ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s highest court upholds life sentences for framed-up Pricol workers

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பிரைக்கோல் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இந்திய உச்ச நீதிமன்றம் நிலை நிறுத்துகிறது

By Kranti Kumara 
28 February 2018

தொழிற்சங்க போராளிகளான மணிவண்ணன் மற்றும் இராமமூர்த்தி ஆகிய இரண்டு பிரைக்கோல் தொழிலாளர்களுக்கு ஜோடிக்கப்பட்ட கொலை வழக்குகளின் பேரில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிலைநிறுத்தி, தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் போராட்டங்களுக்கு எதிரான தனது உள்ளார்ந்த, சமரசமற்ற விரோதப் போக்கை இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

தென் இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைத் தளமாக கொண்ட இந்த பிரைக்கோல் நிறுவனம் ஒரு பன்னாட்டு வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமாகும்.

மணிவண்ணன் மற்றும் இராமமூர்த்தி ஆகியோர் மீதான ஜோடிக்கப்பட்ட ஒரு கொடூரமான வழக்காக அனைத்து அடையாளங்களையும் அது கொண்டுள்ள போதும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த மேல்முறையீட்டை கேட்பதற்கு கூட தயாராக இருக்காதென இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. இதில், பொலிஸ்/வாதித்தரப்பு விசாரணையில் உள்ள ஓட்டைகளும் முரண்பாடுகளும் மற்றும் குற்றத்தை சுட்டிக்காட்டும் எந்தவொரு தடயவியல் ஆதாரமும் இல்லாமல் இருப்பதும் அடங்கும்.

அதே நேரத்தில், கொலை மற்றும் கொலை செய்யும் நோக்கம் கொண்டு குற்றவியல் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஏனைய ஏழு பிரைக்கோல் தொழிலாளர்கள் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டதற்கு எதிரான நிறுவனத்தின் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கு மட்டும் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இதில் ஆறு பேருக்கு கீழ் நீதிமன்றம் தண்டனை விதித்த பின்னர் டிசம்பர் 2016 இல் உயர் நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து தண்டனையில் இருந்து விடுவித்தது. இவர்கள், 2009, செப்டம்பர் 21 அன்று, பிரைக்கோல் மனிதவள துணைத் தலைவர் ராய் ஜோர்ஜ் இன் விளக்க முடியாத கொலைக்காக இருமடங்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற மணிவண்ணன் மற்றும் இராமமூர்த்தியுடன் சேர்த்தே தண்டனை அளிக்கப்பட்டவர்களாவர்.

இவ்வழக்கை விசாரணை செய்த முதல் நீதிமன்றம் ஜோர்ஜ் மரணத்தில் தொடர்புடைய அனைவருமே குற்றமற்றவர்கள் என ஒப்புக்கொண்ட ஏனைய 19 பேரில் இந்த ஏழாவது தொழிலாளியும் ஒருவராவார்.

ஆனால், நான்கு பெண் தொழிலாளிகள் உட்பட 19 பேரில் ஒருவரை தவிர அனைவரும் பிரைக்கோலின் கோயம்புத்தூர் நடவடிக்கைகளில் சக போராளிகளாக இருந்தனர். பிரைக்கோல் சார்பற்ற அந்த தனித் தொழிலாளி எஸ்.குமாரசாமி ஆவார், இவர் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பான AICCTU இன் பொதுச் செயலாளராக இருந்தார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரைக்கோல் தொழிலாளர்கள் உருவாக்கிய  இரண்டு தொழிற்சங்கங்களும் அந்த கூட்டமைப்பை சேர்ந்தவையாகும்.

பிரைக்கோல் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் நிறுவனம்-அரசு அவர்கள் மீது தொடுத்த ஜோடிப்பு வழக்கிற்கும், ஹரியானா மானேசரில் மாருதி சுசூகியின் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களின் துயரங்களுக்கும் இடையில் அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகள் இருக்கின்றன.

இரு வழக்குகளிலுமே, தொழிலாளர்கள் குறைவூதியங்கள் மற்றும் மிருகத்தனமான வேலை நிலைமைகளுக்கு சவாலாக போராட முனைந்த போது, அவர்களது —பூகோளரீதியாக இணைக்கப்பட்ட வாகன நிறுவன— தொழில் முனைவோரிடம் இருந்து கொடூரமான எதிர்ப்பையே எதிர்கொண்டனர். இரண்டு வழக்குகளிலுமே அரசு, தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்கை தொடர்வதிலும், தொழிலாளர் எதிர்ப்பிற்கு தலைமைவகித்த தொழிலாளர்களுக்கு காட்டுமிராண்டித்தனமான வகையில் சட்டரீதியான தண்டனை கிடைக்கச் செய்வதிலும் நிறுவன நிர்வாகத்துடன் கைகோர்த்து வேலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சோசலிச வலைத் தளம், மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு பற்றி ஒரு விரிவான செய்தி வெளியீட்டை வழங்கியுள்ளதுடன், மாருதி சுசூகி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் அனைத்து 12 நிர்வாக உறுப்பினர்களும் உட்பட 13 தொழிலாளர்களின் உடனடி விடுதலைக்காக போராட உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்ட ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. இவர்கள், மனிதவள மேலாளர் அவினேஷ் தேவ் மூச்சுத்திணறலினால் மரணமடைந்ததற்கு அநியாயமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களாவர். (பார்க்கவும்: “The frame-up of the Maruti Suzuki workers—Part 1: A travesty of justice”)

தேவின் வழக்கைப் போலவே, ஜோர்ஜின் வழக்கும் ஒரு புதிய தொழிற்சங்கத்தை கட்டியெழுப்ப முன்னின்று போராடிய தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே நிறுவனம் மற்றும் பொலிசாரால் பயன்படுத்தப்பட்டது. மேலும் மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடயத்தைப் போலவே, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்தால் கோரப்படும் மலிவுகூலி உழைப்பு நிலைமைகளை திணிப்பதற்குமாக நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட இந்திய அதிகாரிகள், தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்கினை தொடர்வதில் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

1970 களில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனமாக பிரைக்கோல் தொடங்கப்பட்டு, தற்போது இந்தியாவில் ஆறு ஆலைகளைக் கொண்டுள்ளது, அதுவும் பழிவாங்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்கள் வேலை செய்துவந்த மானேசரில் உட்பட, வாகனங்கள், ட்ரக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வேண்டிய பரந்தளவிலான உதிரி பாகங்களை உற்பத்தி செய்கின்றன. இது பிரேசில் மற்றும் இந்தோனேஷியாவிலும் ஆலைகளைக் கொண்டுள்ளது, மேலும் 5,500 பேர் கொண்ட மொத்த உலகளாவிய தொழிலாளர் சக்தியுடன் அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் உலகெங்கிலுமாக வர்த்தக அலுவலகங்களையும் கொண்டுள்ளது.    

பிரைக்கோல் குறைந்தபட்ச ஊதியத்திற்காக முதுகை முறிக்கும் வேலை ஆட்சிமுறையை திணிப்பதில் நியாயமான ஒரு நற்பெயரை சம்பாதித்து வைத்துள்ளது. 2007 இல், நிர்வாகத்திற்கு சவாலாக கோயம்புத்தூர் தொழிலாளர்கள் அணிதிரள தொடங்கிய போது, 25 வருடங்கள் அனுபவமிக்க ஒரு தொழிலாளி மாதத்திற்கு 8,600 ரூபாயை. அல்லது வெறும் 215 டாலரை மட்டும் சம்பாதித்து வந்தார். இப்போது, பிரைக்கோல் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலமாக பணியாற்றிவரும் தொழிலாளர் ஒருவர் 25,000 ரூபாயை, அல்லது 390 டாலரை மாத ஊதியமாக பெறுவதாக கூறப்படுகிறது, இது பணவீக்கம் காரணமாக ஒரு சிறிய முன்னேற்றத்தை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறது.

இங்கு பல தொழிலாளர்கள் தொழில் பயிற்சிபெறுபவர்களாக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அதாவது அவர்கள். முழு நேர ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை மட்டுமே சம்பாதிக்கின்றனர்.

இந்தியா முழுவதிலுமே இத்தகைய நிலைமைகள் இயல்பான ஒன்றாகவே காணப்படுகின்றன. இவையனைத்திற்கும் மேலாக, நிறுவனங்கள் உற்பத்தி ஒதுக்கீடு, வருகை மற்றும் பிற வேலை விதிகளை, கடும் அபராதங்கள், பணி இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றுடன் செயல்படுத்துகின்றன. பிரைக்கோல் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இழிபுகழ் பெற்றதாகும்.

இதனை பின்வாங்கச் செய்ய கோயம்புத்தூர் தொழிலாளர்கள், நிர்வாகத்துடன் ஏற்கனவே இணைந்திருந்த தொழிற்சங்கங்களுக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியில் போராளி நடவடிக்கைகளுடனான ஒரு நீடித்த பிரச்சாரத்தை அரங்கேற்றியதுடன் அவர்கள் ஒரு சிறிய தொழிற்சங்க கூட்டமைப்பான AICCTU இன் பக்கம் திரும்பினர், அது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை உடன் இணைந்தது, பின்குறிப்பிட்டது ஒரு மாவோயிச அமைப்பாகும், அது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்துடன் பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே ஒருங்கிணைந்திருந்த CPM மற்றும் CPI போன்ற பிரதான ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளுடனான கூட்டணியுடன் சேர்ந்து அதிகரித்தளவில் செயலாற்றி வருகிறது.

ஜோர்ஜ் கொலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரைக்கோல் நிறுவனம் தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு மிரட்டல் பிரச்சாரத்தின் மூலம் முறியடிக்க முனைந்தது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன், 150 க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணிநீக்கமும் செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் அவர்களது புதிய AICCTU உடன் இணைந்த தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் வரையிலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிறுவனம் மறுத்துவிட்டது, மற்றும் உயர்மட்ட தொழிற்சங்க அலுவலகப் பொறுப்பாளர்களை கிட்டத்தட்ட ஆயிரம் மயில்களுக்கு அப்பாலுள்ள அதன் உத்தர்கண்ட் ஆலைக்கு நிறுவனம் இடமாற்றம் செய்தது, நிர்வாகமும் ஆலைகளை மூடப்போவதாக அச்சுறுத்தியதுடன், 40 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சந்தர்ப்பங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் பொலிஸூடன் இணைந்து வேலை செய்தது.

தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி இதற்கு பதிலிறுத்தனர். இது, பெரும் பேரணிகள், அரசாங்கத்திடம் மனுக்கள் அளித்தல், மற்றும் பல மணிநேரங்களுக்கு தொடர்ச்சியாக ஆலைகளை ஆக்கிரமித்து “உள்ளிருப்பு” போராட்டங்களை அவர்கள் நடத்தியது ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களின் “உள்ளிருப்பு” போராட்டத்தின்போது  தொழிலாளர்களை கடுமையாக தாக்கி வெளியேற்றுவதற்காக பொலிஸ் உள்நுழைய முயன்றனர் அப்போது பெண் தொழிலாளர்கள் தங்கள் மீது பெட்ரோல் (gasoline) மற்றும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொள்ளப் போவதாக மிரட்டினர்.

பிரைக்கோல் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட வழக்கு தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்பட்டால் அது நிற்காது. அதேபோல், 27 பேர்களில் வெறும் 2 பேருக்கு எதிராக மட்டுமே குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அந்த 27 பேரும்,  ஜோர்ஜை கொலை செய்வதற்காக ஒரு குற்றவியல் சதியில் நுழைந்ததாக பொலிஸூம் வாதித்தரப்பும் வாதிட்டனர்.

ஜோர்ஜை கொலை செய்வதற்காக சில குற்றவாளிகள் உலோகத் தடிகளைக் கொண்டு தாக்கியதை CCTV பதிவுகள் காட்டுவதாக பொலிஸூம் வாதித்தரப்பும் கூறுகின்றனர். ஆனால், அவர்களால் இத்தகைய ஒளிக்காட்சி பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலையில், உண்மையில் CCTV சரியாக செயல்படவில்லை என்பதாக அவர்கள் கூறிவிட்டனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட எட்டு உலோகத் தடிகள் ஆதாரங்களாக பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் எதன் மீதும் ஜோர்ஜின் இரத்தம் காணப்படவில்லை என்பதுடன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருடனும் தடயவியல் அடையாளங்களும் ஒத்துப்போகவில்லை.

ஜோர்ஜின் உடம்பில் எட்டு காயங்கள் ஏற்பட்டிருந்ததால், அவர் மீதான இந்த தாக்குதலில் எட்டு உலோகத் தடிகள் கண்டிப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதில் எட்டு நபர்களும் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் அரசு வாதிட்டது. இத்தகைய அனுமானங்களுக்கு அங்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது மட்டுமல்லாமல், ஜோர்ஜின் உடம்பு வெறும் மூன்று காயங்களால் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்ததென பிரேத பரிசோதனை அறிக்கையும் காட்டியது.

தாக்குதலை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் வாதித்தரப்பு சாட்சியங்கள், ஜோர்ஜ் மீதான தாக்குதலில் சம்பந்தப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை அடையாளம் காணவோ அல்லது சரியாக அடையாளம் காணவோ மீண்டும் மீண்டும் தவறியது. 

பொலிஸ் முதல் தகவல் அறிக்கையிலும் (First Information report) கூடுதல் தொழிலாளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு குறுக்கீடு செய்யப்பட்டது.

மணிவண்ணன் மற்றும் இராமமூர்த்தி ஆகிய இருவரையும் இவ்வழக்கில் சம்பந்தப்படுத்திய ஒரு பிரைக்கோல் அதிகாரி அளித்த சாட்சியத்தின் பெரும்பகுதி நம்பத்தகுந்தது இல்லை என அவற்றை  நீதிமன்றம் நிராகரித்தது.

செப்டம்பர் 21, 2009 அன்று காலையில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ள அதே நேரத்தில் மனிதவளத் துறை அலுவலகத்திற்கு வெளியே ஒரு விசாரணை அதிகாரி இருந்தார் ஆனால் அவர் எதையும் கேட்கவோ பார்க்கவோ இல்லையென கூறுவது இவ்வழக்கின் மிகவும் ஆர்வமூட்டும் அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

மேலும், பிற்பகல் நேரத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரையிலும் ஜோர்ஜூம் நான்கு ஏனைய நிறுவன அதிகாரிகளும் தாக்கப்பட்டார்கள் என்பதை கம்பனி அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்கவில்லை அத்துடன் அந்த ஆலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள ஆயுதம் தரித்த ரிசர்வ் பொலிஸ் பிரிவுக்கு அல்லது உள்ளூர் பொலிஸ் நிலையத்திலுள்ள எவருக்குமே தெரிவிக்கவில்லை.

ஜோர்ஜின் மரணத்துடன் தவறாக சம்பந்தப்படுத்தப்பட்ட பிரைக்கோல் தொழிலாளர்கள், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் விளைவை எதிர்நோக்கி நீண்ட காலங்களுக்கு சிறையில் காத்திருப்பது உட்பட மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சென்ற பின்னர் தான், முதல் விசாரணையின் தீர்ப்பு 2015 இல் வழங்கப்பட்டது. இந்த சோதனைக்குரிய காலத்தின்போது, ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், அவரைப் போலவே இன்னொருவரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றனர்

 [22 February 2018]