ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: First-ever visit by an Israeli PM used to strengthen strategic ties

இந்தியா: மூலோபாய உறவுகளை வலுப்படுத்த உதவும் வகையில் ஒரு இஸ்ரேலிய பிரதம மந்திரியின் முதலாவது விஜயம்

By Wasantha Rupasinghe 
27 January 2018

கடந்த வாரம் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகு இந்தியாவிற்கு மேற்கொண்ட ஆறு நாள் விஜயம், ஏற்கனவே இருக்கும் நெருக்கமான இருதரப்பு இராணுவ-மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளை, மேலும் வளர்ச்சியடையச் செய்வதாக இரு அரசாங்கங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் இருப்பதை முன்னிலைப்படுத்திக் காட்டியது. மேலும், நெத்தனியாகுவின் விஜயம் இஸ்ரேலிய பிரதம மந்திரி ஒருவரின் முதலாவது இந்திய விஜயமாக இருந்தது.

கடந்த ஜூலையில், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி சியோனிச நாட்டிற்கு விஜயம் செய்த முதலாவது இந்திய பிரதம மந்திரி ஆவார், அது அடிக்கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால், அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை முன்னெடுப்பதில் புது தில்லி அதன் “அணி சேரா” வெளியுறவுக் கொள்கையின் நீடித்த எந்தவொரு அடையாளத்தையும் அகற்றுவதில் உறுதிப்பாடு கொண்டிருப்பதைத்தான்.

இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் விரைவாக அதிகரித்துவரும் உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இரு நாடுகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நட்பு நாடுகளாக உள்ளன, இஸ்ரேல், மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கை பின்தள்ளி வாஷிங்டன் தனது மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்கான பொறுப்பற்ற உந்துதலுக்கும் மற்றும் இந்தியா, சீனாவை பொருளாதார, மூலோபாய மற்றும் இராணுவ ரீதிகளில் தனிமைப்படுத்த முனையும் அமெரிக்க உந்துதலுக்கும் உதவுகின்றது.

மோடியின் பிஜேபி அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றியுள்ளது. மேலும் மோடியும், வாஷிங்டனின் மிக முக்கியமான இரண்டு ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான இருதரப்பு மற்றும் முத்தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நவம்பரில், அமெரிக்க தலைமையிலான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான சீன எதிர்ப்பு நான்குமுனை மூலோபாய உரையாடலில் இந்தியாவும் இணைந்தது, இது ஒரு நோட்டோ வகை கூட்டணியாக வளர்ச்சியடையுமென ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

இந்தியா, முக்கியமாக ஆயுத விநியோகம் மற்றும் முன்னேறிய இராணுவ தொழில்நுட்பத்தை பாதுகாப்பதன் மூலமாக புது தில்லியின் மூலோபாய நலன்களைப் பின்பற்றுவதற்கான ஒரு வழிவகையாகவே இஸ்ரேல் உடனான தனது நெருக்கமான உறவுகளை பார்க்கிறது. மோடியின் இந்து மேலாதிக்கவாத பிஜேபியும் கூட, இஸ்ரேல் உடனான அதிலும் குறிப்பாக நெத்தனியாகு போன்ற கடின வலது சியோனிஸ்டுகள் உடனான உறவுகளை ஆழப்படுத்துவதில் மிகவும் உறுதியான தத்துவார்த்த நலன்களை கொண்டுள்ளது. இந்துத்துவ சிந்தனையாளரான வி.டி.சாவர்க்கர், இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான தனது தீவிரமான வகுப்புவாத எதிர்ப்பின் பாகமாக சியோனிசத்தை ஆதரித்ததோடு, அவர்கள் இந்திய நாட்டுக்கு அந்நியப்பட்டவர்கள் என்றும், முழு குடியுரிமை உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மோடி, இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவுகளுக்கு அவரது அரசாங்கம் கொண்டிருக்கும் உற்சாகத்தை தெளிவாக சமிக்ஞை செய்யும் விதமாக, புது தில்லி விமான நிலையத்திற்கு விரைந்து சென்று நெத்தனியாகுவை ஆரத்தழுவி வரவேற்றதன் மூலமாக நெறிமுறைகளை மீறிவிட்டார். ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது முன்னெப்போதும் ஒரு இஸ்ரேலிய பிரதம மந்திரியுடன் இணைந்து செல்லாத அளவிற்கு 130 பேர் கொண்ட மிகப்பெரிய வணிக பிரதிநிதி குழுவுடன் நெத்தனியாகு இந்தியாவிற்கு வந்திருந்தார்.

நெத்தனியாகுவின் வருகையின் ஆரம்பத்திலேயே, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்ததை கண்டனம் செய்யும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக 127 பிற நாடுகளுடன் இந்தியாவும் வாக்களித்தது இரு நாடுகளின் நெருக்கமான உறவுகளை பாதிக்காது என்பதை இரு தரப்பினரும் அறிவிப்பதற்கு விரைந்தனர். ஜனவரி 15 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் குறித்த பொறுப்பு செயலாளர், விஜய் கோகலே, “இரு தரப்பும் தங்களது உறவு மிகப்பெரியது எனவும், தங்களது உறவை இது (வாக்கு) தீர்மானிக்கவில்லை எனவும் ஒப்புக்கொண்டன” என்று தெரிவித்தார். ஜனவரி 14 அன்று, புது தில்லிக்கு வந்தவுடனேயே நெத்தனியாகு இதை வலியுறுத்தியதுடன், இந்தியாவின் வாக்களிப்பினால் இஸ்ரேல் “ஏமாற்றம் அடைந்தாலும்” கூட “ஒரு எதிர்மறையான வாக்கு இந்த உறவுகளை பாதிக்காது” என்று ஊடகத்திற்கு தெரிவித்தார்.

ஜனவரி 15 ஆம் தேதி, மோடி மற்றும் நெத்தனியாகு தலைமையிலான பிரதிநிதிக் குழுக்களின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ஒன்பது ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

மோடியுடன் நெத்தனியாகு கலந்துரையாடி, இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத்துறை ஒப்பந்தக்காரரான ரபேலிடமிருந்து 1600 தாங்கி-எதிர்ப்பு ஏவுகணைகளை புது தில்லி வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். உள்நாட்டு ஏவுகணைகளை கட்டியெழுப்புவதற்கு சாதகமாக நெத்தனியாகுவின் விஜயத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியா அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தது.

இந்தியாவிற்கும் அதன் பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலைமைகளின் கீழ் இந்த ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. இந்தியாவின் NDTV சமீபத்தில், பாகிஸ்தான் இராணுவத்தினர் 3-4 கி.மீ. தூரத்தில் இந்திய டாங்கிகள் மற்றும் பதுங்கு குழிகளை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டிருக்க கூடும் எனவும், அதே நேரத்தில் இந்தியாவில் அதற்கு நிகரான ஏவுகணைகளோ வெறுமனே 2 கி.மீ. தூரத்திற்கு சென்று தாக்கும் மட்டத்திலானவை என்றும் தெரிவித்தது.

நெத்தனியாகுவின் விஜயத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இரு நாட்டு பிரதம மந்திரிகளுமே, “இந்தியாவில் உருவாக்குவோம் முன்முயற்சியின் கீழ் பாதுகாப்புத் துறையில் இந்திய நிறுவனங்கள் உடனான கூட்டு முயற்சியில் ஈடுபட இஸ்ரேலிய நிறுவனங்கள் தயாராகவுள்ளன” என்பதைக் குறிப்பிட்டனர்.

கடந்த தசாப்தத்தில், இஸ்ரேலிடமிருந்து சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இந்தியா வாங்கியுள்ளமையானது, இந்தியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை விநியோகிக்கும் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இஸ்ரேலையும், டெல் அவிவ் இன் மிகப்பெரிய ஆயுத விற்பனை சந்தையாக இந்தியாவையும் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் தான், இஸ்ரேலிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் குறித்து 2 பில்லியன் டாலர் செலவிலான இரண்டு புதிய பாரிய ஆயுத ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, “பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்தில் முழுமையான ஒத்துழைப்பை கட்டமைப்பதற்கான முக்கியத்துவம்” பற்றிய இரு தலைவர்களின் வலியுறுத்தலும் இருந்தது, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் அவர்கள் கையெழுத்திட்டனர். இது, இஸ்ரேல் விடயத்தில் பாலஸ்தீனர்களுக்கு எதிரானதாகவும், இந்திய விடயத்தில் பாகிஸ்தானுக்கு எதிரானதாகவும் அவர்களின் சொந்த மூலோபாய நோக்கங்களைப் பின்பற்றி இராணுவவாத கொள்கைகள் மீது ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் பரஸ்பர ஆதரவை காட்டுகிறது.

Times Now க்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில், நெத்தனியாகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியைப் பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டு கோடு (Line of Control-LoC) ஊடாக “பயங்கரவாத மறைவிடங்கள்” மீதான தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தானிய பிராந்தியத்திற்குள் எதிர்காலத்தில் இந்திய இராணுவத் தாக்குதல் ஏதேனும் நிகழுமானால் அதற்கு இஸ்ரேல் ஆதரவளிக்கும் என்பதை வெளிப்படுத்தினார். செப்டம்பர் 2016 இல் பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவம் நடத்திய “நுட்பமான தாக்குதல்களை” போன்று மீண்டும் நிகழ்த்துவதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி அவரது கருத்துக்கள் இந்தியாவை உற்சாகப்படுத்தும்.

நெத்தனியாகு பேட்டியளித்த போதிலும், எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை பரிமாறிக் கொள்வது என்பது, இரு தரப்பிலும் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் இறப்புக்களையே அது விளைவிக்கும்.

இஸ்ரேல் உடன் இந்தியா கொண்டிருக்கும் ஆழ்ந்த நிலையான ஒத்துழைப்பு, பாலஸ்தீனத்தின் மீதான தனது நிலைப்பாட்டில் எந்தவொரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற மோடி அரசாங்கத்தின் வெளிப்படையான பொய்யை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனர்கள் உடனான இராஜதந்திர நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளதாக கூட்டறிக்கை தெரிவிக்கின்றது, ஆனால் அதற்கு மாறாக “இரு-அரசு தீர்வு” என்று அழைக்கப்படுவதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து ஒரு நிலையான குறிப்பு கூட இல்லை என்ற நெத்தனியாகுவின் வலியுறுத்தலில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை அது புறக்கணிக்கிறது.

2016-17 இல் இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சியால் கதிகலங்கி, பிஜேபி அரசாங்கம் “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தங்களுக்கான தனது உந்துதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி 15 அன்று, இந்திய-இஸ்ரேல் வர்த்தக புதுமை கருத்தரங்கில் (India-Israel Business Innovation Forum) உரையாற்றுகையில், தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை செயலாளரான ரமேஷ் அபிஷேக், புது தில்லி, “எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் என்பதுடன், இந்தியாவில் இஸ்ரேலிய நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிதானதாகவும் சிறப்பானதாகவும் ஆக்குமெனவும்” உறுதியளித்தார். இஸ்ரேலிய பெருவணிகத்திற்கு தடையற்ற அணுகுதலை விரும்பும் நெத்தனியாகு, “நீங்கள் பொருளாதார சக்தியைப் பெற விரும்பினால், வரிகளை குறைக்க வேண்டும் மற்றும் எளிமையாக்க வேண்டும் என்பதோடு அதிகாரத்துவத்தையும் குறைக்க வேண்டும்” என்று அறிவித்தார்.    

இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது காங்கிரஸ் கட்சியின் கீழ், சியோனிச அரசு நிறுவப்பட்டு நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கு பின்னர், 1949 இல் ஐ.நா. விற்குள் இஸ்ரேலின் உள்நுழைவை புது தில்லி எதிர்த்தது. இந்தியா தனது போலித்தனமான “ஏகாதிபத்திய எதிர்ப்பு” நற்சாட்சியங்களை வளர்ப்பதற்கும், பனிப் போரின் போது “அணி சேரா” கொள்கையை அது ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாகவும், பல தசாப்தங்களாக பாலஸ்தீன விவகாரத்திற்கு ஆதரவாளனாக இருப்பதாகக் கூறி, இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டது.

1950 களில், பாகிஸ்தான் உடன் அரும்பிவந்த வந்த வாஷிங்டனின் இராணுவ மூலோபாய கூட்டாண்மைக்கு பதிலிறுப்பாக சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா நிறுவிய நெருக்கமான உறவுகளுடன் இந்த கொள்கை பிணைந்திருந்தது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து, குறிப்பாக வாஷிங்டன் போன்ற மேற்குலக சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் புது தில்லி அதன் வெளியுறவு கொள்கையை மறுஒழுங்கமைவு செய்தது. 1992 இல், நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசாங்கம் இஸ்ரேலுடன் முழுமையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தது. அப்போதிருந்து, டெல் அவிவ் உடனான புது தில்லியின் உறவுகள், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்களினாலும் ஒழுங்குமுறையாக விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து கொண்டதிலும் சரி, டெல் அவிவ் உடனான உறவை ஆர்வத்துடன் வளர்த்ததிலும் சரி, இந்திய உயரடுக்கினரின் மூலோபாய நலன்களை பின்பற்றுவதற்காக, அதிலும் குறிப்பாக இராணுவ வலிமையை வலுப்படுத்தும் வகையில், இஸ்ரேல் உடனான இந்தியாவின் கூட்டாண்மையை விரிவுபடுத்த மோடி மேற்கொண்ட முயற்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சி தீவிர வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. நெத்தனியாகுவின் வருகை குறித்து காங்கிரஸ் கட்சி உத்தியோகப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை, மாறாக, ட்ரம்ப் மற்றும் நெத்தனியாகு உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் மோடி கரங்களைப் பற்றி அரவணைத்துக் கொள்வது போன்ற வீடியோக்களை ட்விட்டரில் கேலி செய்யும் விதமாக பதிவு செய்துள்ளனர்.

நெத்தனியாகுவின் விஜயம் குறித்து ஆளும் உயரடுக்கிற்குள் ஒரேயொரு குறிப்பிடத்தக்க அதிருப்தி இந்திய ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து வெளிவந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மற்றும் அவர்களது இடது முன்னணியில் உள்ள பல கட்சிகளும் சேர்ந்து, முக்கியமாக பாலஸ்தீனர்கள் மீதான டெல் அவிவ் இன் மிருகத்தனமான அடக்குமுறையை விமர்சித்து, நெத்தனியாகுவின் வருகைக்கு எதிராக ஜனவரி 15 அன்று புது தில்லியில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இருந்தபோதிலும், இந்திய முதலாளித்துவத்தின் தேசிய நலன்களை பாதுகாப்பதைத்தான் ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்பு அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், இந்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் குறித்தோ அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் குறித்தோ எதையும் செய்துவிடவில்லை. ஜனவரி 14 அன்று சிபிஎம் இன் ஆங்கில வார பத்திரிகையான Peoples Democracy இல் வெளிவந்த ஒரு கட்டுரை, மோடி அரசாங்கம், “இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சேவை செய்வதை முன்னிட்டு நாட்டின் நலன்களை தியாகம் செய்ய நேரிடும்” என்று குற்றம்சாட்டியது.