ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One hundred and fifty attend IYSSE event at Humboldt University on Karl Marx bicentenary

ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் கார்ல் மார்க்சின் இருநூறாம் ஆண்டு விழாவின் போது நடந்த IYSSE நிகழ்ச்சியில் நூற்றைம்பது மாணவர்கள் கலந்துகொண்டனர்

By the International Youth and Students for Social Equality 
19 January 2018

சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (International Youth and Students for Social Equality - IYSSE) அமைப்பின், மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு ஆதரவாக பேர்லின் ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர். “கார்ல் மார்க்சின் 200 ஆண்டு காலமும் – தற்காலத்திய மார்க்சிச செல்வாக்கும்” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இந்த கூட்டம், சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் நான்காம் அகிலத்தின் புரட்சிகர முன்னோக்கு ஆகியவை பற்றிய பல மணிநேரங்கள் கொண்ட கலந்துரையாடல்களை உள்ளடக்கியதாக இருந்தது.

தேர்தலில் IYSSE இன் முன்னணி வேட்பாளராகவுள்ள ஸ்வென் வர்ம் இந்த நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர், கல்விப்புலமைக்கான தேவையால் மார்க்சைப் பற்றி IYSSE படிக்கவில்லை என்பதை வலியுறுத்தினார். “மார்க்சிசத்தின் மூலமாக மட்டும் தான் முதலாளித்துவ நெருக்கடியை புரிந்துகொள்ளவும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புரட்சிகர முன்னோக்கை உருவாக்கவும் முடியும்” என்று அவர் விளக்கினார்.


ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் நடைபெற்ற கூட்டம்

உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் பதிப்பின் ஆசிரியரான பீட்டர் சுவார்ட்ஸ், மார்க்சிச போதனைகள் பற்றியும், மார்க்சிசத்தின் வளர்ச்சி பற்றியும் விரிவாக விளக்கினார். அவரது பேச்சு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, முதலாவது, மார்க்சின் கோட்பாட்டு அடிப்படைகளை பற்றியது; அடுத்தது, கடந்த 150 ஆண்டுகளில் மார்க்சிசம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது மறுக்கப்பட்டுள்ளதா என்பதை விவாதிப்பது; மேலும் இறுதியாக, தற்போது மார்க்சிசத்திற்கு இருக்கும் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பிராங்போர்ட் பள்ளி போன்ற புத்திஜீவித போக்குகள் ஆகியவற்றின் எண்ணற்ற பொய்மைப்படுத்தல்களின் மத்தியில், மார்க்ஸ் உண்மையில் என்ன கூறினார் என்பதை உற்றுநோக்குவது அவசியம் என்று சுவார்ட்ஸ் வலியுறுத்தினார். தொடர்ந்து அவர், வரலாற்றில் மார்க்சின் சடவாத எண்ணக்கரு பற்றியும், சமூக அபிவிருத்தி குறித்த அவரது இயங்கியல் புரிதல் பற்றியும் விரிவாக விளக்கினார்.

இதனடிப்படையில், மார்க்ஸ் முதன்முதலாக மனித சமுதாயம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய ஒரு விஞ்ஞான ரீதியிலான புரிதலை ஸ்தாபித்தார், இது மாற்றத்திற்குரிய முன்நிபந்தனையாக உள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் இருந்து விரிவான மேற்கோள்களைப் பயன்படுத்தி, வர்க்கப் போராட்டத்தை வரலாற்றின் உந்துசக்தியாகவும், புறநிலைரீதியான அதன் இருப்பின் காரணமாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாகவும் மார்க்ஸ் எப்படி புரிந்துகொண்டார் என்பதை சுவார்ட்ஸ் எடுத்துக்காட்டினார்.

மார்க்ஸ் முன்கணித்தது போன்றே, முதலாம் உலகப் போரின் வெடிப்புடன் முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து போனதை சுவார்ட்ஸ் விவரித்தார். இரண்டாம் அகிலத்தின் கட்சிகள் மார்க்சிசத்திலிருந்து விலகி, இந்த போருக்கு ஆதரவளித்ததோடு, கிளர்ச்சிசெய்த தொழிலாளர்களை சுட்டு வீழ்த்தவும் அனுமதித்தன. மறுபுறம், மார்க்சிச அடித்தளத்திலான போர் எதிப்பாளர்கள், குறிப்பாக லெனினும் ட்ரொட்ஸ்கியும், புரட்சியை தயார் செய்தனர். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி, வரலாற்று சடவாத கருத்தாக்கத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னோக்கையும் உறுதி செய்தது.

புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினுடன் ஒரு அதிகாரத்துவ தட்டு அதிகாரத்திற்கு வந்தபோது, லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் மார்க்சிசம் பாதுகாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலகின் ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிகர தொழிலாளர் கட்சிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நின்றது.

1968 இல் தொழிலாள வர்க்கத்தின் பாரியளவிலான வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் மீண்டும் வெடித்தபோது, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை செலுத்திய சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. தற்போதைய நிலைமையோ முற்றிலும் மாறானது என சுவார்ட்ஸ் விளக்கினார்: “பழைய அமைப்புகள் தகர்ந்துபோய்விட்ட நிலையில், இன்று மார்க்சிசத்தின் குரலாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உணரப்படுகின்றது.”

நான்காம் அகிலத்தின் மார்க்சிச முன்னோக்கு இன்று முற்றிலும் செல்தகமைகொண்டுள்ளதாக உள்ளது என்று சுவார்ட்ஸ் தொடர்ந்து கூறினார். முன்னெப்போதும் விட சமூக சமத்துவமின்மை அதிகமாக உள்ளது என்பதைக் காட்டும் குறிப்பிடத்தக்க புள்ளிவிபரங்களை அவர் மேற்கோளிட்டார். அமெரிக்கா ஒரு உலகப் போருக்கு தயார் செய்து வருகிறது, அதே போல் ஜேர்மனியிலும் இராணுவவாதம் திரும்பியுள்ளது. இத்தகைய நிலைமைகளின் கீழ், ஐரோப்பவிலும் மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று மேலும் அவர் கூறினார்.

“ஒழுங்கு முறையான, நனவான மற்றும் தீவிரமாக ஒரு புரட்சிகர தலைமையை உருவாக்குவதுதான் தற்போது நமது முக்கிய பணியாக உள்ளது. மனித குலத்தின் அடிப்படை பிரச்சினையான சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதற்கு ஒரு முற்போக்கான தீர்வு என்பது இதைத் தான் சார்ந்திருக்கிறது.” இறுதியாக, WSWS இல் புத்தாண்டு அன்று வெளிவந்த அதன் முன்னோக்கில் இருந்து சுவார்ட்ஸ் இதை மேற்கோளிட்டு காட்டினார்: “காரல் மார்க்ஸ் பிறந்த இருநூறாவது ஆண்டை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ‘மெய்யியலாளர்கள் உலகத்தை பல்வேறு விதமாய் பொருள்விளக்கம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்; ஆனால் செய்யப்படவேண்டியவிடயம், அதனை மாற்றுவது என்பதாகும்’ என்ற அவரது மிகப் பிரபலமான கூற்றிற்கு ஏற்றவிதத்தில் கொண்டாடும்”.

இக் கூட்டத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் பெரும் ஆர்வத்துடன் விரிவுரையை தொடர்ந்து கேட்டனர். பின்னர், சோசலிசம் மற்றும் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறு; முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் குடிமை இயக்கத்தின் அனுபவங்கள்; முதலாம் உலகப் போர்; வெகுஜன ஊடகத்தின் செல்வாக்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி பார்வையாளர்களால் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

சுவார்ட்ஸும், வர்மும் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்தனர், மேலும், நிகழ்ச்சி முறையாக நிறைவுற்ற பின்னர் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல்களில் IYSSE இன் ஏனைய உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், பேச்சு மற்றும் கலந்துரையாடலிருந்து பெறப்பட வேண்டிய பிரதான முடிவுகள் செயலூக்கமிக்கதாக மாறியதுடன், புரட்சிகரத் தலைமையை கட்டமைப்பதாகவும் இருந்தது என்று வர்ம் விளக்கமளித்தார். ஜனவரி 16-17 தேதிகளில் நடைபெறும் மாணவர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் IYSSE க்கு வாக்களிப்பது அதன் முதற்படியாக இருந்தது, இருந்தபோதிலும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் IYSSE இன் செயல் உறுப்பினராக மாறுவதற்கு முடிவெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

கூட்டத்திற்கான ஆதரவு மகத்தானதாக இருந்தது. ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் வரலாற்றுக் கலை பயிலும் மாணவியான எடேசா என்பவர், மொத்த விரிவுரையையும் தீவிரமாக கவனித்து வந்ததாகத் தெரிவித்தார். மேலும் அவர், “மார்க்சிசத்தின் அடிப்படை நிலைப்பாடுகள் மனதில் பதியும் விதமாக சுருக்கமாக கூறப்பட்டன” என்றும் கூறினார்.

பேர்லின் தொழில்நுட்ப பல்கலைகழகத்திலிருந்து பங்கேற்ற இரு மாணவர்கள் அவர்களது பல்கலைகழகம் முன்பிருந்த சுவரொட்டிகள் மூலமாக இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்திருந்தனர். மேலும், இந்த விரிவுரையின் தற்போதைய தலைப்பு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்துகொண்டனர். “உலகளாவிய போர்முரசுகொட்டல்” மற்றும் ஜேர்மனியில் பிரதான கட்சிகளின் வலதுபுறத்தை நோக்கிய தெளிவான நகர்வும் மிகவும் கவலையளிப்பதாக இருந்தன என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

Charité மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் மாணவரும் மற்றும் மாணவர் பாராளுமன்ற பிரச்சாரத்தின் மூலம் IYSSE க்குள் முழுமையாக வந்தவருமான கோரே என்பவர், மார்க்சிசத்தின் கருத்துக்களை மிகவும் சமகாலத்தை சார்ந்தவையாகக் கருதுகிறார், “ஏனெனில், இன்று நான் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறேன் என்பதை நான் வெகுநாட்களாக உணரவில்லை” என்றவர் விளக்கினார். “தற்போது நம் நாடு பின்பற்றும் கொள்கைகள் மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் நம்புகிறேன், அதற்கு மாறாக அவை வெறும் பரப்புரையாகவும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருசிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக சேவை செய்பவையாகவும் உள்ளன.

இதை சீமென்சில் காணமுடியும், அங்கு தொழிலாளர்களின் கருத்துக்கள் எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “முதலாளித்துவம் உண்மையில் மனித கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. அதுதான் இன்று இங்கு நான் வருவதற்கான உந்துதலாக இருந்தது. மேலும், அதுதான் மார்க்சிசத்தின் யதார்த்தமாகவும் உள்ளது,” என்றவர் விளக்கிக் கூறினார்.

“இவையனைத்தும் சமூக சமத்துவமின்மை பற்றியது தான்,” என்றும் “என்னைப் பொறுத்தவரை, இராணுவவாதம் கூட அதன் விளைவாக உருவானது தான். விரிவாக்கவாத கொள்கைகளின் அர்த்தத்தில் முதலாளித்துவத்தின் அரசியல்மயமாக்கமே இராணுவவாதமாக உள்ளது” என்றும் அவர் தொடர்ந்து கூறினார். குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானில்  தொடங்கி ஏகாதிபத்தியப் போர்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தை ட்ரம்ப் இப்போது காட்டியிருப்பதை கோரே ஒப்புக்கொண்டார்.

ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் புவியியல் பயின்றுவரும் அவரது சக மாணவி லாரா, ஒபாமாவை போலல்லாமல், “ட்ரம்பின் வரிகளை படிக்க வேண்டியதேயில்லை” என்று கூறினார். வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க வாய்வீச்சுக்களைப் பற்றி அவர் கவலைப்பட்டு இவ்வாறு தெரிவித்தார்: “ட்ரம்பின் வருகை எதிர்பாராதது. அது என்னை பயமுறுத்துகிறது.”

அணுவாயுத போர் ஒருபோதும் நிகழாத நிலையில் ஒருவர் அதை கற்பனை செய்து பார்ப்பது என்பது கடினமானது என்றும், “ஆனால் அது எனது வாழ்வின் போக்கையே மாற்றுகிறது. உண்மையில் ஒரு உலகப் போர் மீண்டும் வெடிக்கக்கூடும் என்ற வகையில் ஒட்டுமொத்த உலகின் சூழ்நிலையையும் அது சாதாரணமாக நிலையற்றதாக்குகிறது என்பது பற்றிய சிறிது விழிப்புணர்வுடன் தற்போது நான் வாழ்கிறேன்” என்றும் கோரே கூறினார்.

எடேசா, கோரே மற்றும் லாராவைப் போல பலரும் நினைத்தனர். 30 பேருக்கும் அதிகமானவர்கள் IYSSE இல் இணையவும், IYSSE இன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவும், மற்றும் பிற நிகழ்வுகளில் பங்கெடுக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் அவர்களது தொடர்பு விபரங்களை தெரிவித்துச் சென்றனர்.