ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකා කම්කරු කොන්ග්‍රසයේ දේශපාලන කරනම් ගැසීම: වරප්‍රසාද වැඩිකර ගැනීමේ නින්දිත අවස්ථාවාදයක්

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குத்துக்கரணம்: சலுகைகளை அதிகரித்துக்கொள்வதற்கான இழிந்த சந்தர்ப்பவாதம்

By M. Thevarajah 
24 February 2018

இலங்கையில் பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்கமாகவும் முதலாளித்துவ அரசியல் கட்சியாகவும் செயல்படும், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னர் மீண்டும் அரசியல் குத்துக்கரணம் அடித்துள்ளது.

இ.தொ.கா, பெப்பிரவரி 10 நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ.) உடன் கூட்டணி சேர்ந்திருந்தது. நுவரெலியா மாவட்டத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு தனியான சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா., அந்த மாவட்டத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்கள் சார்ந்த மன்றங்களுக்கும் ஐ.ம.சு.கூ. உடன் போட்டியிட்டது. அந்தப் பிரதேசங்களில் சிங்கள வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் உத்தியாகவும் சிறிசேன தரப்பின் மூலம் அரசாங்கத்திடம் இருந்து சிறப்புரிமைகளைப் பெறும் நோக்கிலேயே இ.தொ.கா. ஐ.ம.சு.கூ. உடன் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, தலைகீழாக குத்துக் கரணம் அடித்து, முன்னால் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உடன் சேர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்வதாக இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர்களில் ஒருவரான சி.பி. ரட்னாயக்கவுடன் சேர்ந்து, ஊர்வலத்தில் பங்குபற்றி, தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாடினார்.

மறுநாள் மீண்டும் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் தோன்றிய தொண்டமான், "ஜனாதிபதி சிறிசேன உடன் தொடர்ந்தும் ஒத்துழைக்கும் அதே வேளை, ’மக்களுக்கு சேவை’ செய்வதற்காக, 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்வதாக அறிவித்தார்.

சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த பொதுமக்கள் ஸ்ரீ.ல.பொ.ஜ.முன்னணிக்கு வாக்களித்ததன் காரணமாக, தீவின் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 239 மன்றங்களை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வென்றது. அதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்காக இராஜபக்ஷவின் கட்சியில் சேர்வது சிறந்தது என்று இ.தொ.கா. தலைவர்கள் எண்ணியுள்ளனர்.

பி. திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, வி. ராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் கூட்டும் அரசாங்கத்தின் பங்காளியுமான தமிழ் முற்போக்கு கூட்டணி (த.மு.கூ.), பிரதமர் விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) உடன் தேர்தலில் போட்டியிட்டது. பி திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வி. ராதாகிருஷ்ணனும் அரசாங்கத்தின் அமைச்சர்களாவர்.

தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் இ.தொ.கா.வின் ஆதரவை பெற ஜனாதிபதி சிறிசேன எதிர்பார்க்கும் அதே நேரத்தில், இ.தொ.கா. தலைவர்கள், தமது சொந்த சலுகைகளுக்காக அரசாங்கத்தின் நெருக்கடிகளை பயன்படுத்திக்கொள்ள கணக்கிடுகின்றனர். இ.தொ.கா. தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், அடிப்படை தொழிற்துறை பிரதி அமைச்சர் பதவியை சிறிசேனவிடம் பெற்றுள்ளதோடு தொண்டமான் அமைச்சுப் பதவிக்கு மோப்பம் பிடித்துக்கொண்டுள்ளார்.

இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மீது ஒரு காலையும் சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க.யின் மீது இன்னொரு காலையும் வைத்துள்ள இ.தொ.கா., அத்தகைய ஒரு இழிந்த அரசியல் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளது.

பிரதி அமைச்சர் பதவியைப் பெற்ற பிறகு முத்து சிவலிங்கம் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவ்வாறு செய்தார் என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது இராஜிநாமாவானது இ.தொ.கா.வுக்கள் நடக்கும் அதிகாரப் போராட்டத்தின் விளைவு என பெப்பிரவரி 22 உதயசூரியன் பத்திரகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப் போட்டி யார் யாருக்கு இடையில், எதற்காக நடக்கின்றது என்பதை செய்தித்தாள் விவரிக்காவிட்டாலும், தொண்டமான் தேர்தல் பிரச்சாரத்தில் தனது மகனை முன் கொண்டு வந்தமை அதற்கு காரணமாக இருக்கலாம் என அது சமிக்ஞை செய்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட இ.தொ.கா. மற்றும் த.மு.கூ. தலைவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சமூக உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பெரிய வேலைகளை செய்ததாக பொய் சொல்லி அவர்களது வாக்குகளை சுரண்டிக்கொள்ள முயன்றனர்.

முதலாளித்துவ அரசில் சிறப்புரிமைகளைப் பெறுவதற்காக ஒருவருக்கொருவர் எதிராக கண்டனம் செய்துகொண்டு இத்தகைய நாய் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டாலும், இ.தொ.கா. மற்றும் த.மு.கூ., தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதிலும் உழைப்புச் சுரண்டலை தீவரமாக்குவதிலும் வேலைச் சுமையை சுமத்துவதிலும் முதலாளித்துவ அரசுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் பேதம் இல்லாமல் ஒத்துழைக்கின்றன. தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு குழி பறிக்கும் வேலையை அவர்கள் தம்மிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கடந்த இராஜபக்ஷ அரசாங்கம் இருந்தபோது தொழிலாளர்களுக்கு நியாயமன சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க தன்னால் முடிந்தது, ஆனால் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டுள்ள த.மு.கூ. அதற்காகப் போராடவில்லை என்றும், கடந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்வில்லை, என்றும் தொண்டமான் கூறினார். இது ஒரு பொய் ஆகும். தோட்டத் தொழிலாளர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளம் மற்றும் வேலை வேகப்படுத்தும் திட்டங்கள் அடங்கிய சம்பள உடன்படிக்கைகளை திணிப்பதற்கு, த.மு.கூ. மற்றும் இ.தொ.கா. தொடர்ந்தும் ஒத்துழைத்து வந்துள்ளன. 2016ல் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு இவர்கள் இரு சாராரும் கைச்சாத்திட்டனர்.

இந்த தொழிற்சங்கங்கள், 1000 ரூபாய் ஆரம்ப சம்பள உயர்வுக் கோரிக்கையை, கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் உத்தரவுகளுக்கு அமைய குறைத்துக்கொண்டன. பின்னர், தோட்டக் கம்பனிகள் பிரேரித்த ரூபா 730 நாள் சம்பளத்தை ஏற்றுக்கொண்டதுடன் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலைக் கொழுந்தின் அளைவை அதிகரிப்பதற்கும் அந்த ஒப்பந்தத்தில் அவை உடன்பட்டன. எனினும், தோட்டத் தொழிலாளியின் கைக்கு கிடப்பது ஒரு நாளுக்கு 500 ரூபா அற்பத் தொகையாகும்.

அத்துடன் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 2018 ஆகும் போது, கம்பனிகள் பிரேரித்துள்ள வருவாய் பகிர்வு முறையை அமுல்படுத்த இந்த தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ளன. இந்த முறையின் கீழ், தொழிலாளர்கள் தோட்டத்தில் ஒரு துண்டைப் பராமரிக்கும் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படுவதோடு ஊழியர் சேமலாப நிதியையும் அவர்களது சமூக உரிமைகளையும் அபகரிக்கும் திட்டங்களும் அடங்கும்.

ஒப்பந்தத்துக்கு எதிராக தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அத்தகைய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட, டிக்கோயாவில் இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையின் பாகமாக, அங்கு ஏழு தொழிலாளர்களை வேலை இடை நீக்கம் செய்யவும், பொய் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்து வழக்குத் தொடர்வதற்கும் இந்த தலைவர்கள் ஆதரவு கொடுத்தனர். அவர்களின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்தது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே. இந்தத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டாலும், தோட்ட நிர்வாகிகளால் தண்டனையாக அவர்கள் தோட்டத்தின் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

ஏற்றுமதி வருவாய் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையும் இலாப விகிதங்கள் வீழ்ச்சியடைவதையும் தோட்டத் தொழிலாளர்களின் இழப்பில் தீர்த்துக்கொள்வதற்கு தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் கம்பனிகள் முயற்சிக்கின்றன. தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதற்கும் உழைப்பு சுரண்டலை தீவிரமாக்குவதற்கும் ஒத்துழைப்பு கொடுத்து, இ.தொ.கா. மற்றும் த.மு.கூ. தலைவர்கள், முதலாளித்துவ அரசாங்கத்திடமிருந்து அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பெற வேலை செய்கின்றனர்.

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம், தோட்டத் தொழிலாளர்கள் சலுகைகள் பெற முடியும் என்ற பொய்யை பரப்பிவிட்டு, அவர்கள் இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உண்மை என்னவென்றால், ஆட்சிக்கு வரும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து, தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் சலுகைகளை பாதுகாத்துக்கொண்டனர்.

வருமான பகிர்வு முறையை நடைமுறைப்படுத்துவதற்கு, தோட்டத் தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக 2-3 ஏக்கர் தேயிலை செடிகளை கொடுக்குமாறு கோரும் தொண்டமான், அவர்களுக்கு ஒரு நிலப்பகுதியை கொடுத்து, தோட்டங்களில் இருந்து அகற்றி தோட்ட கிராமங்கள் அமைப்போம் என்ற பெயரில், தேர்தலின் போது பிரச்சாரம் செய்தனர். சுரண்டலை அதிகரிக்கவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மற்றும் ஏனைய சமூக உரிமைகள் வழங்கவும் தமக்குள்ள பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதற்காக, கென்யா போன்ற நாடுகளில் உள்ள தோட்டக் கம்பனிகள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.

கடந்த பல தசாப்தங்களாக, அரசியல் குத்துக்கரணங்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைக் காட்டிக் கொடுத்து இழிவான சரித்திரம் இ.தொ.கா.வுக்கு உரியது. அதன் தற்போதைய தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் தாத்தாவான சௌமியமூர்த்தி தொண்டமான, முதலாளித்துவ அரசின் முகவராக, தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்கித் தள்ளுவதற்கு முதலாளித்துவ அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

1964 இல் கையெழுத்திட்ட சிறிமா-சாஸ்தி உடன்படிக்கையின் கீழ், 500,000 தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒத்துழைத்த எஸ். தொண்டமான், 1978 ஜே.ஆர். ஜயவர்தனவினால் ஐ.தே.க. அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் சமூக நலத்திட்ட வெட்டுக்களுக்கு எதிராக தலைதூக்கிய தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களை மற்றும் எதிர்ப்புக்களை தோற்கடிக்கவும் அவற்றை ஒடுக்குவதற்கும் நேரடியாக பங்களிப்பு செய்தார்.

அவர், அதே போல், ஜயவர்த்தன அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட, வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்து ஆதரித்தார். யுத்த காலத்தில் தோட்டத் தொழிலாளர் இளைஞர்களுக்கு எதிரான அரசாங்க வேட்டையாடல்களுக்கு இ.தொ.கா. நேரடியாக பங்களிப்பு செய்தது.

எஸ். தொண்டமானின் மரணத்தின் பின்னர், இ.தொ.கா. தலைவரான ஆறுமுகம் தொண்டமான், அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்களுக்கு முண்டு கொடுப்பதை தொடர்ந்தும் முன்னெடுத்தார். 2001ல் ஐ.தே.க. அரசாங்கத்துக்கும் 2005 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஆதரவு கொடுத்த இ.தொ.கா, 2015 தேர்தலில் ராஜபக்ஷ ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைவதில் தோல்விகண்ட போதிலும், அரசாங்கத்தினதும் தோட்ட நிறுவனங்களதும் திட்டங்களுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்தவதை தொடர்ந்தும் முன்னெடுத்தார்.

வணிக உரிமையாளர்களும் முதலாளித்துவ அரசியல் உயரடுக்கின் ஒரு பகுதியுமான இ.தொ.கா. தலைவர்களின் அரசியல் குத்துக் கரணம், தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்காக அன்றி, வெறுமனே தங்களது சலுகைகளை பாதுகாப்பதற்காகவே ஆகும். இது வெறுமனே இ.தொ.கா.வுக்கு வரையறுக்கப்பட்டது அல்ல. இது ஒட்டு மொத்த தொழிற்சங்கங்களின் சீரழிவு மற்றும் மாற்றத்தை வெளிக்காட்டுகிறது.