ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron prepares draconian new French anti-immigrant law

மக்ரோன் கடுமையான புதிய பிரெஞ்சு குடியேற்ற எதிர்ப்பு சட்டத்தை தயாரிக்கிறார்

By Athiyan Silva 
19 January 2018

கடந்த வாரம் பிரான்சின் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப், தனது அரசாங்கம் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான இறுதி மசோதாவை முன்வைக்கும் என்று அறிவித்தார். இந்த மசோதா தஞ்சம் கோரும் உரிமைக்கு எதிரான ஒரு கடுமையான தாக்குதலை பிரதிநிதித்துவம் செய்வதோடு, எந்தவொரு தீவிர விசாரணையும் இன்றி பெரும் எண்ணிக்கையில் அகதிகளை நாடுகடத்துவதற்கான அதிகாரத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கிறது.

"புகலிடம் மற்றும் குடியேற்ற மசோதாவின் விதிகளை முன்வைத்தல்" என்ற அறிக்கையின்படி, புகலிடம் கோரும் விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் காலக்கெடுவை அகதிகள் மற்றும் குடியேறுபவர்களின் பாதுகாப்பிற்கான பிரெஞ்சு அலுவலகம் (Office français de protection des réfugiés et des apatrides - OFPRA) 120 இருந்து 90 நாட்களாக குறைக்கின்றது. முக்கியமாக, OFPRA வினால் நிராகரிக்கப்படும் தஞ்சம் கோருவோர், அகதிகளுக்கான தேசிய நீதிமன்றத்திற்கு (Cour nationale du droit d’asile - CNDA) விண்ணப்பிக்கும் நாட்கள் 30 லிருந்து 15 நாட்களாக குறைக்கப்படுகின்றது. அத்தோடு, தஞ்சம் கோரும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான நிர்வாக தடுப்புக்காவல் 16 முதல் 24 மணித்தியாலங்கள் வரை அதிகரிக்கின்றது. மேலும், அதிகபட்சமான தடுப்புக்காவல் 45 நாட்கள் அல்ல, மாறாக 90 அல்லது 115 நாட்கள்வரை அதிகரிப்பதை இது அனுமதிக்கின்றது.

புகலிடம் கோருவோர் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள், வாழ்வதற்காக முறையான விசாக்கள் அல்லது குறைந்தபட்ச வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வது அனேகமாக சாத்தியமற்றது என்றவாறான நிலைமைகளை, புதிய மசோதா உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, CNDA க்கு விண்ணப்பம் செய்வதற்கான விசாரணைகளை நடத்த சராசரியாக ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் ஒப்பிடுகையில், இந்த மசோதா அடிக்கடி OFPRA மேற்கொள்ளும் ஆரம்ப எதிர்மறை முடிவிற்கு எதிராக சாதகமான முடிவை எடுப்பதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் திறம்பட அகற்றும்.

இந்த மசோதா மூலம் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வாரம் காலக்கெடுவிற்குள் CNDA க்கு முறையீடு செய்ய மாவட்ட பொலீஸ் நிர்வாகத்திற்கு கூடுதல் வளங்களை இந்த மசோதா வழங்கவில்லை. நவ-பாசிச தேசிய முன்னணி (FN) க்கு பரந்த ஆதரவைக் கொண்டிருக்கும் பொலிஸ் படைகளுக்கு, பெரும்பாலும் இதுபோன்ற வழக்கில் OFPRA வினால் நிராகரிக்கப்பட்ட எந்தவொரு அகதியையும் நாடுகடத்துவதற்கு சுதந்திரமான அதிகாரத்தை இது வழங்குகிறது.

இந்த மசோதாவின் நோக்கம் அரசியல் ரீதியாக குற்றவியல் கொண்டதாகும்: எண்ணற்ற மக்கள், பிரான்சிலிருந்து வலுக்கட்டாயமாக யுத்தத்தினால் அழிந்த மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு அல்லது ஆப்கானிஸ்தான் அல்லது லிபியா போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதை இந்த மசோதா உறுதி செய்கின்றது. ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான அகதி மந்திரி சயீத் ஹுசைன் அலிமி பால்கி, ஆரம்பத்தில் ஒரு "நூறு ஆயிரம் ஆப்கானியர்கள் 2017 ல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்."

கடந்த மாதம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரார்ட் கொலொம், RTL வானொலியுடனான ஒரு நேர்காணலில், பாரிசில் அதிகரித்துவரும் அகதிகள் சம்பந்தமான நிலைமை வெடிப்புத் தன்மை கொண்டது என்று கூறினார். "ஜேர்மனியில் சுமார் 300,000 பேரின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரான்சிற்கு வர விரும்புகிறார்கள். நாங்கள் அனைவரையும் எடுத்துக் கொள்கிறோமா? இல்லை’’. அகதிகள், பிரான்ஸ் மற்றும் அனைத்து முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதை தடுப்பதற்காக, கண்மூடித்தனமான பாரிய நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும் ஒடுக்குமுறை சட்டங்கள் தயார் செய்யபடுகின்றன.

தஞ்சம் கோருவதற்கான ஜனநாயக உரிமை மீதான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தாக்குதல், முழு ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படுகின்ற அகதிகள் மீதான தாக்குதலின் ஒரு பாகமாகும். ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பல தசாப்தகால ஏகாதிபத்தியப் போர்கள் இரண்டாம் உலகப்போரின் முடிவிற்கு பின்பு மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளன. 60 மில்லியனுக்கு மேற்பட் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை காலால் நசுக்குவதன் மூலம் அவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு வரவிடாமல் தடுத்து வைத்துக் கொள்கிறது.

எல்லைப் கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் அகற்றப்பட்டிருந்த ஷெங்கன் மண்டலத்திற்குள் இருந்த பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, கிரீஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், எல்லை கட்டுப்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோர பாதுகாப்பு நிறுவனம் (Frontex) அதன் எல்லைக் கட்டுப்பாட்டை நிலத்திலும் கடல் மீதும் தீவிரப்படுத்தியுள்ளதோடு, கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் 1500 அதிகாரிகளையும் அது நிறுவியுள்ளது. அதே நேரத்தில், 2014 முதல், 15,486 அகதிகள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

அத்தோடு, மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் உள்ள பிற்போக்குத்தனமான ஆளும் வர்க்கங்களுடன் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் சித்திரவதை முகாம்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதோடு நூறாயிரக்கணக்கான மக்களை இதற்குள் சிக்க வைத்தும் உள்ளது.

கடந்த மாதம், சர்வதேச மன்னிப்புச்சபை ஐரோப்பிய ஒன்றியம் மில்லியன் கணக்கான யூரோக்களை எப்படி லிபியாவில் தடுப்பு முகாம்களின் வலைப்பின்னலை கட்டமைக்கின்றது என்பதை விவரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அகதிகள் தாக்கப்படுகின்றனர், சித்திரவதை செய்யப்படுகின்றனர், பாலியல் ரீதியாக தாக்கப்படுகின்றனர், அடிமைகளாக விற்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். இத்தாலியின் வெளியுறவு மந்திரி ஏஞ்சலினோ அல்பனோ கடந்த டிசம்பரில் ஐ.நா. ஆதரவு லிபிய அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஃபெயீஸ் அல் சரஜ்ஜை திரிப்போலியில் சந்தித்தார். மத்தியதரைக் கடல் வழியால் வரும் அகதிகளை தடுப்பதற்கு இத்தாலியப் போர்க்கப்பல்கள் லிபியாவின் கடலோர காவற்படைக்கு உதவும் ஒரு உடன்பாட்டிற்கு அவர் முன்வந்தார். அகதிகள் மீண்டும் அதே முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஆபிரிக்க மண்ணில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எரித்திரியாவில் இருக்கும் அகதிகளை தடுத்து வைத்திருப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஏற்கனவே சூடானிய அரசாங்கத்திற்கு லிபியாவிற்கும் எகிப்துடனான எல்லையில் இராணுவ ரோந்துப் பணிகளைச் செய்ய 100 மில்லியன் யூரோக்கள் வழங்கியுள்ளது. சூடான் படைகள் மனித உரிமை மீறல்களுக்கு இழிபுகழ்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்ரோன், ஆபிரிக்காவில் முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் போரை தீவிரப்படுத்தி வருவதோடு,  ஐவரி கோஸ்ட், மாலி, சாட், நைஜர், புர்கினா பாசோ மற்றும் சஹெல் பிராந்தியத்தில் 4,000 ம் வலுவான பிரெஞ்சுப் படைகள், 12,000 ம் வலுவான ஐ.நா அமைதிகாக்கும் படையுடன் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" மேற்கொண்டு வருகின்றது. இந்த பிரெஞ்சு ஏகாதிபத்திய தலையீடுகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கும்.

இந்த அபிவிருத்திகள் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களின்போது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் புலம்பெயர்ந்தோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக தேசிய முன்னணி வேட்பாளரான மரின் லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வாதங்களின் அரசியல் திவால்தன்மையை சுட்டிக்காட்டியுள்ளன.  ஜோன் லூக் மெலன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise – LFI) இயக்கத்திலிருந்து புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) வரை எண்ணற்ற சக்திகள், லு பென்னை விட மக்ரோன் ஒரு "குறைவான தீமை" என்று கூறின.

மக்ரோனும் அவரது அரசாங்கமும் அகதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தேசிய முன்னணி உட்பட தீவிர வலதுசாரி சக்திகளின் ஆதரவை நாடுகின்ற ஒரு நிலையில், இந்த சக்திகள் இப்போது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளின் அரசியல் எதிரிகளாக அம்பலப்பட்டு நிற்கின்றன.

ஆயிரக்கணக்கான அகதிகள், பிரித்தானியாவுக்கு பயணிப்பதற்கான ஒரு முயற்சியில், மிகவும் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்ந்துவரும் பிரான்சின் வட கடலோர நகரமான கலேயிலுள்ள "காட்டு முகாம்," (Jungle camp) பகுதிக்கு கடந்த செவ்வாயன்று மக்ரோன்  விஜயம் செய்தார். அகதிகள் பிரான்சிற்கு வரக்கூடாது என்று மக்ரோன் வலியுறுத்தி கலே என்னும் இடத்தில் உள்ளவர்களை பின்வருமாறு அச்சுறுத்தினார்: "கலேயில் தங்கியிருத்தல் மற்றும் தற்காலிக முகாம்களை கட்டியெழுப்புதல் ஆகியவை ஒரு முட்டுச்சந்தான முடிவு. எல்லை மூடப்பட்டுவிட்டது, கலே குடியேறுபவர்களுக்கான ஒரு இடமாக இனி இருக்க முடியாது."

மேலதிக வாசிப்புகளுக்கு :

பிரான்சில் புலம்பெயர்ந்தோர் மீது மக்ரோன் அதிகப்படியான தாக்குதல்களை அறிவிக்கிறார்