ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

160,000 industrial workers strike in Germany

ஜேர்மனியில் 160,000 தொழில்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

By Peter Schwarz
11 January 2018

வாகனத்துறை, எஃகு மற்றும் மின்னணுவியல் தொழில்துறையின் சுமார் 160,000 பணியாளர்கள் IG Metall சங்கம் அழைப்பு விடுத்த அடையாள வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சங்கம் தற்போது ஜேர்மனியின் மிகப் பெரிய தொழில்துறையில் 3.9 மில்லியன் தொழிலாளர்களுக்காக ஒரு புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நடவடிக்கைகளில் இறங்கி உள்ளவர்களில் வோல்ஸ்வேகன், போர்ஷே (Porsche), டைம்லெர் (Daimler) மற்றும் ஏனைய வாகன உற்பத்தி நிறுவனங்கள், வாகன உதிரிப்பாக உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எஃகுத்துறையின் மிகப் பெரும் நிறுவனமான ThyssenKrupp போன்ற உலோக தொழில்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களும் உள்ளடங்குவர்.


பேர்லினின் டைம்லெரில் ஒரு பேரணி

எதிர்வரவிருக்கும் நாட்களில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் விரிவாக்கப்படுமென இச்சங்கம் கூறுகிறது, உலோகத்துறை தொழில் நிறுவனங்களின் முதலாளிமார் சம்மேளனம் ஜனவரி இறுதிக்குள் விட்டுக்கொடுப்புகளை வழங்காவிடில் ஒரு-நாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் அல்லது காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுமென IG Metall தலைவர் ஜோர்க் ஹோஃப்மான் (Jörg Hofman) அச்சுறுத்தி உள்ளார். 2003 இல் கிழக்கு ஜேர்மனிக்குள் வாரத்திற்கு 35 மணி நேர வேலையை விரிவாக்குவதற்கான ஒரு வெற்றி அடையாத நான்கு வார கால வேலைநிறுத்தத்தைக் கைவிட்டதற்குப் பின்னர், இதுவே IG Metall சங்கம் அழைப்பு விடுத்திருக்கும் முதலாவது முழு அளவிலான வேலைநிறுத்தமாகும்.

சமூக சமத்துவமின்மை மீதும், சீமென்ஸ் மற்றும் பிற இலாபகரமான பெருநிறுவனங்கள் நடத்தும் வேலை-வெட்டு அலையின் மீதும் பரந்தளவில் கோபம் நிலவுகின்ற நிலையில், அங்கே சம்பளங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளை கணிசமாக உயர்த்த கோரி போராடுவதில் தொழிலாளர்களிடையே மன உறுதி அதிகரித்து வருகிறது. ஆனால் IG Metall சங்கம் பேரம்பேசல்களை சாத்தியமான அளவுக்கு விரைவாக முடிக்க முயன்று வருகிறது. உலோக மற்றும் மின்னணுவியல் துறை ஜேர்மன் ஏற்றுமதிகளுக்கான முக்கிய துறைகளாகும், IG Metall சங்கம் நிறுவனங்களுடனான அதன் நீண்டகால பெருநிறுவன பங்காண்மையை குழப்பும் எதையும் தடுப்பதற்குத் தீர்மானகரமாக உள்ளது.

இதற்கும் கூடுதலாக, அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) கட்சிகளுக்கும் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் (SPD) இடையே ஒரு புதிய பாரிய-கூட்டணி அரசாங்கம் உருவாவதைத் தொழிற்சங்கங்கள் ஆதரிக்கின்றன. எந்தவொரு மிகப்பெரும் போராட்டங்களும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் மீள்ஆயுதமயமாக்கல் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கும் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக நடந்து வரும் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆபத்திற்குட்படுத்தலாம் என்பதால், IG Metall நிர்வாகிகள் அதுபோன்ற எந்தவொரு போராட்டமும் வெடிப்பதைத் தடுக்க விரும்புகின்றன.

ஒரு பாரிய கூட்டணியானது "ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல முன்னோக்கை" வழங்கும் என்று ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB) தலைவர் ரைய்னர் ஹோஃப்மான், கடந்த வாரயிறுதியில் ஒரு புதிய மகா கூட்டணிக்காக வெளிப்படையாக அழைப்புவிடுத்தார்.

உலோக மற்றும் மின்னணு தொழில்துறையில் சாதனையளவில் அதிக இலாபம் எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு IG Metall தலைவர் ஹோஃப்மான் கூறுகையில், முதலாளிமார்களின் அமைப்பு விரைவாக ஓர் உடன்பாட்டிற்கு வருமென அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். “சில வேளைகளில் சிறிய ஆனால் பலமான போராட்டம் இருப்பதே இரண்டு தரப்புகளுக்கும் நல்லது,” என்றார். “உற்பத்தி நிறுத்தங்களை முதலாளிமார்கள் சமாளித்துக்கொள்ளகூடியதாக இருப்பதை உறுதிப்படுத்தி வைப்பதினூடாக, நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அடைய விரும்புகிறோம்,” என்பதையும் ஹோஃப்மன் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருப்பினும் தொழிற்சங்க எந்திரத்தின் தந்திரங்களுக்கும், அதிருப்தியுடன் கோபம் கொண்டு போராட தயாராக உள்ள மில்லியன் கணக்கான தொழில்துறை தொழிலாளர்களின் விருப்பங்களுக்கும் இடையே அங்கே மிகப் பெரும் இடைவெளி உள்ளது.


ஃபோர்ட் Saarlouis இல் ஓர் எச்சரிப்பு வேலைநிறுத்தம்

இலாபங்களும், மேலாளர்களின் சம்பளங்களும் மற்றும் பெரும் செல்வந்தர்களின் செல்வ வளமும் எந்தளவுக்கு உயர்ந்துள்ளன என்பதையும், அதேவேளையில் தங்களின் வருவாய் எந்தளவுக்கு தேக்கமடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கண்டுள்ளனர். உத்தியோகபூர்வ பணவீக்க விகிதத்தில் அரிதாகவே கவனத்தில் கொள்ளப்படும், அதிகரித்து வரும் வாடகைகள் மற்றும் மருத்துவ கவனிப்பு செலவுகள், பலரின் உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தலாக உள்ளது.

உலோக மற்றும் மின்னணுத் துறையில் பங்குதாரர்களின் பங்காதாய பண வரவுகள் 2014 இல் ஒரு பங்கிற்கு 11 சதவீத அளவிற்கும், 2015 இல் 9 சதவீதமாகவும் மற்றும் 2016 இல் 12 சதவீதமாகவும் உயர்ந்தன, அதேவேளையில் சம்பளங்களோ பெயரளவிற்கு ஆண்டுக்கு 2 மற்றும் 3 சதவீதத்திற்கு இடையே உயர்ந்தன, முக்கியமாக இதன் விளைவாக நிஜமான சம்பளம் உறைந்து போனது. 2015 இல் வரிக்கு முந்தைய இலாபமாக இந்த தொழில்துறை 43.5 பில்லியன் யூரோ (52 பில்லியன் டாலர்) ஈட்டியது, நிறுவனங்கள் 10.8 பில்லியன் யூரோ (12.9 பில்லியன் அமெரிக்க டாலர்) அல்லது 24.8 சதவீதத்தைப் பங்குதாரர்களுக்குச் செலுத்தின. 2016 இல், இந்த தொகை 28 சதவீதமாக உயர்ந்தது.

வாரத்திற்கு 35 மணி நேர வேலை குறித்து பேசப்படும் பெரும் வீண்பெருமைகளுக்கு இடையே, உலோகத்துறையின் மொத்த தொழிலாளர்களில் ஏறக்குறைய 20 சதவீதத்தினர் ஏற்கனவே இதை விட அதிக நேரம் உழைக்கின்றனர். இத்துறையில் உள்ள 680,000 தொழிலாளர்களைக் குறித்த தொழிற்சங்கங்களின் சொந்த புள்ளிவிபரங்களின்படி, 57.3 சதவீத தொழிலாளர்கள் மேலதிகநேர வேலை செய்கின்றனர், ஏறத்தாழ பாதி பேர் சனிக்கிழமைகளிலும், ஒரு கால்வாசி பேர் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் மூன்றில் ஒரு பங்கினர் தனித்தனி ஷிப்டுகளிலும் உழைக்கின்றனர். இதற்கும் கூடுதலாக, இந்த ஆலைகளிலும் மற்றும் உற்பத்தி பிரிவுகளிலும் நூறாயிரக் கணக்கான தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்காக கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அங்கே சம்பளங்கள் ஜேர்மனியில் வழங்கப்படுவதில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பத்தில் ஒரு பங்கு என்ற வரம்பில் உள்ளன.

மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய வாகனத்துறை தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான எந்தவொரு போராட்டத்திற்கும் விரோதமாக உள்ள IG Metall, ஜேர்மன் தொழிலாளர்களின் சம்பளங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளுக்குக் குழிபறிக்கும் விதத்தில் உற்பத்தியை கிழக்கில் விரிவாக்குவதற்கு அச்சுறுத்தும் தொழில் வழங்குனர்களுடன் இணைந்துள்ளது.

இத்தகைய நிலைமைகளுக்கு தொழிற்சங்கங்களும் SPD உம் தலையாய பொறுப்பாகின்றன. 2003 இல் SPD-தலைமையிலான கடைசி கூட்டாட்சி அரசாங்கம் நிறைவேற்றிய ஹார்ட்ஸ் சட்டங்கள், தற்காலிக வேலை மற்றும் குறைவூதிய வேலைகளைப் பெரிதும் விரிவாக்குவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. ஆலைகளில் இந்த குறைப்பு நடவடிக்கைகளை வரைவதில் IG Metall மற்றும் அவற்றின் வேலையிட தொழிலாளர் குழுக்கள் பங்கு பற்றி இருந்ததுடன், சாமானிய தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தும் அவற்றை திணித்தன.

இதன் விளைவாக, சமூக ஜனநாயகக் கட்சி செப்டம்பர் 2017 கூட்டாட்சி தேர்தலில் படுமோசமான வாக்குகளைப் பெற்றது. இக்கட்சி நீண்டகாலத்திற்கு முன்னரே தொழிலாளர்களிடையே அதன் பாரிய ஆதரவை இழந்துவிட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள், முற்றிலும் எதிராக இல்லையென்றாலும், IG Metall ஐ அவநம்பிக்கையோடு பார்க்கின்றனர். வழமையாக ஒரு மணி நேரத்திற்கு நீடிக்கும் மற்றும் எந்த பொருளாதார பாதிப்பும் ஏற்படுத்தாத இந்த “அடையாள வேலைநிறுத்தங்களில்" உள்ளடங்கிய பேரணிகளில், பெரும்பாலும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளே அதிகமாக ஆதிக்கம்செலுத்துவர்.

பேர்லினின் சீமென்ஸ் டைனமோ ஆலையில் 62 வயதான தொழிலாளர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில் பலருக்காகவும் பேசினார், “நாங்கள் உண்மையிலேயே இங்கே பெரும் எண்ணிக்கையில் உள்ளோம். வேலைகளைப் பாதுகாத்து, எங்கள் ஒப்பந்த கோரிக்கைகளை அமலாக்க விரும்பினால், நாங்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்க வேண்டும். ஒரு பொது வேலைநிறுத்தம் தான் சரியானதாக இருக்கும்.”

இந்த உணர்வை நன்கறிந்துள்ள IG Metall நிர்வாகிகள், மற்றொரு விற்றுதள்ளலுக்கு தயாரிப்பு செய்து கொண்டே, அதேவேளையில் தொழிலாளர் மீதான கட்டுப்பாட்டை பேணுவதற்காக அவர்களின் கோரிக்கைகளை அமைத்து வருகிறார்கள். 


நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள்

ஒருபுறம், IG Metall ஓராண்டுக்கு ஆறு சதவீத சம்பள உயர்வைக் கோரி வருகிறது. இந்த தொழிற்சங்கம் இதை ஒரு முக்கிய சம்பள கோரிக்கையாக முன்னிறுத்துகின்ற நிலையில், இது நிஜமான தேவைகளுக்கு நெருக்கமாக கூட வராது. அனைத்திற்கும் மேலாக, IG Metall வழமையாக நிஜமான கோரிக்கைக்கு கீழே தான் ஓர் உடன்படிக்கையை எட்டுகிறது என்பதோடு, ஒப்பந்தத்தை ஓராண்டுக்கும் அதிகமாக நீடித்து சம்பள உயர்வு "அதிகரிப்பை இல்லாது செய்துவிடுகிறது.” 2016 இல் ஐந்து சதவீத சம்பள உயர்வு கோரிய IG Metall, 20 மாதங்களில் இரு தடவைகளில் முறையாக 4.8 சதவீத உயர்வுடன் நின்றுவிட்டது.

IG Metall “தவணை முறையில்" 6 சதவீதம் பெறும், “... இது 20 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கான நீண்ட ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சினையாக இருக்காது,” என்பதை நாளிதழ் Tagesspiegel ஏற்கிறது. IG Metall தலைவர் ஹோஃப்மான் அக்டோபர் 2019 தொழிற்சங்க மாநாட்டிற்கு முன்னதாக மற்றொரு ஒப்பந்த போராட்டத்தைத் தவிர்க்க விரும்புகிறார் என்பதால், இந்த ஒப்பந்தம் "அடுத்த ஆண்டு இலையுதிர் காலத்திற்கு பின்னர் வரையில் செல்ல" கூடும் என்று அந்த வலைத் தளம் குறிப்பிட்டது. ஆகவே சம்பள உயர்வு 3.5 சதவீதத்திற்கும் குறைவாக ஏற்படுத்தப்படலாம், இதைத்தான் பெருநிறுவன-சார்பு Ifo அமைப்பு இந்தாண்டு ஜேர்மனி எங்கிலுமான சராசரி சம்பள உயர்வாக மதிப்பிட்டிருந்தது.

“எனது வாழ்வு-எனது நேரம்" (Mein Leben – Meine Zeit) என்ற கோஷத்தின் கீழ் IG Metall இன் இரண்டாவது கோரிக்கையானது, ஒவ்வொரு தொழிலாளியும் இரண்டு ஆண்டுகளுக்கு அவரது வாரத்திற்கு 35 மணி நேர வேலையை 28 மணி நேரத்திற்கு குறைத்துக் கொள்ள அவரை அனுமதிக்க வேண்டும், அதற்கேற்ப சம்பளத்தைக் குறைத்து கொள்ளலாம் என்று கோருகிறது. வெவ்வேறு ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 14 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளவர்கள், அல்லது உறவினர்களைப் பராமரித்து வரும் தொழிலாளர்கள் மட்டுமே, அவர்களின் வேலை நேர குறைப்புக்கு ஏற்ப சம்பளத்தை மிதமாக ஈடுகட்டுவார்கள்.

முழு நேர வேலையின் மனஅழுத்தத்துடன் குடும்பத்தைத் தொடங்குவதோ அல்லது உறவினர்களைக் கவனித்துக் கொள்வதோ சாத்தியமில்லை என்ற வெளிப்படையான காரணத்தினால், பிரதானமாக இளம் தொழிலாளர்கள் மத்தியில் இந்த கோரிக்கை ஆதரவைக் காண்கிறது. IG Metall கருத்துக்கணிப்பின்படி, விடையிறுத்தவர்களில் 82 சதவீதத்தினர் வேலை நேரத்தைத் தற்காலிகமாக குறைத்துக் கொள்ள விரும்புவார்களாம், அதேவேளையில் 89 சதவீதத்தினர் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலை நேரத்தில் ஒருசில மணி நேரங்களை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்புவார்களாம்.

ஆனால் இதுவும் சிக்க வைக்கும் ஒரு பொறி தான். தற்போது பகுதி நேரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நியாயமின்றி பாவிக்கப்பட்டு வருவதாக பெருநிறுவனங்கள் தங்களின் சொந்த நோக்கங்களுக்காக வாதிட்டு இந்த கோரிக்கையை எதிர்க்கின்றன. IG Metall வாரத்திற்கு 35 மணி நேர வேலை நேரத்தைக் கைவிட்டு, நீண்ட வேலை நேரங்களுக்கு மிகவும் வளைந்து கொடுக்க உடன்பட்டால், அதனுடன் தொழில் வழங்குனர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று தொழில்துறை பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒட்டுமொத்த தொழிலாளர் அளவு குறைக்கப்படாத வரையில், பகுதி நேர வேலைக்கான முறையீட்டையும் அத்துடன் முழு நேர வேலைக்குத் திரும்புவதற்கான உரிமைக்கும் தொழில் வழங்குனர்கள் உடன்படுவார்கள்,” என்று Tagesspiegel கருத்து வெளியிட்டது.

“உறுதியாக, ஒருகாலத்தில் மிகவும் வெற்றிகரமாக போராடி பெறப்பட்ட வாரத்திற்கு 35 மணி நேர வேலையிலிருந்து இன்னும் தொலைவில் நகர்வதே இதன் அர்த்தமாகும். உலோகத்துறை தொழிலாளர்களில் 18 சதவீதம் வரையிலான தொழிலாளர்கள் ஒப்பந்தத்தின் வாரத்திற்கு 35 மணி நேர வேலையை விட அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பது தான் இதுவரையில் நடந்து வருகிறது. இந்த வரம்பும் போய்விடும், 28 மணி நேரத்திலிருந்து 40 மணி நேரம் வரையில் என்ற வரம்பில் ஓர் உடன்படிக்கை எட்டப்படும்.”

தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவதானால், அவர்கள் போராட்டம் நடத்தும் விதத்தை IG Metall இன் கரங்களில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும். ஜேர்மனியிலும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் போராட்டங்களுக்கான புதிய அமைப்புகளாக, தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாமானிய நடவடிக்கை குழுக்களைக் (Aktionskomitees) கட்டமைக்க வேண்டும்.

ஜேர்மனியில் இந்த போராட்டமானது, உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் பாகமாக உள்ளது. பிரான்சில், மக்ரோன் அரசாங்கத்தின் தொழிற்சட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் போது, சேர்பியாவில் பியட் ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஸ்லோவாக்கியாவில் VW தொழிலாளர்கள் பட்டினி கிடத்தும் சம்பளங்கள் மற்றும் அடிமை உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் இறங்கினர். சீனா மற்றும் இந்தியாவில் வாகனத்துறை தொழிலாளர்களும் கடுமையான வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர், அதேவேளையில் வட அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஊழல் UAW சங்கத்திற்கு எதிராக 2015 இல் கிளர்ச்சியில் இறங்கினர். டிசம்பரில், ரோமானியாவில் போர்ட் தொழிலாளர்கள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கத்திற்கு எதிரான எதிர்ப்பில் ஒரு தன்னிச்சையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கங்களின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு தொழிலாளர்களை முட்டுச் சந்துக்கு இட்டு வந்துள்ளது. சம்பளங்கள், வேலைகள் மற்றும் சமூக வெற்றிகளைப் பாதுகாக்க, எல்லா தொழிலாளர்களுக்கும் நல்ல சம்பளம் மற்றும் பாதுகாப்பான வேலைக்கான உரிமை, நல்ல தரமான மருத்துவ கவனிப்பு மற்றும் கண்ணியமான வீட்டு வசதி மற்றும் பொழுதுபோக்கிற்கான உரிமை மற்றும் கலாச்சாரத்தை பெறுவதற்கான உரிமை ஆகியவற்றிற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை இணைக்கும் வகையில், ஒரு சர்வதேச முன்னோக்கு அவசியமாகும்.

தொழிலாளர்கள் கடுமையாக போராடி வென்ற வெற்றிகளைப் பாதுகாக்க ஒரு சோசலிச முன்னோக்கு அவசியமாகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையில், உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் புதிய போர்களுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதல்களுக்கும் தயாரிப்பு செய்து வருகின்றன. பேர்லினில், மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் வலதுசாரி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு மக்களின் முதுகுக்குப் பின்னால் ஓர் அரசியல் சதி நடந்து வருகிறது. தங்களின் பேச்சுவார்த்தைகளை முற்றிலும் இரகசியமாக வைக்க அவை உடன்பட்டுள்ளன என்ற அளவுக்கு, பழமைவாத கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி விவாதித்து வரும் வேலைத்திட்டம் தொழிலாளர்-விரோதமாக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கிறது. வலதுசாரி சதிகாரர்களின் ஒரு கும்பல் தன்னிச்சையாக அதன் விருப்பத்தை மக்கள் மீது திணிக்க அனுமதிக்க முடியாது. முதலாளித்துவம், போர் மற்றும் ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்தல் ஆகியற்றிற்கு சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டமைத்து வருகிறது. பெருநிறுவன முதலாளிமார்கள் மற்றும் நிதிய தன்னலக் குழுக்களால் மலைப்பூட்டும் அளவுகளுக்கு செல்வ வளம் குவித்துக் கொள்ளப்படுவதைக் காட்டிலும், சமூகத்தில் செல்வ வளத்தை உருவாக்குகின்ற தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.