ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German parties reach agreement on grand coalition for war and austerity

ஜேர்மன் கட்சிகள் போர் மற்றும் சிக்கன திட்டங்களுக்கான பெரும் கூட்டணி மீது உடன்பாடு எட்டுகின்றன

By Johannes Stern
8 February 2018

ஜேர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) ஒரு புதிய பெரும் கூட்டணி அரசாங்கம் அமைப்பதில் அவை ஓர் உடன்பாடு எட்டிவிட்டதாக புதனன்று அறிவித்தன.

மூன்றாவது முறையாக அமைக்கப்படும் இந்த பெரும் கூட்டணி, நாஜி ஆட்சி வீழ்ச்சிக்குப் பிந்தைய மிக வலதுசாரி ஜேர்மன் அரசாங்கமாக இருக்கப் போகிறது. அது மிகப் பெரியளவில் இராணுவ ஆயத்தப்படுத்தலைத் தொடங்க முனையும், ஒரு புதிய சுற்று சமூக தாக்குதல்களை ஆரம்பிக்கும், அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (Alternative for Germany - AfD) அகதிகள் கொள்கையை ஏற்கும் என்பதோடு, உள்நாட்டில் ஒடுக்குமுறையை நடத்த ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிக்கும்.

அந்த கூட்டணியின் 177 பக்க உடன்படிக்கை மீதான ஒரு கவனமான ஆய்வு இதை தான் தெளிவுபடுத்துகிறது. கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூக செலவினங்களுக்கு அதிக பணம் ஒதுக்கப்படும் என்று தற்போதைய SPD தலைவர் மார்டீன் சூல்ஸ் மற்றும் அவர் இடத்தில் வரவிருக்கும் ஆண்ட்ரீயா நஹ்லெஸ் ஆகியோர் இடைவிடாது கூறுவதைப் போலவே, முன்னணி சமூக ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து வரும் இந்த வெற்று வாக்குறுதிகள், அவர்கள் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற்போக்குத்தனமான திட்டங்களை வெறுமனே மூடிமறைக்கவும் மற்றும் அவற்றை நடைமுறையில் இப்போது திணிக்க நகர்வதற்குமே சேவையாற்றுகின்றன.

புதிய அரசாங்கம் பின்பற்றவிருக்கும் கொள்கைகளின் முன்னோட்டமாக, SPD உடன் நெருக்கமாக இணைந்துள்ள IG Metall தொழிற்சங்கம், நடப்பில் உள்ள கூலி தேக்கத்தையே திணித்ததன் மூலமும் மற்றும் வேலை நிலைமைகளை இன்னும் கடுமையாக மோசமாக்குவதன் மூலமும் நூறாயிரக் கணக்கான தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகளை முறியடித்த வெறும் ஒரு நாளுக்கு பின்னரும் இந்த அறிவிப்பு வந்தது.

முந்தைய பெரும் கூட்டணியால் 2014 முனீச் பாதுகாப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட, ஜேர்மனியினது "வல்லரசு" வெளியுறவுக் கொள்கையின் மீள்வருகை மீதே இக்கூட்டணி அரசாங்கத்தின் மத்திய கவனம் செலுத்தப்பட்டிருக்கும். “உலகெங்கிலும் சமாதானம், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு ஜேர்மனியின் பொறுப்புறுதி" என்று ஒட்டுமொத்த உடன்படிக்கையிலும் மிக நீளமாக உள்ள 20 பக்க அத்தியாயத்தை, பாரிய ஜேர்மன் இராணுவவாத விரிவாக்கத்திற்கான ஒரு முன்நகலாக வாசிக்க வேண்டியுள்ளது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டுமொருமுறை அதன் செல்வாக்கு மண்டலங்களாக பார்க்கும் நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் ஒட்டுமொத்த கண்டங்களை அந்த அத்தியாயம் அடையாளப்படுத்துகிறது: அவை மேற்கு பால்கன் நாடுகள், ரஷ்யா, உக்ரேன், துருக்கி, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும்.

“ஒரு நவீன இராணுவம்,” என்று தலைப்பிட்ட ஒரு பகுதியில், சமூக ஜனநாயகக் கட்சியும் பழமைவாத கட்சிகளும் "சாத்தியமான அளவுக்கு சிறந்த தளவாடங்களை வைத்திருக்கவும்" மற்றும் இராணுவம் "அவற்றின் அனைத்து பரிமாணங்களிலும் அதற்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிபுணத்துவத்துடன் முடிக்குமளவுக்கு" அதற்கு "பயிற்சி வழங்கவும்" சூளுரைக்கின்றன.

இராணுவம் "அதற்கு என்ன வழங்கப்படுவதை அல்லாது, அதற்கு என்ன அவசியப்படுகிறதோ" அதை கொள்முதல் செய்யும். “நடைமுறைக்கு உகந்த" ஓர் இராணுவ எந்திரம் இருப்பது அவசியம். மேற்கூறியதை எட்டுவதற்காக, “கடந்த சட்டமன்ற காலத்தின்போது தொடங்கிய இராணுவத்தின் புதுப்பிப்பு, நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம்" “தொடரும் என்றாலும், அதேவேளையில் நடைமுறைகளின் வேகம், குறிப்பாக கொள்முதல் செய்யும் நடைமுறைகளின் வேகம்" உறுதி செய்யப்படும்.

நிதிய அர்த்தத்தில், இதன் அர்த்தம் வரவிருக்கும் ஆண்டுகளில் ஜேர்மனியின் இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 35 பில்லியன் யூரோ அதிகரிக்கும். “தகமை இலக்குகளை அடைவது மற்றும் இப்போதுள்ள அத்தகைமைக்கான இடைவெளிகளை அடைப்பது தொடர்பாக நேட்டோவிடம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதை நாங்கள் எட்ட விரும்புகிறோம்,” என்பதை வரையறுத்து, பழமைவாத கட்சிகளும் சமூக ஜனநாயகக் கட்சியும் 2024 க்குள் பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கு உயர்த்த பொறுப்பேற்றன.

இராணுவத்திற்கு செலவிடப்பட உள்ள இந்த பெரும்தொகைகளோடு ஒப்பிடுகையில், அடுத்த நான்காண்டுகளில் கூடுதல் சமூக செலவினங்களுக்கு ஒதுக்குவதாக கூறப்படும் 46 பில்லியன் யூரோ மிகச் சொற்ப தொகையாக உள்ளது. எவ்வாறிருப்பினும் இது இராணுவ செலவினங்களுக்காக தியாகம் செய்யப்படக்கூடும் என்பதாக தெரிகிறது, ஏனெனில் குறிப்பாக கூட்டணி உடன்படிக்கை ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டத்தை தொடர்ந்தும் பேண விரும்புவதுடன், செல்வந்தர்களுக்கு ஏதேனும் வரி உயர்வு செய்யவோ அல்லது சொத்து வரி விதிப்பதையோ தவிர்க்கிறது.

அந்த ஆவணம், ஜேர்மனிக்கென அணுஆயுத அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவும் அழைப்பு விடுக்கிறது. அந்த ஆவணம் "ஆயுதக் குறைப்பு மற்றும் கட்டுப்பாடான ஆயுத ஏற்றுமதி கொள்கை" என்ற பகுதியில், “அணுஆயுதங்கள் நேட்டோவின் மூலோபாய கருத்துருவில் தடுப்புமுறைக்கான ஒரு கருவியாக இருக்கும் வரையில், மூலோபாய விவாதங்களிலும் நடைமுறை திட்டமிடல்களிலும் பங்கெடுப்பதில் ஜேர்மனிக்கு ஆர்வம் கொண்டிருக்கும்,” என்று குறிப்பிடுகிறது.

“இராணுவத்தின் தற்போதைய வெளிநாட்டு தலையீடுகள்" என்ற பகுதியில், இந்த கூட்டணி கட்சிகள் ஜேர்மன் இராணுவ தலையீடுகளை நீடிக்கவும் மற்றும் விரிவாக்கவும் அழைப்பு விடுக்கின்றன. அவை "பரந்த ஸ்திரப்பாட்டிற்கான மற்றும் ISIS பயங்கரவாதத்தை நீடித்து எதிர்கொள்வதற்கான உரிமை கட்டளையாக… மேற்கொண்டு அபிவிருத்தி செய்யவும்,” வடக்கு ஆப்கானிஸ்தானில் "சிப்பாய்களின் எண்ணிக்கையை" அதிகரிக்கவும், மாலியில் இராணுவ தலையீட்டை "தொடரவும்,” மற்றும் அங்கே சண்டையிட்டு வரும் சிப்பாய்களின் எண்ணிக்கை மீதிருக்கும் "உச்ச வரம்பை" “உயர்த்தவும்" விரும்புகின்றன.

உலக அரங்கில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வல்லரசு அபிலாஷைகளை முன்னெடுக்க, பழமைவாத கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சியும் பிரான்ஸ் உடனான கூட்டுறவுடன் ஐரோப்பிய கூட்டு இராணுவம் மற்றும் வல்லரசு கொள்கைக்கு முறையிடுகின்றன.

“ஐரோப்பாவிற்கான ஒரு புதிய தொடக்கம்,” என்று தலைப்பிட்ட அந்த உடன்படிக்கையின் முதல் அத்தியாயம் குறிப்பிடுகிறது, “சமீபத்திய ஆண்டுகளில் சக்திகளின் உலகளாவிய சமநிலையானது, அரசியல்ரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும், அடிப்படையிலேயே மாற்றமடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு அதன் நலன்களுக்கான புதிய பகுதிகளும், சீனா மற்றும் ரஷ்யாவின் கொள்கை பலப்படுத்தப்பட்டு வருவதும், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த காலத்தில் செய்ததைக் காட்டிலும் அதிகமாக அதன் தலைவிதியை அதன் கரங்களில் எடுத்தாக வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே, உலகில் தன்னை பலமாக காட்டிக் கொள்ளவும் மற்றும் அதன் பொதுவான நலன்களை வலியுறுத்தவும் வாய்ப்பைக் கொண்டிருக்கும்.”

“இராணுவத் துறையில் நிரந்தர பாதுகாப்பு கூட்டுறவின்" அபிவிருத்தி, “ஐரோப்பிய பாதுகாப்பு நிதிகளை" பயன்படுத்துதல் மற்றும் "படைத்துறைசாரா நடவடிக்கைகளும் இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு, உரிய முறையில் ஆயத்தப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைமையகங்களை" உருவாக்குவது ஆகியவை இக்கூட்டணியின் அறிவிக்கப்பட்ட இலக்குகளில் உள்ளடங்குகின்றன. இதற்கும் கூடுதலாக, “ஐரோப்பியர்களுக்கான இராணுவம்" ஒன்றை உருவாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த “ஐரோப்பாவிற்கான புதிய தொடக்கத்தின்” மறுபக்கத்தில், ஏற்கனவே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையில் தள்ளியுள்ள சிக்கன கொள்கைகளின் தீவிரப்பாடு அமைந்துள்ளது. “ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டித்தன்மை மற்றும் பூகோளமயமாக்கலின் உள்ளடக்கத்தில் சாத்தியமான வளர்ச்சியைப் பலப்படுத்துவது,” மற்றும் “பிரான்சுடனான பங்காண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து சீர்திருத்துவது” ஆகியவையே இந்த அரசாங்கத்தின் இலக்கு.

உள்நாட்டில், போர் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒடுக்க CDU/CSU மற்றும் SPD ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிக்க திட்டமிட்டு வருகின்றன. “மாநில மற்றும் மத்திய அளவில் பாதுகாப்பு படைகளில் 15,000 புதிய இடங்கள்" உட்பட "சட்டத்தின் ஆட்சிக்கான உடன்பாடு" எனப்படுவதற்கு அழைப்பு விடுக்க திரும்புவதற்கு முன்னதாக, “நாங்கள் ஜேர்மனியில் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகிறோம்,” என்றவை எழுதுகின்றன.

இதற்கும் கூடுதலாக, “பொலிஸை சிறந்த முறையில் ஆயுதமயப்படுத்துவதற்கும்,” “DNA ஆய்வை விரிவாக்குவதற்கும்,” சமூக மோதல் பகுதிகளில் கண்காணிப்பு ஒளிப்பதிவுகளைப் பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை முகமைகளை மத்தியமயப்படுத்துவதற்கும் அங்கே திட்டங்கள் உள்ளன. “இதற்கு கூடுதலாக, நாங்கள் மத்திய மற்றும் மாநில உளவுத்துறை முகமைகளின் அதிகாரங்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம், குறிப்பாக தரவு சேகரிப்பு மற்றும் சேமிப்பு தொடர்பானதில்,” என்று அந்த ஆவணம் அறிவிக்கிறது.

இணையம் மீதான கட்டுப்பாட்டை விரிவாக்குவதும் இதில் உள்ளடங்கும். “இணையம் சம்பந்தப்படாதவைகளைக் கையாள்வதைப் போலவே இணையத்தைக் கையாளும் போதும், பாதுகாப்பு படைகளுக்கு அதே அதிகாரங்கள் அவசியப்படுகின்றன.” அந்த ஆவணம் இணையத்தில் இடதுசாரி மற்றும் சோசலிச அரசியல் கருத்துக்களைத் தணிக்கை செய்யும் இணைய அமலாக்க சட்டத்தை விரிவாக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது.

அகதிகள் கொள்கையில், பழமைவாத கட்சிகளும் சமூக ஜனநாயக கட்சியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிவலது AfD இன் நிலைப்பாடுகளை ஏற்றுள்ளன. “2015 இன் நிலைமை திரும்ப வருவது" “தவிர்க்கப்பட" வேண்டும், ஆகவே "புலம்பெயர்வோர் நகர்வை உரிய முறையில் நிர்வகிக்கவும் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள" அவசியப்படுவதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

“தஞ்சம் கோருவோருக்கான நடைமுறைகளை ஆழப்படுத்த விசாரணை, முடிவெடுப்பு மற்றும் திருப்பியனுப்பும் மையங்களை" —அதாவது, புலம்பெயர்வோருக்கான நடப்பில் உள்ள சிறைவதை முகாம்கள் போன்றவற்றை— "உருவாக்கவும்,” "வெளியேற்றுவதற்கு தகுதியானவர்கள் என்று முடிவு செய்யப்பட்ட தனிநபர்களை விடாப்பிடியாக வெளியேற்றுவதற்கும்,” “வெளி எல்லைகளைக் கவனமாக பாதுகாக்கவும்,” மற்றும் "ஒரு நிஜமான ஐரோப்பிய எல்லை போலிஸாக மாற்றும் அளவுக்கு ஐரோப்பிய கடல் ரோந்து மற்றும் எல்லை ரோந்துப்படையை (Frontex) விரிவாக்கவும்" அங்கே திட்டங்கள் உள்ளன.

சமூக ஜனநாயகக் கட்சி தலைமை இந்த வலதுசாரி கூட்டணி உடன்படிக்கைக்கு வாக்களிக்குமாறு அதன் அங்கத்தவர்களை வலியுறுத்துகின்ற அதேவேளையில், சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) நடக்கவுள்ள அங்கத்தவர்களின் வாக்கெடுப்பில் அதை எதிர்க்குமாறு வலியுறுத்துகிறது. இந்த வலதுசாரி அரசாங்கத்தை நிறுவுவதற்கு மக்கள் அதிகாரமளிக்கவில்லை. இது மக்களின் முதுகுக்குப் பின்னால் செய்யப்பட்ட மக்களுக்கு எதிரான முற்றுமுதலான சதியாகும்.

கடந்த செப்டம்பர் கூட்டாட்சி தேர்தலில், CDU/CSU மற்றும் SPD இரண்டுமே கூட்டாட்சி குடியரசு வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாத அவற்றின் மிக மோசமான வாக்குகளைப் பெற்றன. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, மக்கள்தொகையில் வெறும் 32 சதவீதத்தின்னர் மட்டுமே ஒரு பெரும் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம், அது சமூக தாக்குதல்கள், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக வளர்ச்சி அடைந்து வரும் உலகளாவிய எதிர்ப்போடு தன்னை நிறுத்திக் கொள்கிறது. பகுப்பாய்வின் இறுதியாக, பழமைவாத கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி முன்னெடுக்கும் இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளை, சகல நாடாளுமன்ற கட்சிகளும் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் ஆதரிக்கின்ற நிலையில், இவற்றை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும்.