ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The “fractured world”: Plutocrats convene in Davos amid war and great-power conflict

“பிளவுபட்ட உலகம்": போர் மற்றும் வல்லரசு மோதல்களுக்கு இடையே செல்வந்த பிரபுகள் டாவோஸில் ஒன்றுகூடுகின்றனர்

Andre Damon
27 January 2018

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இவ்வாரம் ஆயிரக்கணக்கான வணிக செயலதிகாரிகளும், மத்திய வங்கியாளர்கள் மற்றும் உலக தலைவர்களும் உலக பொருளாதார பேரவையில் ஒன்றுகூடினர். 2008 அளவிலான ஒரு நிதியியல் பொறிவின் சாத்தியக்கூறில் இருந்து தொடங்கி ஒரு புதிய உலகப் போர் மற்றும் உலகெங்கிலுமான சமூக கோபத்தின் வளர்ச்சி குறித்த அச்சம் வரையில், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரங்களின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் நிலவிய ஒருவித பீதி உணர்வே அங்கே பொதுவான உணர்வாக இருந்தது.

அதில் கலந்து கொண்ட ஒரு சராசரி பில்லியனர் ஒருவர் கடந்த ஆண்டை விட அண்மித்து 20 சதவீதம் அதிக செல்வம் ஈட்டக்கூடியவராக இருந்தாலும், மேலும் ஒரு சில புதிய வீடுகளும், விமானங்கள், சித்திரங்கள், படகுகள் மற்றும் நகைகளும் வாங்க கூடியவராக இருந்தாலும் கூட, அந்த "டாவோஸ் மனிதர்" பதட்டத்துடனே இருந்தார்.

அனேகமாக அந்த பேரவையின் 47 ஆண்டுகளில் ஒருபோதும் இல்லாதளவில், அமைதியின்மை அதன் நிகழ்வுகளில் பிரதிபலித்தது. “நெகிழ்திறன்மிக்க உந்துசக்தி" (Resilient Dynamism) மற்றும் "உலகை மீள்வடிவமைத்தல்" போன்ற சமீபத்திய ஆண்டுகளில் ஆகக்குறைந்தளவு சாத்தியமாக காணப்பட்ட விடயங்கள், “ஒரு பிளவுபட்ட உலகம்" என்ற சர்ச்சைக்கு இடமற்ற ஒரு கருத்துருவைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.

“பரந்தளவிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூக விளைவுகளுடன் பல முனைகளிலும் புவிசார் மூலோபாய பிளவுகள் மீண்டும் எழுந்துள்ளன" என்பதே யதார்த்தமாக "மாறியிருந்த" நிலையில், "தாராளவாத ஜனநாயக அமைப்புகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட, நாடுகளுக்கு இடையே பெரியளவில் உள்ளார்ந்த பொருளாதார சார்புத்தன்மை (interdependence) இந்த புதிய நூற்றாண்டில் சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் உறுதிப்படுத்தும்,” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நூற்றாண்டின் திருப்பத்தில் ஊக்குவிக்கப்பட்ட கற்பனாவாத கண்ணோட்டத்துடன், இந்நிகழ்வினது உத்தியோகபூர்வ தொகுப்புரை முரண்படுகிறது.

இத்தகைய பிளவுகளில் மிகவும் அபாயகரமாக இருப்பது, உலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையே நிகழக்கூடிய ஒரு போர் அச்சுறுத்தலாகும். அந்த உச்சிமாநாடு முடிவடைந்த போது, இந்த யதார்த்தத்தை, Economist பத்திரிகையின் இணைய பதிப்பில், வியாழனன்று, “அடுத்த போர்: வல்லரசு மோதலின் அதிகரித்து வரும் அபாயம்" என்ற ஒரு தலைப்பு செய்தியாக நினைவிற்கு கொண்டு வந்தது.

அக்கட்டுரையின் அறிமுக பத்திகள் ஒரு துயரமான சித்திரத்தைச் சித்தரிக்கின்றன: “கடந்த 25 ஆண்டு கால போர்களில் நிறைய உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூட, உள்நாட்டு மற்றும் மதரீதியிலான சச்சரவுகள் சிரியா, மத்திய ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சீரழித்துள்ள நிலையிலும், உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு பேரழிவுகரமான மோதல் ஏறத்தாழ கற்பனை செய்யவியலாததாக இருந்துள்ளது.”

அப்பத்திரிக்கையின் ஆசிரியர்கள் அறிவிக்கின்றனர், “இனி அவ்வாறு கிடையாது.” “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் அனுபவித்துள்ள அசாதாரண இராணுவ மேலாதிக்கம்" இல்லாதொழிக்கப்பட்டிருப்பதற்கு இடையே, “இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத" போரின் "அளவும் தீவிரமும் மீண்டுமொருமுறை சாத்தியமானதுபோல் தென்படுகின்றன. உலகமோ அதற்கு தயாராக இல்லை.”

ஜனவரி 19 இல் பிரசுரிக்கப்பட்ட பென்கடனின் 2018 தேசிய இராணுவ மூலோபாயத்தை Economist பத்திரிகை சுட்டிக்காட்டியது, “பயங்கரவாதம் அல்ல, நாடுகளுக்கு இடையிலான போட்டியே, இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான அக்கறையில் உள்ளது,” என்று அறிவித்த அந்த மூலோபாயம், மத்திய தூர அணுஆயுதப்படைகள் (Intermediate-Range Nuclear Forces - INF) மீதான உடன்படிக்கையை மீறிவிடும் அளவிற்கு, அமெரிக்காவின் அணுஆயுதப்படைகளது ஓர் ஆக்ரோஷமான விரிவாக்கத்திற்காக வாதிட்டது.

அந்த ஆவணம் பிரசுரிக்கப்பட்டு அடுத்த ஒரு வாரத்தில், "வல்லரசு" மோதலே இப்போது திட்டநிரலில் உள்ளது என்ற அதன் மத்திய சேதி, தொடர்ச்சியான அசாதாரண சம்பவங்களால் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாயன்று, பிரிட்டிஷ் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் சர் நிக் கார்டர், தற்போதைய உலகளாவிய நிலைமை "1914 உடன் சமாந்தரங்களைக்" கொண்டிருப்பதாக அறிவித்துடன், “நமது தலைமுறை, பனிப்போர் முடிந்ததற்குப் பிந்தைய போர்களை விருப்பத்தெரிவாகத்தான் பயன்படுத்தி உள்ளது, ஆனால் ரஷ்யா உடனான மோதல் நமக்கு ஒரு விருப்பத்தெரிவாக இல்லாமல் போகலாம்,” என்று அறிவித்தார்.

செவ்வாயன்றே, அமெரிக்க சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோ வட கொரியா மீது ஒரு முன்கூட்டிய தாக்குதலின் சாத்தியக்கூறு குறித்து பேசி இருந்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க கப்பல்படைப் பிரிவின் தலைவர் ஜெனரல் ரோபேர்ட் நெல்லர், அதுபோன்றவொரு போர் "மிகவும், மிகவும் இயக்கத்துடன், ஸ்தூலமாக, வன்முறையான சண்டையாக இருக்கும்,” என்று அறிவித்து, அந்த வறிய நாட்டின் மீது தரைப்படை படையெடுப்பின் சாத்தியக்கூறு குறித்து பகிரங்கமாக விவாதித்தார்.

அமெரிக்கா அதன் மிரட்டல்களுக்குப் பக்கபலமாக, இம்மாதம் குவாமிற்கு அணுஆயுதங்கள் ஏந்தும் தகைமையிலான B-2 குண்டுவீசிகளை அனுப்பி, வட கொரியாவுக்கு எதிராக கண்டறியவியலா அதிவேக போர்விமானத்தின் அணுஆயுத தாக்குதல்களை சாத்தியமான எல்லைக்குள் கொண்டு வந்தது. வட கொரியா உடனான எந்தவொரு போரும் சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளீர்த்து விரைவிலேயே விரிவடையக் கூடியதாகும்.

அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி நடத்திய பரந்த தாக்குதலின் பின்புலத்தில் டாவோஸ் உச்சி மாநாடு நடந்திருந்தது, இதை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அப்பட்டமாக குறிப்பிடுவதைப் போல, “இரண்டு நேட்டோ கூட்டாளிகளான அமெரிக்க மற்றும் துருக்கிய சிப்பாய்கள், விரைவிலேயே மோதக் கூடிய" அபாயத்தை அதிகரிக்கிறது. சிரியாவில் விரிவடைந்து வரும் போரில், அமெரிக்காவும் துருக்கியும் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை, மாறாக ஈரானும் ரஷ்யாவும் சம்பந்தப்பட்டுள்ளன. அமெரிக்க ஆதரவிலான போராளிகள் குழுக்களது தளங்கள் மீது குண்டுவீச பயன்படுத்தப்பட்டு வரும் டாங்கிகள் ஜேர்மனியால் அனுப்பப்பட்டவை என்ற உண்மையும் இந்த பதட்டங்களுடன் சேர்ந்துள்ளது, ஜேர்மனி அட்லாண்டிக்கிற்கு அப்பால் உள்ள அதன் நேட்டோ கூட்டாளியிடம் இருந்து அதிகரித்தளவில் விலகிச் சென்றுள்ளது.

உலகளாவிய பதட்டங்களைத் தூண்டுவதில் அமெரிக்கா மிகவும் ஆக்ரோஷமான பாத்திரம் வகித்துள்ள போதினும், அமெரிக்க போர்-தயாரிப்புக்கு தாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை உலகத் தலைவர்கள் டாவோஸில் தெளிவுபடுத்தினர். அந்த பேரவையில் ஓர் உரை வழங்கிய ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், “வெளியுறவு கொள்கைகளில் ஐரோப்பா கண்டம் மிகவும் செயலூக்கத்துடன் இருந்ததில்லை, நாங்கள் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்திருந்துள்ளோம், இப்போது அது [அமெரிக்கா] அதன் மீதே கவனம் செலுத்தி வருவதால், நாங்கள் அதிக பொறுப்பேற்க வேண்டி உள்ளது; எங்கள் தலைவிதியை நாங்கள் எங்களின் கரங்களில் ஏற்க வேண்டியுள்ளது என்று கூற நிர்பந்திக்கப்பட்டு விட்டோம்,” என்று அறிவித்தார். அதாவது, ஜேர்மனியும் ஐரோப்பாவும் மீண்டும் இராணுவமயப்பட வேண்டும்.

டாவோஸ் உயரடுக்கை அலைக்கழித்த பல அச்சுறுத்தல்களில் போர் அச்சுறுத்தலானது ஒன்றாக மட்டுமே இருந்தது. பங்குச்சந்தைகள் உருகுவிடும் விளிம்பில் இருப்பதாக கடந்த வாரம் பிரவாகமாக எச்சரிக்கைகள் வந்தன. OECD மீளாய்வு ஆணையத்தின் தலைவர் வில்லியம் வைய்ட் இவ்வாரம் அறிவித்தார்: “இப்போது சந்தை குறியீடுகள் அனைத்தும், லெஹ்மன் நெருக்கடிக்கு முன்னர் என்ன தெரிந்ததோ அதேபோல தெரிகிறது.” மாநாட்டு குழுக்களுக்கு இடையிலான முக்கிய விவாதப்பொருளில், “2018, அடுத்த நிதியியல் நெருக்கடியின் ஆண்டாக இருக்குமா?” என்ற ஒரு தலைப்பும் இருந்தது.

இதைவிட, டாலர் மதிப்பிலான சர்வதேச நாணய அமைப்புமுறை உடைவதற்கான சாத்தியக்கூறை உள்ளார்ந்து கொண்டுள்ள, வர்த்தகப் போர் அச்சுறுத்தல் மிகவும் வெளிப்படையாக இருந்தது. ட்ரம்ப் (அவரைப் பொறுத்த வரையில்) ஒப்பீட்டளவில் அவர் பணிவான முடிவுரை வழங்கி இருந்தாலும், முன்னதாக அவர் சூரிய-ஒளி தகடுகள் (solar panels) மற்றும் துணிதுவைக்கும் எந்திரங்களது இறக்குமதி மீது 50 சதவீத வரி விதித்து, டாவோஸிற்கு பெரும் சலசலப்புடனே சென்றார்.

கருவூலத்துறை செயலர் ஸ்டீவன் மினுசின், “ஒரு மதிப்புகுறைந்த டாலர் இருப்பதே நல்லது,” என்று அறிவித்து, இவ்வாரம் கணிசமான அளவிற்கு டாலர்களின் விற்பனையைத் தூண்டினார். இதனால் அந்த பச்சைக் காகிதம் (டாலர்) இந்தாண்டில் இல்லாதளவிற்கு 10 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததுடன், அதற்கு போட்டியாக ஒரு பதிலடி வர்த்தக போர் நடவடிக்கையாக யூரோவின் மதிப்பிறக்க எச்சரிக்கைகளைத் தூண்டியது.

இவ்வாறிருக்கையிலும், இத்தகைய அனைத்து அபாயங்களுக்கு இடையிலும், அக்குழுவை நெறிப்படுத்திய ஹீதர் லாங் அறிவிக்கையில், “சமத்துவமின்மையே" “டாவோஸின் முக்கிய தலைப்பும்,” “உலகின் முக்கிய தலைப்பும்" ஆகும் என்றார். உலக மக்கள்தொகையில் வெறும் ஒரு சதவீதத்தினர் கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த சமூக செல்வ வளத்தில் 82 சதவீதத்தைத் திரட்டி உள்ளதாக ஆக்ஸ்ஃபாமின் புதிய அறிக்கை ஒன்று எடுத்துக்காட்டியது.

டாவோஸில் கூடிய தலைமை நிறைவேற்று அதிகாரிகளுக்கான அவரது வருடாந்தர கடிதத்தில் Bloackrock இன் தலைமை செயலதிகாரி லாரி ஃபின்க் எச்சரிக்கையில், “மூலதனம் வைத்திருப்பவர்கள் மிகப் பெருமளவில் ஆதாயங்களை அறுவடை செய்துள்ள" போதும் கூட, “குறைவூதியங்களின் அதிகரிப்பு" மற்றும் "போதிய ஓய்வூகால முறைகள் இல்லாமை" ஆகியவற்றிற்கு இடையே, “… எதிர்காலத்தைக் குறித்து மக்களிடையே விரக்தியும் பீதியும் ஒரே நேரத்தில் புதிய மட்டங்களை எட்டியதாக,” தெரிவித்தார்.

உலகை பீடித்து வரும் பல்வேறு புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சமூக நெருக்கடிகளைக் கணக்கெடுத்த பின்னர், அம்மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி தொகுப்புரை குறிப்பிடுகையில், ஒரு "பகிர்ந்து கொள்ளத்தக்க எதிர்காலத்தை" உருவாக்குவதற்காக, “இந்தாண்டின் தொடக்கத்தில் நாம் ஒன்றுகூடியிருப்பதன் மூலமாக, ஒன்றிணைந்த-வடிவமைப்பு, ஒன்றிணைந்த-உருவாக்கம் மற்றும் கூட்டுறவு எனும் இந்த ஈடிணையற்ற உலகளாவிய முயற்சியில் இணைவதன் மூலமாக எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும்,” என்று நம்பிக்கையோடு அறிவித்தது.

அங்கே கூடியிருந்த பில்லியனர்களில் ஒருவருமே இந்த முட்டாள்தனமான நல்லுணர்வை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. டாவோஸில் இருந்து அவர்கள் தங்களின் தனிப்பட்ட விமானங்களில் ஏறியதும், அவர்களின் அன்றாட பணிகளான போர்களுக்குத் திட்டமிடுவதையும், தங்களைச் செழிப்பாக்கிக் கொள்வதற்கு திட்ட வரையறை செய்வதிலும், மற்றும் சமூக அதிருப்தியை நசுக்கி ஒடுக்குவதற்கான வழிகளைச் சிந்திப்பதையும் தொடர்வார்கள். அனைத்திற்கும் மேலாக உலகம் நெருக்கடியில் இருக்கிறது என்றால், தொழிலாள வர்க்கம் விரைவிலேயே அவர்களைத்தான் அதற்கு பொறுப்பாக்கும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் சிலவேளை இருக்கலாம்.