ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Parti de l'égalité socialiste holds meeting in Paris against militarism and austerity

இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி பாரிஸில் நடாத்திய பொதுக்கூட்டம்

By our reporters
27 February 2018

ஞாயிறன்று பாரிஸில் “மேர்க்கெல்-மக்ரோன் இணைப்பு வேண்டாம்! சோசலிசத்திற்கான ஐரோப்பிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு போராடுவோம்!” என்ற தலைப்பிலான ஒரு பொதுக்கூட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) நடத்தியது. பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்ற வகையில் ஜேர்மனியில் சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் கீழான ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியின் கீழமைந்திருக்கிற இராணுவவாதத் திட்டங்களை இக்கூட்டம் அம்பலப்படுத்தியது.


பாரிஸில் சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) கூட்டம்

இக் கூட்டத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் மற்றும் மக்ரோனின் அதிகரித்துச் செல்கின்ற கொடூரமான மற்றும் ஜனநாயக-விரோதக் கொள்கைகள் குறித்து கவலை கொண்டுள்ள புலம்பெயர்ந்த இளைஞர்களது ஒரு அடுக்கினர் உள்ளிட பல பத்துக் கணக்கிலானோர் கலந்துகொண்டனர். ICFI இன் ஜேர்மன் பிரிவான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) ஒரு முன்னிலை உறுப்பினரான ஜொஹானஸ் ஸ்டேர்ன் பிரதான உரை நிகழ்த்தினார்.

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக (CDU/CSU) மற்றும் சமூக-ஜனநாயக கட்சிகளால் (SPD) வரைவு செய்யப்பட்டுள்ள கூட்டணி உடன்பாடு மீதான SGP இன் விரிவான பகுப்பாய்வினை ஸ்டேர்ன் மதிப்பாய்வு செய்தார். இந்த மாபெரும் கூட்டணி அரசாங்கமானது நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பிந்திய மிக அதி-வலது ஜேர்மன் ஆட்சியாக இருக்கவிருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். அதிவலது ஜேர்மனிக்கான மாற்றின் (AfD) அகதிகள்-விரோதக் கொள்கையை ஏற்றுக் கொள்வது, அரசுக் கண்காணிப்பையும் போலிஸ் அரசு நடவடிக்கைகளையும் பரந்த அளவில் கட்டியெழுப்புவது, அத்துடன் “ஐரோப்பியர்களது ஒரு இராணுவத்தை” கட்டுவது ஆகியவற்றின் மூலம் பாரிய கைது நடவடிக்கைகளுக்கு பேர்லின் போடும் திட்டங்களை ஸ்டேர்ன் அம்பலப்படுத்தினார்.

ஜேர்மனியின் இராணுவச் செலவினத்தை இரட்டிப்பாக்குவது பால்கன்கள், மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மற்றும் ரஷ்யா அத்துடன் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட உலகின் பரப்பில் ஜேர்மனி பொருளாதார நலன்களைக் கொண்டிருக்கக் கூடிய மிகப் பரந்தவொரு பரப்பில் இராணுவ செல்வாக்கை செலுத்துவது ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும். பெரும் போர்களது அபாயம் பெருகிச் செல்வது —பெரும் சக்திகள் மறுஆயுதபாணியாகும் நிலையில் இது ஊடகங்களில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது— அத்துடன் போர் முனைப்புக்கு இடது கட்சி உள்ளிட ஒட்டுமொத்த ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்தும் ஆதரவு கிட்டுவது ஆகியவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.

புதிய தேர்தலுக்கும் மாபெரும் கூட்டணியை எதிர்ப்பதற்கும் அழைப்பு விடுக்கின்ற SGP இன் பிரச்சாரத்தின் மையமான புள்ளிகளை ஸ்டேர்ன் விளக்கினார். SGP, பிரான்சின் அணுஆயுத கையிருப்பைப் பயன்படுத்துவது தொடர்பாக ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலானது உட்பட மாபெரும் கூட்டணி உடன்பாட்டின் கீழமைந்திருக்கின்ற இரகசிய உடன்பாடுகளை பகிரங்கமாக வெளியிடக் கோருகிறது, அத்துடன் இந்த உடன்பாட்டையும் ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியையும் நிராகரிப்பதற்கு வாக்களிக்க SPD அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முன்னோக்கானது முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பா மற்றும் சர்வதேசமெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார்.

ஸ்ரேனுக்குப் பின்னர் பேசிய PES இன் ஒரு முன்னணி உறுப்பினரான அலெக்சான்டர் லான்ரியேர், இந்த இராணுவவாதத் திட்டநிரலில் மேர்கெல் மற்றும் மக்ரோன் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து பேசினார். மக்ரோன் அரசாங்கம் 2018-2024 காலத்திற்கான இராணுவச் செலவின வேலைத்திட்டத்திற்காய் 300 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதையும், அதி-வலது சக்திகளுக்கு மிக நெருக்கமாக அதனை கொண்டுவருகின்ற புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மீதான அதன் தாக்குதல்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய லான்ரியேர், மக்ரோனின் வரலாறு காணாத பெரும் சிக்கன நடவடிக்கைகளும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களும் பிரான்சின் இராணுவ எந்திரத்திற்கு நிதியாதாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்று வலியுறுத்தினார். இராணுவவாதத்திற்கும் போரை நோக்கிய சர்வதேசிய அளவிலான முனைப்பிற்கும் எதிராகப் போராடுவது மட்டுமே இந்தத் தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கான ஒரே வழியாகும் என தெளிவுபடுத்தினார்.

சென்ற ஆண்டில் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையில் நடந்த இரண்டாம் சுற்றினை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு PES விடுத்த அழைப்பு சரியென்பதை இது நிரூபணம் செய்திருக்கிறது என்பதையும் அவர் எடுத்துக் கூறினார். இறுதிச் சுற்றில் மக்ரோனை எதிர்ப்பதற்கு மறுத்த ஏராளமான போலி-இடது கட்சிகள் கூறியதைப் போல, மக்ரோன் லு பென்னை விட குறைந்த தீமை அல்ல என்பதை ஒரு பேர்லின்-பாரிஸ் அச்சுக்குக் கீழமைந்திருக்கும் வலது-சாரி, இராணுவவாத தற்புகழ்ச்சிக் கிறுக்குகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தக் கட்சிகள் மக்ரோனின் இராணுவவாதத்தையும் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் பிறவெங்கிலுமான போர்களுக்காக இளைஞர்களைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்ப்பதற்கான அவரது திட்டங்களையும் ஆதரிக்கின்றன.

ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் முன்னணி அங்கத்தவர்கள் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இராணுவ செலவின அதிகரிப்புக்கு அழைப்பு விடுக்கின்ற, கட்டாய இராணுவச் சேவைக்கான மக்ரோனின் அழைப்பை ஆதரிக்கின்ற, பயிற்சிக் காலத்தை நீட்சி செய்ய அழைப்பு விடுக்கின்ற, மற்றும் உலகின் எஞ்சிய பகுதிகளுக்கு அணுஆயுத விலக்குக் கொள்கைக்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு காணொளிக் காட்சியையும் லான்ரியேர் போட்டுக் காட்டினார். 1968 மாணவர் இயக்கத்துக்குப் பின்னர் எழுந்த அடிபணியா பிரான்ஸ் (LFI) போன்ற ஏகாதிபத்திய ஆதரவு நடுத்தர வர்க்கக் கட்சிகளுக்கும், ட்ரொட்ஸ்கிசத்துக்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர நோக்குநிலைக்காகவுமான ICFI இன் போராட்டத்திற்கும் இடையில் பிரித்து நிற்கின்ற வர்க்கப் பிளவை லான்ரியேர் விபரித்துக் காட்டினார்.

அவரது கருத்துக்களைத் தொடர்ந்து ஒரு உயிரோட்டமான கேள்வி பதில் மற்றும் விவாத அமர்வு நடந்தது. போர் முனைப்புக்கு பின்னாலிருப்பது என்ன, ஜேர்மன் மீண்டும் ஆயுதபாணியாவது குறித்த விவாதங்கள், ஐரோப்பிய இராணுவத் தளங்களின் பரவலும் இந்தியா உள்ளிட உலகளாவிய இடங்களில் அதன் நிலைநிறுத்தல்களும்,  மற்றும் மக்ரோனுக்கும் அதிவலதுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்ற ஆஸ்திரிய சான்சலர் செபாஸ்டியன் குர்ஸ் போன்ற அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் ஆகியவை குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன.

பல ஆண்டுகளாக உலக சோசலிச வலைத் தளத்தை வாசித்து வருபவரும் ஞாயிறன்று முதன்முறையாக ஒரு PES கூட்டத்தில் கலந்துகொண்டவருமான பியர் கூறுகையில், ICFI இன் எழுத்துக்களது தரமும் புறநிலையான தன்மையும் பிரான்சில் செயலூக்கத்துடன் இயங்கும் மற்ற செய்தித் தளங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளில் இருந்து அதனைத் தனித்துவப்படுத்துவதாக தெரிவித்தார்.

உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் பெருகிச் செல்லும் போர் அபாயம் குறித்து கவலை வெளியிட்டனர், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் பிறவெங்கிலுமான போர்களை அவர்கள் எதிர்க்கும் நிலையில் அந்தப் போர்களில் சண்டையிடுவதற்காக கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்படுவதை எவ்வாறு தவிர்ப்பது என்று அவர்கள் வினவினர்.

”அநேகமாய் ஐந்து ஆண்டுகாலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டுடன் போரில் சண்டையிடுவதற்கு கட்டாயப்படுத்தப்படலாம். போர் என்பது நாற்றம்பிடித்ததாகும், நீங்கள் அதில் மரணமடையலாம். அதனால் பலரும் மரணமடையலாம்” என்று ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி தெரிவித்தார்.

“இந்தக் கூட்டம் நன்றாயிருந்தது” என்று அவரது நண்பி தெரிவித்தார். “விரைவில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்படலாம் என்பது போன்ற உண்மையான அடிப்படை பிரச்சினைகளைக் குறித்து நீங்கள் பேசினீர்கள். தொலைக்காட்சியில், அவர்கள் எல்லாவற்றையும் சொல்வது கிடையாது. போருக்கான திட்டங்கள் இருப்பதை அவர்கள் எங்களுக்குச் சொல்வதில்லை”.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டு மக்களின் மத்தியிலும் போருக்கும் போலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கும் எதிரான ஒரு பரந்த எதிர்ப்பு இருக்கிறது, ஆயினும் அது அணிதிரட்டப்பட வேண்டும், ஐக்கியப்படுத்தப்பட வேண்டும், ஒரு புரட்சிகர முன்னோக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை PES இன் அங்கத்தவர்கள் விளக்கினார்கள். ICFI இன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) கிளைகள் கட்டப்படுவதற்கான அவசியத்திற்கு விவாதம் முன்னேறிச் சென்றது, அத்துடன் PES கூட்டங்கள் பிரான்ஸ் எங்கிலும் மற்ற நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கலந்து கொண்டவர்கள் ஆலோசனை அளித்தனர்.

மேலதிக வாசிப்புகளுக்கு:

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கை [PDF]

பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர அழைப்பு விடுக்கிறார் [PDF]