ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s racist comments trigger international condemnation

ட்ரம்பின் இனவாத கருத்துக்கள் சர்வதேச கண்டங்களைத் தூண்டுகின்றன

By James Cogan
13 January 2018

வறிய மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட சில நாடுகளை ஜனாதிபதி ட்ரம்ப், "இழிவான நாடுகள்" (shithole countries) என்று குறிப்பிட்டது வெளியானதும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசின் சர்வதேச அந்தஸ்திற்கு மேலும் அதிகமான தாக்குதல் கிடைத்தது. வியாழனன்று காங்கிரஸ் தலைவர்கள் உடனான அமெரிக்க ஜனாதிபதியின் ஒரு கூட்டத்தில் பங்குபற்றிய சிலர் உட்பட, பலதரப்பட்ட  ஆதார நபர்களால் அவர் கூறியதாக வெளியான அக்கருத்துக்களை, ட்ரம்ப் தாமதமாகவும் மற்றும் வெளிப்படையாகவே நேர்மையின்றியும் மறுப்பதற்கு செய்த முயற்சிகளால், அந்த ஒளிவுமறைவற்ற இனவாத கருத்துக்கள் மீதான அருவருப்பும் கோபமும் இன்னும் தீவிரமடைந்துள்ளன.

புலம்பெயர்வோர் கொள்கை மீதான ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சட்ட வல்லுனர்களுடனான வெள்ளை மாளிகை கூட்டத்தில் அக்கருத்துக்கள் கூறப்பட்டிருந்தன. ஹைட்டி மற்றும் எல் சால்வடோர் போன்ற இயற்கை சீற்றங்கள் அல்லது போரால் சீரழிந்த நாடுகளில் இருந்து வரும் மக்கள் அமெரிக்காவில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் அனுமதிக்கும் “தற்காலிகமாக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து,” மீதான ஒரு விவாதத்திற்கு விடையிறுக்கையில், ட்ரம்ப் கூறினார்: “ஹைட்டியர்கள் இங்கே இருக்க நமக்கு என்ன தேவை உள்ளது? இந்த ஆபிரிக்க மக்கள் எல்லோரும் இங்கே வந்திருப்பதற்கு நமக்க என்ன தேவை உள்ளது? இழிவான நாடுகளில் இருந்து வரும் இந்த மக்கள் எல்லோரும் நமக்கு எதற்காக தேவைப்படுகிறனர்? நோர்வே போன்ற நாடுகளில் இருந்து கூடுதலானோர் எமக்கு வேண்டும்.”

ட்ரம்பின் ஆத்திரம், வாஷிங்டன் போஸ்ட் க்கு கசிய விடப்பட்டு பகிரங்கமாக ஆக்கப்பட்டது. விரைவிலேயே சர்வதேச கண்டனங்கள் எழுந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவுக்கான செய்தி தொடர்பாளர் ரூபேர்ட் கொல்வில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்: “ஒருவர் பயன்படுத்துவதற்கு இதை விட இனவாத வார்த்தை ஒன்று இருக்காது. ஒட்டுமொத்த நாடுகளையும் கண்டங்களையும் 'இழிவானவை' என்று நீங்கள் உதறிவிட முடியாது, மற்றும் அந்த நாடுகளின் அனைத்து மக்களும் வெள்ளை இனத்தவர்கள் இல்லை என்பதால் அவர்கள் இங்கு வருவது வரவேற்கத்தக்கதல்ல எனக்கூறமுடியாது”.

ஹைட்டி அரசாங்கம், அதன் நூறாயிரக் கணக்கான மக்கள் கையாள முடியாத வறுமை மற்றும் அரசியல் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிப்பதற்காக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ள நிலையில், அது "இந்த அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை மிக பலமான வார்த்தைகளில் கண்டிப்பதாக" அறிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

ஏனைய அரசியல் தலைவர்களும் அறிக்கைகள் வெளியிட கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தனர். ட்ரம்ப் "சால்வடோரியர்களின் கண்ணியத்தைத் காயப்படுத்தி" விட்டதாக எல் சால்வடோர் ஜனாதிபதி ட்வீட் செய்தார். ட்ரம்ப் நிர்வாகம் கடந்த திங்களன்று, தங்களின் பாதுகாக்கப்பட்ட அந்தஸ்துடன் பல தசாப்தங்களாக அமெரிக்காவில் தங்கியுள்ள எல் சால்வடோரின் 250,000 க்கும் அதிகமானவர்களை வெளியேறுமாறும், வெளியேறுவதற்கான தயாரிப்புக்காக 18 மாத கால அவகாசம் வழங்குவதாகவும், இல்லையென்றால் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவித்தது.

மெக்சிகோவின் முன்னாள் ஜனாதிபதி வின்சென்ட் ஃபோக்ஸ் ட்ரம்புக்கு ட்வீட் செய்தார்: “உங்கள் வாய் தான் உலகிலேயே மிகவும் அருவருக்கத்தக்க இழிவானது.” ட்ரம்ப் 2016 தேர்தலின் போது, “அவர்கள் போதை மருந்துகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் குற்ற நடவடிக்கைகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் பாலியல் பலாத்காரர்கள்,” என்று கூறி அமெரிக்காவிற்கு வரும் மில்லியன் கணக்கான மெக்சிகன் புலம்பெயர்ந்தோரை அவமதித்தார்.

தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கம் அவர் கருத்தை "முற்றிலும் அத்துமீறியது" என்று குறிப்பிட்டது. அந்நாட்டின் ஊடகங்கள் முழுவதும் கண்டனங்களும் ட்ரம்ப் மீதான ஏளனங்களும் நிறைந்தன. ஒரு செய்தி நிறுவனமான Daily Maverick எழுதியது, "இந்த வேகத்தில் சென்றால்,” வெள்ளை மாளிகை ஒரு நிகழ்வில் "விரைவிலேயே Ku Klux Klan கும்பல்களையும், tiki எரிகட்டைகளையும் கொண்டிருக்கும்,” என்று குறிப்பிட்டது.

பொட்ஸ்வானா அரசாங்கம் அவற்றை "கண்டனத்திற்குரிய இனவாத" கருத்துக்கள் என்று குறிப்பிட்டது, அந்நாடு வாஷிங்டனால் ஒரு "இழிவானதாக" கருதப்படுகிறதா என்பதை தெளிவுபடுத்த வருமாறு அது அமெரிக்க தூதருக்கு அழைப்பு அனுப்பியதாக செய்திகள் குறிப்பிட்டன. ஆபிரிக்கா எங்கிலும் ட்ரம்ப் க்கு கண்டனம் எழுந்ததுடன், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகள் தான் அக்கண்டத்தில் வழிவழியாக ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் பின்தங்கியநிலைக்கு பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது.

ஆச்சரியத்திற்கிடமின்றி, அங்கே ஐரோப்பிய அரசாங்கங்கள் அல்லது ஜப்பான் அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து பலமான கண்டன அறிக்கைகள் வரவில்லை. இந்த ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தினது கொள்கைகளும், உலகின் மிக வறிய பிராந்தியங்களின் மக்களுக்கு எதிராக பாரபட்சமாக உள்ளன.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து வரும் அகதிகளைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லைகளை மூட முயன்று வருகிறது, இது மத்திய தரைக்கடலைக் கடக்க முயலும் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு இட்டுச் செல்கிறது. ஜப்பானுக்கு புலம்பெயர்வது என்பது நடைமுறையளவில் பெரும்பாலான நாடுகளில் இருந்து சாத்தியமில்லை. ஆஸ்திரேலியா டஜன் கணக்கான நாடுகளைக் கறுப்புப் பட்டியலில் வைத்துள்ளது, இவற்றின் பிரஜைகளுக்கு சுற்றுலா நுழைவனுமதி கூட வழமையாக மறுக்கப்படுகிறது. உத்தியோகபூர்வமாக இவை "இழிவான நாடுகள்" என்று முத்திரை குத்தப்பட்டிருக்காது என்றாலும், அவற்றின் மக்கள் இவ்விதத்தில் தான் நடத்தப்படுகிறார்கள்.

எவ்வாறிருப்பினும் உலகில் பெரும்பாலான இடங்களில், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் இராஜாங்க துணைவிளைவுகளைப் பெரும்பிரயத்தனத்துடன் தடுக்க முயல விடப்பட்டார்கள். ஆபிரிக்கா மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுடனான அதன் உறவுகளை அமெரிக்கா மதிக்கிறது என்று வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் மறுஉத்தரவாதங்கள் வழங்கி உள்ளன.

இருப்பினும் இங்கிலாந்துக்கான பெப்ரவரி விஜயத்தை ட்ரம்ப் இரத்து செய்கிறார் என்று நேற்று வெள்ளை மாளிகை அறிவித்ததில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, இந்த பாதிப்பு சர்வதேச அளவில் விரிவடைகிறது. அவர் கருத்துக்கள் மீது பிரிட்டனில் பெரும் மனக்குமுறல் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பதையும் விட மிக அதிகமான ஆர்ப்பாட்டங்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. உண்மையில், உலகில் எங்கெல்லாம் ட்ரம்ப் பயணம் செய்கிறாரோ, அங்கெல்லாம் இந்த அரசு தலைவர் அவரின் பிரசன்னத்திற்கு பெருந்திரளான மக்களின் எதிர்ப்பால் வரவேற்கப்படுவதை அமெரிக்க ஆளும் வர்க்கம் முகங்கொடுக்கிறது.

ஓராண்டுக்கும் சற்று குறைவாக பதவியில் உள்ள ட்ரம்ப், “பாரிய பேரழிவு ஆயுதங்களை" இட்டுக்கட்டியவரும் மற்றும் போர் குற்றவாளியுமான ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷைக் காட்டிலும் ஏற்கத்தக்க வகையில் மிகவும் கடிந்து கொள்ளப்படுபவராக உள்ளார். இந்த அமெரிக்க ஜனாதிபதி பில்லியன் கணக்கான மக்களால் ஒரு நிலையற்ற போர் வெறியராக, இனவாதியாக, பொய்யராக பார்க்கப்படுகிறார். பூமியிலேயே இனரீதியிலும் கலாச்சாரரீதியிலும் மிகவும் பன்முகத்தன்மைகொண்டு விளங்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினுள், ட்ரம்பின் இனவாத புலம்பெயர்வு கொள்கைகளுக்கும் மற்றும் பாசிசவாத கண்ணோட்டங்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பானது, வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கை தரங்கள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் கோபத்துடன் இணைந்து வருகிறது.

ட்ரம்பின் கருத்துக்களுக்கு அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் எதிர்வினையோ, அவநம்பிக்கையான சூழலைக் கொண்டிருந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தால், உலக அரங்கிலும் சரி உள்நாட்டிலும் சரி, அமெரிக்க அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மை மீதான நீடித்த வீழ்ச்சி, ஓர் உடையும் புள்ளியை எட்டியுள்ளது என்பதை முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளிடையே ஓரளவுக்கு அங்கீகரிக்கப்படுகிறது.

அதிகார வட்டத்தின் உணர்வுகளைத் தொகுத்தளிக்கும் வகையில் இடாகோ குடியரசு கட்சியின் மைக் சிம்ப்சன் அசோசியேடெட் பிரஸ் க்கு கூறுகையில், “இது மிகப் பெரிய விடயம். எங்கள் தலைமையின் காரணமாக, நிஜமாகவே இது உலகளவில் அமெரிக்காவின் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை நிரூபிப்பதற்கான எங்களின் தகைமை சம்பந்தப்பட்டதாகும், அவர் அதை அழித்துக் கொண்டிருக்கிறார்,” என்றார்.

அதே நேரத்தில், குறிப்பாக ஜனநாயக கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களின் பாகத்தில் இருந்து வரும் ட்ரம்ப் மீதான கண்டனங்கள் பாசாங்குத்தனத்துடன் பிணைந்துள்ளன. பகுப்பாய்வின் இறுதியில், “இழிவான நாடுகள்" என்று குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை ஒபாமா நிர்வாகம் எவ்வாறு பார்த்தது மற்றும் பாவித்தது என்பதற்கு, ட்ரம்ப் வெறுமனே குரூரமான வெளிப்பாட்டையே வழங்குகிறார்.

ஒபாமாவின் கீழ், குறிப்பாக மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியனில் இருந்து வந்தவர்கள் —குறைந்தபட்சம் நாளொன்று 1,000 பேர் வீதமாக— குறைந்தபட்சம் 2.5 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். 2016 இல் ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், “சட்டவிரோதமாக" புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் மீதான மூர்க்கமான தொந்தரவுகள் தொய்வின்றி தொடர்ந்திருக்கும்.

அமெரிக்க ஸ்தாபகத்தில் ட்ரம்புக்கு எதிரான பரஸ்பர குற்றச்சாட்டுக்களின் நோக்கம், இப்போதைய இந்த ஜனாதிபதியை வெறுமனே ஒரு தனித்த சம்பவமாக, இல்லையென்றால் ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பு அரசியல் மீதான ஒரு களங்கமாக காட்டுவதும், காட்ட முயல்வதுமாகும். வெள்ளை மாளிகையில் ஒரு புதிய நபர் அமர்த்தப்பட்டால், விடயங்கள் "வழமைக்கு" திரும்பிவிடும் என்ற கருத்துருவை ஊக்குவிக்க எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறொன்றும் இருக்காது. அமெரிக்க முதலாளித்துவத்தினது உலகளாவிய பொருளாதார அந்தஸ்தின் ஆழ்ந்த வீழ்ச்சியாலும், அமெரிக்காவிற்குள் வர்க்க விரோதங்கள் மற்றும் சமூக சமத்துவமின்மையின் அளப்பரிய வளர்ச்சியாலும் குணாம்சப்பட்ட பல தசாப்த கால ஒரு நீடித்த நிகழ்ச்சிப்போக்கின் விளைவு தான் ட்ரம்ப்.

"சுதந்திரம்," "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகளுக்காக" அமெரிக்க ஏகாதிபத்தியம் நிற்கிறது என்ற பனிப்போர் கால பொய்களும் பிரச்சாரங்களும் கடந்த 25 ஆண்டுகளில் முற்றிலும் அம்பலமாகி உள்ளன. நாடுகள் மீதான ஊடுருவுதல் அல்லது அப்பட்டமான படையெடுப்புகளில் ஈடுபட்டு, அமெரிக்க வங்கிகளும் பெருநிறுவனங்களும் ஆதாரவளங்களைச் சூறையாடும் வகையில் மற்றும் சந்தைகளில் மேலாதிக்கம் செலுத்தும் வகையில் வாஷிங்டன் மரணங்களையும் சீரழிவுகளையும் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்குள், மக்களில் ஒரு சிறிய பகுதியினரான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் உயர்மட்ட நடுத்தர வர்க்க விளிம்பினரின் செல்வ வளத்தைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிக்கப்பட்டுள்ளன.

இது, மக்களில் மிகவும் அன்னியப்பட்ட பிரிவுகளுக்கு வார்த்தைஜால முறையீடுகள் வழங்கியதன் மூலமும், ஜனநாயகக் கட்சியினரின் வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் மூலமாகவும் ட்ரம்ப் ஆல் ஜனாதிபதி பதவியை ஜெயிக்க முடிந்த நிகழ்ச்சிப்போக்குகளால் உண்டாக்கப்பட்ட இந்த உருக்குலைந்த அரசியல் சூழலுக்குள் நிகழ்ந்துள்ளது. அவர் நிர்வாகம் பாரியளவில் பெருநிறுவன வரி வெட்டுக்கள் மூலமாக உள்நாட்டில் முதலாளித்துவ தன்னலக் குழுக்களின் நலன்களைப் பின்தொடரவும் மற்றும் சர்வதேச அளவில் இராணுவவாத ஊடுருவல்களை அதிகரிக்கவும் சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தினதும் மற்றும் அதன் ஆளும் வர்க்கத்தின் வீழ்ச்சியினதும் சீரழிவினதும் ஒரு நச்சுத்தன்மையான வெளிப்பாடாகவே உள்ளார். அரசு அதிகாரத்தின் தலைமைபீடத்தில் உள்ள ஒரு முழுமையான இனவாதி, அமெரிக்க வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கையின் பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்திற்கு வெளிப்படையான மற்றும் மூர்க்கமான வெளிப்பாடாக உள்ளார் என்பதோடு, “ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகள்" என்ற மூடுமறைப்பில் உலகெங்கிலுமான அதன் ஆக்கிரமிப்பு மற்றும் சூறையாடலை மூடிமறைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தகைமையைப் பலவீனப்படுத்துகிறார்.

புலம்பெயர்ந்தோர்-விரோத வெளிநாட்டவர் விரோத போக்கு, இனவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவை, இராணுவவாதம் மற்றும் தொழிலாள வர்க்கம் மீது ஆழப்படுத்தப்படும் தாக்குதல்களுக்கு தவிர்க்கவியலாத பின்விளைவுகளாக உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும், இவ்விதமாக தான் முதலாளித்துவ வர்க்கம் பெருந்திரளான மக்களைப் பிளவுபடுத்தி நோக்குநிலை பிறழ வைக்கவும், சமூகத்தின் செல்வ வளம் மற்றும் உற்பத்தி சக்தி மீது உரிமை மற்றும் கட்டுப்பாட்டைப் பாதுகாக்கவும் முயன்று வருகிறது.

ஆகவே, இனவாதம் மற்றும் பேரினவாதத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பாக, முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் மற்றும் அதன் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கும் எதிரான முழு எதிர்ப்பை அபிவிருத்தி செய்தாக வேண்டும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும், இது உலக சோசலிசத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்துடன் விடையிறுக்கப்பட வேண்டும்.