கொள்கை நிர்வாகத் தலைவர் மொனிக்கா பிக்கர்ட் சட்டம் வகுப்பவர்களிடம், விஷயங்களை எடுக்கவும் ஆய்வு செய்யவும் தடுக்கவும் அதன் “பாதுகாப்பு” துறைக்காக 10,000 பேர்களை அமர்த்தியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இருமடங்காகும் என்றும் கூறியுள்ளார். கூகுள் அதன் பங்கிற்கு இந்த ஆண்டு உள்ளடக்கங்களை மதிப்பிடுவோரின் எண்ணிக்கையை 10,000க்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

முகநூலின் மார்க் சுக்கர்பேர்க்கின் ஜனவரி 12 அறிவிப்பைத் தொடர்ந்து டுவிட்டரின் மின்னஞ்சல், பயனர்களின் செய்தி வழங்கலில் காணப்படும் சுதந்திர செய்திகளின் அளவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பயனர்களுக்குச் சத்தமிட்டது.

வெள்ளிக்கிழமை, சுக்கர்பேர்க், பயனர்கள் பார்க்கும் செய்தியின் மொத்த அளவு சிறிதளவு குறையும் அதேவேளை, பயனர்களின் செய்தி வழங்கலில் மிகப்பெரும்பான்மை செய்தி விடயங்கள், “துருவமுனைப்படலை” முன்னிலைப்படுத்துவதற்கு மாறாக, “அதிகாரபூர்வ” மற்றும் ”நம்பிக்கைக்குரிய” செய்தி ஆதாரங்களில் இருந்து இப்பொழுது வரும், என்று தெளிவுபடுத்தினார்.

நடைமுறையில் இது எதனை அர்த்தப்படுத்துகிறது என்பதன் அடையாளமாக, நியூ யோர்க் டைம்ஸ் இன் பங்கு மதிப்பு அதன் இடுகைகள் சுதந்திர ஊடக அமைப்புக்களிடமிருந்து வரும் உள்ளடக்கத்தை இடம்பெயர்த்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், அன்று ஒன்பது சதவீதம் உயர்ந்தது.

இணையத்தில் அரசியல் பேச்சை தணிக்கை இடுவதற்கான வளர்ந்துவரும் உந்துதலானது, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் பெரும் அரசுகளுக்கிடையிலான பிரதான வெடிப்புக்கான இராணுவம் இவற்றாலான  வளர்ந்துவரும் தயாரிப்புக்களுக்கு இடையில் வந்துள்ளது.

பென்டகனால் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட தேசிய பாதாகாப்பு மூலோபாயம், “அரசுகளுக்கு இடையிலான மூலோபாயப் போட்டி” க்கான தயாரிப்பில் “அரசியல் அழிவு நடவடிக்கையை” எதிர்த்துப் போராட அமெரிக்க அரசாங்கத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

“தாய்நாடு இனியும் ஒரு சரணாலயமாக இல்லை என்பது இப்பொழுது மறுக்க முடியாததாகி விட்டது. ரஷ்யா மற்றும் சீனா போன்ற திருத்தல்வாத அரசுகளின் பங்கில், “அரசியல் மற்றும் தகவல் அழிப்பில் “அமெரிக்காதான் இலக்கு” என்று அந்த ஆவணம் கூறுகிறது.

எதேச்சாதிகார ஆட்சி என்று மட்டுமே அழைக்கப்படக்கூடிய ஒன்றை அமைக்கவும், முழு யுத்தத்தைத் தொடுக்கவும் ஆவணம் வாதிடுகிறது. அது எழுதுகிறது: “ஒரு நீண்ட கால மூலோபாயப் போட்டியானது ராஜதந்திரம், தகவல், பொருளாதாரம், நிதி, உளவு, சட்ட அமலாக்கல் மற்றும் இராணுவம் என – தேசிய அரசின் பன்முகக் கூறுகளை இடைவிடாது ஒருங்கிணைத்தல் தேவைப்படுகிறது.”

சமூக ஊடகம் மற்றும் தகவல்தொடர்பில் என்றுமிருந்திரா இறுக்கமான தணிக்கை மற்றும் கண்காணித்தல் ஆகியன இந்த மூலோபாயத்தின் பிரதான உள்ளடக்கமாகும். இதன் நோக்கம் பேச்சுரிமையை சக்திமிக்க வகையில் அகற்றுவதன் மூலம் மில்லியன் கணக்காணவர்களின் மரணத்தைக் கொண்ட  பெரும் மோதலுக்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.

உலக சோசலிச வலைத் தளம் அதன் நேரலை வெப்பினாரான, WSWS தலைவர் டேவிட் நோர்த் மற்றும் பத்திரிகையாளர் கிறிஸ்ட் ஹெட்ஜஸ் பங்கேற்கும் “இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஏற்படுத்தல்” என்பதை நடத்திய அதே வாரத்தில்தான் டுவிட்டர் மின்னஞ்சல் பரவல் இடம்பெற்றது. அதில் இணைய தணிக்கைக்கு சோசலிச போர் எதிர்ப்பு கூட்டை டேவிட் நோர்த் முன்மொழிந்தார்.