ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

නිර්මාල් රංජිත් දේවසිරි ධනපති පාලනයේ ආරක්ෂාව සඳහා ජවිපෙට ඡන්ද ඇහිඳියි

இலங்கை: கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி முதலாளித்துவ ஆட்சியின் பாதுகாப்புக்காக ஜே.வி.பி.க்கு வாக்கு கேட்கின்றார்

By Kapila Fernando 
29 December 2017

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் ரடிகல்வாதியுமான கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தனது முகநூல் மூலமாகவும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுவதன் முலமும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை முதலாளித்துவ ஸ்தாபனத்தின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) ஆதரவு சேர்க்கும் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

2015 ஜனவரியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது வளர்ச்சியடைந்த வெகுஜன எதிர்ப்பைச் சுரண்டிக் கொண்ட, ஜே.வி.பி. மற்றும் ஏனைய ஒரு தொகை மத்தியதர வர்க்க போலி-இடது அமைப்புகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபிப்பார், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முடிவுகட்டுவார் என்ற வாக்குறுதியைக் கொடுத்தே அவரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக ஒத்துழைத்தன. தேவசிறி அந்தக் கும்பலின் பிரதானியாவார். ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளேயே, ஜனாதிபதி சிறேசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் நல்லாட்சி என்றழைக்கப்படும் கூட்டரசாங்கம் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் முன் அம்பலத்துக்கு வந்துள்ளது. தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை சீரழிப்பது, கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட நலன்புரிச் சேவைகளை வெட்டுவது, மக்கள் நிதியைக் கொள்ளையடிப்பது, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் இராணூவ அதிகாரத்தை பராமரிப்பது மற்றும் விசேடமாக தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிராக பொலிஸ்-இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதிலும், இது இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இரண்டாம் பட்சமானது அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

தேவசிறி இப்போது ஜே.வி.பி.யை தூக்கிப்பிடித்துக்கொண்டு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்னொரு பொறியை அமைப்பதற்கு முன்வந்துள்ளார். போலி நல்லாட்சி சம்பந்தமாக மக்கள் முன் வைத்த கட்டுக் கதைகள் சம்பந்தமாக எந்தவொரு பொறுப்பும் அற்ற தேவசிறி, இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக மேலும் வதந்திகளைப் பின்னுவதற்கு வெட்கமின்றி செயற்படுகின்றார்.

“மாற்றீட்டும் மக்கள் முன்னணியும்” என்ற தலைப்பில் இந்த டிசம்பர் 17 ராவய பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதிய தேவசிறி, பின்வருமாறு கூறுகின்றார்: “ஜே.வி.பி. என்பது இனிமேலும் 1990க்கு முன்னர் இருந்த இளைஞர் அரசியல் கட்சி அல்ல, அதில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நீண்ட கதை ஒன்றை மிகவும் சுருக்கமாக சொல்வதென்றால், ஜே.வி.பி. என்பது ஒரு விதத்தில், தற்போதைய அரசியல் பற்றி பொது மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியாகும்.”

தேவசிறி ஜே.வி.பி.க்காக வெறுமனே வாக்குளை சேகரிப்பதில் மட்டுமன்றி, இலங்கையில் பிரதான இரு முதலாளித்துவக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) தொழலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் முன்னெப்போதும் இல்லாதளவு நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலைமையில், ஜே.வி.பி.யை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் முன்னணி கருவியாக தூக்கி நிறுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார்.

“இலங்கையின் அரசியல், நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்ற அரசியல் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவதற்கு போதுமானதல்ல” என தேவசிறி ராவய பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார். உலக முதலாளித்துவ நெருக்கடியின் பாகமாக அபிவிருத்தியடையும் இலங்கையின் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் நெருக்கடியும், ஜே.வி.பி., மத்தியதர வர்க்க போலி-இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்க சுயாதீன அரசியல் வேலைத் திட்டத்திற்கு வேலை கட்டி, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதற்கு தோள்கொடுத்து வந்த சரித்திரத்தை மூடி மறைப்பதற்காக தேவசிறி பல புனைகதைகளை எழுதுகின்றார்.

“இலங்கையின் போருக்குப் பிந்திய காலனித்துவ காலகட்டம் பொறிந்து போனதில் ஏற்பட்ட அரசியல் சமநிலையின்மையை மறைக்கும் போர்வை இப்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது” என அவர் குறிப்பிடுகின்றார். “போர்வை தீவிரமடைந்துள்ளது” என்பதன் அர்த்தம் என்ன? போர்வையின் தடிப்பம் அதிகரிப்பதா அல்லது போர்வையின் நீளம் அகலம் அதிகரிப்பதா? முதலாளித்துவ ஆட்சியின் சமநிலை வீழ்ச்சியடைந்து, வயிறு வளர்க்கும் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் பரவியிருக்கும் பீதியையே கலாநிதி இந்த சிக்கலின் மூலம் காட்டுகின்றார்.

1983ன் பின்னர் வடக்கில் போரை எதிர்கொள்வதற்காக தெற்கு தயாரானதன் மூலம், போருக்குப் பிந்திய காலனித்துவ சமநிலையின்மை தற்காலிகமாக தணிக்கப்பட்டது” எனக் கூறும் தேவசிறி, “2009ல் போர் தீவிரமடைந்த போது அது மீண்டும் தலைதூக்கியது” எனக் கூறுகின்றார். இராஜபக்ஷவை தோற்கடிக்க கட்டியெழுப்பப்பட்ட அமைப்பு இப்போது சீரழிந்து போயுள்ளது என ஏற்றுக்கொள்ளும் தேவசிறி, தட்டுத்தடுமாறி வெளியிடும் தீர்வு, “புதிய அரசியல் சமநிலைக்காக” “ஜே.வி.பி.யின் பக்கம் கூடுமானவரையில் வாக்குகளைத் திருப்பி விடுவதே” ஆகும்.

தேவசிறி மூடி மறைக்கும் “போருக்குப் பிந்திய காலனித்துவ வரலாற்றின்” சுருக்கமான சாராம்சம் இதுவே ஆகும். 1948 சுதந்திரம் என்றழைக்கப்படுவது கிடைத்த பின்னர், அப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்த பொருளாதார பலம் மற்றும் ஸ்ராலினிச சோவியத் ஒன்றியத்தின் பக்கம் சாய்ந்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை (1953 ஹர்த்தால் போன்ற) குருதியில் நசுக்கி, மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி சேவைகளை முன்னெடுப்பதன் மூலமே முதலாளித்துவ ஆட்சி பாதுகாக்கப்பட்டது. தொடர்ச்சியாக இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரம், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் சவாலுக்கு உட்பட்டது. இதை கையாள்வதற்காக முதலாளித்துவ ஆட்சியாளர்கள் சம சமாஜ மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களை பயன்படுத்திக்கொண்டமை, 1964 சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்குள் அந்த தலைவர்களை இணைத்துக்கொள்வதில் உச்ச கட்டத்தை அடைந்தது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கு சம சமாஜ மற்றும் ஸ்ராலினிசத் தலைவர்கள் குழி பறித்த பின்னர், தொழிலாள வர்க்கத்தில் இருந்து பெறக்கூடிய அரசியல் தலைமைத்துவம் சம்பந்தமாக அவநம்பிக்கைக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் மத்தியில் “சக்தி ஒன்றை” கட்டியெழுப்புவதற்கு ஜே.வி.பி.யே முன்வந்தது. அப்போது சர்வதேச அரசியலில் பிரசித்தி பெற்றிருந்த மாவோவாதம் மற்றும் சேகுவேராவதத்தின் சாயத்தைப் பூசிக்கொண்ட ஜே.வி.பி., ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள வர்க்கம் சம்பந்தமாகவும் சிறுபான்மை தமிழ் மக்கள் சம்பந்தமாகவும் எந்தக் குறைவும் என்றி தனது பகைமையை வெளிப்படுத்தி வந்தது. 1977ன் பின்னரான முதலாளித்துவ ஐ.தே.க. அரசாங்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வெடித்த 1980 ஜூலை வேலை நிறுத்தத்துக்கு பகிரங்கமாக கருங்காலி வேலை செய்த ஜே.வி.பி., 1983ன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட தமிழர் படுகொலை போரின் முன்னணி ஊதுகுழலாக செயற்பட்டது. 1987-90 காலகட்டத்தில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக “தாயகம் இல்லையேல் சாவு” மற்றும் “முதலில் தாயகம் இரண்டாவதே தொழில்” போன்ற பிற்போக்கு சுலோகங்களின் கீழ் முன்னெடுத்த சிங்களப் பேரினவாத பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் பாசிச கைத்தேங்காயாக ஆனது. தமிழர்களுக்கு எதிரான போரை உக்கிரமாக்குவதற்காகவும் தெற்கில் வளர்ச்சியடைந்து வந்த தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் இலங்கை முதலாளித்துவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்திய இராணுவத்தை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்ப்பதன் பேரில், அப்போதைய பிரதமராக இருந்து பின்னர் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் அரவணைப்புக்குள் ஜே.வி.பி. நுழைந்துகொண்டது. இந்த உறவு 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழிப்பதற்காக முதலாளித்துவ ஆட்சிக்கு கதவுகளைத் திறந்துவிட்ட பின்னரே முடிவுக்கு வந்தது.

தேவறிசிறி கூறுவது போல், “ஜே.வி.பி. என்பது இனிமேலும் 1990க்கு முன்னர் இருந்த இளைஞர் அரசியல் கட்சி அல்ல” என்பது ஜே.வி.பி.க்கு பொருத்தமான போர்வை அல்ல. முதலாளித்துவ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஐ.தே.க.யின் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் 2001ல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்த போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்தி இராஜபக்ஷவுடன் மட்டுமன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஜே.வி.பி. கூட்டுச் சேர்ந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்தை ஸ்தாபித்துக்கொள்வதற்காக மத்திய கிழக்கு பகுதியில் படையெடுத்து, 2001ல் “பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள யுத்தம்” என்றழைக்கப்பட்டதை முன்னெடுத்தது. 2004ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜோர்ஜ். டபிள்யூ புஷ்ஷிற்கு ஜே.வி.பி. வாழ்த்து தெரிவித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட்டது. அப்போது தொடக்கம் 2005ல் இருந்து மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் உக்கிமாக்கப்பட்ட படுகொலை யுத்தத்தின் பிரதான ஊதுகுழலாக ஜே.வி.பி. செயற்பட்டது.

இந்த காலகட்டத்தில் தேவறிசியின் வரலாற்றப் பற்றி கூறினால், அவர் பல்கலைக்கழக விரிவுரையாளராக ஆனதன் பின்னர், இலங்கையில் பிற்போக்கு பின்நவீனத்துவ போக்கைத் தூக்கிப் பிடிப்பதில் பெரும் பாத்திரம் வகித்தார். அதற்காக “எக்ஸ் குழு” என்ற ஒன்றை அமைத்துக்கொண்டு சோசலிசத்துக்கும் மார்க்சிசத்துக்கும் எதிராக பல்கலைக்கழக இளைஞர் பகுதியினரை குழப்பத்துக்கு உள்ளாக்கி வந்த தேவசிறி, பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்துக்கு தலைமைவகித்து, கல்விக்கான செலவை நூற்றுக்கு 6 வீதம் வரை அதிகரிக்குமாறு கோரி இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் மோசடியில் ஈடுபட்டார். சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பல்கலைக்கழக ஆசிரியர்களது உரிமைகள் போலவே இலவசக் கல்வியின் பாதுகாப்பு உறுதிப்படுத்த முடியும் என வலியுறுத்திய சோசலிச சமத்துவக் கடசிக்கு (சோ.ச.க.) எதிராக, தேவசிறி, “சோசலிசம் காலத்தை கடத்தும் வேலைத் திட்டம்” என சீற்றத்துடன் பாய்ந்தார். மஹிந்த இராஜபக்ஷவின் கண்கட்டி வித்தைக்கு அடிபணிந்து பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலேயே தேவசிறியின் அழுத்தம் கொடுக்கும் போலி போராட்டம் முடிவுக்கு வந்தது.

2015ல் இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைத் தகர்த்து, இலங்கையை சீனாவுக்கு எதிரான உலகப் போர் மூலோபாயத்தின் இயங்கு மையத்திற்குள் இணைத்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் ஒபாமா ஆட்சியும் இந்நியாவின் ஆளும் வர்க்கமும் முன்னெடுத்த ஆட்சி மாற்ற நடவடிக்கையின் போதே ஜே.வி.பி.யும் தேவசிறியும் நெருக்கமாக செயற்பட இறங்கினர்.

உலக முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பு முறையின் நெருக்கடியின் முதிர்ந்த வெளிப்பாடு, இப்போது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுக்கும் கண்முன் தெரியாத போர் முனைப்புகள் மற்றும் பொருளாதார பாதுகாப்புவாதத்தின் மூலம் காட்சிக்கு வந்துள்ளது. உலகப் போரை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் போலவே, அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இந்திய துணைக் கண்டத்தின் இந்திய மோடி அரசாங்கத்தைப் போல் இலங்கையின் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் புரட்சிகர நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் கிராமப்புற விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரையும் இளைஞர்களையும் அணிதிரட்டுக்கொண்டு, முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோசலிசத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிக்காட்டுகின்றது. முதலாளித்துவ அமைப்பு முறையுடன் நெருக்கமாக ஒட்டிக்கொண்டுள்ள தேவசிறி போன்ற முதலாளித்துவ கல்வியாளர்களைப் போலவே மத்தியதர வர்க்க போலி-இடது கட்சிகளும், இந்த முற்போக்கு வேலைத் திட்டம் சம்பந்தமாக அவர்களது கடும் எதிர்ப்பினாலேயே ஜே.வி.பி.யை கௌரவிப்பதற்கு முயற்சிக்கின்றன.

ஜே.வி.பி., குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்பு என்பதில் இருந்து முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக மாற்றமடைந்திருப்பதானது உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பூகோளமயமாக்கல் போக்கினால் சகல தேசியவாத அமைப்புகள் மற்றும் வேலைத் திட்டங்களுக்குக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த நிலைமயின் கீழ், ஸ்ராலினிஸ்ட்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ நலன்புரி திட்டங்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் சகல ரடிகல்வாத இயக்கங்களினதும் கால்களுக்கு அடியில் குழி பறிக்கப்பட்டுள்ளது. தேவசிறி, இந்த அரசியல் போக்கை மறுபக்கம் திருப்பி விடுவதற்கே ஜே.வி.பி.யின் மீது சாய்துகொண்டு வரிந்து கட்டிக்கொள்கின்றார்.