ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian-Pakistani clashes in Kashmir put South Asia on knife’s edge

காஷ்மீரில் நிலவும் இந்திய-பாகிஸ்தானிய மோதல்கள் தெற்கு ஆசியாவை போரின் விளிம்பில் நிறுத்தி வைக்கின்றன

By Sampath Perera 
31 January 2018

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, இந்திய மற்றும் பாகிஸ்தானிய படையினர் நடத்திவரும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லைப் பகுதியை தீவிரப்பட்ட நிலையில் வைத்துள்ளது.

எல்லை தாண்டிய பீரங்கித் தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்ற போதிலும், செப்டம்பர் 2016 இல் பாகிஸ்தான் உள்ளே இந்தியா “நுட்பமான தாக்குதல்களை” அதிகரித்ததில் இருந்து தினமும் இத்தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிலை சமீபத்திய வாரங்களில் பதட்டங்கள் அதிகரித்து வருவதை காட்டுவதுடன், தெற்காசியாவின் அணுவாயுத போட்டியாளர்களுக்கு இடையே ஒரு பேரழிவுகர போருக்கான வாய்ப்பையும் அதிகரித்து வருகிறது.

ஜனவரி 19 அன்று, இந்திய தரப்பில் குறைந்தபட்சம் 5 குடிமக்களும் ஒரு சிப்பாயும் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் பாகிஸ்தானில் இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முந்தைய மூன்று நாட்களில், ஆறு பேருக்கு அதிகமான இந்திய குடிமக்களும் மூன்று சிப்பாய்களும், மற்றும் ஆறு பாகிஸ்தானிய குடிமக்களும் உயிரிழந்தனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய இறப்பு புள்ளிவிபரங்களில் முரண்பாடுகள் இருப்பினும், 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து குறைந்தபட்சம் நான்கு பாகிஸ்தானிய சிப்பாய்களாவது எல்லை தாண்டிய தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பார்கள் என ஊர்ஜிதப்படுத்த முடியும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியை பிரிக்கின்ற எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி (Line of Control-LoC) முழுவதும் நிலவும் “ஆத்திரமூட்டலற்ற துப்பாக்கிச் சூடுகள்” குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுக்களின் வழமையான பரிமாற்றங்கள் தான் உண்மையில் நிலைமையை கத்தி முனையில் கொண்டு நிறுத்தி வைத்துள்ளது என்பதை மறைக்க முடியாது.

1947 இல், காலனித்துவ முதலாளித்துவ வர்க்கத்தின் மறைமுக ஒப்புதலுடன் தெற்கு ஆசியாவை விட்டு விலகிய பிரித்தானிய ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளால் செயல்படுத்தப்பட்ட துணைக்கண்டத்தின் பிற்போக்குத்தன வகுப்புவாத பிரிவினையில் தான் இந்த இந்திய-பாகிஸ்தான் மோதல் வேரூன்றியுள்ளது. சுதந்திர இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு போர்களில் ஈடுபட்டுள்ளன, அதில் கடைசிப் போர் 1999 இல் நடந்தது, இதைவிட பல மோதல்களையும் சந்தித்துள்ளன.

எவ்வாறாயினும், தெற்காசியாவின் அதிகார சமநிலையை தலைகீழாக்கிவிட்ட சீனாவிற்கு எதிரான தனது இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னரங்க நாடாக உருவாக்க முனைவதாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிரமயப்பட்ட உந்துதல் இருக்கிறது. அமெரிக்கா, அதன் மிக முன்னேறிய ஆயுத அமைப்புக்களை அணுகுவது உட்பட, இந்தியாவிற்கு பல மூலோபாய நலன்களை வழங்கி வருகின்றது, அதே வேளையில், சீனாவுடனான அதன் நீண்டகால மூலோபாய உறவுகளை பலப்படுத்த பாகிஸ்தான் முனைந்துள்ளது. அதிகரித்தளவில், இந்த பிராந்தியம் இந்தியா-அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான்-சீனா என்ற போட்டியிடும் அணிகளுக்கு இடையில் துருவமயப்படுத்தப்பட்டு வருவதானது, இந்தியா-பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா-சீனா ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையிலான மோதல்களுக்கு வெடிப்புறும் தன்மையிலான ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது, மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரானது உலகின் பெரும் வல்லரசுகளையும் இப்போருக்குள் இழுத்துவிடும் அபாயத்தை  அதிகரிக்கின்றது.

பனிப்போர் காலத்தில் அதன் முக்கிய பிராந்திய நட்பு நாடாக இருந்த பாகிஸ்தானுடனான உறவுகளை, இந்தியாவிற்கு ஆதரவாக வாஷிங்டன் குறைத்து வருவதன் அடுத்தகட்ட விளைவாக பாகிஸ்தான் உடனான அதன் நடவடிக்கைகளில் இந்திய ஆளும் தட்டினரை ஊக்கப்படுத்தியுள்ளது.

2008 பிற்பகுதியில் இருந்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான “விரிவான சமாதான பேச்சுவார்த்தை” எதுவும் நடைபெறா வண்ணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபியின் கீழ், பாகிஸ்தான் உடனான அனைத்து உயர்மட்ட தொடர்புகளையும் இந்தியா அநேகமாக முடக்கியுள்ளதோடு, காஷ்மீரில் இந்திய விரோத கிளர்ச்சிக்கான அனைத்து வகையான ஆயுத விநியோக ஆதரவையும் இஸ்லாமாபாத் நிறுத்திவிட்டதாக நிரூபிக்கும்வரை இந்நிலைப்பாட்டை தொடரவும் உறுதிபூண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2016 இல் பாகிஸ்தான் உள்ளே இந்தியா நடத்திய “நுட்பமான தாக்குதல்களை” அமெரிக்கா அங்கீகரித்தது. புது தில்லி அதன் பங்கிற்கு, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய ஆப்கானியப் போர் மூலோபாயத்தை வரவேற்றிருப்பதோடு, பாகிஸ்தான் அதன் கூட்டாட்சி நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளிலுள்ள தாலிபான் “பாதுகாப்பு புகலிடங்களை” அகற்றுவதற்கு பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரிக்குமாறு வாஷிங்டனுக்கு அழைப்பும் விடுக்கிறது.

ஜனவரி 4 அன்று, 1980 களில் சிஐஏ உடன் நெருக்கமாக இணைந்திருந்த தாலிபானுடன் ஒருங்கிணைந்த குழுவான ஹக்கானி வலையமைப்புடன் அனைத்து உறவுகளையும் இஸ்லாமாபாத் முறித்துக்கொள்ள வேண்டுமென வாஷிங்டன் விடுத்திருந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக அது பாகிஸ்தானுக்கு வழங்கிவரும் இராணுவ பாதுகாப்பு உதவியில் 2 பில்லியன் டாலர் வரை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீது மிகுந்த பேரழிவுகரமான சில தாக்குதல்களை இக்குழு நடத்தியுள்ளது.

பாகிஸ்தானிய ஆளும் தட்டுக்கள், ஆப்கானியப் போர் குறித்த எந்தவொரு “அரசியல் தீர்விலும்” ஒரு முக்கிய கருத்துகூறும் உரிமையை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் இராணுவ பாதுகாப்பு எந்திரம் தாலிபான் கிளர்ச்சி பிரிவுகளுடனான தொடர்புகளை பராமரித்து வந்துள்ளது, இந்நிலைமைகளின் கீழ் வாஷிங்டன் அதிகரித்தளவில் இஸ்லாமாபாத்தை ஓரங்கட்டிவிட்டு, வறிய மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் தனது பாத்திரத்தை விரிவுபடுத்தும் விதத்தில் இந்தியாவை ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவுடனான தனது போட்டியில் அதற்கு “மூலோபாய இடத்தை” வழங்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் நீண்டகாலமாக கருதுகிறது.

பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக அமெரிக்கா “முட்டாள்தனமாக” பத்து பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளதாகவும், அதற்கு பதிலாக “பொய்களையும் ஏமாற்றத்தையும் தவிர” வேறெதையும் அது பெறவில்லை என்ற ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு விடையிறுக்கும் வகையில், செய்தியாளர் மாநாடு ஒன்றில் பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், ஆப்கானிஸ்தானில் ஒரு முக்கிய போட்டியாளராக இந்தியாவை வாஷிங்டன் ஊக்குவிப்பது இப்பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரிக்கச் செய்யுமென எச்சரித்தார். இந்தியாவுடன் இஸ்லாமாபாத்தின் “தீர்க்கப்படாத சிக்கல்களை” சுட்டிக்காட்டி கபூர், அவைகள் “தீர்க்கப்படாமல் இந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவருவது என்பது சாத்தியப்படாததாக இருக்கும்” என்று கூறினார்.

இந்தியாவிற்கு வாஷிங்டன் அளிக்கும் பொறுப்பற்ற ஊக்கம் ஆப்கானிய மண்ணில் இந்தியா-பாகிஸ்தான் மூலோபாய மோதலை விஸ்தரிக்க வகை செய்துள்ளது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானோ, அமெரிக்கா-பாகிஸ்தான் உறவுகளில் ஆழமடைந்து வரும் பதட்டங்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போர்வெறி ஆகியவற்றால் தைரியமடைந்து, இஸ்லாமாபாத்திற்கு எதிராக அதிகரித்தளவில் விரோத மற்றும் ஆக்கிரோஷக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. பலுசிஸ்தானில் பிரிவினைவாத கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பது உட்பட, பாகிஸ்தானிய எல்லைக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த தூண்டிவிடும் ஆப்கானிய உளவுத்துறையுடன் இணைந்து செயல்படும் இந்திய உளவுத்துறையை இஸ்லாமாபாத் அடிக்கடி குற்றம்சாட்டுகிறது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இவ்வாண்டு தொடக்கத்திலேயே இஸ்லாமாபாத்திற்கு ஒரு கடும் எச்சரிக்கை விடுப்பதற்கு ஏதுவாக அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் மேலும் மோசமடைந்து வருவதை பற்றிக் கொண்டார். ஜனவரி 12 அன்று, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலைமை தொடர்ந்து மோசமடையுமானால், பாகிஸ்தானுக்குள் மேலதிக இராணுவத் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு இந்திய இராணுவம் தயார் நிலையில் இருக்கிறதென அவர் கூறினார். “எங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டுள்ளது” என்றால், “அவர்கள் (பாகிஸ்தான்) அணுவாயுதங்களை கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் எல்லையை கடக்க மாட்டோம் என்று கூற முடியாது. நாங்களும் அவர்களது முரட்டுத்தனத்தைக் கண்டு சளைக்காமல் பதிலுக்கு அழைப்புவிடுக்க வேண்டும்” என்று ராவத் கூறினார்.

அடுத்த நாள் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் அவரது சொந்த போர்வெறிமிக்க செய்தியுடன் விடையிறுத்தார். ரவாத்தின் கருத்துக்கள் குறித்து அவர், “ஒரு அணுவாயுத எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்தார். அவர்களது விருப்பம் அதுதான் என்றால், எங்களது உறுதியை சோதிக்க அவர்கள் வரலாம். ஜெனரலின் சந்தேகம் உடனடியாக நீக்கப்படும், இன்சா அல்லாஹ் (கடவுள் விருப்பம்)” என்று கூறினார்.

பாகிஸ்தான், மூலோபாய அணுசக்தி ஆயுதங்களை கையிருப்பில் வைத்திருப்பது மட்டுமல்லாது, சமீபத்தில் தந்திரோபாய அல்லது போர்க்கள அணுவாயுதங்களை தயார்நிலையில் வைத்திருக்கின்றது. மேலும் எந்தவொரு பெரியளவிலான இந்திய படையெடுப்புக்கு எதிராகவும் சரி அல்லது இந்தியா அதன் “குளிர்கால யுத்த” மூலோபாயத்தின் கீழ் செயலூக்கத்துடன் திட்டமிடும் எந்தவகையிலான படையெடுப்புக்கு நடவடிகைக்கும் எதிராகவும் சரி, அதன் முதல் பாதுகாப்புக்கான வழிமுறையாக வைத்திருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது.

பாகிஸ்தானிய அரசாங்கம், இந்த பிராந்தியத்தில் “அதிகார சமநிலை” கவிழ்வதற்கு எதிரான அதன் எச்சரிக்கைகளை வாஷிங்டன் கவனிக்கத் தவறியதை சுட்டிக்காட்டியதன் மூலம், தனது தந்திரோபாய அணுவாயுதங்களின் நிறுவுதலையும், பெய்ஜிங் உடனான தனது இராணுவ-மூலோபாய உறவுகளின் விரிவாக்கத்தையும் நியாயப்படுத்தியுள்ளது.

வாஷிங்டனுடன் அதன் வளர்ந்து வரும் கூட்டணியால் வலுப்படுத்தப்பட்டுள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டையும் எதிர்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளது. கடந்த கோடையில், ஒரு தொலைதூர மலைமுகட்டுப் பகுதியான டோக்லாம் பீடபூமி குறித்து சீனாவுடன் கொண்டிருந்த ஒரு 10 வார கால இராணுவ மோதல் நிலைப்பாட்டிற்கு மத்தியில், இந்தியா ஒரு “இருமுனை போரை” அதாவது, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு எதிராக ஒரே சமயத்தில் நடக்கும் போரை எதிர்த்துப் போராட தயாராக இருப்பதாக ராவத் பெருமையடித்துக் கொண்டார். ஜனவரி 2017 இல், இந்திய இராணுவத்தின் தலைமை பொறுப்பிற்கு அவர் உயர்ந்த போது இந்த எதிர்பார்ப்பை அவர் முதன்முறையாக எழுப்பினார்.

50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (China-Pakistan Economic Coridor-CPEC) உள்கட்டமைப்பு திட்டத்தில் முன்மொழியப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் குழாய்வழி வலையமைப்பு “இந்திய எல்லைப்பகுதிகள்” ஊடாக, அதாவது பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதி ஊடாக செல்லும் என்ற அடிப்படையில் அத்திட்டத்தினை இந்தியா விதிவிலக்காக எடுத்துக்கொண்டது.

பாகிஸ்தான் ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை கைகளில் இருக்கும் மிகத் தேவையானதொரு பொருளாதார தாக்குதலாக CPEC உள்ளது. பெய்ஜிங்கை பொறுத்தவரை, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் புதிய சந்தைகளை திறப்பதற்கு அது நோக்கம் கொண்டுள்ள அதன் பரந்த பொருளாதார மூலோபாயமான ஒரே பாதை ஒரே இணைப்பு (One Belt One Road) என்பதன் முக்கியமானதொரு கூறாக CPEC உள்ளது, ஆனால், இத்திட்டம் இன்னும் பெரியளவிலான மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாகும். CPEC, மேற்கு சீனாவுடன் பாகிஸ்தானின் அரேபிய கடல் பகுதியிலுள்ள குவடார் துறைமுகத்தை இணைக்கிறது. இது மலாக்கா ஜலசந்தி மற்றும் ஏனைய முக்கிய கடலோர வழித்தடங்களை கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையை திணிக்க முனையும் வாஷிங்டனின் திட்டங்களுக்கு ஓரளவிற்காவது ஈடுகொடுக்கும் வழிவகையை பெய்ஜிங்கிற்கு அது வழங்கும்.

இந்த சமாளிக்க முடியாத மோதல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் இந்திய பங்காளியையும், பாகிஸ்தானுடன் கூட்டணி சேர்ந்து எழுச்சியுறும் சீனப் பொருளாதார சக்தியை எதிர்த்து போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. தெற்காசிய அணுவாயுத போட்டியாளர்கள் இடையே வெடிக்கும் எல்லைப்புற பதட்டங்களின் வெடிப்புத்தன்மை கொண்ட பரவல்களின் சாத்தியப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், Press Trust of India (PTI), எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட “தந்திரோபாய நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கும் எல்லை தாண்டிய துப்பாக்கி சூடுகள்” போன்றவற்றினால் முந்தைய ஆண்டில் மட்டும் 138 பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கூறும் இந்திய உளவுத்துறை ஆதாரங்களிடமிருந்து வந்த அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டியது. அதே ஆதாரங்கள் இந்திய தரப்பில் 28 இராணுவத்தினர் இறந்திருப்பதாக குறிப்பிடுகின்றது. இருதரப்பு இராணுவத்தினரும் எதிரிதரப்பு இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூறவும், அதே வேளையில் அவரவர் சொந்த தரப்பில் இறப்புக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டவும் தெரிந்து வைத்துள்ளனர்.

இந்திய உளவுத்துறை ஆதாரங்கள் கூட, 2003 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை 2017 இல் 860 முறை பாகிஸ்தான் மீறியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. அதாவது நாளொன்றுக்கு இரண்டு முறைக்கு மேலாக மீறப்பட்டது என்பதாகும். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதன் பங்கிற்கு, ஜனவரி 20 அன்று புது தில்லி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதோடு சேர்த்து 2018 இல் இதுவரை 150 முறையும், மற்றும் 2017 இல் 1,900 முறைகளும் மீறியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவினால் நடத்தப்படும் “தந்திரோபாய நடவடிக்கைகளின்” இயல்பு பற்றி PTI அறிக்கை சில வெளிச்சத்தைக் காட்டியது. டிசம்பர் 25, 2017 இல், ஐந்து இந்திய “கமாண்டோக்கள்” அடங்கிய குழு எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து பாகிஸ்தானிய சிப்பாய்கள் மூன்று பேரை கொன்றதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா பயன்படுத்தும் "பின்தொடர்ந்து செல்லுதல்" என்றவொரு மூலோபாயத்தின் கீழ், இந்தியாவை தாக்குகின்ற “பயங்கரவாத குழுக்களுக்கு” பாகிஸ்தானிய இராணுவம் அளித்துவரும் ஆதரவைத் தடுக்க, பாகிஸ்தானிய கட்டுப்பாட்டிலுள்ள எல்லையை கடக்கும் உரிமையை இது கோருகிறது.

இந்திய-பாகிஸ்தானிய உறவுகளின் எளிதில் தீப்பற்றும் தன்மையை கருத்தில் கொண்டால், அத்தகைய எந்தவொரு ஊடுருவலும் ஒரு முழுப் போரைத் தூண்டிவிடும் அபாயத்தை விளைவிக்கும் அல்லது தூண்டப்படும் ஒரு உலகளாவிய மோதல் பத்து மில்லியன் இல்லையென்றால் நூறு மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கிவிடும்.