ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Venture estate workers strike against harsh conditions

இலங்கை: வென்சர் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர்

M. Thevarajah
25 January 2018

ஜனவரி 22 அன்று, மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் வென்ச்சர் குரூப் தோட்டத்தின் நான்கு பிரிவுகளிலுள்ள 800 தொழிலாளர்கள் கடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்திற்கான உடனடி காரணம், ஐந்து தொழிலாளர்கள் பயணம் செய்த றக் வண்டி கவிழ்ந்ததன் காரணமாக அவர்கள் காயமடைந்ததாகும். தேயிலை கொழுந்துகள் அளவுக்கு மிஞ்சி ஏற்றப்பட்டிருந்ததால் றக் வண்டி கவிழ்ந்தது.

மடுல்சீமை பெருந்தோட்டங்களுக்கு சொந்தமான நிறுவன குழுமத்தின் நிர்வாகமே இதற்குப் பொறுப்பு என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்தை உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் விவரிக்கும் ஒரு தொழிலாளி கூறியதாவது: " முதல்நாள் இந்த றக் வண்டியில் 1,500 கிலோ தேயிலை கொழுந்துகள் மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதுவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் அன்று 2,500 கிலோவுக்கும் அதிகமான தேயிலை கொழுந்துகள் அன்று ஏற்றப்பட்டிருந்தன." முன்னதாக ஒரு தொழிலாளி அளவு மீறி சுமையேற்றப்பட்ட வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டார். தொழிலாளர்கள் அதைப் பற்றி புகார் கூறும்போது, உதவி முகாமையாளர் அஸிஸ் பெரேரா, தோட்டத்திற்கு ஒரே ஒரு றக் வாகனம் மட்டுமே இருப்பதாகவும், அந்த ஒன்றைப் பயன்படுத்துவதைத் தவிர மாற்றீடு இல்லை என்று கூறினார். "நிர்வாகம் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்" என தொழிலாளி கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியினருடன் கலந்துரையாடும் தொழிலாளர்கள்

"பொலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே விபத்து நடந்த இடத்திலிருந்து வாகனத்தை நிர்வாகத்தினர் அகற்றினர். தங்கள் தவறுகளை மூடிமறைக்க அவர்கள் இதை செய்தனர். தொழிலாளர்கள் தங்கள் சொந்த செலவில் காயமடைந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்".

காயமடைந்த தொழிலாளர்கள் எஸ். சிவயோகோகராஜா, பத்மநாதன், தயாபரன், கலைக்குமார் மற்றும் பிரான்சிஸ். பத்மநாதன் மோசமான நிலைமையில் இருப்பதானல் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் டிக்கோயா கிளன்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், எஸ். சிவயோகராஜா (25) இரண்டு பற்களை இழந்துள்ளார்.

இந்த சம்பவம் இந்த வேலைநிறுத்தத்திற்கு உடனடி காரணமாக இருந்தபோதிலும், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிலாளர்களின் நிலைமைகள் மீது நிர்வாகம் மேற்கொள்ளும் தாக்குதல்களே உண்மையான காரணமாகும்.

கடந்த ஆண்டு தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையை நிர்வாகம் மூடிவிட்டதோடு இதனால் பல தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் ஒன்று தொழிற்சாலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பதாகும்.

தோட்டத்தின் பல தொழிலாளர்கள் தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்றனர். காயமடைந்த சிவயோகராஜா, கடந்த 11 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 330 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு தற்காலிக தொழிலாளியாக வேலை செய்கின்றார்.

தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தை கேள்விப்பட்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகியவற்றின் பிரதேச தலைவர்கள் தோட்டங்களுக்கு விரைந்தனர். அவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிக்க அங்கு வரவில்லை, மாறாக அதைத் தடுத்து நிர்வாகத்திற்கு உதவுவதற்கே அவர்கள் வந்தனர்.

அவர்கள் நிர்வாகத்துடன் கலந்துரையாடி தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தைப் பற்றி நிர்வாகம் அறிவித்தவுடன் பொலிஸ் ஒரு குழுவை அனுப்பியிருந்தது. 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையை திறக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டு, இப்போது அது இயங்குகின்றது. இ.தொ.கா. மற்றும் NUW தலைவர்கள், காயமடைந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதைப் பற்றி கூட கலந்துரையாடியிருக்கவில்லை. விபத்தும் மூடி மறைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

தொழிற்சாலை திடீரென திறக்கப்பட்டமை, தொழிலாளர்களை சமாதானப்படுத்தி வேலைக்குத் திரும்ப வைப்பதற்கான ஒரு தற்காலிக ஒட்டுப் போடும் வேலை போல் தெரிகின்றது. தொழிற்சங்கத் தலைவர்களின் தலையீட்டிற்கான இன்னொரு காரணம், தொடர்ச்சியான எதிர்ப்பு பிரச்சாரம் ஏனைய தொழிலாளர்களின் ஆதரவைப் பெறும் என்ற அச்சமே ஆகும்.

அடுத்தடுத்து காட்டிக்கொடுப்புகளைச் செய்த பின்னர், அவப்பேறு பெற்ற தொழிற்சங்கங்கள் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் தேர்வாவதற்கு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை பெறுவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபடுகின்றன. அரசியல் கட்சிகளாகவும் செயல்படும் இந்த தொழிற்சங்கங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கும் தெரிவாவது, முதலாளித்துவ அரசின் நலன்களுக்கு சேவை செய்வது தங்கள் சிறப்புரிமைகளை வளர்த்துக்கொள்வதற்கு அவசியமானது எனக் கருதுகின்றன.

மற்றொரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்ததாவது: "உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே இத்தகைய தொழிற்சங்கங்கள் உடனடியாக அங்கு வந்தன. இல்லையென்றால் அவை எங்கள் பிரச்சனையைப் பேச வரப்போவதில்லை. நாங்கள் எங்கள் கசப்பான நிலைமைகள் மற்றும் தொழிற்சாலை மூடப்பட்டிருப்பது பற்றி பல முறை புகார் செய்தோம். ஆனால் அவர்கள் இங்கு வரவில்லை. தொழிற்சாலையை இயக்க போதுமானளவு தேயிலை அறுவடை இல்லை என்ற நிர்வாகத்தின் நிலைப்பாட்டை தொழிற்சங்கங்கள் நியாயப்படுத்துகின்றது. அவர்களது ஆசீர்வாதத்துடன், மடுல்சீம பெருந்தோட்டத்தின் கீழ் உள்ள கீவ் தோட்டத் தொழிற்சாலைக்கு தோட்டத்தின் கொழுந்துகள் எடுத்துச் செல்லப்படுகின்றன."

எஸ்.சுரேஷ்குமார் தோட்டத்தின் கடுமையான நிலைமைகளை விளக்கினார்: "எனக்கும் என் மனைவிக்கும் வேலை கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. மகப்பேற்று விடுமுறையின் பின் மனைவிக்கு உடல் நலக் குறைவால் மனைவி வேலைக்கு செல்லவில்லை. இப்போது அவர் வேலைக்குச் செல்லத் தயாராக உள்ளார், ஆனால் நிர்வாகம் வேலை கொடுக்க மறுத்துவிட்டது. அவர்கள் நிரந்தர வேலையைத் துறந்து தற்காலிக அடிப்படையில் வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். அதே விஷயம் எனக்கும் நடந்தது. நான் நான்கு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தேன், வேலை செய்ய முடியவில்லை. நிர்வாகம் வேலை கொடுக்க மறுத்துவிட்டது. நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிறோம்."

இந்த தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோரின் வீடுகளுக்கு கழிப்பறைகள் இல்லை, போதுமான நீர் வசதி இல்லை. ஒரு மருந்தகம் கூட கிடையாது.

"தொழிற்சங்கங்கள் பயனற்றவை; அவர்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடவில்லை. அதிகாரத்தில் உள்ள எந்த அரசாங்கமும் எங்களை ஆதரிக்கவில்லை. இந்த தேர்தலில் வாக்களிப்பதில் பயன் என்ன?"

வென்சர் பெருந்தோட்டக் குழுமத்தின் நிலைமை, தோட்டத் தொழிலாளர்களின் மோசமான நிலைமைகளின் மற்றொரு வெளிப்பாடு ஆகும். அரசாங்கத்தின் ஆசீர்வாதம் மற்றும் தொழிற்சங்கங்களின் உதவியுடன் தோட்டக் கம்பனிகள் உலக சந்தையில் எதிர்கொள்ளும் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கு வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஏனைய நிலைமைகளை திட்டமிட்டு தாக்குகின்றன.