ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US suspends security aid to Pakistan as part of Afghan War push

ஆப்கானிய போர் உந்துதலின் பாகமாக பாகிஸ்தானுக்கு வழங்கும் பாதுகாப்பு உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது

By Jordan Shilton 
6 January 2018

பாகிஸ்தானுக்கான அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் அநேகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வியாழனன்று அறிவித்தது. ஆப்கானிய யுத்தக் கூட்டணி கொடுப்பனவுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் உட்பட, வருடத்திற்கு பாதுகாப்பு உதவிக்கென மதிப்பிடப்பட்ட 1 பில்லியன் டாலர் மீது இந்த நகர்வு தாக்கத்தை ஏற்படுத்தும்.    

இந்த முடிவு, ஏற்கனவே அதிகளவு கொந்தளிப்பாகவுள்ள தெற்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலும் புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிக்கச் செய்யும். மேலும் அப்பகுதி, இந்தியா-அமெரிக்கா மற்றும் சீனா-பாகிஸ்தான் போன்ற இராணுவ-மூலோபாய கூட்டணிகளின் போட்டிக்கு மத்தியில் அதிகரித்தளவில் துருவமயமாக்கப்பட்டுள்ளது.  

தாலிபான் மற்றும் ஹக்கனி வலையமைப்பின் கூறுகளுடன் வெளிப்படையாகவே இஸ்லாமாபாத் தொடர்ந்து கூட்டுக்கள் வைத்திருப்பதைக் குறிப்பிட்டு, ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் மீதான உதவி வெட்டுக்களை நியாயப்படுத்தியுள்ளது. பிந்தையது, பாகிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாகத்தின் பழங்குடிப் பகுதிகளை (Pakistan’s Federally Administered Tribal Areas) பாதுகாப்பான புகலிடமாக அனுபவிப்பதாகக் கூறப்படும், மற்றும் அருகிலுள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் மீது மிகவும்  ஆபத்தான சில தாக்குதல்களை நடத்தியுள்ள தாலிபானுடன் இணைந்த ஒரு போர்க்குணமிக்க இஸ்லாமிய குழுவாகும்.    

இந்த அறிவிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக ட்ரம்ப் அவரது ட்வீட்டில், “கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்கா முட்டாள் தனமாக 33 பில்லியன் டாலருக்கு அதிகமான நிதியுதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது, ஆனால் அவர்களோ எங்களது தலைவர்களை முட்டாள்களாக நினைத்து பொய்களையும் ஏமாற்றங்களையும் தான் எங்களுக்கு வழங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நாங்கள் வேட்டையாடும் தீவிரவாதிகளுக்கு சிறு உதவியுடன் அவர்கள் புகலிடம் வழங்கியுள்ளனர், இனி இல்லை!” என்று குறிப்பிட்டிருந்தார்.      

ஆகஸ்டில் ட்ரம்ப் அறிவித்திருந்ததான, ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவிற்காக செயல்படுத்தப்படும் மூலோபாயத்தின் ஒரு பாகமாக வியாழக்கிழமை முடிவு உள்ளது. இராணுவ பார்வையாளர்களுக்கு வழங்கிய ஒரு உரையில், ஆப்கானிஸ்தான் மீது ஒரு காலவரையற்ற, அதாவது நிலையான அமெரிக்க ஆக்கிரமிப்பை பாதுகாக்கப் போவதாகவும், மேலும் தாலிபான் மற்றும் மற்ற எதிர்ப்பு குழுக்களுக்கு எதிராக இன்னும் மிருகத்தனமான நவகாலனித்துவப் போரைத் தொடுப்பதற்கு இராணுவத்தின் கரங்களை கட்டவிழ்த்து விடப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி சபதம் செய்தார்.                 

ட்ரம்ப் பாகிஸ்தான் மீது கவனம் வைத்துள்ளதோடு, அமெரிக்க மூலோபாயத்திற்கு அது ஒத்துவரவில்லை என்றால் வாஷிங்டன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறினார். அமெரிக்காவின் ஒரு நேட்டோ உறுப்பினர் அல்லாத முக்கிய கூட்டணி நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் இழக்கக்கூடும் என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவான ஒரு அரசாங்கமாக அது முத்திரைகுத்தப்படும் என்றும் பின்னணியில் உள்ள விளக்கங்களும், உதவிகளும் குறிப்பிடுகின்றன.

16 வருட பழமை வாய்ந்த ஆப்கானியப் போர் ஏற்கனவே பத்தாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பறித்ததோடு, மில்லியன் கணக்கானோர் அவர்களது வீடுவாசல்களை இழந்து தப்பியோடச் செய்தது.

இந்த ஆகஸ்ட் மூலோபாய மாற்றம், கடந்த ஆண்டு அந்நாட்டின் மீது அமெரிக்க விமானப் படை மூலமாக வீசப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கையை மும்மடங்காக்குவதில் ஒரு முக்கிய பங்காற்றியது. வெள்ளை மாளிகையால் நீண்ட காலமாக ஒப்புதலளிக்கப்படாத வான்வழித் தாக்குதல்களுடனான ஒரு மோதலை அதிகரிக்கச் செய்ய இராணுவ தளபதிகளின் கரங்களுக்கு ஒரு முழு சுதந்திரத்தை ட்ரம்ப் வழங்கினார்.  

2002 இல், ஆப்கானியப் போர் தொடங்கிய  பின்னர் உடனடியாக, பாகிஸ்தானுக்கான வருடாந்திர அமெரிக்க பாதுகாப்பு நிதியுதவி 1.6 பில்லியன் டாலராக இருந்ததையே தற்போது கைவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத குழுக்களை வீழ்த்த இஸ்லாமாபாத் நடவடிக்கைகளை எடுக்குமானால், ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்கேற்புக்கு அமெரிக்கா தனது நிதியளிப்புகளை முன்பு போலவே வழங்கும் என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. அடையாளம் காணக்கூடிய நோக்கங்களுக்காக ஒரு நிபந்தனை அடிப்படையிலான அணுகுமுறையில் அமெரிக்கா சில நிதியுதவிகள் வழங்குவதைத் தொடரக்கூடும் என்று அறிக்கைகள் பரிந்துரைத்தன.

புதனன்று, ட்ரம்பின் தேசிய பாதுகாப்புச் செயலர் எச்.ஆர்.மெக்மாஸ்டர் தெரிவித்த கருத்து, வெளிவிவகாரத்துறை அறிவிப்பின் ஆத்திரமூட்டும் குணாம்சத்தை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் “இனிமேல் நீண்டகாலத்திற்கு முரண்பாடுகளின் சுமையை தாங்க” இயலாது என்றும், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் "பாகிஸ்தானின் நடத்தையால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார்” என்றும் மெக்மாஸ்டர் தெரிவித்தார். 

ஒரு மறைமுக அச்சுறுத்தலாக, இஸ்லாமாபாத் உடனான பதட்டங்களை அதிகரித்தளவில் எழுப்புவதற்கும், அதிலும் இராணுவ ரீதியாக மோதுவதற்கும் வாஷிங்டன் தயாராக இருப்பதாக மெக்மாஸ்டர் தெரிவித்ததோடு, “பாகிஸ்தான் விரும்பினால் ஒரு பாதுகாப்பான மற்றும் செழிப்பான பாதையில் செல்லக்கூடும், அல்லது வட கொரியாவை சித்தரிக்கும் ஒரு பாதையிலும் செல்லக்கூடும். பாகிஸ்தான் தலைவர்களுக்கு இது தான் ஒரு எளிதான வாய்ப்பு என்று நினைக்கிறேன்” என்று எச்சரிக்கவும் செய்தார்.  

பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தானை குற்றம்சாட்டுவது குறிப்பாக வாஷிங்கடனின் ஒரு பாசாங்குத்தனமே. 1980 களில், காபூலில் சோவியத் ஆதரவு அரசாங்கத்தைத் தூக்கியெறிய ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீனை ஒழுங்கமைவு செய்ய உதவுவதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையை தனது பட்டியலில் அமெரிக்கா சேர்த்துக் கொண்டது, மேலும் இது நிகழ்த்தப்பட்ட அதே சமயத்தில் பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜெனரல் ஜியா-உல்-ஹக்கிற்கும், அவரது பிற்போக்குத்தன “இஸ்லாமியமயமாக்கல்” இயக்கத்திற்கும் உறுதியான ஆதரவை அது வழங்கி வந்தது. அதுமட்டுமின்றி, லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகள் உட்பட, மத்திய கிழக்கில் அதன் ஆட்சி மாற்ற உந்துதல்களில் அதிரடி துருப்புக்களாக இஸ்லாமிய இராணுவக் குழுக்களை வாஷிங்டன் அவ்வப்போது பயன்படுத்தியுள்ளது.        

அனைத்திற்கும் மேலாக, பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அதன் முக்கிய போட்டியாளரான சீனாவுடன் மோதும் திறன் கொண்ட புதிய கூட்டணிகளை கட்டமைக்க அமெரிக்கா முனைந்து வருகின்ற நிலையில், ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்தையும் மறுஒழுங்கமைவு செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான நடவடிக்கைகளின் விளைவாகத் தான், தாலிபான் மற்றும் ஹக்கனி வலையமைப்புடனான இரகசிய உறவுகளை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. இந்த முடிவுக்கு, கடந்த ஒன்றரை தசாப்த காலமாக, வாஷிங்டன் அப்பிராந்தியத்தில் அதன் பிரதான கூட்டாளியான பாகிஸ்தானின் அந்தஸ்த்தை கடுமையாக கீழறுத்துவிட்டது, மேலும் அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தின் பரம எதிரியான இந்தியாவுடன் கூட்டணி வைத்தது.

முதலில் ஜோர்ஜ் டபிள்யூ. புஸ் இன் கீழ், அதனைத் தொடர்ந்து பராக் ஒபாமா மற்றும் அவரது “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” கொள்கையின் கீழ், மூலோபாய, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக சீனாவை தனிமைப்படுத்தவும் சுற்றிவளைக்கவும் நோக்கம் கொண்டு வாஷிங்டன் இந்தியா மீது தனிக் கவனம் செலுத்தியது.

அமெரிக்காவில் இருந்து எண்ணற்ற இராணுவ மற்றும் மூலோபாய நலன்களை புது தில்லி பெற்று வருகிறது. அதற்கு பதிலாக, அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களின் பயன்பாட்டிற்கு அதன் துறைமுகங்களையும் இராணுவத் தளங்களையும் இந்தியா திறந்து வைத்துள்ளது; இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகள் பற்றிய உளவுத் தகவல்களை வாஷிங்டனுடன் பகிர்ந்து கொள்கிறது; மேலும், தென் சீனக் கடல் சர்ச்சை மற்றும் வட கொரியா மீதான அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகளை அப்படியே இந்தியா பின்பற்றி வருகிறது.  

ட்ரம்பின் கீழ், இந்தியாவுடனான அதன் மூலோபாய உறவுகளை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு செல்ல அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. அக்டோபரில் அமெரிக்க வெளியுறவு செயலர் றெக்ஸ் ரில்லர்சன் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்கையில், “எங்களது பார்வையில், இந்தியா உடன் நாங்கள் கொண்டிருக்கும் உறவு ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல், “சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய பசிபிக் பிராந்தியத்தை அனைத்து வழிகளிலும் ஜப்பானில் இருந்து இந்தியா வரை நீட்டிக்கும்” என்று குறிப்பிட்டார்.  

அதிகரித்துவரும் சீன செல்வாக்கை எதிர்ப்பதற்கு நோக்கம் கொண்டு, அமெரிக்க தலைமையிலான இராணுவ மற்றும் மூலோபாய கூட்டான குவாட் (Quad) என்றழைக்கப்படுவதில் இந்தியாவை ஒருங்கிணைக்க வகைசெய்யும் ஒரு முன்னுரிமையை தற்போது ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது, இது, புது தில்லி தவிர, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னுரிமையைக் கொண்ட இந்திய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவையும் உள்ளடக்கியுள்ளது. 

இது, 1962 இல் ஒரு அறிவிக்கப்படாத போரை நடத்திய, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மட்டும் எரியூட்டவில்லை, 2017 இல் கூட இரண்டரை மாதங்களாக, தொலைதூரத்தில் உள்ள டோக்லாம் பீடபூமி குறித்தும் இந்நிலை எதிர்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான அதன் ஆக்கிரோஷத்தில் இந்தியாவிற்கும் அது ஊக்கமளித்து வருகிறது.  

1947 இல் துணைகண்டத்தின் இனப் பிரிவினைக்குப் பின்னர், நான்கு போர்களிலும், பல குறைந்தளவிலான தீவிர மோதல்களிலும் ஈடுபட்டிருந்த இந்த இரு அணுசக்தி போட்டியாளர்களும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான போர் உந்துதலுடன் அவர்களது பிராந்திய போட்டியும் சிக்கியுள்ள நிலையில் இன்னும் பெருமளவு விரோதத்துடன் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர்.

பாகிஸ்தான் அதன் நீண்டகால நட்பு நாடான சீனாவுடனான நெருங்கிய உறவுகளை அபிவிருத்தி செய்வதன் மூலமாக வாஷிங்டன் உடனான உறவுகளை குறைத்து எதிர்வினையாற்றியுள்ளது. இந்நிலையில், அரபியக் கடல் துறைமுகம் குவாடரை சீனா அணுகும் விதமாக இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து உள்கட்டமைப்பை கட்டமைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு முக்கிய திட்டமான சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China-Pakistan Economic Corridor – CPEC) அமைப்பதில் 57 பில்லியன் டாலரை முதலீடு செய்ய பெய்ஜிங் உறுதியளித்துள்ளது.

பெய்ஜிங்கின் நிலைப்பாட்டில் இருந்து, ஒரு பொருளாதார முற்றுகையை திணிக்கும் பொருட்டு, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் வெடிப்புறும் புள்ளிகளை கைப்பற்றுவதன் மூலம் போரின் போது நாட்டை பொருளாதார ரீதியாக நசுக்கும் அமெரிக்க திட்டங்களை எதிர்கொள்ள சீன ஆட்சியை செயல்படுத்த CPEC அதற்கு முக்கியமானதாக உள்ளது. 

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா உடனான சீன பொருளாதார உறவுகளை விஸ்தரிக்க முற்படுகின்ற சீனாவின் மிகப் பரந்த மூலோபாயமான ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road – OBOR) திட்டத்தின் பாகமாகத்தான் CPEC உள்ளது. இது அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு ஒரு நேரடி சவாலை பிரதிபலிக்கிறது, மற்றும் அதன் நீடித்த பொருளாதார வீழ்ச்சியை சமன்படுத்தும் ஒரு விரக்தியான முயற்சியில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இராணுவ வலிமையை அதிகரித்தளவில் கையாண்ட அமெரிக்க ஆளும் உயரடுக்கினரால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாததாகவும் கருதப்படுகிறது. சமீபத்திய மாதங்களில், OBOR ஐ எதிர்ப்பதில் இந்தியாவையும் ஜப்பானையும் அமெரிக்கா பகிரங்கமாக இணைத்துக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு உதவிகளை நிறுத்தி வைக்க முனையும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்து பாகிஸ்தானின் ஆளும் உயரடுக்கினர் கண்டனம் செய்துள்ளனர். “நியாயமற்ற காலக்கெடு, ஒருதலைப்பட்சமான அறிவிப்புகள், மாறுகின்ற இலக்குகள் ஆகியவை பொதுவான அச்சுறுத்தல்களை விவரிப்பதில் எதிர்மறையானவை,” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.    

ஒரு வியாழக்கிழமை பேட்டியளிப்பில் வெளியுறவு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப், அமெரிக்கா ஒரு நீண்டகால நட்பு நாடாகவோ அல்லது கூட்டாளியாகவோ இருக்காது, ஆனால் “ஒரு நண்பனாக இருந்து கொண்டே எப்பொழுதும் காட்டிக்கொடுக்கும் நாடாக அது” இருக்கும் என்று தெரிவித்தார்.  

எதிர்தரப்புத் தலைவர் இம்ரான் கான் ஒரு கடினமான பாதையை கையில் எடுத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அதன் 14,000 துருப்புகளுக்கு சாதனங்களை அனுப்புவதற்கு பயன்படுத்தும் விநியோக வழிகளை குறைத்திடுமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கிறார். பாகிஸ்தான் மண்ணில் ஒசாமா பின் லேடனை கொல்வதற்கு அமெரிக்கா இரகசிய நடவடிக்கை மேற்கொண்டதையும், மற்றும் பாகிஸ்தானிய இராணுவ பகுதியில் அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதில் 20 சிப்பாய்களுக்கும் மேலாக கொல்லப்பட்டதையும் தொடர்ந்து, 2011 மற்றும் 2012 இல் பல மாதங்களுக்கு விநியோக இணைப்புகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது.  

செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் வெளியிட்ட ஒரு அறிக்கை, ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் குறித்து வெளியிட்ட விமர்சனங்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் எதிர்வினையாற்றியது என்று கூறியதோடு, பாகிஸ்தான், “பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் பெரும் முயற்சிகளையும், தியாகங்களையும்” செய்துள்ளது என்றும் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்த குளோபல் டைம்ஸ் பத்திரிகை, சீன-பாகிஸ்தான் உறவை “அனைத்து காலத்திற்கும் பொருந்தும் ஒத்துழைப்பிற்கான ஒரு மூலோபாய கூட்டாக” விவரிக்கிறது.   

அமெரிக்கா-பாகிஸ்தான் பதட்டங்கள் ஆழமடைவது முக்கிய பிராந்திய மற்றும் பூகோள அளவிலான தாக்கங்களைக் கொண்டுள்ளன. இது இன்னும் பாகிஸ்தான்-இந்திய மற்றும் இந்திய-சீன பகைமைகளைத் தூண்டிவிடும். மேலும் அவ்வாறு செய்வதன் மூலமாக, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பகைமை வளரும். இந்நிலையில், இவை அனைத்துமே அணுவாயுத சக்திகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.      

செப்டம்பர் 2016 இல், பாகிஸ்தான் உள்ளே “நுட்பமான தாக்குதல்களை” இந்திய இராணுவம் நிகழ்த்திய பின்னர், சச்சரவிற்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே திடீரென போர் மூழும் நிலை உருவானது. பின்னர், நான்கு இந்திய மற்றும் மூன்று பாகிஸ்தானிய சிப்பாய்கள் பலியான, டிசம்பர் மாத கடைசி நாட்கள் உட்பட, எப்போதும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகளின் வழமையான பரிமாற்றங்கள் அங்கு நிகழ்ந்துள்ளன.

அதன் அண்டை நாடுகள் உடனான எல்லை மோதல்களை தீவிரப்படுத்துவதில் அதற்கு ஆதரவை வழங்கும், மற்றும் உள்நாட்டில் பெருகிவரும் சமூக பதட்டங்களை திசைதிருப்ப தேசியவாதத்தை தூண்டிவிடும் “பயங்கரவாதத்திற்கு” பாகிஸ்தான் ஆதரவளிப்பது குறித்து வாஷிங்டன் கண்டனம் செய்ததை இந்தியா பாராட்டியுள்ளது.