ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජනතා විමුක්ති පෙරමුනේ ඊනියා දූෂන විරෝධී යුද්ධය වැඩකරන ජනතාවගේ ඇස්වලට වැලි ගැසීමක්

இலங்கையில் ஜே.வி.பி.யின் போலி ஊழல் எதிர்ப்புப் போர் உழைக்கும் மக்களின் கண்களுக்கு மண் தூவும் நடவடிக்கை

Wilani Peris
29 January 2018

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), நடக்கவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 311 சபைகளுக்குப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் தொணிப்பொருளாக "கிராமத்தை கட்டியெழுப்பும் ஊழலைத் தோற்கடிக்கும் சக்தி," என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூச்சல் மிகு பிரச்சாரத்திற்கு அடிபணிந்து அரசாங்கத்தினதும் முதலாளித்துவ வர்க்கத்தினதும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் முன் தோன்றியுள்ள உண்மையான அரசியல் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக ஜே.வி.பி. ஏனைய முதலாளித்துவ கட்சிகளுடன் சேர்ந்து கூட்டாக செயற்படுகின்றது என நாம் எச்சரிக்கின்றோம்.

வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளை நசுக்குதல், ஜனநாயக விரோத ஆட்சி மற்றும் கொடூரமான இனவாத போரினால் ஏற்படுத்தப்பட்ட அழிவின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்கள் மத்தியில் பரவியிருந்த எதிர்ப்பை, போலி நல்லாட்சியை அமைத்தல் என்ற பெயரில் திசை திருப்பிவிட்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைத்தவர்கள் மத்தியில் ஜே.வி.பி. முன்னணியில் இருந்தது. அது மட்டுமன்றி, சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த அமெரிக்கச்-சார்பு அரசாங்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய நிர்வாகக் குழுவில் ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க பங்கெடுத்துக்கொண்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி வாழ்க்கை, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை மிதித்துத்தள்ளும் அரசாங்கமாக, சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகமானது உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளது. சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக தோள் கொடுத்தன் மூலம் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு தாமும் பொறுப்பாளியாக இருந்தாலும் ஜே.வி.பீ. திருட்டுப் பூணை போல் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பை ஊழல் எதிர்ப்பு பிரச்சாரமாக திருப்பி விட்டு, கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களுக்கு முண்டு கொடுத்ததன் காரணமாக சரிந்து போயுள்ள தமது ஆதரவுத் தளத்தை சீர்படுத்திக் கொண்டு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வருவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொள்வதற்கு ஜே.வி.பி. முயற்சிக்கின்றது.

காலியில் ஜனவரி 20 அன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “எழுபது ஆண்டுகளாக எமது நாடு கடற் கொள்ளையர்களின் கையில் அகப்பட்டது போல் ஆகியுள்ளது” என கூறிய ஜே.வி.பி. தலைவர் திசாநாயக்க, பின்வருமாறு கேட்டார். “எங்களுக்கு வாக்களிக்காகவிட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொடுப்பீர்களா? அல்லது மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுப்பீர்கள்? இல்லையெனில் புதிய கட்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு (ஸ்ரீ.ல.பொ.மு.) கொடுப்பீர்களா?” பின்னர் அவர், ராஜபக்ஷ, சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சிகளின் கீழ் இடம்பெற்ற பிரமாண்டமான கொள்ளையடிப்புகளின் ஒரு பட்டியலை நீண்டினார்.

"இப்போது எமது நாட்டை ஏமாற்று அரசியலில் இருந்து விடுவித்துக்கொள்ளும் போராட்டத்தை தொடங்குவோம்" என கோட்டுக்கொண்ட திசாநாயக்க, அதற்கு சிறந்த வாய்ப்பு பெப்பிரவரி 10 நடக்கவுள்ள தேர்தலே என்றார். "ஒரு மிக வலுவான சக்தியை பெறுவதில் வெற்றி கண்டால் 2020ல் அரசாங்கத்தை கைப்பற்றும் திறமை கொண்ட கட்சியாக ஜே.வி.பி.யை கட்டியெழுப்புவதாக" அவர் கூறினார்.

ஜே.வி.பி. எந்த கூட்டத்திற்கு செவி மடுத்தாலும் திசாநாயக்கவின் மட்டுமன்றி கட்சியின் ஏனையத் தலைவர்களிடமும் இடைவிடாது இதே கதைகளையே கேட்க முடியும்.

இந்த கதையில் பல விஷயங்களை கூட அவர் தவறவிட்டார். 2015ல் இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை மற்றும் அவரது ஊழலை முடிவுக்கு கொண்டுவரும் ஜே.வி.பி.யின் திட்டத்திற்கு என்ன நடந்தது? ஜே.வி.பி.யும் ஏனையவர்களும் சிரிசேனவை தூக்கி நிறுத்துவதற்காக முன்னெடுத்த பிரச்சாரம் சரிந்துபோனது ஏன்? வெறுமனே, சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர் என்பது மட்டுமே திசாநாயக்கவின் பதிலாக இருந்தது.

இந்த கட்சிகள் மற்றும் குழுக்களும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியும் இராஜபக்ஷ மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களதும் தனிப்பட்ட பாவத்தில் இருந்து தோன்றியதாக மக்களை நம்ப வைக்க முயன்றன. எனவே, அவரை மாற்றி வேறு யாரையாவது அதிகாரதிற்கு கொண்டு வருவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என நம்ப வைக்க முயன்றன. இராஜபக்ஷ ஆட்சியின் இழிந்த நடவடிக்கைகள், நாற்றமெடுத்து வரும் முதலாளித்துவத்தின் ஒரு தீய வெளிப்பாடே என்பதை மூடி மறைக்கவே அவர்கள் முயன்றனர். இந்த ஜனநாயக விரோத ஆட்சி, வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகள் நசுக்கப்படுதல், ஊழல் மற்றும் மோசடிகள் இந்த முதலாளித்துவ முறைமையுடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். இது ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்காகும்.

இந்த உண்மையை ஜே.வி.பி மிகவும் கவனமாக மூடி மறைக்கின்றது. ஏனெனில், அவர்களின் கொள்கைகள் முதலாளித்துவ முறைமையை பாதுகாக்கவே கடமைப்பட்டுள்ளன. அவர்களின் படி ஊழல், மோசடி மற்றும் வீணடிப்புகளை நிறுத்தி, இந்த அமைப்புமுறையைத் தூய்மைப்படுத்தி பராமரிக்க முடியும். இது, முதலாளித்துவத்தை காப்பதற்காக பின்னும் ஒரு நச்சுத்தனமான புணை கதையாகும். நெருக்கடி மிகு முதலாளித்துவத்தை அவ்வாறு சீர்படுத்தி வைக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த பிரச்சாரத்தை ஜே.வி.பி. மட்டுமே தனியாக முன்னெடுக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைவரான ஜனாதிபதி சிறிசேனவும் ஐ.தே.க. தலைவர் விக்கிரமசிங்க, இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யும் இந்த பிரச்சாரத்தை ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு முன்னெடுக்கின்றனர். மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள் இந்த பிரச்சாரத்தை ஊதிப் பெருக்கச் செய்கின்றன.

இது ஒரு அறிவிக்கப்படாத கூட்டணியாகும். ஜே.வி.பி, ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அத்தகைய கூட்டணியில் இருப்பது, ஊழல் எதிர்ப்பு புகையின் மூலம் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் அனைத்து தாக்குதல்களதும் தோற்றுவாய் உலக முதலாளித்துவமே என்பதையும் அதன் பகுதியாக இலங்கை முதலாளித்துவத்தின் நெருக்கடியையும் மூடி மறைப்பதற்கே ஆகும்.

ஜே.வி.பி.யின் பிரச்சாரத்தின் முதலாளித்துவ-சார்பு குணாம்சத்தை விளக்குகின்ற மற்றொரு பக்கமும் உள்ளது. நகரம் மற்றும் கிராமத்தை மோசடிக்காரர்களின் கைகளில் இருந்து விடுவித்துக்கொண்டால் வீணடிப்புகளை இல்லாமல் ஆக்கி இந்த பிரதேசங்களை சீர்செய்துகொள்ள முடியும் என அவர்கள் கூறுகின்றனர். சிலகாலம் அவர்களது அதிகாரத்தின் கீழ் இருந்த திஸ்ஸமகாராம பிரதேச சபையை அவர்கள் சிறந்த உதாரணமாக காட்டுகின்றனர். ஆனால், அவர்கள் திஸ்ஸமஹாராமவில் செய்தது, அரசாங்கத்தினால் பங்கிடப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் கிடைத்த நிதியைச் செலவிட்டும் மக்களை சிரமதானத்தில் ஈடுபடுத்தியும் ஆட்சி செய்வதையே அன்றி, வேறு புதினங்களை அல்ல. இந்த நாட்களில், அவர்கள், நாட்டிலுள்ள உள்ளூர் சபைகளை தமது கைக்கு கொடுத்தால் அவற்றையும் பிரதேசத்தில் உள்ள வளங்களைக் கொண்டு கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதைக் காட்டுவோம் என வாய்ச்சவடால் விடுக்கின்றனர். நாடெங்கிலும் உள்ள முதலாளித்துவ வர்க்க ஆட்சியானது மக்களை வறுமையில் ஆழ்த்துகின்ற போது, கிராமத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற மற்றொரு கட்டுக்கதையையும் அவர்கள் கட்டி விடுகின்றனர்.

ஜனவரி 21ம் திகதி, அரசாங்கத்தின் ஒப்சேவர் பத்திரிகை திசாநாயக்கவுடன் ஒரு பேட்டியை வெளியிட்டது. அதில் அதை எழுதியவர், “ஜே.வி.பி.யின் 'கடந்த கால வன்முறை” தேர்தலில் பிரச்சினையாக மாறலாம் என்பதால் அந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார். இந்த விமர்சனங்கள் 28 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைய காலத்துக்கு உரியது என்று கூறிய திசாநாயக்க பின்வருமாறு பதிலளித்தார்: “1994ல் ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த பின்னர், எங்களுக்கு எதிராக கனிசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை".

நிச்சயமாக, சே குவேரா, காஸ்ட்ரோ போன்றோர் பற்றியும் அவ்வப்போது மார்க்சிசம் மற்றும் சோசலிசம் பற்றியும் தீவிரவாத புலம்பல்களை சோடிப்பு நடவடிக்கைகளாக முன்னெடுத்தாலும், முதலாளித்துவ ஸ்தாபனத்துக்காக அர்ப்பணித்துக்கொள்வதை 1994ல் தொடங்கி கடந்த இரண்டு தசாப்தங்களில் மேலும் மேலும் வலது பக்கம் செல்வதை ஜே.வி.பி. காட்சிப்படுத்தியதனால் அது பற்றி “ஆளும் வர்க்கத்திடம் இருந்து கணிசமான விமர்சனம் வரவில்லை." தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிட்டு தொழிலாள வர்க்கத்தை இனவாத அடிப்படையில் பிளவுபடுத்தி வைக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையை ஆதரித்து வந்த இந்த கட்சி, 1983ல் இனவாத யுத்தம் தொடங்கியதில் இருந்தே அதன் முக்கிய ஊது குழலாக இயங்கி வந்துள்ளது.

ஸ்ரீ.ல.சு.க.யின் அப்போதை தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு ஒத்துழைப்பு கொடுத்ததில் இருதந்தே ஜே.வி.பி.யின் புதிய "மாற்றம்" தொடங்கியது. 2004ல் அவரின் அரசாங்கத்திற்குள் நுழைந்து கொண்ட ஜே.வி.பி., 2005ல் இராஜபக்ஷவை ஆதரித்து, பின்னர், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐ.தே.க.யுடன் கூட்டுச் சேர்ந்து கடைசியில் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முகாம் அமைத்துக்கொண்டது. இனி, ஜே.வி.பி. அரசியல் ஸ்தாபனத்துடன் ஒன்று கலந்திருப்பதற்கு வேறு சான்றுகள் எதற்கு?

இந்த "மாற்றமானது" உலகளவில் ஏற்படும் அபிவிருத்திகள் இலங்கை கட்சி மூலம் வெளிப்படும் ஒரு வடிவம் ஆகும். முன்னர் தேசியவாத இயக்கங்களால் தூக்கிப் பிடிக்கப்பட்ட தேசியவாத வேலைத் திட்டங்கள் உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துடன், 1980 களில் பொறிந்து போயின. நிதி மூலதனத்தை சுரண்டுவதற்காக கட்டவிழ்த்து விடப்படும் புதிய தாக்குதல்களுக்கு முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அடிபணிந்து போயின. தேசியவாத கொள்கைகள் பொறிந்து போய், 1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன், இந்த குழுக்களின் வலது நோக்கிய பயணம் துரிதப்படுத்தப்பட்டது. சிங்களம் பேரினவாதத்தை, சே குவேராவாதம் மற்றும் மாவோவாதத்துடன் கலந்து உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பிறந்த ஜே.வி.பி., தற்போதைய முதலாளித்துவ சார்பு அரசியல் கடந்த காலத்தில் இருந்து வேறுபட்டது அல்ல. அது அதன் தர்க்கரீதியான வலது சாரி பரிணாமமே ஆகும்.

ஜே.வி.பி.யின் வலதுசாரி நகர்வானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுடன் பிணைந்துள்ளது. இது கொழும்பிலுள்ள மேற்குலக தூதரகங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவுகள் அதன் ஒரு பகுதியாகும். சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவரும் ஆட்சி மாற்றத்தை இலங்கைக்குள் கொண்டு வருவதற்காக, வாஷிங்டன் திரைமறைவில் இருந்து செயற்பட்டது. அதற்கு காரணம் இராஜபக்ஷ பெய்ஜிங் உடன் கொண்டிருந்த உறவில் இருந்து இலங்கையை தூர விலக்கி, சீனாவுக்கு எதிரான தனது மூலோபாயத்துடன் பிணைத்துக்கொள்வதற்காக இருந்த அவசியமே ஆகும். ஜே.வி.பி. 2015ல் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்டதன் மூலம் இந்த பிற்போக்கு இயக்கத்துடனேயே கூட்டுச் சேர்ந்திருந்தது.

ஜே.வி.பி. யின் பொருளாதார வேலைத்திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சலுகை கொடுத்து முதலீடுகளை ஈர்க்கும் இலங்கையில் பெருவணிகத்தினருக்கு நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் கொள்கையாகும். 2017 செப்டம்பர் 14 அன்று கொழும்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் பெரு வர்த்தகர்கள் முன் உரையாற்றிய திஸாநாயக்க உறுதியளித்ததாவது: "எங்கள் கட்சி வெளிநாட்டு முதலீட்டை கண்டனம் செய்யவில்லை. அதை தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு நாம் வரவேற்போம்... ரஷ்யா மற்றும் சீனா போன்ற இன்னொரு சோசலிச அரசாக இலங்கையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை."

ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டது. சீனா உருக்குலைந்த தொழிலாளர் அரசாக இருந்து 1980களின் நடுப்பகுதியில் இருந்து முதலாளித்துவம் ஆட்சிக்கு வந்த நாடாகும். எனினும் தாம் எந்த வகையிலும் சோசலிசவாதி அல்ல என்பதை முதலீட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டவே திசநாயக்க விரும்பினார்.

ஊழல் எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக காட்டிக்கொண்டு, முதலாளித்துவ முறைமைக்கு அது அர்ப்பணித்துக்கொண்டுள்ளதே ஜே.வி.பி. மூடி மறைக்கிறது. இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளைப் போலவே ஜே.வி.பி.யும், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு சமாந்தரமாக இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் தீவிரமயமாதல் பற்றி பீதியடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் முன் தீர்க்கமான பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அவர்களது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் நசுக்கப்படுகிறது, ஜனநாயக உரிமைகள் அபகரிக்கப்பட்டு பொலிஸ்-அரச ஆட்சியை உருவாக்கும் நிலைமைகள் முடுக்கிவிடப்படுகின்றன. இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்திய யுத்த வண்டியுடன் கட்டிப் போடுவதற்கு அசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

ஜே.வி.பி. பிற கட்சிகள் மற்றும் குழுக்களுடனும் சேர்ந்து செய்யும் ஊழல் எதிர்ப்பு வனப்புரை பொறியை வெகுஜனங்கள் நிராகரிக்க வேண்டும். இந்த கட்சிகளில் இருந்து அவர்கள் சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக தயாராக வேண்டியதே அவர்களுக்கு உள்ள ஒரே மாற்றீடு ஆகும்.

உற்பத்தியும் விநியோகமும் ஒரு சிலரின் இலாபங்களுக்கா அன்றி, சமுதாயத்தில் பெரும்பான்மையினரின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும். தேசிய மற்றும் வெளிநாட்டு பெரும் வர்த்தகங்கள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதவன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். இதைத் தவிர வேறு வழியில் ஊழலை நீக்க முடியாது. தொழிலாளர்கள் இனவாத பிளவுகளை கடந்து ஐக்கியப்பட்டு அனைத்து ஏழை மற்றும் இளைஞர்களின் தலைமையை எடுத்துக்கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான வேலைத் திட்டத்தின் அடிப்டையில் செயற்பட வேண்டியது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த வேலைத் திட்டத்தையே முன்வைக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டுவர கொலொன்னவா, ஊர்காவற்துறை மற்றும் அம்பகமுவ பிரதேசங்களுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் சோ.ச.க. செயற்படுகின்றது. சோசலிச மாற்றீட்டுக்காகப் போராட வேண்டிய புரட்சிகரக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இந்த போராட்டத்தில் சேருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.