ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to talks with Macron on the privatisation of French railways!
For a political struggle against austerity and militarism in Europe!

பிரெஞ்சு இரயில்வேயை தனியார்மயமாக்க மக்ரோனுடன் பேச்சுவார்த்தை வேண்டாம்!

ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைக்கும் இராணுவவாதத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்காக அணிதிரள்வோம்!

By Alex Lantier
22 March 2018

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியினர்

பிரெஞ்சு தேசிய இரயில்வேயை (SNCF) தனியர்மயமாக்குவதற்கு எதிரான முதல் நாள் நடவடிக்கையில் மார்ச் 22 அன்று வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் ஒரு தீர்க்கமான அரசியல் போராட்டத்தில் இருக்கின்றனர். இந்தப் போராட்டம் நீண்டநெடிய போராட்டமாகும், முதல் நாள் நடவடிக்கைக்குப் பின் தீர்க்கப்பட்டு விடப்போவதில்லை, ஏனென்றால் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கு குறித்த இன்றியமையாத கேள்விகளை இது எழுப்புகிறது.

தொழிலாளர் சட்டம், ஓய்வூதியங்கள் மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை அழிக்கும்வரை, SNCF ஐ தனியார்மயமாக்குவதற்கும் இரயில்வே மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களுக்கான தொழில் சட்டப்பிரிவை கிழித்துப் போடுவதற்குமாய் தான் அளித்த வாக்குறுதியில் இருந்து இனியும் பின்வாங்கப் போவதில்லை என மக்ரோன் அறிவித்திருக்கிறார். 1917 அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்தும் அதன்பின் 1945 இல் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் விடுதலை பெற்றதற்குப் பின்னருமாய், இருபதாம் நூற்றாண்டு முழுவதிலுமான போராட்டத்தில் தொழிலாளர்கள் வென்றெடுத்திருந்த இந்த சமூக உரிமைகள் அனைத்தையும் ஒழிப்பதற்கு உத்தரவாணைகள் பிறப்பிக்க அவர் உறுதிபூண்டிருக்கிறார். பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் இருக்கின்ற தொழிலாளர்களை எந்த சமூக உரிமைகளும் அற்ற மலிவுகூலி தற்காலிகத் தொழிலாளர்களின் நிலைக்குக் குறைப்பதற்கு ஆளும் வர்க்கம் நோக்கம் கொண்டிருக்கிறது. பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் SNCFக்கான செலவை 27 சதவீதம் வரை வெட்டுவதற்காய் நோக்கம் கொண்டிருக்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் ஐந்தில் இரண்டு நாட்களுக்கு சுழற்சி முறையில் வேலைநிறுத்தம் செய்கின்ற தொழிற்சங்கங்களின் யோசனையை எதிர்கொள்ளும் அரசாங்கத்திற்கு, பின்வாங்குகிற எந்த எண்ணமும் இல்லை. தொழிலாளர்களுக்கு முன்வைப்பதற்கு தொழிற்சங்கங்களிடம் எந்த மூலோபாயமும் இல்லை. பிப்ரவரியில், CGTயின் பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேஸ், இரயில்வே தொழிலாளர்களின் சட்டபாதுகாப்பு பிரிவு “பேரம்பேச முடியாதது” என்று கூறினார். அப்படியானால் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் ஏன் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன?

மக்ரோனுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அத்தனை அரசாங்கங்களாலும் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த இயக்கம் எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு, தொழிலாளர்கள், போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கைகளில் இருந்து மீட்டு, மக்ரோனுக்கு எதிராகவும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பரந்த பிரிவுகளை அணிதிரட்டுவதற்காய் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டு தமது சொந்த சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை கட்டமைக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்துடன் இது இணைக்கப்பட வேண்டும்.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களின் 1995 வேலைநிறுத்தத்தின் கோரக்காட்சியை எண்ணி அஞ்சுகின்றன. அச்சமயத்தில் அலன் ஜூப்பேயின் ஓய்வூதிய சீர்திருத்த அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்த நிலையில், வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களின் கைமீறிப் போயின, பிரான்சும் பெல்ஜியத்தின் பல பகுதிகளும் பல வாரங்களுக்கு ஸ்தம்பித்துக் கிடந்தன. தொழிற்சங்கங்கள் 1995 வேலைநிறுத்தத்தை குறிப்பிட விரும்புவதில்லை, CGT-Railways செயலாளரான லோரோன் பிறன் அப்பட்டமாகவே அறிவித்தார், “1995 அறவே எனது நினைவில் இல்லை.... நிறுவனத்திற்குள்ளாக ஒரு கட்டுக்கதை நிலவுகிறது, ஆனால் என்னைப் பொறுத்தவரை, அப்படி எதுவும் கிடையவே கிடையாது!”

மக்ரோனின் தொழிலாளர் உத்தரவாணைகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் ஒரு ஆழமான கோபம் பெருகிக் கொண்டிருக்கிறது, முதலாளிகள் மற்றும் அரசுடனான “கலந்தாலோசனைகளை” கொண்டு தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் மீது திணித்திருந்த தளைகளில் இருந்து தொழிலாளர்கள் முறித்துக் கொள்ள வேண்டிய நிலைமைகள் மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றன.

அத்தகையதொரு முறிவு நிகழும்போது, அது தொழிலாளர்களின் முன்னே அடிப்படையான அரசியல் கேள்விகளை முன்நிறுத்தும். தொழிலாள வர்க்கம் அக்டோபர் புரட்சியின் அரசியல் பாரம்பரியங்களுடன் கொண்டிருக்கும் பிணைப்புகளை மறுஸ்தாபகம் செய்வதே கையிலிருக்கின்ற பணியாகும். வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச இயங்குநிலையானது, சோசலிசப் புரட்சிப் பாதையை எடுப்பதைத் தவிர்ந்த வேறு எந்த முற்போக்கான நடவடிக்கைப் பாதையையும் தொழிலாளர்களுக்கு விட்டுவைக்கப் போவதில்லை.

மக்ரோனால் நடத்தப்படுகின்ற சமூகத் தாக்குதல்கள், இறுதி ஆய்வில், வெறுமனே பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பேராசையில் இருந்து மட்டும், உள்ளபடியே அது எத்தனை பெரியதாக இருக்கின்ற போதிலும், பிறக்கவில்லை, மாறாக எல்லாவற்றுக்கும் மேல், முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியில் இருந்தும் ஏகாதிபத்திய சக்திகளின் போருக்கான முனைப்பில் இருந்துமே பிறக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய 27 ஆண்டுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ வேட்கைகளின் துரிதமான கட்டவிழ்ப்பால் குறிக்கப்படுபவையாக இருந்து வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஈராக்கிலும் பால்கன்களிலும் நடத்தப்பட்ட போர்களானது, சிரியா மற்றும் ஆபிரிக்காவிலான பெருநாசகரமான தலையீடுகள் வரை விரிந்து பரவியிருக்கிறது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களாகவும் அதிகரித்துச் செல்கிறது.

இந்தப் போர்களால் ஸ்திரம்குலைக்கப்பட்டும் 2008 பொறிவு முதலான தொடர்ச்சியான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளால் பலவீனப்படுத்தப்பட்டும், ஐரோப்பிய ஏகாதிபத்தியமானது ஒரு மிகப் பரந்த இராணுவ மறுஆயுதபாணியாதலை தொடக்கிக் கொண்டிருக்கிறது. மக்ரோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு திட்டமிடுகிறார், 2024க்குள்ளாக இராணுவப் படைகளில் பாரிஸ் 300 பில்லியன் யூரோக்களை செலவிடவிருப்பதாக -ஒட்டுமொத்த இராணுவ செலவினம் 35 சதவீதம் வரை அதிகரிக்கும்- பாதுகாப்பு அமைச்சரான ஃபுளோரன்ஸ் பார்லி மூனிச்சில் சென்ற மாதத்தில் அறிவித்தார். மக்ரோனைப் பொறுத்தவரை, செல்வந்தர்களுக்கு வரிகளை வெட்டுவதற்கும் இராணுவ மறுஆயுதபாணியாகலுக்கும் நிதியாதாரம் திரட்டும் பொருட்டு தொழிலாளர்கள் சமூகப் பிற்போக்குத்தனத்துக்கு இணங்கியாக வேண்டும்.

இந்தக் கொள்கைகளுக்கு எந்த ஜனநாயக சட்டபூர்வத் தன்மையும் கிடையாது. ஒரு கடுமையான அரசியல் மோதல் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது, தொழிலாளர்கள் தமது சமூக உரிமைகள் அழிக்கப்படுவதற்கு காட்டுகின்ற எதிர்ப்பில் ஆளும் வர்க்கமானது தனது செல்வத்திற்கும் இராணுவ நலன்களுக்குமான ஒரு அச்சுறுத்தலைக் காண்கிறது. ஆளும் உயரடுக்கு இன்னும் கூடுதல் மிருகத்தனமான நடவடிக்கைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் அவசரகாலநிலையை வெகுதுரிதமாகவும் சுலபமாகவும் மீண்டும் திணிக்கமுடியும் என உள்துறை அமைச்சரான ஜெரார் கொலொம்ப் அறிவித்திருக்கிறார்.

இரயில்வே மற்றும் பொதுச் சேவைத்துறை தொழிலாளர்களது போராட்டத்தில் பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கின்ற தொழிலாளர்களே அவர்களது கூட்டாளிகளாவர். போராட்டத்திற்குள் வருகின்ற தொழிலாளர்கள் தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலான ஏராளமான மாநிலங்களில் வேலைநிறுத்தம் செய்கின்ற ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் -அங்கு இரயில்வே தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்- தொழிற்சங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். ஜேர்மனியிலும், அதேபோல துருக்கியிலும், உலோகத் தொழிலாளர்கள் அணிதிரண்டிருக்கின்றனர்.

பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயோத் தீவில், வேலைநிறுத்த முற்றுகைகளுக்கு எதிராக துணைராணுவப் போலிசார் நடத்திய தாக்குதல்களை சாக்காகப் பயன்படுத்தி பொது வேலைநிறுத்தத்தை மூடிவிட தொழிற்சங்கங்கள் செய்த முயற்சியை, வேலைநிறுத்தம் செய்தவர்கள் கோபத்துடன் நிராகரித்தனர்.

1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அதேபோன்ற அளவிலான போராட்டங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அவற்றை உருவாக்குகின்ற முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்குரிய ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதே தீர்மானகரமான பணியாகும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) கையிலெடுத்திருக்கும் பணியாகும்.

பல தசாப்தங்களாக முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியைச் சுற்றி இயங்கி வந்திருக்கும் பழைய அரசியல் கட்சிகளிடம் தொழிலாளர்கள் தங்களை ஒப்படைக்கக் கூடாது என PES வலியுறுத்துகிறது. தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அவற்றிடம் எதுவுமில்லை. தேசிய அவையில் கட்டாய இராணுவ சேவையை மக்ரோன் மறுஅறிமுகம் செய்வதை ஜோன்-லுக் மெலோன்சோன் (அடிபணியா பிரான்ஸ்) ஆதரித்திருக்கிறார், புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி PS இன் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான பெனுவா அமோனைச் சுற்றிய மறுகுழுவாக்கம் ஒன்றை உருவாக்க விரும்புவதாக ஒலிவியே பெசன்செனோ அறிவிக்கிறார். தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமையில் இருக்கும் அதே சக்திகளுடன் தான் அவர்கள் கூட்டுச்சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

PES இந்த ஏகாதிபத்திய-ஆதரவு கூட்டணியை நிராகரிப்பதோடு இந்த அமைப்புகளிடம் இருந்து அரசியல்ரீதியாக முறித்துக் கொள்ளாமல் தொழிலாளர்களுக்கு அவர்களது போராட்டங்களின் மூலமாய் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் வலியுறுத்துகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் மற்றும் மரின் லு பென் இடையிலான இரண்டாம் சுற்றினை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பிரச்சாரத்தை SEP நடத்திய வேளையில், இந்த சக்திகளோ தொழிலாளர்களுக்கு எந்த தெளிவான சுலோகத்தையும் வழங்க மறுத்ததோடு, மக்ரோனுக்கு வாக்களிக்க நடந்த ஊடகப் பிரச்சாரத்தின் பக்கம் சாய்ந்து கொண்டன. இன்று, அவை தொழிற்சங்கங்களின் அத்தனை சூழ்ச்சிவேலைகளுக்கும் பின்னால் அணிவகுத்திருக்கின்றன.

PS, மக்ரோன் மற்றும் போலி-இடதுகளில் இருக்கும் அவர்களது சுற்றுவட்டங்களுக்கு எதிரான ஒரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குகின்ற நோக்கத்துடன், PES, போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் பரந்த வெகுஜனத் தொழிலாளர்களை நோக்கி தன்னை நோக்குநிலை அமைக்கிறது. எழுந்து வரும் இந்த இயக்கத்திற்கு ஒரு அரசியல் முன்னோக்கை வழங்குவதற்கும், ஐரோப்பாவெங்கிலும் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுத்து பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை வங்கிகளின் இலாபங்களைக் காட்டிலும் சமூகத்தின் தேவைகளுக்கேற்ற விதத்தில் மறுஒழுங்கு செய்யக் கூடிய ஒரு சக்திவாய்ந்த சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் அது முனைகிறது.