ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google sets up “news initiative” to censor political opposition and promote mainstream media

அரசியல் எதிர்ப்பைத் தணிக்கை செய்யவும் மற்றும் பிரதான ஊடகங்களை ஊக்குவிக்கவும் கூகுள் "செய்தி முன்னெடுப்பு” செயல்திட்டத்தை ஆரம்பிக்கிறது

By Andre Damon
22 March 2018

சுதந்திரமான செய்தி அமைப்புகளை முடக்குவதன் மூலமாக, நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஏனைய பிற பிரபல செய்தி நிறுவனங்களின் ஏகபோகத்தை செய்திகள் களத்தில் மீள்பலப்படுத்த, கூகுள் அந்நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதாக புதனன்று அறிவித்தது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் நியூ யோர்ட் டைம்ஸின் பங்கு விலைகள் உயர்ந்ததுடன், அது குறிப்பிடுகையில், “அதிகாரபூர்வ செய்தியியலை ஆதரிக்க அடுத்த மூன்றாண்டுகளுக்கு 300 மில்லியன் டாலர் செலவிட சூளுரைத்துள்ள,” கூகுளின் முன்னெடுப்பு, “இணையத்தில் பொய்யான மற்றும் நம்பகமற்ற தகவல்கள் பரப்பப்படுவதைத்" தடுப்பதை நோக்கமாக கொண்டது என்று குறிப்பிட்டது.

யதார்த்தத்தில், கூகுளின் நடவடிக்கையானது, இணையத்தை தணிக்கை செய்ய, ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுடன் இணைந்து செயல்படும் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து வரும் ஒரு தொடர் பிரச்சாரத்தின் சமீபத்திய முன்னெடுப்பாகும்.

இணைய தணிக்கைக்கான பிரச்சாரம், டைம்ஸ் மற்றும் போஸ்ட் உட்பட பிரதான ஊடக நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்றன, எதிர்ப்பு செய்தி நிறுவனங்கள் மற்றும் "மக்கள் செய்தியியலால்" அவற்றின் சந்தாதாரர் அடித்தளம் குறைவதை இவை காண்கின்றன. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் சேர்ந்து சிறிய செய்தி நிறுவனங்களைத் தணிக்கை செய்ய செயல்படுவதன் மூலம், இந்த ஊடக பெருநிறுவனங்கள் இணைய வளர்ச்சிக்கு முன்னர் செய்தி வினியோகம் மீது அவை கொண்டிருந்த ஏகபோகத்தை மீட்டெடுக்கலாமென நம்புகின்றன.

கடந்தாண்டு ஏப்ரலில், கூகுள் "மாற்று கண்ணோட்டங்களை" விட "உத்தியோகபூர்வ தகவல்களை" ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அறிவித்தது, இது தேடல் முடிவுகளில் இடதுசாரி, போர்-எதிர்ப்பு, மற்றும் சோசலிச வலைத் தளங்களை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அணுகுவதை குறைக்க இட்டுச் சென்றது.

கூகுளின் கடந்த ஆண்டு அறிவிப்புக்கு பின்னர், அதை பின்தொடர்ந்து மற்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைய தணிக்கை செய்ய அவற்றின் சொந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடுகளைச் செய்தன. இந்தாண்டு, பேஸ்புக்கின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் அறிவிக்கையில், அது தனிநபர்கள் மற்றும் சுதந்திர செய்தி நிறுவனங்கள் பதிவிடும் பகிரங்கமான பதிவுகளை விட, நியூ யோர்க் டைம்ஸ் போன்ற "நம்பகமான" செய்தி ஆதாரங்களை ஊக்குவிக்க இருப்பதாக அறிவித்தார். இந்தாண்டு காங்கிரஸ் விசாரணை விளக்க உரை ஒன்றில், பேஸ்புக் கூறுகையில் அது சுமார் 10,000 தரவு நெறியாளர்களை நியமித்திருப்பதாகவும், இந்தாண்டின் இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இருப்பதாகவும் அறிவித்தது.

ஆனால் இணைய தணிக்கைக்காக உளவுத்துறை முகமைகளின் கோரிக்கைகளை வேகமாக நிறைவேற்றும் பேஸ்புக்கின் நகர்வுகளுக்கு இடையே, செனட்டர் மார்க் வார்னர் உட்பட முன்னணி ஜனநாயக கட்சியினர் சமூக எதிர்ப்பு மீதான ஒடுக்குமுறைக்காக இன்னும் அதிகமாக செயல்படுமாறு அதற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

மேற்கு வேர்ஜினியா மற்றும் ஒக்லஹோமா ஆசிரியர்கள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல்கலைகழக விரிவுரையாளர்கள், ஸ்பெயினில் அமசன் பண்டகசாலை தொழிலாளர்கள் என இம்மாத போராட்டங்கள் உட்பட உலகெங்கிலும் தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த அலை அதிகரித்து வருவதற்கு இடையே, முன்னணி செய்தி நிறுவனங்களோ தொழிற்சங்க ஸ்தாபக கட்டமைப்புக்கு வெளியே சமூக எதிர்ப்பை அணிதிரட்ட பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளன.

இந்த உள்ளடக்கத்தில், பிரதான செய்தி நிறுவனங்கள் அவற்றின் சொந்த நோக்கங்களை பின்தொடர்வதற்காக, தேர்தல் தரவு ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா (Cambridge Analytica) பேஸ்புக் பயனர்களுக்குத் தெரியாமலேயே 2014 இல் சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிநபர் தகவல்களைச் சேகரித்திருந்தது என்ற அம்பலப்படுத்தல்களை அவை பற்றி கொண்டன. அப்போது அந்நிறுவனம் ரோபர்ட் மெர்செருக்கு சொந்தமாக இருந்தது, ஒரு பில்லியனரான அவர் பின்னர் ட்ரம்ப் இன் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்தார். அவரின் நிறுவனத்தின் தலைவராக ஸ்டீவ் பானன் இருந்தார், இவர் பின்னர் ட்ரம்பின் பிரச்சார நிர்வாகியாக சேவையாற்றினார்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் தகவல்களைத் திரட்டிய விதம் தகவல்பாதுகாப்பு தொடர்பான ஆழ்ந்த கவலைகளை எழுப்புகின்ற அதேவேளையில், அந்த தகவல்கள் வெளியானதைப் பின்தொடர்ந்து வந்துள்ள ஊடக பிரச்சாரப்புயலை பெரிதும் கவனமாக பார்க்க வேண்டியுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காக பேஸ்புக் சேகரிக்கும் மற்றும் பயன்படுத்தும் தரவுகளின் ஒரு பகுதியை மட்டுமே —பெரும்பாலும் இரகசியமானவற்றை— கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அணுகியிருந்தது. அனைத்திற்கும் மேலாக, வாக்காளர்களின் அரசியல் கண்ணோட்டங்களை மதிப்பீடு செய்யவும் மற்றும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் பெரிதும் அதிகமாக தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை அறிவைச் சார்ந்துள்ள முதலாளித்துவ தேர்தல் பிரச்சார நடத்தை போக்குடன் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஒத்துள்ளன.

Investor’s Business Daily இன் ஒரு சமீபத்திய அறிக்கை குறிப்பிட்டது, “2012 இல், ஒபாமா பிரச்சாரம், ஒபாமா 2012 பேஸ்புக் பயன்பாட்டை (app) பதிவிறக்கம் செய்ய ஆதரவாளர்களை ஊக்குவித்தது, அந்த பயன்பாட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததும், அது பயனர்கள் குறித்த அவர்களது நண்பர்களைக் குறித்த பேஸ்புக் தகவல்களை சேகரிக்கும்.” அந்த அறிக்கையின்படி, 190 மில்லியன் வரையிலான மக்களின் பேஸ்புக் தகவல்களில் "அவர்களுக்கு தெரியாமலேயே அல்லது அவர்கள் சம்மதம் இல்லாமலேயே, ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரக் குழுவிடம் குறைந்தபட்சம் ஒருசிலவற்றையாவது அவர்களிடம் இழந்தார்கள்.”

ஒபாமா நிர்வாகத்தின் தகவல்களை ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கை குறித்து கருத்துரைத்து, முன்னாள் பிரச்சார இயக்குனர் கேரோல் டேவிட்சென் ட்வீட் செய்தார், “பயனர்களின் ஒட்டுமொத்த சமூக தகவல்களையும் எங்களால் உறிஞ்ச முடிந்திருந்தது என்பது குறித்து பேஸ்புக் ஆச்சரியப்பட்டது, ஆனால் நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை அவர்கள் உணர்ந்த பின்னரும் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.”

2016 இல் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டு கசியவிடப்பட்ட மின்னஞ்சல்களில், செயல்பாடுகளுக்கான பேஸ்புக் தலைமை அதிகாரி Sheryl Sandberg கிளிண்டன் பிரச்சார அதிகாரிகளுக்கு குறிப்பிடுகையில், அவர் "எப்படியாவது" கிளிண்டன் ஜெயிக்க வேண்டுமென விரும்பியதாகவும், அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த வேட்பாளரையும் பிரச்சார அதிகாரிகளையும் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனர்களின் அந்தரங்கம் மீதான கணிசமான மீறலை எடுத்துக்காட்டுகிறது என்ற அதேவேளையில், சமூக ஊடக தளத்தில் பதிவிடப்படும் ஒவ்வொன்றையும் மீளாய்வு மற்றும் தணிக்கை செய்யும் நோக்கில் “போலி செய்திகள்" மற்றும் தீவிரவாத கருத்துக்களுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில், முன்னணி அமெரிக்க உளவுத்துறை முகமைகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்போடு, பேஸ்புக்கே நடத்தி வரும் பாரிய கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்புடன் ஒப்பிடுகையில் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஒன்றுமில்லாது ஆகிவிடுகின்றன.

இதைவிட முக்கியமாக, கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா மீது ஜனநாயகக் கட்சியினரின் பெரிதும் பாரபட்சமான சீற்றமானது, ரஷ்ய "கணினி நிரல்கள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை" (bots and trolls) ஒடுக்குவதற்காக என்ற பெயரில் சமூக எதிர்ப்பை இன்னும் அதிக ஆக்ரோஷமாக தணிக்கை செய்ய பேஸ்புக்கை நிர்பந்திக்கும் நோக்கத்துடன், பேஸ்புக்கிற்கு கடும் அழுத்தமளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. செனட் சபை உளவுத்துறை குழுவின் இரண்டாவது முக்கிய இடத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியாளரும், இணைய தணிக்கைக்கு ஒரு முன்னணி ஆதரவாளருமான மார்க் வார்னர், 2016 தேர்தல் பிரச்சாரத்தில் "ரஷ்யர்களால்" அது "துஷ்பிரயோகம்" செய்யப்பட்டது என்று அறிவிக்க பேஸ்புக் மீது இன்னும் கூடுதலாக அழுத்தமளிப்பதற்காக அந்த மோசடியைக் கைப்பற்றி கொண்டார்.

வார்னர் ABC க்கு கூறினார், “கவனமாக கூறுவதானாலும், பேஸ்புக், இந்த புலனாய்வு தொடங்கியதிருந்தே, அனைத்தையும் வெளிப்படையாக முன்வைக்க ஆர்வமின்றி இருந்துள்ளது. தலைமை செயலதிகாரி திரு. சக்கர்பேர்க், மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் நேரில் வந்து விளக்கவுரை அளிக்க வேண்டுமென நான் நினைக்கிறேன், அதுவும் விடயத்தின் பகுதியைக் கூறக் கூடாது, மாறாக ட்ரம்ப் பிரச்சாரத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தது மட்டுமல்ல, மாறாக அவர்களின் தளத்தை ரஷ்யர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்குரிய அவர்களது தகைமை குறித்தும் கூற வேண்டும்,” என்றார்.

“Facebook Doesn’t Get It,” (ஃபேஸ் அதனை புரிந்துகொள்ளவில்லை) என்று தலைப்பிட்ட ஒரு துணைத்-தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் David Leonhardt வாதிடுகையில், “தவறான செய்திகளை பரப்பியதன் மூலமாக மற்றும் ரஷ்ய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைப் பெரிதாக்கியதன் மூலமாக, ட்வீட்டரை விட மிக பரந்த பெரிய சமூக வலையமைப்பான பேஸ்புக் ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிட்டத்தக்க பாத்திரம் வகித்தது,” என்றார்.

உண்மையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினாலும் நடத்தப்பட்ட பாரிய தகவல் ஊடுருவல் நடவடிக்கைகள், ரஷ்யர்களால் கொண்டு வரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு சில நூறாயிர டாலர் பேஸ்புக் விளம்பரங்கள் 2016 தேர்தலை விழுங்கிவிட்டதாக கூறப்படும் வாதத்தை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. இரண்டு கட்சிகளுமே, நூறு மில்லியன் கணக்கானவர்களின் அரசியல் கண்ணோட்டங்களைப் பகுப்பாய்வு செய்ய, அளவிட மற்றும் தாக்கம் ஏற்படுத்த முனைந்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நடத்திய விதமான தகவல் செயல்பாடுகள் மீது நூறு மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டன.

உண்மையில், Leonhardt அவரது சொந்த வாதத்தையே கீழறுக்கும் விதத்தில், டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதற்கும் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் தோற்றமைக்கும் ரஷ்ய தலையீடு என்று கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு "பலிக்கடா" ஆக்கப்படுவதாக குறிப்பிட்டார். என்னவாக இருந்தாலும், “ரஷ்ய தலையீடு" “பலிக்கடா" என்பது "போலி செய்திகள்" மற்றும் "மாறுபட்ட கருத்துக்களை" தடுக்கும் பெயரில் இணையம் மீதான கூடுதல் ஒடுக்குமுறைக்கு எரியூட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இணைய கருத்து சுதந்திரம் மீது அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு மற்றொரு சான்றாக, பேஸ்புக் கடந்த 48 மணி நேரத்தில், வியட்நாம் போர் குறித்த கென் பர்ன்ஸ் ஆவணப்படம் மீதான உலக சோசலிச வலைத் தளம் பதிவிட்ட சமீபத்திய திறனாய்வின் ஒரு வலைத் தள இணைப்பை, “நிர்வாணமான" உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, அழித்தது. உண்மையில், அக்கட்டுரை அமெரிக்காவினது மற்றும் அதன் தெற்கு வியட்நாமிய படைகளது அட்டூழியங்களில் இருந்து தப்பியோடும் அப்பாவி வியட்நாமியர்களின் பிரபல புகைப்படங்களைக் கொண்டிருந்தது; இப்புகைப்படங்கள் உலகெங்கிலும் டஜன் கணக்கான முன்னணி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் வர்க்க போராட்டம் கொதிப்பேறி வருகின்ற நிலையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு இணையத்தில் சமூக எதிர்ப்பின் வெளிப்பாட்டை தடுக்க முன்பினும் அதிக வேகத்தில் செயல்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறும், இணைய தணிக்கைக்கு எதிராக அதன் பிரச்சாரத்தில் இணையுமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.