ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Romanian Ford workers must make international appeal!

ருமேனிய ஃபோர்ட் தொழிலாளர்கள் சர்வதேச அழைப்பு விடுக்கவேண்டும்!

World Socialist Web Site Autoworker Newsletter
29 December 2017

ருமேனியாவின் கிரையோவாவில் உள்ள ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் அங்கிருக்கும் தொழிற்சாலையில் மேற்கொண்டுள்ள போர்க்குணமிக்க எழுச்சியை உலக சோசலிச வலைத் தளத்தின் Autoworker Newsletter (வாகனத்தொழிலாளர் செய்திமடல்) வரவேற்கிறது; அவர்களது தீரமிக்க போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியா முழுமையிலான வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

வறுமை-நிலை ஊதியங்கள், வேலைநீக்கங்கள் அல்லது ஆலை மூடல்களின் மிரட்டலின் கீழ் விட்டுக்கொடுப்புகள் மற்றும் வேகப்படுத்தலுக்கான இடைவிடாத நெருக்குதல்கள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகளாக இல்லாது பெருநிறுவனங்களது கருவிகளாக செயல்படுகின்ற தொழிற்சங்கங்கள் என இந்தப் போராட்டத்தில் காணும் பிரச்சினைகள் உலகெங்கிலுமான வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களுக்கு மிகப் பரிச்சயமானவையே.

டிசம்பர் 21 அன்று, ஃபோர்ட் கிரையோவா ஆட்டோமொபைல் சங்கத்தினாலும் (Ford Craiova Automobile Union) ஃபோர்ட் ருமேனியாவினாலும் (Ford Romania) கையெழுத்திடப்பட்ட ஒரு அழுகிப்போன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1,000 தொழிலாளர்கள் ஒரு திடீர் (wildcat) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2016 இல் மொத்த இலாபமாக 16.3 மில்லியன் டாலர்களும் 2017 இன் முதல் மூன்று காலாண்டுகளில் 9.4 பில்லியன் டாலர்களும் ஈட்டியிருக்கும் ஃபோர்ட் நிறுவனம், இந்த தொழிற்சாலையின் 4,200 தொழிலாளர்கள், மூத்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுநிறுத்தத்தையும் புதிதாக எடுக்கப்படும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இப்போதைய குறைந்தபட்ச ஊதியத்தை விட 5 சதவீதம் குறைவான தொகையாக அல்லது மாதம் 300 யூரோக்களாக (538 டாலர்கள்)  குறைக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. இதுதவிர, மேலதிகநேர வேலைகளுக்கு ஊதியம் குறைக்கப்படுவதற்கும் “உற்பத்தி நிலைமைக்கு தேவைப்படும்போது அவசியமானால்” “நெகிழ்வான” வேலைநேரங்களுக்கும் கோரிக்கை வைக்கிறது.

தொழிலாளர்களை மிரட்டுவதற்கு பாரிய வேலைவாய்ப்பின்மை அச்சுறுத்தலை ஃபோர்ட்டும் தொழிற்சங்கமும் பயன்படுத்துகின்றன. டிசம்பர் 13 அன்று தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்சாலைக்குள்ளான சுற்றறிக்கையில், ஃபோர்ட் ருமேனியாவின் தலைவர் ஜான் ஓல்ட்ஹாம் எழுதினார், “இந்த முக்கியமான தருணத்தில் கிரையோவா தொழிற்சாலைக்கு எது இன்றியமையாதது, ஒரு அதிகமான சம்பள உயர்வா அல்லது இந்த தொழிற்சாலையின் வருங்காலத்தைப் பாதுகாப்பதா என்பதை நாம் பிரதிபலிப்பது அவசியமாக உள்ளது! அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஸ்திரமற்ற சூழல் நிலவும் இன்றைய நிலைமைகளில் இந்த ஆண்டின் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”

இதுதவிர, இந்த அமெரிக்க பெருநிறுவனமானது, ருமேனிய அரசாங்கத்தினால் அமலாக்கப்படும் ஒரு புதிய வரிச் சட்டத்தையும் தொழிலாளர்களுக்கு எதிரான அழுத்தம்கொடுக்கும் கருவியாக பயன்படுத்துகிறது. ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்ற இந்த புதிய சட்டமானது ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் பிற சமூக நல உதவிகளுக்கான செலவுகளை முதலாளிகளிடம் இருந்து கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களது முதுகுகளுக்கு மாற்றுகிறது. தொழிலாளர்கள் இப்போதைய ஒப்பந்தத்தை நிராகரித்தால், நிறுவனம் “மோசமானதொரு சிறிய சலுகையை” முன்வைக்கும், அது தொழிலாளர்களுக்கு வந்து சேரக் கூடிய அதிகமான வரிச் செலவுகளை ஈடுசெய்ய அவர்களுக்கு இழப்பீடு அளிக்காது, அதன்மூலம் உண்மையில் தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட 25 சதவீதம் அறிவிக்கப்படாத ஊதிய வெட்டு வந்து சேரும் என்பதாக ஓல்ட்ஹாம் எச்சரித்தார்.

இந்த மிரட்டல்களையும் மீறி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்ற வியாழக்கிழமையன்று தொழிற்சாலையில் இருந்து வெளிநடப்பு செய்தனர், “திருடர்கள், திருடர்கள்” என்றும் “இங்கே அடிமைத்தனம் நிலவுகிறது” என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இரண்டாவது ஷிஃப்டுக்கு வந்த தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு முழக்கமிட்டனர், “எங்களது மரியாதையை நாங்கள் பெறுகின்ற வரையில் நாங்கள் வீடு திரும்பப் போவதில்லை”. ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் (Ford’s EcoSport) வாகன வெளியீட்டுக்காக இந்த ஆண்டில் எடுக்கப்பட்டிருந்த 1,700 தொழிலாளர்களில் பலர் உட்பட, இளம் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டமானது, நிர்வாகத்துடன் ஒத்துழைத்து அதன் கோரிக்கைகளை ஒருதலைப்பட்சமாகத் திணித்த நிறுவன-ஆதரவு தொழிற்சங்கத்துக்கு எதிரான ஒரு வெளிப்பட்ட கலகமாகவும் இருந்தது. தொழிலாளர்களை மீண்டும் பொருத்தும் மேடைகளுக்கு (assembly lines) திரும்பச் செய்யும் ஒரு முயற்சியில், அப்படியான ஒரு ஒப்பந்தத்தில் தான் ஒருபோதும் கையெழுத்திடவில்லை என சங்கம் கூறியது. ஆயினும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், அது இந்த ஆர்ப்பாட்டங்கள் டிசம்பர் 31 அன்று காலாவதியாகும் பழைய ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டதால் அவை “சட்டவிரோதமானவை” என தான் கருதுவதாகக் கூறும் ஒரு தொழிற்சாலைக்குள்ளான சுற்றறிக்கையை விடுத்தது. டிசம்பர் 21 அன்று அது கையெழுத்திட்டிருந்த ஒப்பந்தத்தை “சட்டரீதியானது” எனக் கருதிய தொழிற்சங்கம் ஆகவே அது ஜனவரி 1 அன்று அமலாகத் தொடங்கியதும் அதற்கு மரியாதையளித்திருந்தது.

அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்ட ஒரு வாகன உற்பத்திப் பெருநிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில், ஃபோர்ட் கிரையோவாவின் தொழிலாளர்கள் உலகெங்கிலுமான வாகன உற்பத்தித் தொழிலாளர்களுக்கான ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ருமேனியா, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, போலந்து, சேர்பியா மற்றும் பிற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பன்னாட்டு பெருநிறுவனங்கள் மலிவு உழைப்பைச் சுரண்டிக் கொள்ளக் கூடியதும் மேற்கிலான ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் கீழிறக்குவதற்கு “கிழக்கு நீட்சி” மிரட்டலைப் பயன்படுத்துகின்றதுமான, ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களின் “மெக்சிகோ”வாகவே நீண்ட காலமாக சேவை செய்து வருகின்றன.   

பிராந்தியத்தில் ஸ்ராலினிச ஆட்சிகள் முதலாளித்துவத்தை மீட்சி செய்ததன் பின்னர், VW, Renault, GM, Daewoo, Ford மற்றும் பிற உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் அரசுக்கு சொந்தமாக இருந்த தொழிற்சாலைகளை மிககுறைந்த விலைகளுக்கு வாங்குவதற்கு முண்டியடித்தன. இப்போதைய ருமேனிய ஊதியங்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 யூரோக்கள் (2.26 அமெரிக்க டாலர்கள்) என்ற அளவுக்கு குறைவானதாய் இருக்க முடியும், ஒரு ஜேர்மனிய வாகன உற்பத்தித் துறை தொழிலாளருக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் செலவுகளில் இது 10 சதவீதம் குறைவாகும்.

தொழிலாளர்கள் மீது வரி அதிகரிப்பைத் திணித்திருக்கும் ஆளும் ருமேனிய சமூக ஜனநாயகக் கட்சியானது, ஒருகாலத்தில் ருமேனியாவை ஆட்சிசெய்த ஸ்ராலினிசக் கட்சியின் வாரிசாகும். சமூக ஜனநாயகக் கட்சியினரும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் இருக்கின்ற அவர்களது கூட்டாளிகளும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகளைத் தழுவி வந்திருக்கின்றனர்; நச்சுத்தனமான தேசியவாதத்தை ஊக்குவித்து வந்திருக்கின்றனர், தத்தமது நாடுகளை உலகப் பெருநிறுவனங்களுக்கான அடிமை உழைப்புக் களங்களாக உருமாற்றி அதி-வலது கட்சிகளின் எழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்கித் தந்திருக்கின்றனர். கூடுதல் வரி விலக்குகளைக் கொடுப்பதன் மூலமும் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரிவுபடுத்துவதன் மூலமும் பிராந்தியத்தின் வழக்கமான வாகன உற்பத்தி நாடுகளான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு (the Visegrad Four) ஆகியவற்றை பலவீனப்படுத்துவதற்கு ருமேனிய அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதைப் பொறுத்தவரையில், உலகளாவிய வாகன உற்பத்திப் பெருநிறுவனங்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தைக் கொண்டிருக்கின்றன. தொழிற்துறை ஆய்வுவல்லுநர் ஒருவர் ஃபைனான்சியல் டைம்ஸிடம் கூறியதைப் போல, “மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு இப்போது வரக் கூடிய முதலீட்டாளர்கள் ஐந்து அல்லது ஏழு வருடங்களுக்கு முன்பானதற்கு முற்றிலும் மாறுபட்டதானதொரு விதத்தில் நடந்து கொள்கின்றனர். ஒரு வர்த்தக முன்னோக்கில் இருந்து... யாரும் தேசிய யோசனைகளை கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் பிராந்தியத்தில் முதலீடு செய்கின்றனர்.”

ஆயினும், ஐரோப்பாவெங்கிலும், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிற்சங்கங்கள் முற்றிலும் தேசியரீதியானதாக இருக்கின்றன. உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிரான பொதுப் போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு போராடுவதற்கெல்லாம் வெகு அப்பால், தொழிற்சங்கங்களானவை, தொழிலாளர்களை தங்களுக்குள் வெவ்வேறு பிரிவுகளுக்கு எதிராக நின்று பாதாளத்தை நோக்கிய ஒரு சகோதரப் போட்டிக்குள் ஈடுபடச் செய்வதில் பெருநிறுவனங்களுக்கு உதவிசெய்கின்றன, உடந்தையாக இருக்கின்றன.

ஜேர்மனியில், வாகனத்தொழிலாளர் தொழிற்சங்கமான, IG Metall, கிழக்கு ஜேர்மனியிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் முதலாளித்துவத்தின் மீட்சியை உற்சாகத்துடன் வரவேற்றிருக்கிறது. ஒவ்வொரு பெரிய கார் உற்பத்தி நிறுவனத்தின் மேற்பார்வை தலைமைக் குழுவிலும் அமர்ந்து கொண்டு, குறைந்தபட்ச ஊதியங்களில் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு செயலூக்கமான ஆதரவை அது வழங்கி வந்திருப்பதோடு, ஜேர்மனியில் தொழிலாளர்கள் மிரட்டல் செய்யப்படுவதற்கும் இதனைப் பயன்படுத்தியது. ஊதிய அதிகரிப்பில்லாமல் வேலை நாள் நீட்டிக்கப்படுவதற்கும், புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கான ஊதியத்தில் மிகப்பெருமளவிலான வெட்டிற்கும், பகுதி-நேர, தற்காலிக மற்றும் ஒப்பந்த வேலைத் தொழிலாளர்களின் பயன்பாடு விரிவுபடுவதற்கும் இது இட்டுச் சென்றிருக்கிறது. இந்த விட்டுக்கொடுப்புகளில் எதுவொன்றும் ஒரேயொரு வேலையையும் கூட பாதுகாத்திடவில்லை.  

2014 இல் IG Metall பெல்ஜியத்தின் Gent இல் இருந்த ஃபோர்ட் தொழிற்சாலை மூடப்பட ஆதரவளித்தது, இதில் ஃபோர்ட் தொழிற்சாலையில் இருந்த 4,600 தொழிலாளர்களும் அத்தோடு துணை சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் இருந்த 5,000 தொழிலாளர்களும் வேலை இழந்தனர். அதேஆண்டில், Cologne மற்றும் Saarlouis இல் இருந்த ஜேர்மன் ஃபோர்ட் தொழிற்சாலைகளில் உற்பத்தியின் பகுதியை கிரையோவா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பாவிற்கு மாற்றப் போவதாய் நிர்வாகம் அச்சுறுத்தியதன் பின்னர், அங்கிருந்த 24,000 தொழிலாளர்களுக்கு பாரிய வேலை குறைப்புகளுக்கும், நெகிழ்வான வேலை நிலைமைகளுக்கும் மற்றும் ஊதிய வெட்டுகளுக்கும் IG Metall உடன்பட்டது.

இப்போது பிரான்சில் இருக்கின்ற மக்ரோன் அரசாங்கமானது, தற்காலிகத் தொழிலாளர்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தக் கூடியதும், தொழிலாளர்களை இஷ்டம் போல நீக்குவதற்கு பெருநிறுவனங்களுக்கு அமெரிக்க-பாணியில் அதிகாரமளிக்கக் கூடியதுமான அதன் பெருநிறுவன-ஆதரவு தொழிலாளர் “சீர்திருத்தங்களை” திணிப்பதற்கு பாரிய வேலை நீக்கங்களது மிரட்டலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலும் இதுவே உண்மையாக இருக்கிறது, அங்கு UAW (ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர் சங்கம்) நீண்டகாலமாக தேசியவாத நஞ்சை ஊட்டி வந்திருக்கிறது, “அமெரிக்காவின் வேலைகளை” திருடியதாக மெக்சிக்கோ, சீனா மற்றும் பிற நாடுகளது தொழிலாளர்களை அது குற்றம்சாட்டிய அதேவேளையில், ஊதியங்களைக் கீழிறக்குவதில் வாகன உற்பத்தி நிறுவன முதலாளிகளுடன் சேர்ந்து ஒத்துழைத்தது. பிரதிபலனாக, UAWக்கு GM, Ford மற்றும் Fiat Chrysler ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பில்லியன் கணக்கில் பெருநிறுவனப் பங்குகளும், இலஞ்சமும் கையூட்டப்பட்டிருக்கிறது. நடந்து கொண்டிருக்கின்ற கூட்டரசாங்க குற்ற வழக்கு ஒன்றில், பெருநிறுவனங்களிடம் ஆயிரக்கணக்கான டாலர்களை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு பிரதிபலனாய் நிறுவனத்தின் எடுபிடிகளாக சேவைசெய்ததாக UAW நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

ருமேனியத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது உலகெங்கிலும் தொழிற்சங்க-ஆதரவுடனான முடிவற்ற தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் பெருகிச் செல்லும் எதிர்ப்பின் பகுதியாகும். 2017 இன் பாதையில், சேர்பியாவில் ஃபியட் தொழிலாளர்களும் ஸ்லோவாக்கியாவில் VW தொழிலாளர்களும் கொத்தடிமை நிலை கூலிகளுக்கும் வேலைநிலைமைகளுக்கும் எதிராக வேலைநிறுத்தம் செய்திருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளில், சீனா மற்றும் இந்தியாவில் வாகனத் துறை தொழிலாளர்கள் முக்கியமான போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர், 2015 இல் அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறைத் தொழிலாளர்கள் ஊழலடைந்த UAWக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

வேலைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு வெற்றிகரமான போராட்டம் நடத்தப்பட வேண்டுமாயின், உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை இணைப்பதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க உடந்தையாளர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் அவற்றை ஓரணியில் கொண்டுவருவதற்கும் புதிய அமைப்புகள் அவசியமாயுள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ருமேனிய ஃபோர்ட் தொழிலாளர்கள், நிறுவனத்தின், தொழிற்சங்கத்தின், மற்றும் ருமேனிய அரசியல் ஸ்தாபகத்தின் செல்வாக்கில் இருந்து சுதந்திரமான, ஒரு சுயாதீனமான பாதையை வகுப்பதைத் தனது பணியாகக் கொண்ட ஒரு சாமானியத் தொழிலாளர் கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளத்தின் Autoworker Newsletter அழைப்பு விடுக்கிறது.

ருமேனியா எங்கிலும், அரசாங்கத்தின் வரிச்சீர்திருத்த யோசனையை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஆயினும், ருமேனியா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான வாகன உற்பத்தித் தொழிலாளர்களிடம் ஆதரவு வேண்டி அறைகூவல் விடுப்பதே சாமானியத் தொழிலாளர் கமிட்டியின் முதல் பணியாக இருக்கும்.

நாடுகடந்த நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக போர் நடத்துவதற்கு ஒரு சர்வதேச மூலோபாயத்தைக் கொண்டுள்ளன. ஆகவே தொழிலாளர்கள் தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு தமது சொந்த சர்வதேச மூலோபாயத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும். கிரையோவாவின் தொழிலாளர்கள், உலகெங்கிலுமான அவர்களின் சகோதர சகோதரிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கக் கூட்டாளிகளது கரங்களில் அலட்சியத்துடன் கையாளப்படுகின்றனர். ருமேனியத் தொழிலாளர்கள் அவர்களது சர்வதேச சக-தொழிலாளர்களது அதே பிரச்சினைகளுக்கே முகம் கொடுக்கின்றனர், ஒன்றுபட்டு நிற்கும்போது, அவர்கள் ஒரு மாபெரும் சமூக சக்தியைக் கொண்டிருக்கின்றனர்: அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் இருந்துதான் நிறுவனத்தின் இலாபங்கள் வருகின்றன.

கிரையோவாவில் இருக்கும் தொழிலாளர்களுக்கு தங்களது மிகவும் போர்க்குணமிக்க மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய சக-தொழிலாளர்கள் யார் என்பது தெரியும். இந்தத் தொழிலாளர்கள் சமீப வாரங்களில், தங்களது வேலைகளும் வாழ்வாதாரங்களும் அபாயத்திற்குட்படக் கூடும் எனத் தெரிந்தபோதும் சமத்துவமின்மைக்கும் பெருநிறுவன-தொழிற்சங்க சர்வாதிகாரத்துக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததன் மூலமாக தங்களை நிரூபணம் செய்திருக்கின்றனர். இந்த தொழிலாளர்களில் மிகவும் தீரமானவர்களும் கோட்பாடு மிக்கவர்களும் ஒரு கமிட்டிக்குத் தலைமை கொடுப்பதற்கு ஜனநாயகரீதியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் இவர்களை திரும்ப தலைமையில் இருந்து கீழிறக்க இயலுவதற்கு வழிவகை தருவதன் மூலம் இவர்கள் பொறுப்புக்குரியவர்களாக ஆக்கப்படுவர். புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களையும் மூத்த தொழிலாளர்களையும் ஒரு பொதுவான போராட்டத்தில் இணைப்பதற்கு பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பழிவாங்கல் வேலைநீக்கங்கள் ஒரு ஒன்றுபட்ட தொழிலாளர் படையினால் எதிர்க்கப்படும், அம்பலப்படுத்தப்படும் மற்றும் பகிரங்கப்படுத்தப்படும் என்பதை நிறுவனமும் தொழிற்சங்கங்களும் அறிந்துகொள்ளும்படி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்கள் திட்டமிடுவதற்கும் தகவல் பகிர்வதற்கும் பயன்படுத்துகின்ற சமூக ஊடக குழுக்களில் இருந்து தொழிற்சங்க உளவாளிகளும் நிறுவனத்திற்கு தகவல்-கொடுப்பவர்களும் அகற்றப்பட வேண்டும்.

ருமேனியாவில் தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் ஏராளமாக உள்ளன. தங்களது அமைப்புகளில் இணைவதற்கும் ஒழுங்கமைப்பதையும் பேச்சுவார்த்தை நடத்துவதையும் தமது நிர்வாகிகளிடம் விடுவதற்கும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் அவை இறங்கலாம். அதில் சிக்குவது ஒரு பெரும் பிழையாக இருக்கும்! பெருநிறுவனங்களுடன் உத்தியோகபூர்வமாக பிணைக்கப்படாத தொழிற்சங்கங்களாயினும் கூட, தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் வருங்கால விலை-பேசல்களுக்கு தயாரிப்பு செய்வதையுமே செய்யும். சர்வதேச பெருநிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இவை எதுவொன்றிடமும் ஒரு சர்வதேச மூலோபாயம் இல்லை. இந்த வரிச்சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்குப் பொறுப்பான அதே அரசியல் கட்சிகளுடன் இணைக்கப்பட்டவையாகவே இவை இருக்கின்றன, ஆகவே நம்பப்பட முடியாதவை. கிரையோவா தொழிலாளர்களது போராட்டத்தின் வெற்றியானது, தொழிற்சங்கங்களில் இருந்தும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனத்தை பராமரிக்க இயலுகின்ற அவர்களது திறத்தினாலும், தங்கள் மீதான தனிமைப்படுத்தலை முறியடித்து சர்வதேச அளவில் சக ஃபோர்ட் தொழிலாளர்களுடன் ஒன்றுபடுவதற்கு அவர்கள் கொண்டிருக்கும் திறத்தினாலுமே தீர்மானிக்கப்படுவதாக அமையும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் Autoworker Newsletter மட்டுமே கிரையோவா தொழிலாளர்களது போராட்டம் குறித்து சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்குக் கல்வியூட்ட முனைகின்ற ஒரேயொரு சர்வதேச செய்திப் பிரசுரமாகும். ருமேனிய ஃபோர்ட் தொழிலாளர்களின் போராட்டங்கள் குறித்த எங்களது கட்டுரைகளை அமெரிக்காவிலும் மற்றும் பிறவெங்கிலும் இருக்கும் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் மத்தியில் விநியோகித்திருக்கிறோம், விவாதித்திருக்கிறோம். தமது போராட்டம் உலகெங்கிலும் இருந்து முழு ஆதரவை அனுப்பியிருக்கின்ற ஏராளமான வாகனத்துறை தொழிலாளர்களால் கவனமாகப் பின்தொடரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ருமேனிய ஃபோர்ட் தொழிலாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ருமேனிய ஃபோர்ட் தொழிலாளர்கள் பலரும் சமீபத்தில்தான் உலக சோசலிச வலைத் தளத்தைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றனர். WSWS ஒரு புரட்சிகர சோசலிச வெளியீடாகும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைப்புக் கொண்டவர்களாவோம். எமது போக்கு 1917 ரஷ்யப் புரட்சியில் விளாடிமிர் லெனினின் சக-தலைவராக நின்ற லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938 இல் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச முகவர்களால் மெக்சிகோ நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

பெருநிறுவன மற்றும் நிதியப் பிரபுக்களது தனிமனித செல்வத்திலான அவலட்சணமான குவிப்பைக் காட்டிலும், சமூகத்தின் செல்வத்தை உருவாக்கக் கூடிய தொழிலாளர்களது சமூக உரிமைகளே முன்னுரிமை பெற வேண்டும் என்றும், இதற்கு சோசலிசத்திற்கான ஒரு போராட்டம் அவசியமாயுள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்.