ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකාවේ යුද්ධය තුල දී අතුරුදහන් වුවන්ගේ ඥාතීන් ජනාධිපතිට විරෝධතාව පලකරයි

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்

By our correspondents 
23 March 2018

இலங்கையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டு மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த மார்ச் 20 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென். பற்றிக்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்க யாழ்ப்பாணம் சென்றபோது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம், கானாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் போன ஒரு தொகை உறவினர்களின் படங்களையும், “மைத்திரியே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் சொல்!, அரசியல் கைதிகளை விடுதலை செய்!, இராணுவத்தை விசாரணை செய்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?,” போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

சென். பற்றிக்ஸ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களே இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போரின் முடிவில் இந்தக் கல்லூரியின் அதிபரான கத்தோலிக்க பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப்பும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். இராணுவத்திடம் சரணடைந்த அவர் எங்கே என மாணவர்கள் கேட்டனர்.

பொலிசார் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக அங்கிருந்து மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதியை சந்திக்க கல்லூரிக்குள் அனுப்பினர். ஆனால் சிறிசேன அவர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டார். இதனால் சீற்றமடைந்த போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டனர். தாய்மார், பெண்கள் மற்றும் முதியவர்களை பொலிசார் வீதியை விட்டு ஓரத்தில் தள்ள நடவடிக்கை எடுத்தனர்.

கல்லூரி விழாவில் உரையாற்றிய சிறிசேன, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்கியுள்ளோம், அதற்கான குழுவொன்றையும் உருவாக்கியுள்ளோம். அவர்கள் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். அதனால் காணாமல் போனவர்கள் பற்றி இப்போது நான் அதிகம் பேச விரும்பவில்லை,” என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுவதாக சிறிசேன கூறும் கதை மோசடியானதாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலவலகம் ஒன்றை அமைப்பதற்கான மசோதா 2016ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது. எனினும் அலுவலகம் 2017 ஜூலையிலேயே அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரி முடிவிலேயே ஜனாதிபதி சிறிசேன அதற்கான அலுவலர்களை தெரிவு செய்தார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாத யுத்தம், 2009 மே மாதம் மஹிந்த இராஜபக்ஷ அரசினால் கொடூரமான இராணுவத் தாக்குதல் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. போரின் கடைசி வாரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் அதிகம் என ஐ.நா. மனித உரிமைப் பேரவை அறிக்கை கூறுகின்றது. போரின்போது பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டு, சரண்டைந்த மற்றும் உறவினர்களால் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பற்றிய தகவல்களை இராஜபக்ஷ அரசைப் போலவே தற்போதைய அரசாங்கமும் வழங்க மறுத்து வருகின்றது.

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்குதல்கள் நடந்தன. அவ்வாறு கானாமல் போனவர்கள் சிலர் பின்னர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். சிலர் பத்துலட்சக் கணக்கில் பணம் கறக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.) ஆகியவற்றின் கீழ் இயங்கிய துணைப் படைக் குழுக்களும் உடந்தையாக இருந்தமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

கானாமல் போயுள்ள தமது அன்புக்குரியவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பும் போராட்டக்காரர்கள், அவர்களை தமக்கு காட்டும்படியும், அவர்கள் உயிருடன் இல்லை எனில் அதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும், என்றும் கோருகின்றனர். 

2015ல் ஆட்சிக்கு வந்த சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், தமது மூலோபாயத்துக்கு ஏற்ற வகையில் கொழும்பின் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொண்டு, சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராஜதந்திர மற்றும் இராணுவத் திட்டங்களுடன் அணிசேர்ந்துகொண்டதுடன், இலங்கையில் யுத்தக் குற்றங்கள் பற்றி தூக்கிப்பிடிக்கப்பட்ட அக்கறையை அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகளும் கிடப்பில் போட்டுவிட்டன.

தமிழ் மக்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் கட்சிகளும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக, நேரடியாக ஒத்துழைத்தன. அமெரிக்க மூலோபாயக் கொள்கையுடன் அணிசேர்ந்துகொண்டு, தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களுக்காக முன்நிற்பதைத் தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்லது ஜனநாயக உரிமைகள் பற்றியோ இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் இந்த பிற்போக்கு கொள்கைகள் சம்பந்தமாக கடும் கோபம் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகின்றது. இந்தக் கட்சிகளுக்கு வெளியில் இருந்தே கடந்த ஆண்டு பெப்பிரவரி முதல் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான தமது பிரச்சாரத்தை தொடங்கினர். பெப்பிரவரி 24 அன்று வவுனியாவில் போராட்டம் நடத்திய போது, அவர்கள் தமிழ் கட்சிகள் சம்பந்தமாக தமது கோபத்தை வெளிப்படுத்த முடிவு செய்தனர். அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைவர் ஆர். சம்பந்தன், கூட்டமைப்பின் இன்னொரு தலைவர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரது உருவப் பொம்மைகளுக்கு செருப்பால் அடித்து கொடும்பாவி எரித்தனர்.

ராஜபக்ஷ ஆட்சியைப் போலவே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் ஏகாதிபத்திய சக்திகளினதும் தமிழ் முதலாளித்துவ கட்சிகளதும் ஒத்துழைப்புடன் யுத்தக் குற்றங்களை மூடிமறைக்க நடவடிக்கை எடுக்கின்றது. இராணுவத்தினரைப் பாதுகாத்தல் என்ற பெயரில், போர்க் குற்றங்கள் சம்பந்தமாக பாதுகாப்பு படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்க அரசாங்கம் முன்நிற்பதோடு “போர் வீரர்களை” அதாவது இராணுவத்தை முழுமூச்சில் பாதுகாப்பதாக சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் மீண்டும் மீண்டும் சபதம் செய்துகொள்கின்றனர்.

கடந்த 7ம் திகதி, வலுகட்டாயமாக காணாமல் போவதிலிருந்து ஆட்களைப் பாதுகாக்கும் சட்டம் ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அரசாங்கத்தின் மோசடியை மூடி மறைக்கவும் இனவாதத்தை கிளறிவிடுவதற்குமாக, இது “போர்வீரர்களை” வேட்டையாடும் மற்றும் காட்டிக்கொடுக்கும் மசோதா என இராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியினர் கூச்சலிடுகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் இந்த மாதம் இடம்பெறுகின்ற நிலையில், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கலந்துரையாடல்களை தனக்கு சாதகமாக திருப்பிக்கொள்ளும் சிடுமூஞ்சித்தனமான முயற்சியாக, சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு நிர்வாகிகளை நியமித்தமை ஒரு மோசடியாகும்.

பெப்ரவரி 3 இல், கிழக்கில் திருகோணமலையில் தமது போராட்டத்தின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னெடுத்திருந்தபோது, திருகோணமலை காணாமல் போன உறவுகளின் சங்கத் தலைவி நாகேந்திரன் ஆஷா, ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: “அரசின் காணாமல் போனோர் அலுவலகம் ஓர் ஏமாற்று வித்தை, அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றலாம் ஆனால் எம்மை ஏமாற்ற முடியாது, நாம் அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து போயுள்ளோம்.”

பெப்ரவரி 5 அன்று யாழ்ப்பாணம் வந்திருந்த சிறிசேன, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கைகழுவிக்கொள்ளும் வகையில் பின்வருமாறு தெரிவித்தார்: இலங்கை முழுவதும் தேடிவிட்டேன். அவர்கள் எங்கும் இல்லை. அத்துடன் எந்தவித இரகசிய தடுப்பு முகாம்களும் இலங்கையில் இல்லை, என்றார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் உள்ளது. எனவே அவர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் இழப்பீடுகளையே எம்மால் வழங்கமுடியும்.”

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டுள்ள தமிழ் கட்சிகள் சார்ந்த பகுதியினர், மத குருமார், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஐ.நா. சபைக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற மாயையை பரப்புகின்றனர்.

எனினும், அத்தகைய வேண்டுகோள்களின் மூலம் எந்தப் பயனும் இல்லை என்பதையே பல ஆண்டுகால அனுபவங்கள் நிரூபித்துள்ளன. 20 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடும் சத்தியநாதன், “அமெரிக்காவும் ஐ.நா வும் இலங்கை அரசாங்கத்தை தங்களது தேவைக்காகத்தான் பாவிக்கின்றார்கள், இலங்கை மக்களது நலன்களிலோ அல்லது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சனைகளிலோ அவர்களுக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “இப்போது பாருங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறித்திரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு அரசாங்கத்தை பாதுகாக்கின்றனர். எங்களது பிரச்சனையில் அவர்களுக்கு அக்கறையில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் கையெடுத்துக் கும்பிட்டபடி வீடுவீடாக வருவர். அடுத்த தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை சேர்த்துவைத்துள்ளனர்.”

அவருடன் இன்னொருவரும் இணைந்துகொண்டார்: “யுத்தம் முடிவடைந்த காலம் முதல் நாங்கள் போராடி வருகின்றோம் இவ்வளவு காலமும் எமது பிரச்சனையை தீர்க்க முடியாத ஐ.நா. இனியும் எமது பிரச்சனையை தீர்க்கும் என்று எமக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் போராடுவது எங்கள் பிள்ளைகள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே. ஆனால் இங்கே எங்களது போராட்டத்தை தங்களது நலன்களுக்காகவே எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்.”

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்த இன்னொரு போராட்டக்காரர் கூறியதாவது: “நாம் அரசாங்கத்தின் மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து இவ்வளவு காலமாக போராடிக்கொண்டிருந்தோம். நாங்கள்தான் இவர்களுக்கு வாக்களித்தோம். ஆனால் இவர்கள் எமது பிரச்சனைகளை தீர்க்க கடந்த ஒரு வருடமாக எந்த விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அரசாங்கத்தை நம்புங்கள், அவர்கள் எமது பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என்றும் நாங்கள் உங்களது பிரச்சனைகளை பேசிக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நீண்ட காலமாக எங்களை ஏமாற்றிக்கொண்டு பதவிகளில் மட்டுமே உள்ளனர்.”

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தைச் சேர்ந்த இராசலிங்கம் 22 மற்றும் 25 வயதில் காணாமல் போன தனது இரண்டு மகன்களைத் தேடுகின்றார். அவர் கூறியதாவது: இங்கு நடந்த அழிவுகள் முதற்கொண்டு எல்லாம் அவர்களுக்கு (ஐ.நா.வுக்கு) தெரியும். இதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கைப்புண்ணை பார்ப்பதற்கு கண்ணாடி எதற்கு? ஆனாலும் அவர்கள் வாய் மூடி மௌனிகளாகவே இருந்தனர். தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனையை பாருங்கள் கண்டியில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அரசாங்கத்தின், பொலிசின் மற்றும் எதிர்க் கட்சிக்கும் தெரியவே நடக்கின்றது.”