ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The bicentenary of Marx’s birth, socialism and the resurgence of the international class struggle

மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டும், சோசலிசமும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

David North
3 January 2018

“அவை எல்லாம் முட்டாள்த்தனமானவை எனவே உங்கள் போராட்டங்களை நிறுத்திவிடுங்கள் என்று நாம் உலகத்திற்கு கூறப்போவதில்லை. நாங்கள் போராட்டத்திற்கான உண்மையான சுலோகங்களை தருகின்றோம். நீங்கள் எதற்காக உண்மையில் போராடுகின்றீர்கள் என்பதை மட்டுமே உலகத்திற்கு காட்டவிரும்புகின்றோம். மற்றும் நனவு என்பது நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட உள்ளீர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்றாகும்”. [Karl Marx to Arnold Ruge, September 1843]

“விமர்சன ஆயுதமானது ஆயுதங்கள் மூலமான விமர்சனத்தை பிரதியிட்டு விட முடியாது தான், சடப்பொருள் சக்தி சடப்பொருள் சக்தியால் தான் தூக்கிவீசப்பட்டாக வேண்டும்; ஆயினும் தத்துவமும் கூட அது வெகுஜனங்களைப் பற்றிக்கொண்டதும் ஒரு சடப்பொருள் சக்தியாக ஆகிறது.” [ஹேகலின் விதிகள் குறித்த மெய்யியல் மீதான விமர்சனத்திற்குப் பங்களிப்பு, 1844]

“ஜேர்மனியின் விடுதலை மனிதகுலத்தின் விடுதலையாக இருக்கிறது. இந்த விடுதலையின் தலையாக இருப்பது மெய்யியல், அதன் இருதயமாக இருப்பது பாட்டாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கத்தின் செயற்பாடு இல்லாது, மெய்யியல் நிதர்சனம் ஆக முடியாது, மெய்யியல் நிதர்சனம் ஆகாமல் பாட்டாளி வர்க்கம் செயற்பட முடியாது.” [ஹேகலின் விதிகள் குறித்த மெய்யியல் மீதான விமர்சனத்திற்குப் பங்களிப்பு, 1844]

”இந்த அல்லது அந்த பாட்டாளி வர்க்கம், அல்லது ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கமும் கூட, இந்த தருணத்தில் அதன் நோக்கமாக எதைக் கருதுகிறது என்பதல்ல பிரச்சினை. பாட்டாளி வர்க்கம், அதன் இருப்பின் படி, வரலாற்றுரீதியாக என்ன செய்ய நிர்ப்பந்திக்கப்படும் என்பது குறித்த பிரச்சினையாகும் இது.” [புனிதக் குடும்பம், 1844]

”வரலாற்றுச் செயல்பாட்டின் முழுமையுடன் சேர்ந்து, அந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும் பரந்த மக்களின் அளவும் ஆகவே அதிகரிக்கும்.” [புனிதக் குடும்பம், 1844]

”இதுவரை நிலவிய சமூகங்கள் அத்தனையின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும்.” [கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, 1847]

”ஆளும் வர்க்கங்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியைக் கண்டு அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்களது சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் பெறுவதற்கு ஒரு உலகமே இருக்கிறது. அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!” [கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, 1847]

***

 


Karl Marx in 1875

1. இந்த ஆண்டு, வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தின் மூலவரும், மூலதனம் (Das Kapital) ஆசிரியரும், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் உடன் இணைந்து நவீன புரட்சிகர சோசலிச இயக்கத்தை ஸ்தாபித்தவருமான கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 வது ஆண்டாகும். ட்ரியர் (Trier) என்னும் பிரஷ்ய நகரத்தில் மே 5,1818 அன்று பிறந்த மார்க்ஸ், லெனினின் வார்த்தைகளை மேற்கோளிட்டுச் சொல்வதென்றால், “செவ்வியல் ஜேர்மன் மெய்யியல், செவ்வியல் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், மற்றும் பொதுவான பிரெஞ்சு புரட்சிகரக் கோட்பாடுகளுடன் இணைந்த பிரெஞ்சு சோசலிசம் ஆகிய மனிதகுலத்தின் மூன்று மிக முன்னேறிய நாடுகளால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்று பிரதான தத்துவார்த்த நீரோட்டங்களைத் தொடர்ச்சியாக கொண்டுசென்று அவற்றை பூரணப்படுத்திய மாமேதை”யாக இருந்தார்.  

2. மார்க்ஸ் தனது 64 வயது வயதில் மார்ச் 14, 1883 அன்று லண்டனில் காலமானார். அதற்குள்ளாக, அவரும் ஏங்கெல்ஸும் கற்பனாவாத சோசலிச இலட்சியங்களை ஒரு விஞ்ஞான அடித்தளத்தின் மீது அமர்த்தியிருந்ததோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அரசியல் இயக்கத்திற்கான அடிப்படையையும் அமைத்துத் தந்தனர். 1843க்கும் 1847க்கும் இடையில், பதினெட்டாம் நூற்றாண்டின் மேலோங்கியிருந்த எந்திரரீதியான சடவாதம் மற்றும் ஹேகலின் இயங்கியல் தர்க்கத்தின் கருத்தியல் புதிர்ப்படுத்தல்கள் ஆகிய இரண்டின் குறைகளையும் வெற்றிகண்டு, மார்க்ஸ், தத்துவார்த்த சிந்தனையில் ஒரு புரட்சியை நடத்தியிருந்தார்.

3. மெய்யியல் சடவாதத்தை வரலாறு மற்றும் சமூக உறவுகளது தளத்திற்குள் நீட்சி செய்து, மார்க்ஸ், சோசலிசத்திற்கான அவசியமானது முதலாளித்துவ அமைப்புமுறையின் உட்பொதிந்த முரண்பாடுகளது நியதிரீதியான அபிவிருத்தியில் இருந்து எழுகிறது என்பதை நிரூபணம் செய்தார். வரலாற்றின் ஒரு உந்துசக்தியாக வர்க்கப் போராட்டத்தை தான் கண்டுபிடித்திருந்ததாக அவர் கூறிக் கொள்ளவில்லை. அவரே 1852 இல் விளக்கியிருந்ததைப் போல, “1. வர்க்கங்களின் இருப்பு என்பது உற்பத்தியின் அபிவிருத்தியிலான குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் பிணைந்தது மட்டுமே; 2. வர்க்கப் போராட்டமானது அத்தியாவசியமாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்கிறது; 3. இந்த சர்வாதிகாரம் தன்னுள் அத்தனை வர்க்கங்களின் ஒழிப்புக்கும் ஒரு வர்க்கமற்ற சமூகத்திற்குமான ஒரு உருமாற்றத்தையே உள்ளடக்கியிருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை” ஆகியவற்றை எடுத்துக்காட்டியதே வரலாற்றின் புரிதலில் மார்க்சின் உலகை-மாற்றத்தக்க பங்களிப்பாய் இருந்தது.

4. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதியதுடன் மார்க்ஸ் தனது பேனாவைக் கீழே போட்டு விட்டிருந்தாலும் கூட, வரலாற்றில் அவரது இடம் அப்போதும் உறுதிப்பட்டதாகவே இருந்திருக்கும். ஆயினும், வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை ஊர்ஜிதப்படுத்திய மூலதனத்தை (Das Kapital) அவர் எழுதியது ஒரு உலக வரலாற்று ஆளுமையாக அவரின் அந்தஸ்தை உயர்த்தியது. 1867 இல் அதன் முதல் தொகுதி வெளியிடப்பட்டதற்குப் பின்னர் கடந்திருக்கும் 150 ஆண்டுகளில், முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் பல தலைமுறைகள் மார்க்சின் வேலையை மறுப்பதற்கென்றே தங்களது தொழில்முறை வாழ்க்கைகளை அர்ப்பணித்து வந்திருக்கிறார்கள். ஆயினும் பயனில்லை! அவர்களது முயற்சிகள் மார்க்சின் இயங்கியல் வழிமுறை மற்றும் வரலாற்று உட்பார்வை ஆகியவற்றின் வலிமையினால் மட்டுமல்ல, அதனினும் அதிகமாக, முதலாளித்துவ நெருக்கடி என்னும் யதார்த்தத்தினாலும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. பேராசிரியர்கள் எத்தனை ஆட்சேபித்தாலும், முதலாளித்துவ உலகம் மார்க்ஸ் விளக்கிய பாதையில் தான் “நகர்கிறது”. மூலதனத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் பின்தொடர்ந்து, முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளது ஒரு புதிய நடைமுறை எடுத்துக்காட்டு வந்துசேர்ந்து விடுகிறது.

5. அப்படியானதொரு சமீபத்திய மற்றும் இன்றுவரையும் தொடர்கின்ற பாடம் தான், 2008 உலகளாவிய பொறிவுடன் தொடங்கியது. மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தின் அத்தியாவசியமான வகைப்பாடுகள் மற்றும் கருத்தாக்கங்கள் —உழைப்புசக்தி, மாறா மற்றும் மாறும் மூலதனம், உபரி மதிப்பு, இலாப விகித வீழ்ச்சி, சுரண்டல், பண்ட மோகம், தொழிற்துறை கையிருப்புப் படை, மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சார்பியல் மற்றும் முற்றுமுதல் வறுமைப்படல்— முதலாளித்துவத்தின் ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலுக்கு மட்டுமல்லாது, அன்றாட அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளின் மீதான ஒரு அடிப்படைப் புரிதலுக்கும் கூட அவசியமானவையாக இருக்கின்றன.

6. மார்க்சின் இருநூறாவது பிறந்ததினத்தில் ஏராளமான கல்விச்சாலை கருத்தரங்குகளில் பேராசிரியர்கள் மார்க்சின் தத்துவங்களுக்குள் தலை நுழைப்பார்கள் என்பதை நிச்சயமாக யாரும் சொல்லலாம். அதில் பலரும் அவரது பிழைகளாக அல்லது அவர் விட்டுவிட்டவையாகச் சொல்லப்படுவதன் மீது கவனம்குவிப்பார்கள். ஒரு சிறு எண்ணிக்கையிலானோர், மார்க்சின் வேலையைப் புகழ்வர். ஆயினும் மார்க்சின் வாழ்க்கையின் உண்மையான மற்றும் மிகப் புறநிலையான மதிப்பீடு என்பது வகுப்பறைகளுக்கு வெளியிலேயே நடப்பதாக இருக்கும்.

7. மார்க்சின் இருநூறாவது பிறந்ததினம் அமைகின்ற 2018 இன் இந்த புது வருடம், எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும். பல தசாப்தங்களாய், அதிலும் குறிப்பாய், 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக, முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் அத்தியாவசிய முரண்பாடுகள், —ஒரு உலகளாவிய பரஸ்பரச் சார்பு கொண்ட பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போன முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானவை; பில்லியன் கணக்கான மனித உயிர்களின் உழைப்பு பங்குபெறுகின்ற சமூக உற்பத்தியின் ஒரு உலகளாவிய வலைப்பின்னலுக்கும், உற்பத்தி சாதனங்களது தனியார் உடைமைத்துவத்திற்கும் இடையிலானவை; மற்றும் வெகுஜன சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் தனிப்பட்ட முதலாளித்துவ பணம்-குவிப்பின் சுயநல நலன்களுக்கும் இடையிலானவை— இப்போது, முதலாளித்துவத்திற்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை இனியும் ஒடுக்குவது சாத்தியமில்லை என்ற ஒரு புள்ளியை துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

8. மக்களின் ஒரு சிறு தட்டிடம் குவிந்திருக்கின்ற செல்வத்தின் மட்டம் வரலாற்றுரீதியாக முன்கண்டிராத மட்டங்களை எட்டியிருக்கிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கு. உலகின் மிகப் பணம்படைத்த 1 சதவீதம் பேர் உலகின் செல்வத்தில் பாதியைக் கொண்டிருக்கின்றனர்.[3] மிகச் செல்வந்த 500 தனிநபர்கள், 2017 டிசம்பர் புள்ளிவிவரப்படி, மொத்தமாய் 5.3 டிரில்லியன் டாலர் செல்வம் கொண்டிருக்கின்றனர். இது 2016 இல் இருந்த அளவைக் காட்டிலும் 1 டிரில்லியன் டாலர் அதிகமாகும்.[4] அமெரிக்காவில் மூன்று பேரிடம் —ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்— மக்களின் கீழ் பாதிப் பேரை விடவும் அதிக பணம் இருக்கிறது. சீனாவில் 38 பில்லியனர்கள் 2017 இல் தங்கள் தனிப்பட்ட செல்வத்தில் 177 பில்லியன் டாலர்களைக் கூடுதலாய் சேர்த்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் தாண்டி, ரஷ்யாவின் 27 பில்லியனர்கள் தங்களின் மொத்த செல்வத்தில் 29 பில்லியன் டாலர்களை கூடுதலாய் சேர்த்துள்ளனர். மெக்சிகோவின் பெரும்பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம், தனது செல்வத்தில் 62.8 பில்லியன் டாலர்களை கூடுதலாய் அதிகரித்துள்ளார், இது முந்தைய ஆண்டை விடவும் 12.9 டிரில்லியன் டாலர்கள் அதிகரிப்பாகும்.  

9. இந்த பாரிய பணக்குவிப்பின் தனித்துவமான அம்சமாக இருப்பது என்னவென்றால், இவை கடந்த 35 ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மலைப்பூட்டும் அதிகரிப்புடன் பிணைந்ததாக இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் “பண அச்சடிப்பு” (quantitative easing) கொள்கையும் உலக மைய வங்கிகளின் குறைந்த வட்டி விகிதக் கொள்கைகளும் கடந்த தசாப்தத்தில் டோ ஜோன்ஸ் சராசரி கிட்டத்தட்ட நான்கு-மடங்கு அதிகரிப்பைக் காண இட்டுச் சென்றிருக்கின்றன. 2017 இல், அமெரிக்க பங்குகளின் மதிப்பிலான வெடிப்பான அதிகரிப்பு செல்வந்தர்களுக்கான பாரிய வெட்டு குறித்த எதிர்பார்ப்புடன் —அது அடையப்பட்டும் வந்திருக்கிறது— பிணைந்ததாக இருந்தது.

10. முதலாளித்துவ நிதியப்பிரபுத்துவத்தின் உச்சத்தில் இருப்பவர்களது செல்வக்குவிப்பும் உலகின் பரந்த எண்ணிக்கையிலான மக்களது வறுமைப்படலும் ஒருசேர முன்செல்கின்றன. Credit Suisse வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையின் படி, “பரந்த பிரிவின் மறுபக்கத்தில், உலகின் 3.5 பில்லியன் வறிய மனிதர்களில் ஒவ்வொருவரும் 10,000 டாலருக்கும் (7,600 பவுண்டுகள்) குறைவான செல்வத்தையே கொண்டிருக்கின்றனர். உலகின் உழைக்கும் வயது மக்கள்தொகையில் 70 சதவீதத்தைக் கொண்ட இம்மக்கள் மொத்தமாய் உலக செல்வத்தில் வெறும் 2.7 சதவீதத்தையே உடமையாகக் கொண்டிருக்கின்றனர்.”[5]

11. செல்வக்குவிப்பின் இந்த ஒட்டுமொத்த அவலட்சணம் என்பது வெறுமனே சமகால முதலாளித்துவத்தின் முகத்திலான ஒரு துரதிர்ஷ்டவசமான மற்றும் சீர்செய்துவிடக் கூடிய கறை அல்ல. இந்த அதீத சமத்துவமின்மையானது நடப்பு சமூக அமைப்பின் திவால்நிலையின் பூரணமான வெளிப்பாடு ஆகும். நவீனகால பரந்த சமூகத்தின் அவசரமான அத்தனை சமூகத் தேவைகளான கல்வி, வீட்டு வசதி, முதியோர் நலம், அனைவருக்குமான மற்றும் உயர்-தர மருத்துவ வசதி, முன்னேறிய பாரிய போக்குவரத்து அமைப்புகளின் அபிவிருத்தி, ஆபத்து சூழ்ந்திருக்கும் உலகச் சூழலமைப்பை பாதுகாப்பது மற்றும் இன்னபிறவும் மத்தியில் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கான மிகப் பரந்த ஆதாரவளங்கள் பெரும்செல்வந்தர்கள் மற்றும் அவர்களது வம்சாவளிகளது முகச்சுளிப்பூட்டத்தக்கதும் மூளையற்றதுமான மனவிருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காய் ஒப்படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பள்ளிகள் கட்டுவதற்கும், கட்டுபடியாகத்தக்க வீட்டுவசதிக்கும், நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும், மற்றும் அருங்காட்சியகங்கள், கலைக் குழுக்கள் மற்றும் பிற இன்றியமையாத கலாச்சார அமைப்புகளுக்கும் செலவிடப்பட வேண்டிய ஆதாரவளங்கள் பெரும் மாளிகைகள், ஆடம்பரக் கப்பல்கள், நகை ஆபரணங்கள் மற்றும் எண்ணற்ற பிற நாகரிகமற்ற ஆடம்பரங்களுக்காய் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

12. நவீன முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர், மனித சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு முற்றுமுதலான முட்டுக்கட்டையாக அவர்களே ஆகியிருக்கின்றனர். அவர்களது தனிநபர் செல்வத்தின் பெருக்கமானது, வெகுஜன வெறுப்பைத் தூண்டுகின்றதும் அமைப்புமுறையின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாகவும் இருக்கின்ற ஒரு அபாயகட்ட நோய்முற்றிய தன்மையைப் பெற்றிருக்கிறது. இன்றைய இயல்புநிலை பகுத்தறிவற்றதாக —நிலப் பிரபுத்துவத்தை அதிகாரத்தில் இருந்து துடைத்தெறிந்த புரட்சியின் சமயத்து பிரெஞ்சு முடியாட்சியை விவரிக்க ஏங்கெல்ஸ் இந்த வார்த்தையைப் பயன்படுத்திய அதேபொருளில்— இருக்கிறது:

1789 இன் பிரான்சின் முடியாட்சி சற்றும் நிஜப்பொருத்தமற்றதாக, அதாவது, ஹேகல் எப்போதும் மிகப்பெரும் உற்சாகத்துடன் பேசுகின்ற மகா புரட்சியால் அது அழித்தாகப்பட வேண்டிய அளவுக்கு, அது இருப்பதற்கான அனைத்து தேவைகளும் அற்றுப் போனதாகவும் மிகவும் பகுத்தறிவற்றதாகவும் ஆகியிருந்தது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் முடியாட்சி நிஜப்பொருத்தமற்றதாகவும் புரட்சிதான் நிஜப்பொருத்தமுடையதாகவும் இருந்தது. ஆகவே, வளர்ச்சியின் பாதையில், முன்பு நிஜப்பொருத்தமுடையதாக இருந்த அத்தனையும் நிஜப்பொருத்தமற்றதாக ஆகின்றன, தமது அவசியத்தை, தமது இருப்புக்கான உரிமையை, தமக்கான பகுத்தறிவு முகாந்திரத்தை இழக்கின்றன. மரணப்படுக்கையில் இருக்கும் நிஜப்பொருத்தத்தின் முகத்தில் ஒரு புதிய உருப்படியான நிஜப்பொருத்தம் வந்து அமர்கிறது —போராட்டமில்லாமல் தனது இறப்பை எய்திக் கொள்ளுமளவுக்கு பழையது போதுமான பக்குவப் புத்தி கொண்டிருந்தால் அமைதியாகவும்; இந்த அவசியத்தை அது எதிர்க்குமாயின் பலவந்தமாகவும். [6]  

13. பெருநிறுவன மற்றும் நிதியப் பிரபுத்துவ முதலைகள் தங்களது செல்வத்தைப் பாதுகாப்பதற்கு எதற்கும் தயங்கமாட்டார்கள் என்பதைக் கணிப்பதற்கு பெரிய அரசியல் உட்பார்வை எதுவும் அவசியமில்லை. தங்களது விருப்பத்தை சமூகத்தின் மீது திணிப்பதற்கு பழக்கப்பட்டிருக்கும் அவர்கள், மக்கள் எதிர்ப்பின் எந்த அறிகுறிக்கும் வன்மையான ஒடுக்குமுறையைக் கொண்டு பதிலிறுப்பு செய்வார்கள். எவ்வாறாயினும், பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமூக சமத்துவமின்மை, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்துச் செல்லும் தாக்குதல்கள், சூழலியல் பேரழிவின் பெருகும் அபாயம், கடிவாளமற்ற ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் அணுஆயுதப் போரின் அச்சுறுத்தல் ஆகியவை உள்ளிட சமகாலத்தின் எந்த முக்கியமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளும் முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள்ளாக தீர்க்கப்பட முடியாது. உண்மையில், வேறுவழியற்று அவசியமாக இருக்கும் சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான எந்த உருப்படியான முயற்சியும் கூட, குறைந்தபட்சம் மிகப்பெரும் தனியார் செல்வங்களைப் பறிமுதல் செய்வதையும் வெகுஆழமாக செல்வத்தை மறுவிநியோகம் செய்வதையும் அவசியமாக்கும். ஆயினும் முதலாளித்துவ வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற வரையில், இத்தகைய சீர்திருத்தங்கள் சாத்தியமற்றவை ஆகும். இவ்வாறாக, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்கின்ற போராட்டமானது, மார்க்ஸ் முன்கணித்ததைப் போல, சமூகப் புரட்சிக்கே இட்டுச் செல்கிறது.

14. 1917 அக்டோபரில் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தினால் அரசு அதிகாரம் கைப்பற்றப்பட்டதானது மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எடுத்துரைத்தவாறான வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தையும் அரசியல் முன்னோக்கையும் ஊர்ஜிதம் செய்தது. ஆயினும் அக்டோபர் புரட்சியானது வெறுமனே புறநிலை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் தன்னிச்சையான விளைபொருள் மட்டுமன்று. தொழிலாள வர்க்கத்தின் வெற்றியானது ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தினை தனக்கு அடித்தளமாய்க் கொண்ட ஒரு மார்க்சிச அரசியல் கட்சியின் தலைமையில் தங்கியிருந்தது. அப்படியானதொரு தலைமை இல்லாதபட்சத்தில், முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி எத்தனை பெரியதாக இருந்தபோதினும், சோசலிசப் புரட்சியானது வெற்றிகாண முடியாது. 1920 இல் கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில், லெனின் அங்கிருந்த பிரதிநிதிகளிடம், ஆளும் வர்க்கத்திற்கு அங்கு “முற்றிலும் நம்பிக்கையற்ற” நிலைமைகள் அங்கே இருக்கவில்லை என்று எச்சரித்தார்.

முன்கூட்டி ”முற்றிலுமான” நம்பிக்கையின்மையை “நிரூபிப்பதற்கான” முயற்சியானது வெற்று வறட்டுவாதமாகவோ அல்லது கருத்துக்கள் மற்றும் வார்த்தைகளைக் கொண்டு விளையாடுவதாகவோ தான் இருக்கும். அனுபவம் மட்டுமே இந்த அல்லது இதனையொத்த பிரச்சினைகளிலான ஒரு உண்மையான “நிரூபண”த்தை வழங்க முடியும். முதலாளித்துவ ஒழுங்கு இன்று உலகெங்கிலும் ஒரு அசாதாரணமான புரட்சிகர நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியை ஒரு வெற்றிகாண்கின்ற மற்றும் வெற்றிகரமான புரட்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்ற அளவுக்கு புரட்சிகரக் கட்சிகள் போதுமான நனவு கொண்டிருக்கின்றன என்பதையும், போதுமான ஒழுங்கமைப்பு, சுரண்டப்படும் பரந்த மக்களுடனான தொடர்புகள், தீர்மானகரமான மனஉறுதி மற்றும் புரிதலை கொண்டிருக்கின்றன என்பதையும், அவற்றின் நடைமுறையின் மூலமாக நாம் தான் இப்போது “நிரூபித்தாக” வேண்டும். [7]

15. லெனினின் எச்சரிக்கை துன்பியலான விதத்தில் ஊர்ஜிதப்பட்டது. அக்டோபர் புரட்சியை தொடர்ந்து வந்த ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களில், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான சாத்தியத்தை முன்நிறுத்திய புரட்சிகர சூழ்நிலைகளுக்கு அங்கே எந்த பஞ்சமும் இருக்கவில்லை. இரண்டு அழிவுகரமான உலகப் போர்கள், உலகெங்கிலும் பாரிய வெகுஜன எழுச்சிகள், மற்றும் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் முழுமையான பொறிவின் ஏராளமான அத்தியாயங்கள் இத்தனைக்குப் பின்னரும் கூட, இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவம் தப்பிப் பிழைத்ததென்றால், இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்தில் அத்தியாவசியமான புரட்சிகர அரசியல் தலைமை இல்லாமல் இருந்ததே காரணமாகும்.

16. முதலாம் உலகப் போர் வெடித்ததை அடுத்து, இரண்டாம் அகிலத்தின் சமூக ஜனநாயகக் கட்சிகள் ஏகாதிபத்தியத்தின் பக்கத்திற்கு நகர்ந்தன, “தேசியப் பாதுகாப்பு” வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டன, தொழிலாள வர்க்கத்தின் போருக்குப் பிந்தைய புரட்சிகர மேலெழுச்சியைக் காட்டிக்கொடுத்தன. சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வளர்ச்சியானது மூன்றாம் (கம்யூனிச) அகிலத்தின் அழிவுக்கு இட்டுச் சென்றது. 1924 இல் வெளிவந்த “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் ஸ்ராலினிச வேலைத்திட்டமானது, ஆளும் அதிகாரத்துவத்தால் தீர்மானிக்கப்பட்டவிதமாக சோவியத் அரசின் நலன்களுக்கு மூன்றாம் அகிலம் கீழ்ப்படியச் செய்யப்படுவதற்கு இட்டுச்சென்றது.

17. சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் ஏகாதிபத்தியத்தின் அரசியல் முகமைகளாக உருமாற்றம் கண்டதானது 1920கள் மற்றும் 1930களில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நாசகரமான அழிவுகளுக்கு இட்டுச் சென்றது. 1927 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி அழிக்கப்பட்டது, 1933 இல் நாஜிக்களது வெற்றி மற்றும் ஜேர்மனியில் சோசலிச இயக்கம் நசுக்கப்பட்டது, மற்றும் ஸ்பானியப் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டு பிராங்கோவின் பாசிச ஆட்சி அதிகாரத்துக்கு வந்தமை (1936-39) ஆகியவை இத்தோல்விகளில் மிக மோசமானவையாகும்.

18. 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். ஸ்ராலினிச ஆட்சியின் சோசலிசத்தின் தேசியவாதத் திரிப்பு, தொழிலாளர்’ ஜனநாயகம் ஒடுக்கப்பட்டமை, மற்றும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம் கைவிடப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக 1923 தொடங்கி அவர் நடத்தியிருந்த அரசியல் போராட்டத்தின் உச்சமாய் இது அமைந்திருந்தது. புதிய அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில், ட்ரொட்ஸ்கி, “புரட்சிகரத் தலைமை நெருக்கடியே” முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்துக்கான உருமாற்றத்தின் மையப் பிரச்சினையாக இருந்ததென அடையாளம்கண்டார்.

19. அதற்கு எண்பது ஆண்டுகளின் பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறையின் அதிகரித்துச் செல்லும் உலகளாவிய நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துச் செல்லும் போர்க்குணம் ஆகியவற்றின் ஒரு புதிய காலகட்டத்தில், பின்வரும் கேள்வி எழுப்பப்பட வேண்டும்: புரட்சிகரத் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன இருக்கின்றன? தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகள், சமூக நனவுடைய இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியிலான மிக முற்போக்கான கூறுகளை தனது பக்கத்திற்கு நான்காம் அகிலம் வென்றெடுத்து, தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட போராட்டங்களை உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு இட்டுச் செல்வது சாத்தியமாகுமா?

20. தலைமைப் பிரச்சினை குறித்த ஆய்வினை, ஒரு பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் அமர்த்துவது இந்தக் கேள்விக்கான பதிலுக்கு அவசியமாயுள்ளது.

21. இந்த ஆண்டில் இன்னுமொரு நினைவும் அனுசரிக்கப்பட இருக்கிறது: 1968 மே-ஜூன் நிகழ்வுகள் மற்றும் முதலாளித்துவ பிரான்சை ஒரு சோசலிசப் புரட்சியின் விளிம்பு வரை கொண்டுவந்த பாரிய பொது வேலைநிறுத்தத்தின் ஐம்பதாவது ஆண்டு. 1968 இன் நிகழ்வுகள் மக்கள் நினைவுகளில் இப்போதும் எதிரொலிப்பவை: பிரான்சிலான பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தம் தவிர, அது வியட்நாமில் டெட் தாக்குதலின் (Tet Offensive) ஆண்டாகவும், அமெரிக்காவில் அதீத ஸ்திரமின்மையின் (இரண்டு அரசியல் படுகொலைகள் மற்றும் பெரும் அமெரிக்க நகரங்களில் கலகங்களின் வெடிப்பில் வெளிப்பட்டது) ஆண்டாகவும், செக்கோஸ்லாவக்கியாவில் சோவியத் ஒன்றியத்தின் ஆயுதத் தலையீடு மற்றும் வார்சோ ஒப்பந்தத்தின் மூலமாக ஆகஸ்டில் ஒடுக்கப்பட்ட ஸ்ராலினிச-எதிர்ப்பு பிராக் (Prague) வசந்த ஆண்டாகவும் இருந்தது.

22. 1968 இன் நிகழ்வுகள் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுகின்ற ஒரு நிகழ்வை ஆரம்பித்து வைத்தது. 1968க்கும் 1975க்கும் இடையிலான காலகட்டமானது இத்தாலி, ஜேர்மனி, பிரிட்டன், அர்ஜென்டினா மற்றும் அமெரிக்காவில் வேலைநிறுத்த அலைகள் உள்ளிட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் மாபெரும் சர்வதேசப் புரட்சிகர இயக்கத்தால் அடையாளம்காணப்பட்டது. ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகள், ஹிட்லரின் நாஜிக்களது வெற்றிக்குப் பிந்தைய காலத்தின் தமது முதல் அரசாங்கத்தை உருவாக்கினர். 1970 இல் அலெண்டே அரசாங்கம் சிலியில் ஆட்சிக்கு வந்தது. 1973-74 குளிர்காலத்தில் பிரிட்டனில் நடந்த சுரங்கத் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் வலது-சாரி டோரி அரசாங்கத்தை இராஜினாமா செய்யத் தள்ளியது. கிரேக்க இராணுவ ஆட்சிக்குழு 1974 ஜூலையில் தூக்கிவீசப்பட்டது. நாடாளுமன்றக் கண்டனம் எதிர்நின்ற நிலையில், ரிச்சார்ட் நிக்சன் 1974 ஆகஸ்டில் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். போர்ச்சுகலில் 1926 முதலாக அதிகாரத்தில் இருந்த பாசிச ஆட்சி 1975 ஏப்ரலில் உருக்குலைந்தது. 1975 நவம்பரில் பிராங்கோவின் மரணமானது ஸ்பெயினில் பழைய சர்வாதிகாரத்தின் நொருங்குதன்மையை மட்டுமின்றி, முதலாளித்துவ ஆட்சியின் நொருங்குதன்மையையும் அம்பலப்படுத்தியது. தேசிய விடுதலையின் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை உலுக்கின.

23. ஆயினும் கூட, இந்த வெகுஜனப் போராட்டங்களின் சர்வதேச வீச்சையும் தாண்டி, முதலாளித்துவ அமைப்புமுறை இந்த எழுச்சிக்குத் தப்பிப் பிழைக்க முடிந்தது மட்டுமல்ல, அது தொழிலாள வர்க்கத்தை தோற்கடிக்க முடிந்ததோடு (1973 இல் சிலியில் அலெண்டேயின் ஆட்சி தூக்கிவீசப்பட்டதில் போல) தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஒரு எதிர்-தாக்குதலுக்கான அடிப்படையையும் அமைத்துத் தர முடிந்தது. 1970களின் பின்பகுதியில் மார்கரெட் தாட்சர் ஆட்சிக்கு வந்ததுடன் (அதற்கு சற்றுப்பின்னர் ரொனால்ட் ரீகன் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பின்தொடர்ந்தது) ஆளும் வர்க்கத்தினால் இது தொடங்கப்பட்டது.

24. 1968 மற்றும் 1975க்கு இடையிலான உலகளாவிய எழுச்சிகளின் மத்தியில் முதலாளித்துவம் தப்பிப்பிழைத்ததானது, எல்லாவற்றுக்கும் மேல், அச்சமயத்தில் வெகுஜன தொழிலாளர்’ இயக்கங்களில் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும்தான் தொடர்ந்தும் மேலாதிக்கமான சக்திகளாக இருந்தன என்ற காரணத்தில்தான். மில்லியன் கணக்கில் அங்கத்தவர்களைக் கொண்டிருந்த அவை, தமது அதிகாரத்துவ சக்தியை பிரயோகித்து, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை மட்டுப்படுத்தின, திசைதிருப்பின, அவசியமான இடங்களில் உண்மையில் அவற்றின் தோல்விக்கு ஏற்பாடு செய்தன. சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சியும் சீனாவில் இருந்த மாவோயிச ஆட்சியும் மார்க்சிசத்தை திட்டமிட்டு பொய்மைப்படுத்தின, அமெரிக்காவுடனும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடனுமான உறவுகளை மேம்படுத்துவதற்கு தாங்கள் செய்த முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய புரட்சிகர இயக்கங்களை ஒழிப்பதற்கு தங்களது சக்திக்குட்பட்ட அத்தனை ஆதாரவளங்களையும் பயன்படுத்தின. குறைவாக அபிவிருத்தியடைந்த நாடுகளில், ஸ்ராலினிச மற்றும் மாவோயிச ஆட்சிகள், தொழிலாள வர்க்கத்தின் மீது பல்வேறு முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் கொண்டிருந்த செல்வாக்கை தொடர்ந்து பராமரித்து வர முனைந்தன, அதன்மூலம் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு குழிபறித்தனர்.

25. இந்த முக்கியமான காலகட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கிற்கு எதிராகப் போராடியது. சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளது பெரும் அதிகாரத்துவ அமைப்புகளின் மூலம் மட்டுமல்லாது, 1950கள் மற்றும் 1960களில் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட சந்தர்ப்பவாத அமைப்புகளின் துரோகத்தனமான அரசியல் பாத்திரத்தினாலும் அனைத்துலகக் குழுவின் மீது திணிக்கப்பட்டிருந்த தீவிர அரசியல் தனிமைப்படல் நிலைமைகளின் கீழும், அது இதனைச் செய்துவந்தது.

26. குறிப்பாக, ட்ரொட்ஸ்கிச-விரோத திருத்தல்வாதத்தின் பிரதான தத்துவாசிரியரின் பெயரால் அழைக்கப்படுவதான பப்லோவாத அமைப்புகள், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை நிராகரித்தன. மிஷேல் பப்லோவும் அவரது பிரதான அரசியல் சகாவான ஏர்னெஸ்ட் மண்டேலும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை எதிர்ப்புரட்சிகரமானதாக ட்ரொட்ஸ்கி குணாம்சப்படுத்தியதை நிராகரித்தனர். சோவியத் அதிகாரத்துவமானது, புறநிலை நிகழ்வுகள் மற்றும் பரந்துபட்ட மக்களின் வெகுஜன இயக்கத்தின் அழுத்தத்தின் கீழ், புரட்சிகரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்று அவர்கள் வாதிட்டனர். அதேபோல புறநிலை நிகழ்வுகளின் அழுத்தமானது சமூக ஜனநாயகவாதிகளையும் முதலாளித்துவ தேசியவாதிகளையும் ஒரு புரட்சிகரப் பாத்திரம் ஆற்றச் செய்ய நிர்ப்பந்திக்க முடியும் என்றனர்.  

27. நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கு எந்த அவசியமும் இல்லை என்பதே ட்ரொட்ஸ்கிசத்திலான இந்த ஆழ்ந்த தாக்கம் கொண்ட திருத்தல்களில் இருந்து தேற்றம் செய்யப்பட்ட முடிவாக இருந்தது. கியூபாவில் காஸ்ட்ரோ மற்றும் அல்ஜீரியாவில் பென் பெல்லா என ட்ரொட்ஸ்கிசத்துக்கு எண்ணற்ற “மாற்று”களை பப்லோவாதிகள் கண்டறிந்து அவர்களைப் போற்றினர். நான்காம் அகிலத்தின் அரசியல்ரீதியான கலைப்பை ஏற்க மறுத்தமைக்காக, அனைத்துலகக் குழுவை “அதி-இடது குறுங்குழுவாதிகள்” என்று பப்லோவாதிகள் கண்டனம் செய்தனர்.

28. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளும், மாவோயிஸ்டுகளும், மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பல்வேறு வடிவங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் பாரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களின் மீதும் தீவிரமாய் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். ஆனால் இந்த அமைப்புகளில் இன்று எஞ்சியிருப்பது என்ன?

29. சோவியத் ஒன்றியம் இல்லாது போயிருக்கிறது, ஸ்ராலினிசக் கட்சிகளின் உலகளாவிய வலைப்பின்னலும் பெருமளவுக்கு காணாமல் போய்விட்டிருக்கிறது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் அரசியல் மற்றும் அரசு அமைப்பாக இருக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சிகள் மிக வலது-சாரி முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து ஏறக்குறைய பிரித்தறிய முடியாத நிலையில் இருக்கின்றன. தொழிலாளர்கள் எங்கும் தங்களது நலன்களின் காவலர்களாக இவற்றைப் பார்ப்பதில்லை. இடதுகள் போல் தம்மை காட்டிக்கொள்வதன் மூலம் (பிரிட்டனில் கோர்பின்) சற்று நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சமூக ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற முயற்சியைப் பொறுத்தவரை, இந்த மோசடி வேலையானது, கிரீசில் நடந்தது போலவே, அவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு உயர்ந்த உடனேயே ஒரு ஏமாற்றுவித்தையாக அம்பலப்படும்.

30. முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களைப் பொறுத்தவரையில், அவற்றின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு நடிப்புகளில் இன்று எதுவும் மிச்சமில்லை. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தென் ஆபிரிக்காவின் ஆளும் கட்சியாக பரிணாம வளர்ச்சி கண்டதானது —மனச்சஞ்சலமின்றி செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாத்தும் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை சுட்டுத்தள்ளியும்— முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்று பயணப்பாதை மற்றும் வர்க்க சாராம்சத்தின் அடிப்படை வெளிப்பாடாக இருக்கிறது.

31. இறுதியாக, பப்லோவாத அமைப்புகளும், அவற்றுடன் போலி-இடதுகளைக் கொண்ட பல்வேறு இயக்கங்களும் தங்களை முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கின்றன. இது கிரீசில் சிரிசா அதிகாரத்துக்கு வந்தபோது மிகத் தெளிவாக வெளிப்பட்டது, சிரிசா அங்கு ஐரோப்பிய வங்கிகளால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர் விரோதக் கொள்கைகளைத் திணிக்கிறது.

32. இந்த அமைப்புகளின் அரசியல் சீரழிவுக்கும் வீழ்ச்சிக்குமான விளக்கம், அவற்றின் பிராந்திய தேசியவாத-சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களுக்கும் முதலாளித்துவம் ஒரு உலகளாவிய ஒருங்கிணைப்பு கொண்ட பொருளாதார அமைப்புமுறையாக அபிவிருத்தி கண்டதற்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய முரண்பாடுகளில் காணத்தக்கதாகும்.

33. ஸ்ராலினிச, மாவோயிச, சமூக ஜனநாயக, முதலாளித்துவ தேசியவாத மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாத அமைப்புகளுக்கு இடையில் பொதுவான அரசியல் கூறாக இருப்பது என்னவென்றால், தேசிய அரசின் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியத்தின் மீது இவற்றின் வேலைத்திட்டம் தங்கியிருக்கின்றது என்பதாகும். பொருளாதார உலகமயமாக்க நிகழ்ச்சிப்போக்கு 1980களில் துரிதப்பட்டதால், இந்த தேசியக் களத்திலான அமைப்புகளின் முன்னோக்கும் வேலைத்திட்டமும் அத்தனை செல்தகைமையையும் இழந்திருக்கின்றன.

34. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தை, உலகளாவிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச அபிவிருத்தி ஆகிய புறநிலை நிகழ்ச்சிப்போக்குடன் ஒன்றிணையச்செய்வதில்தான் தொழிலாள வர்க்கத் தலைமை நெருக்கடியை வெற்றிகரமாக தீர்ப்பதற்கான சாத்தியவளம் தங்கியிருக்கிறது. இதுவே 1968க்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற ட்ரொட்ஸ்கிசத்திற்கும், மார்க்சிச-விரோத மற்றும் போலி-இடதுவாத அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் இடையிலான அரசியல் சக்திகளது உறவிலான பரந்த மாற்றத்திற்கான உண்மையான அடிப்படையாகும்.

35. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக, பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் இறுதி எச்சசொச்சங்களையும் நான்காம் அகிலத்தில் இருந்து வெளியேற்றியதன் பின்னர், அனைத்துலகக் குழுவானது, அடுத்து வந்த தசாப்தங்களில் அதன் வேலைக்கு வழிநடத்தவிருந்த சர்வதேச அரசியல் பகுப்பாய்வை அபிவிருத்தி செய்தது. 1988 இல் வெளியிடப்பட்ட இந்த முன்னோக்கு, முதலாளித்துவ அபிவிருத்தியின் புறநிலையான போக்குகளுக்குத் தக்கதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சிகள் அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்பதை வலியுறுத்தியது. “நாடுகடந்த நிறுவனங்களின் பாரிய வளர்ச்சி மற்றும் அதனால் முதலாளித்துவ உற்பத்தியில் விளைந்திருக்கும் உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகியவை உலகெங்குமான தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற நிலைமைகளில் முன்கண்டிராதளவில் ஒரேமாதிரியான தன்மையை உருவாக்கியிருக்கின்றன” என அது விளக்கியது. [8]

36. அனைத்துலகக் குழு இந்த பகுப்பாய்வில் இருந்து பின்வரும் மூலோபாய முடிவைத் தேற்றம் செய்தது:

வர்க்கப் போராட்டம் அதன் வடிவத்தில் மட்டுமே தேசிய அளவிலானது, ஆயினும் சாரத்தில் அது ஒரு சர்வதேசியப் போராட்டமே என்பது மார்க்சிசத்தின் அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்க்கையில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையைப் பெற்றாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மிக ஆரம்பநிலைப் போராட்டங்களும் கூட அதன் நடவடிக்கைகளை ஒரு சர்வதேசிய அளவில் ஒருங்கிணைப்பதற்கான அவசியத்தை முன்நிறுத்துகின்றன.[9]

37. 1988 ஆகஸ்டில் நடந்த வேர்க்கர்ஸ் லீக்கின் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) பதிமூன்றாவது தேசிய காங்கிரசில், இந்த பகுப்பாய்வின் நடைமுறைத் தாக்கங்கள் விளக்கப்பட்டன:

சர்வதேச நெருக்கடிக்கு தேசியத் தீர்வுகளை தேடுவதானது, தவிர்க்கவியலாமல் ஒவ்வொரு தேசிய தொழிலாளர் இயக்கத்தையும் முதலாளித்துவத்தின் வர்த்தகப் போர்க் கொள்கைகளுக்கு கீழ்ப்படியச் செய்வதற்கு இட்டுச்செல்கிறது. புரட்சிகர சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் அல்லாமல் இந்த இக்கட்டில் இருந்து வெளியில் வருவதற்கான எந்த வழியும் இல்லை. இது எங்களுக்கு ஒரு விடுமுறைகால வாசகம் அல்ல. ஒட்டுமொத்த உலகத்தின் தொழிலாள வர்க்கத்தையும் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்ட, “ஒரே உலக மையத்தையும் ஒரே உலக அரசியல் நோக்குநிலையையும் கொண்ட புரட்சிகர நடவடிக்கையின் ஒற்றை சர்வசதேச பாட்டாளி வர்க்க அமைப்பு”க்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டுவருவதுதான் ட்ரொட்ஸ்கிச இயக்கம் முகம்கொடுக்கின்ற தலையாய மூலோபாயக் கடமையாக இருக்கிறது.

நாங்கள் இதனை ஏதோ கற்பனாவாத இலக்காக கொள்ளவில்லை. இந்த சகாப்தத்தின் மீதும் இன்றைய உலக நெருக்கடியின் தன்மையின் மீதுமான எங்களது விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வு, பாட்டாளி வர்க்கத்தின் இந்த ஐக்கியப்படுத்தல் சாத்தியம் என்பதில் மட்டுமல்ல,  மாறாக இந்த மூலோபாய நோக்குநிலையின் மீது தனது அன்றாட வேலையை அடித்தளமாக அமைத்துக் கொள்கின்றதொரு கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்தினுள் வேரூன்றிக்கொள்ள முடியும் என்பதிலும் எங்களை உறுதிகொள்ளச் செய்கிறது. புறநிலைப் பொருளாதாரப் போக்குகளின் மற்றும் மார்க்சிஸ்டுகளின் அகநிலை செல்வாக்கின் கூட்டான அழுத்தத்தின் கீழ் அடுத்த கட்ட பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள் ஒரு சர்வதேச பயணப் பாதையில் அபிவிருத்தி காணும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாட்டாளி வர்க்கமானது நடைமுறையில் மேலும் மேலும் ஒரு சர்வதேச வர்க்கமாக தன்னை வரையறைத்துக் கொள்ளச் செல்லும்; அத்துடன் இந்த உயிர்த்துடிப்புடனான போக்கின் வெளிப்பாடாய் திகழும் கொள்கைகளைக் கொண்ட மார்க்சிச சர்வதேசியவாதிகள், இந்த நிகழ்ச்சிப்போக்கை வளர்த்தெடுத்து அதற்கு நனவான வடிவத்தைக் கொடுப்பார்கள்.[10]   

38. இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், அனைத்துலகக் குழு அதன் அமைப்புரீதியான மற்றும் நடைமுறை வேலைகளில் கணிசமான மாற்றங்களைச் செய்தது. 1995 வரை அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கழகங்களாய் இருந்தன. அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபித்தது, பழைய வெகுஜன அதிகாரத்துவ அமைப்புகளது நெருக்கடி மற்றும் பொறிவின் மத்தியில் புரட்சிகர மார்க்சிசப் போக்குக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் ஒரு புதிய உறவு எழுந்திருந்ததை வெளிப்படுத்திய ஒரு அமைப்பு வடிவ மாற்றமாக அது இருந்தது. புதிய கட்சிக்கான பெயர்த் தெரிவு சமத்துவத்திற்கான போராட்டத்தை சோசலிசத்தின் மாபெரும் இலட்சியமாக அடையாளம் கண்டதுடன், முதலாளித்துவ சமத்துவமின்மைக்கு எதிரான மக்கள் ஆவேசத்தையும் அது முன்கணித்ததாய் இருந்தது. அதனைப் பின்தொடர்ந்த மாதங்களில், அனைத்துலகக் குழுவின் அத்தனை பிரிவுகளும் இதே அரசியல் மறுஒழுங்கினை நடத்தின. பழைய லீக்குகள் கட்சிகளாக உருமாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலகக் குழுவானது, இணைய வளர்ச்சியுடன் தொடர்புபட்ட தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற விதமாக, அரசியல் வேலையின் ஒரு புதிய வடிவத்தை ஏற்றுக்கொண்டது. கிட்டத்த இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1998 பிப்ரவரியில், உலக சோசலிச வலைத் தளம் தொடக்கப்பட்டமையானது, ஒரு உண்மையான புரட்சிகர அரசியல் முன்னெடுப்பாக இருந்தது. அனைத்துலகக் குழு விளக்கியவாறாக: 

ஒரு சர்வதேச மட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டுவதற்கும் அதனை ஐக்கியப்படுத்துவதற்குமான முன்கண்டிராத ஒரு கருவியாக WSWS ஆகும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாடுகடந்த பெருநிறுவனங்கள் உழைப்புக்கு எதிரான தங்கள் போரை தேசிய எல்லைகளைக் கடந்து எப்படி ஒருங்கிணைத்துக் கொள்கின்றனவோ அதைப் போல, வெவ்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களும் மூலதனத்திற்கு எதிரான தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு அது உதவும். அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடலுக்கு இது வழிவகுக்கும், தங்கள் அனுபவங்களை ஒப்பிட்டுக் கொள்வதன் மூலமாக ஒரு பொதுவான மூலோபாயத்தை எடுத்துரைப்பதற்கு இது அவர்களை அனுமதிக்கும்.

இணையம் விரிய விரிய உலக சோசலிச வலைத் தளத்திற்கான உலக வாசகர்கள் எண்ணிக்கையும் பெருகும் என ICFI எதிர்பார்க்கிறது. தகவல்தொடர்பின் ஒரு துரிதமான மற்றும் உலகளாவிய வடிவமாக, இணையம் அசாதாரணமான ஜனநாயக மற்றும் புரட்சிகர தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்கள் தொடங்கி அருங்காட்சியகங்கள் வரையிலும் உலகின் புத்திஜீவித ஆதாரவளங்களுக்கான அணுகல் பரந்துபட்ட வாசகர்களுக்குக் கிடைப்பதற்கு இது வழிசெய்யும்.[11]

39. இருபது ஆண்டுகாலமாக உலக சோசலிச வலைத் தளம் அன்றாடம் வெளியிடப்பட்டு வந்திருக்கிறது என்பது, எந்த புறநிலை அளவீட்டின் படியும், ஒரு அசாதாரணமான அரசியல் சாதனை ஆகும். கால அட்டவணைநிரலின்படி ஒரேயொரு நாளும் கூட தவறாமல் இத்தகையதொரு நீண்ட காலத்திற்கு வெளியீட்டைப் பராமரித்து வருவதற்கு அனைத்துலகக் குழுவின் காரியாளர்கள் கொண்டிருக்கின்ற திறமானது அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் தெளிவுநிலைக்கும் அதன் குறிப்பிடத்தகுந்த அமைப்பு ஐக்கியம் மற்றும் வலிமைக்கும் சாட்சியமளிக்கிறது. தொலைவில் இருந்து பார்க்கையில் உலக சோசலிச வலைத் தளத்தைப் போல தென்படக் கூடியதாகக் கூட உலகில் வேறொந்தவொரு வெளியீடும் இல்லை. நாளின் முக்கிய நிகழ்வுகளை ஆய்வுசெய்கின்ற மற்றும் வருணனை செய்கின்ற, பதிவுசெய்கின்ற சோசலிச வெளியீடாக மட்டுமல்ல. போராடுகின்ற தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயவாதியாகவும் உரிமைக்காவலனாகவும் அது இருக்கிறது.

40. கடந்த ஆண்டின் போது, கூகுள் உலக சோசலிச வலைத் தளத்தை இருட்டடிப்பு செய்யவும் தணிக்கை செய்யவும் முனைந்திருக்கிறது. அந்த முயற்சிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றன. உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கை தொடர்ந்தும் பெருகிச் செல்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் எழுந்துவரும் இயக்கத்தில் இருந்து அது வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது.

41. கடந்தவை முகவுரை மட்டுமே. சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சிக்குத் தயாரிப்பு செய்வதே அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை வேலைகள் அத்தனையுமாக இருந்து வந்திருக்கிறது. படிப்படியாகவும், நனவாகவும் மற்றும் தீவிரமாகவும் ஒரு புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதே முன்முதல் கடமையாகும். சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற மனிதகுலம் முகம்கொடுக்கின்ற அடிப்படைப் பிரச்சினைக்கான ஒரு முற்போக்கான தீர்வு இந்தக் கடமையின் மீதே தங்கியிருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைகளை விரிவுபடுத்துவதும், போராட்டத்துக்குள் நுழைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அதன் பிரிவுகளது தொடுஎல்லையை நீட்சிசெய்வதும், உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு புதிய சக்திகளை வென்றெடுப்பதும், வரலாற்றிலும் மார்க்சிசத்தின் உலக விஞ்ஞான கண்ணோட்டத்திலும் அவர்களுக்குக் கல்வியூட்டுவதை மேற்கொள்வதும் 2018 முன்நிறுத்துகின்ற சவாலாகும். காரல் மார்க்ஸ் பிறந்த இருநூறாவது ஆண்டை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, “மெய்யியலாளர்கள் உலகத்தை பல்வேறு விதமாய் பொருள்விளக்கம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்; ஆனால் செய்யப்படவேண்டியவிடயம், அதனை மாற்றுவது என்பதாகும்” என்ற அவரது மிகப் பிரபலமான கூற்றிற்கு ஏற்றவிதத்தில் கொண்டாடும்.

***

Footnotes:

[1] Karl Marx,” in Collected Works, Volume 20 (Moscow, 1964), p. 50

[2] Letter of Karl Marx to Joseph Weydemeyer, March 5, 1852 in Marx-Engels Collected Works (New York, 1983), Volume 39, pp. 64–65

[3] “Richest 1% own half the world’s wealth, study finds,” in https://www.theguardian.com/inequality/2017/nov/14/worlds-richest-wealth-credit-suisse

[4] “World’s Wealthiest Became $1 Trillion Richer in 2017,” in Bloomberg, https://www.bloomberg.com/news/articles/2017-12-27/world-s-wealthiest-gain-1-trillion-in-17-on-market-exuberance

[5] https://www.theguardian.com/inequality/2017/nov/14/worlds-richest-wealth-credit-suisse

[6] Ludwig Feuerbach and the End of Classical German Philosophy in Marx-Engels Collected Works, Volume 26 (Moscow, 1990), pp. 358-59

[7] The Second Congress of the Communist International, Volume 1 (London: 1977), p. 24

[8] “The World Capitalist Crisis and the Tasks of the Fourth International,” Fourth International, Volume 15, Nos. 3-5, July-December 1988, p. 4

[9] Ibid

[10] David North, “Report to the Workers League Thirteenth National Congress,” Fourth International, Vol. 15, Nos. 3-4, July-December 1988, pp. 38-39

[11] https://www.wsws.org/en/special/about.html