ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

2018 Winter Olympics held in Korea under shadow of war

போர் சூழலின் கீழ் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது

Will Morrow
13 February 2018

மெழுவர்த்தி ஒளியில் ஒரு வெண்புறா போன்று நடன அசைவு அமைக்கப்பட்டு, ஜோன் லெனனின் (John Lennon) "கற்பனை" என்ற பாடலுக்கு அர்பணித்திருந்த ஒரு தொடக்க விழா உட்பட, உத்தியோகபூர்வ கருத்துரு "சமாதானம்" என்பதன் கீழ் தென் கொரியாவில் கடந்த வெள்ளியன்று 2018 குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் தொடங்கின. சர்வதேச ஒலிம்பிக்ஸ் குழு தலைவர் தோமஸ் பாஹ் (Thomas Bach), இது "உலகிற்கு பலமான சமாதான சேதியை" அனுப்பும் என்று அறிவித்தார்.

வெளிப்படையாக எந்தவிதமான தயக்க உணர்வும் இல்லாமல் பாஹ், 2016 ஒலிம்பிக்ஸ் அகதிகளுக்கு உத்தியோகபூர்வமாக "நம்பிக்கைக்கான சேதியை" அனுப்பியது என அறிவித்தார். ஆனால் அவ்வருடம் முடிவடைகையில் மத்திய தரைக்கடலைக் கடக்கும் முயற்சியில் 5,000 க்கும் அதிகமான அகதிகள் மூழ்கி இறந்தார்கள், அதற்கு பின்னர் இன்றுவரை ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தாண்டின் கடிந்துரைத்த கூற்றை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஹிட்லரின் ஜேர்மனியில் நடந்த 1936 ஒலிம்பிக்ஸ் க்கு பின்னர், இந்தளவுக்கு ஓர் உடனடி போர் அச்சுறுத்தலின் கீழ் எந்த விளையாட்டுக்களும் நடத்தப்பட்டிருக்கவில்லை என்பதே யதார்த்தம். இந்த விளையாட்டுக்களுக்குப் பின்னர் உடனடியாக வட கொரிய இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ஓர் "இரத்தந்தோய்ந்த கூரிய" தாக்குதலைத் தொடங்குவதற்கான நிஜமான சாத்தியக்கூறு, இந்த தென் கொரிய நிகழ்வுகளைச் சூழ்ந்துள்ளது. அத்தகைய ஒரு தாக்குதல் ஓர் அணுஆயுத மோதலைத் தூண்டக்கூடும் என்பதோடு, கொரிய தீபகற்பத்தில் பத்து மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் செல்லும்.

பியொங்யாங் நிபந்தனையின்றி அதன் அணுஆயுத திட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டும் அல்லது இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலியுறுத்தலை அது கைவிடவில்லை என்பதை ட்ரம்ப் நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. ஒரே விளையாட்டு குழுவாக ஒலிம்பிக்கில் போட்டியிடுவதென்ற வட கொரியா மற்றும் தென் கொரியாவின் முடிவு, பதட்டங்களைக் குறைக்க அறிகுறியாக இருக்குமென்ற நம்பிக்கையில் அது அப்பிராந்தியம் எங்கிலும் மில்லியன் கணக்கானவர்களால் வரவேற்கப்பட்ட போதினும், அது ட்ரம்ப் நிர்வாகத்தின் மூடிமறைப்பற்ற விரோதத்தையே சந்தித்தது.

இது தொடக்கவிழா நிகழ்வின் போது துணை ஜனாதிபதி மைக் பென்சின் பிடிவாதமான நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டப்பட்டது, அங்கே கொரியாவின் ஒருங்கிணைந்த விளையாட்டுக் குழு மைதானத்திற்குள் நுழைகையில் எழுந்து நின்று கரவொலி செய்ய வேண்டியிருந்த போது அவர் இறுகிய முகத்துடன் தொடர்ந்து அமர்ந்தே இருந்தார். சுமார் 35,000 அமெரிக்க துருப்புகள் ஆக்கிரமித்துள்ள தென் கொரியாவை, அதன் நிலையை உணர்ந்த ஓர் அரை-காலனியாக வாஷிங்டன் கருதுகிறது என்பதில் அமெரிக்க துணை ஜனாதிபதி எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஒலிம்பிக்ஸ் இல் பென்ஸ் கலந்து கொண்டமை, அலாஸ்காவின் அமெரிக்க தொலைதூர ஏவுகணை அமைப்புமுறைகளைப் பார்வையிடுவது, ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டிலும் உள்ள அமெரிக்க கூட்டாளிகளைச் சந்திப்பது உட்பட, போருக்கு தயாரிப்பு செய்வதற்கான ஒரு விஜயமாக மாற்றப்பட்டிருந்தது. கடந்த புதனன்று டோக்கியோவில் உரையாற்றுகையில் பென்ஸ் அறிவித்தார், “ஒலிம்பிக்ஸ் பதாகையின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு வட கொரியாவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், யதார்த்தம் என்னவென்றால் அவர்கள் அவர்களின் மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளதுடன், அப்பிராந்தியம் எங்கிலும் அச்சுறுத்தலாக உள்ளனர்,” என்றார்.

இது 1950-53 க்கு இடையே குறைந்தபட்சம் சுமார் மூன்று மில்லியன் கொரியர்கள் கொல்லப்பட்ட ஒரு போரை நடத்தியமை உட்பட போருக்கான தயாரிப்பில் குவாமில் அணுஆயுதம் ஏந்தும் B-2 குண்டுவீசிகளை நிறுத்தியமை மற்றும் அப்பிராந்தியத்தில் ஒரு பாரிய இராணுவ தயாரிப்பை இப்போது செய்து வருகின்ற ஓர் அரசாங்கத்தின் பிரதிநிதியிடம் இருந்து இக்கருத்து வருகிறது.

ஒலிம்பிக்ஸ் "சர்வதேசியத்திற்கான முன்மாதிரி" என்பதற்கு முரண்பட்டு, அந்த விளையாட்டுக்களை ஆரிய மேலாதிக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஊக்குவிப்பதற்கான ஹிட்லரின் முயற்சிகளில் இருந்து, பனிப்போர் நெடுகிலும் சோவியத் ஒன்றியத்தின் மீது அதன் மேலாளுமையை காட்டுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு வரையில், உலகின் முதலாளித்துவ சக்திகளால், எப்போதுமே அது, தேசியவாதம் மற்றும் புவிசார் அரசியல் நலன்களை ஆக்ரோஷமாக ஊக்குவிப்பதற்கான ஒரு களமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளும், இதற்கு முந்தியவைகளைப் போலவே, குறிப்பாக அமெரிக்காவினது, தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தின் மிக அதீத வெளிப்பாடுகளால் நிறைந்துள்ளன, “அமெரிக்கா, அமெரிக்கா!” என்ற வெறி பிடித்த கோஷத்தில் அது தொகுத்தளிக்கப்பட்டது, அமெரிக்காவை போன்ற செல்வ வளமும் இராணுவ பலமும் கொண்டிருக்கும் ஒரு நாடு, தேசவெறியுடன் மிதமிஞ்சிய இராணுவவாத குணாம்சத்தை ஏற்று முடிவில்லா தற்பெருமை போன்றதில் ஈடுபட வேண்டியதில்லை என்றொருவர் நினைக்கலாம். இதை, அமெரிக்க முதலாளித்துவத்தை அரித்து வரும் நெருக்கடி மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் வேட்கைகளுக்கு அதிகரித்து வரும் சவால்கள் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே விவரிக்க முடியும்.

வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு கூடுதலாக, அமெரிக்காவிடமிருந்து வந்த அழுத்தத்தின் கீழ் 2018 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் கலந்து கொள்ள கடந்த டிசம்பரில் IOC நிர்வாக குழுவால் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ரஷ்யா திட்டமிட்டு ஊக்கமருந்து பயன்படுத்தியது குறித்த குற்றச்சாட்டுக்கள், 2016 இல் அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் நகர்வதற்கு முன்னதாக, ரஷ்யாவில் ஊக்கமருந்து பயன்பாட்டை தடுக்கும் ஆய்வகத்தை நடத்தி வந்த Grigory Rodchenkov இன் சாட்சியத்தின் அடிப்படையில் உள்ளன.

இருப்பினும் இப்போட்டிகளில் 168 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகிறார்கள், இவர்கள் ஊக்கமருந்து எடுத்து கொண்டிருக்கிறார்களா என்பதற்கான கூடுதல் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், அதேவேளையில் ரஷ்ய தேசிய கொடிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது, வெற்றி பெறும் ரஷ்யர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் ரஷ்ய தேசியகீதத்திற்கு பதிலாக ஒலிம்பிக் கீதம் ஒலிக்கப்பட உள்ளது. ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களின் ஆயுள்காலத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இதில் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை என்று IOC இம்மாதம் அறிவித்தது. 2016 இல், பாரா-ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் ரஷ்ய விளையாட்டு வீரர்களும், அவர்களுடன் வந்த களக் குழுக்களும் ரியோ ஒலிம்பிக்ஸ் இல் பங்கெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைகள், அப்பட்டமாக ரஷ்யாவை சர்வதேச அளவில் விலக்கப்பட்ட ஒரு நாடாக காட்ட நோக்கம் கொண்டுள்ளன. ரஷ்யா ஊக்கமருந்து பயன்படுத்திய அட்டூழியம் எனப்படும் குற்றச்சாட்டுக்களின் பாசாங்குத்தனம், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கான அமெரிக்க தலைமை மருத்துவர் லேரி நாசர் திட்டமிட்டு இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட விவகாரம் வெளியானபோது தெளிவுபட்டது. அமெரிக்க ஊடகங்களில் இந்த துஷ்பிரயோகம் குறித்த செய்திகள் பல மாதங்கள் நிரம்பி வழிந்தன, இது வெளி வருவதற்கு ஓராண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னரே அந்த மோசடி குறித்து அறிந்திருந்த போதும், அதற்காக ஒன்றும் செய்யாதிருந்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகளால் அது திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டது. அமெரிக்க விளையாட்டு வீரர்கள் மீதான துஷ்பிரயோகம் அவர்களது ரஷ்ய தரப்பினர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தினர் என்ற குற்றஞ்சாட்டுக்களைக் காட்டிலும் பல மடங்கு மீறிச் செல்கிறது என்றாலும், ரஷ்யாவுக்குத் தடை விதிப்பதற்கு ஆதரவாக அணிவகுத்து நடைபயின்ற அதே மேற்கத்திய அரசாங்கங்களும் பெருநிறுவன ஊடகங்களும், தென் கொரிய ஒலிம்பிக்ஸ் இல் இருந்து "நட்சத்திரங்களும் வரிகளும்" [அமெரிக்க தேசியக் கொடி] தடுக்கப்பட வேண்டுமென்றோ, அமெரிக்க தேசிய கீதம் பாடுவது கைவிடப்பட வேண்டுமென்றோ எந்த அறிவுறுத்தலும் வைக்கவில்லை.

ரஷ்ய விளையாட்டு வீரர்களைத் தண்டிப்பதானது, நீண்ட காலத்திற்கு முன்னரே முடிவில்லா ஊழல் மோசடிகள், பகட்டாரவாரங்கள் மற்றும் பெருநிறுவனங்களது பணத்தால் சீரழிக்கப்பட்டுவிட்ட ஒலிம்பிக் விளையாட்டின் நேர்மை என்று கூறப்படுவதை எந்தவிதத்திலும் பாதுகாப்பதற்காக இல்லை, மாறாக போருக்கு மக்களைத் தயார்படுத்த ரஷ்யாவை பூதாகரமாக காட்டும் ஒரு மூர்க்கமான பிரச்சாரத்தின் பாகமாக உள்ளது என்ற உண்மையை மட்டுமே இந்த பாரபட்சமான நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தற்போதைய ஒலிம்பிக்ஸ் இல் "சமாதானத்திற்கான" உத்தியோகபூர்வ துதிப்பாடல்கள் என்னவாக இருந்தாலும், உலகின் பிரதான முதலாளித்துவ சக்திகளோ, "திரித்தல்வாத நாடுகளுடன்", பிரதானமாக ரஷ்யா மற்றும் சீனாவுடன், அமெரிக்கா “வல்லரசு" மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்ற சமீபத்திய அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தில் (US National Defense Strategy document) அறிவிக்கப்பட்டதற்கு அவற்றின் சொந்த இராணுவ ஆயத்தப்படுத்தலுடன் விடையிறுத்து வருகின்றன. கடந்த வாரத்தில், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா அனைத்தும் இராணுவ செலவுகளில் பாரிய அதிகரிப்பை அறிவித்தன.

ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ் போலவே, இந்த 2018 குளிர்கால விளையாட்டுக்களுக்குப் பின்னால் உள்ள பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் மற்றும் பெருநிறுவன நலன்கள் அந்த விளையாட்டுக்களில் போட்டியிடும் தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் அசாதாரண உடல் துணிவு, அளப்பரிய திறமை மற்றும் நிஜமான அனுதாப குணாம்சத்துடன் முரண்படுகின்றன. இது அவர்களின் தவறல்ல, ஒலிம்பிக்ஸ் இல் மேலோங்கிய இராணுவவாதம், பகட்டாரவாரங்கள் மற்றும் வர்த்தகத்தனத்தின் நசுக்கும் சுமையின் கீழ் அவர் செயல்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ ஒலிம்பிக் விளம்பரதாரர்களான கோக்கா கோலா, ஜெனரல் எலெக்ட்ரிக், டோவ் மற்றும் இன்டெல் உட்பட, கொரியாவில் களமிறங்கி உள்ள பிரதான பெருநிறுவனங்களால் பத்து மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படும் அதேவேளையில் தொலைக்காட்சி வலையமைப்புகளோ விளம்பர விற்பனை மூலமாக மில்லியன் கணக்கில் அறுவடை செய்யும்.

போட்டியிடும் வெகு சிறிய எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்களைப் பொறுத்த வரையில், வெற்றி என்பது மில்லியன் டாலர் மதிப்பில் பொருட்களை சந்தைப்படுத்தல் என்பதை அர்த்தப்படுத்தும், அதேவேளையில் வெற்றியாளர்களில் குழுக்களுள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தவறுபவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பிடித்துள்ள சமூக பிரச்சினைகள் அனைத்துக்கும் முகம்கொடுக்க அவர்களது நாடுகளுக்கு திரும்புவார்கள்.

“I, Tonya,” என்று சமீபத்தில் வெளியான படத்தில் மோசடியில் சிக்கி சின்னாபின்னமான ஒலிம்பிக் ஸ்கேட்டிங் விளையாட்டு வீராங்கனை Tonya Harding wryly இன் கதாபாத்திரம் குறிப்பிடுவதைப் போல: “ஒலிம்பிக்ஸ் இல் நீங்கள் நான்காவதாக வருகையில், உங்களுக்கு சந்தைப்படுத்தும் எந்த உடன்படிக்கைகளும் கிடைக்காது. வேண்டுமானால் Spud நகரில் உங்களுக்கு காலை 6 மணி ஷிப்ட் வேலை கிடைக்கலாம்,” என்கிறார்.