ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Stalinists at loggerheads over what right-wing course to follow

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் எந்த வலதுசாரி போக்கை பின்பற்றுவது என்பது குறித்து மோதிக்கொள்கின்றனர்

By Deepal Jayasekera and Keith Jones 
18 April 2018

ஆழமாக பிளவுபட்டுள்ள, இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஹைதராபாத்தில் இன்று தொடங்குகின்ற மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் அக்கட்சியின் மாநாட்டிற்குள் நுழைகிறது.

தொழிலாள வர்க்க நலன்கள் குறித்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது இந்த வேறுபாடுகள் முக்கியத்துவமற்றவையே. இந்நிலையில், அவர்கள் இரண்டு வலதுசாரி அரசியல் போக்குகளை பின்பற்றுவதையேச் சுற்றி வருகின்றனர், அதிலும் குறிப்பாக, சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் முன்னுரிமை பெற்ற அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் வெளிப்படையாக எப்படி இணைவது என்பது பற்றியே மும்முரமாக உள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரைப் போன்றே, இந்திய முதலாளித்துவ வர்க்கமும், பிற்போக்குவாத, இராணுவவாத மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளை தழுவி நிற்கும் வலதை நோக்கியே தீவிரமடைந்து வருகின்றது.

2014 இல் அது, தொழிலாளர் விரோத நவதாராளவாத சீர்திருத்தத்தை தீவிரப்படுத்தவும், மற்றும் உலக அரங்கில் அதன் வல்லரசாகும் இலட்சியங்களை இன்னும் கடுமையாக முன்னெடுக்கவும் நோக்கம் கொண்டு, நரேந்திர மோடியையும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியையும் (BJP) அதிகாரத்திற்கு கொண்டுவந்தது.

பெருவணிக நிறுவனங்களிடம் இருந்து உற்சாகமிக்க வரவேற்பை பெறும் நோக்கில், பிஜேபி அரசாங்கம், சமூக செலவின வெட்டுக்களை செய்துள்ளது, அதிகரித்தளவில் முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளது (தனியார்மயமாக்கல்), சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நெறிமுறைகளை நீக்கியுள்ளது, மேலும் இந்து வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை தூண்டுகின்ற அதே வேளையில், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாகவும் மாற்றியுள்ளது.

நான்கு ஆண்டுகளாகவே, அங்கு அரசாங்கத்தின் மீது தொழிலாளிகளும் உழைப்பாளிகளும் கொண்டுள்ள எதிர்ப்புக்கு ஒரு பரந்த ஆதரவு அலை நிலவுகிறது, அதாவது, ஒரு கால் நூற்றாண்டிற்கும் அதிகமாக பின்பற்றப்பட்டுவரும் “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தத்தின் பேரழிவுகர விளைவாக கருதப்படுகின்ற மிகப்பெருமளவிலான வேலையின்மை, நீடித்த வறுமை, மற்றும் பரந்த சமூக சமத்துவமின்மை போன்றவற்றின் மீதான பரந்தளவிலான எதிர்ப்பாகவே அதைக் கூறவேண்டும்.

இவ்வாறாக உக்கிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்திற்கு பதிலிறுக்கும் வகையில் ஸ்ராலினிஸ்டுகள், நீதிமன்றங்களும், முதலாளித்துவ அடக்குமுறை எந்திரத்தின் பிற பகுதிகளும் வகுப்புவாத பிற்போக்குக்கு எதிரான போராட்டத்தில் அரண்களாக இருக்க முடியும் எனக் கூறி, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுடனும் மற்றும் அரசுடனும் சேர்த்து முடிச்சுப்போடும்  அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளனர்.

கட்சியின் பொது செயலாளரான சீதாராம் யெச்சூரி தலைமையிலான ஒரு கன்னை, 2019 தேர்தல்களில் காங்கிரஸ் உடனான ஒரு “புரிதலை” ஆதரிக்கிறது என்பதுடன், முன்னாள் பிஜேபி கூட்டாளிகள் உட்பட, பல்வேறு சாதிய மற்றும் பிராந்தியக் கட்சிகளுடனும் வெளிப்படையான கூட்டணிகளை வைத்துக்கொள்ள  விரும்புகிறது.

இதனுடன் போட்டியிடும் கன்னை யெச்சூரியின் முன்னோடி பிரகாஷ் காரத் தலைமையிலானது. இது, “பிராந்திய முதலாளித்துவ கட்சிகளாக” குணாம்சப்படுத்தப்படும் கட்சிகளையும் உள்ளடக்கி, “அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டுவதன்” மூலம் “பிஜேபி அரசாங்கத்தை தோற்கடிப்பதே பிரதான பணி” என்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி உடனான தேர்தலுக்கு முந்தைய எந்தவொரு “புரிதல் அல்லது தேர்தல் கூட்டணியை”  எதிர்க்கிறது.

இந்திய ஊடகங்கள், ஒரு உறுதிப்பாடுள்ள “காங்கிரஸ் எதிர்ப்பு” கன்னையின் தலைவராக காரத்தை சித்தரித்து வருகின்றன. ஆனால் அதன் மீதான அடையாளத்திற்கு முற்றிலும் பொருந்தாதாக அது உள்ளது. பிஜேபி ஆட்சிக்கு மீண்டும் திரும்புவதை தடுப்பதற்கு தேவைப்பட்டால், வாக்குகள் எண்ணப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கத்தையே சிபிஎம் விரும்பும், அது கட்சியின் பொதுச் செயலாளராக காரத் இருந்தபோது முதல் மூன்று ஆண்டுகளில் சிபிஎம் நடந்து கொண்டதைப் போன்றதாக இருக்கும்.

அல்லது, காரத்தும் அவரது ஆதரவாளர்களும் தெளிவுபடுத்தியது போல், காங்கிரஸ் கட்சியுடன் பெயரளவிலான கூட்டணி எதையும் சிபிஎம் வைத்துக்கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில், காங்கிரஸூடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகம் (DMK) போன்ற கட்சிகளுடன், சிபிஎம்  தேர்தல் கூட்டணிகள் உருவாக்குவதை அவர்கள் எதிர்க்கவில்லை.

இரு பிரிவினருக்கும் இடையேயான வேறுபாடுகள் எவ்வளவு குறுகியவை என்பது, சிபிஎம் இன் வாராந்திர ஆங்கில மொழி இதழான People’s Democracy இன் மார்ச் 25 தேதிய வெளியீட்டில் காரத் எழுதிய தலையங்கம் மூலம் நிரூபிக்கப்பட்டது. இது, “பிஜேபி அல்லாத எந்தவொரு கட்சியுடனும்” என்ற ஒரு தேர்தல் மூலோபாயத்திற்கு தீவிரமாக அழைப்பு விடுத்தது, அதன்படி, பிஜேபி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகளை தோற்கடிப்பதற்கு சிறந்த வழியாக அந்தந்த மாநிலத்தில் அதனை எதிர்க்கும் எந்தவொரு கட்சியானாலும் அதனை ஆதரிப்பதன் மூலமாக “பிஜேபி விரோத வாக்குகளை மொத்தமாக சேகரிப்பதற்கு” சிபிஎம் உதவும். மேலும், “நவதாராளவாத” காங்கிரஸ் உடனான தேர்தல் “கூட்டணி அல்லது புரிதல்” குறித்து அவரது எதிர்ப்பை பலமுறை வெளிப்படுத்துகின்ற போதிலும், காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களிலெல்லாம் அதனுடனான கூட்டணி அமைக்கவும் இது பொருந்துவதாக இருக்கும் என்ற சிபிஎம் இன் “வாக்கு சேகரிப்பு” கொள்கையையும் காரத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு சில நாட்களுக்குப் பின்னர், சிபிஎம் இன் மத்தியக் குழு இதன் கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்தியது. இது, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில், மே 12 இல் நடத்தப்படவுள்ள மாநிலத் தேர்தல்களில் குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் பிஜேபி வேட்பாளரை விட பெரும்பாலும் மிகுந்த வாய்ப்புள்ள வேட்பாளர் எவரோ அவருக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தியது.

சிபிஎம், செங்கொடிகளை அசைத்தும், எப்போதாவது ஒரு “சோசலிச” எதிர்காலத்தைப் பற்றி உரத்த குரலெழுப்பும் அதேவேளை, அது இந்திய அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக பல தசாப்தங்களாக செயல்பட்டு வந்துள்ளது.

இரண்டு தசாப்தங்களாக, 1989 முதல் 2008 வரை, சிபிஎம் மும் அதன் இடது முன்னணியும் ஒரு தொடர்ச்சியான வலதுசாரி இந்திய அரசாங்கங்களை தக்க வைத்தன, அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் தலைமையிலானவையே. இந்திய முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசு தலைமையிலான அபிவிருத்தித் திட்டத்தின் கடும் வீழ்ச்சியுடன், 1991 இல் தொடங்கி இந்த அரசாங்கங்கள், பூகோள மூலதனத்திற்கு மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றும் மற்றும் வாஷிங்டன் உடன் முன்னெப்போதும் கொண்டிராத வகையிலான உறவுகளை முன்னெடுக்கும் வகையிலான இந்திய முதலாளித்துவத்தின் புதிய திட்ட நிரலை அமுல்படுத்தின.

இரண்டு கன்னைகளுமே இந்த சாதனையை பாதுகாக்கின்றன, அத்துடன் கடந்த கால் நூற்றாண்டாக சிபிஎம் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில், வெளிப்படையாக அவர்கள் குறிப்பிடும் “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை திணிப்பதையும் பாதுகாத்தனர்.

ஒரு நீலக்கடல் கடற்படை மற்றும் அணுவாயுத முத்தொகுதி ஆகியவற்றின் அபிவிருத்தி மூலமாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய இராணுவத்தின் மிகப் பெருமளவிலான விரிவாக்கம் உட்பட, இந்திய ஆளும் வர்க்கத்தின் வல்லரசாகும் அபிலாஷைகள் மீது சிபிஎம் காட்டும் ஆதரவிலும் எந்தவித வேறுபாடுகளையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.

மேலும், யெச்சூரி மற்றும் காரத்தின் கன்னைகள் ஒரு போலித்தனமான ஏகாதிபத்திய எதிர்ப்பை ஊக்குவிப்பதிலும் ஒற்றுமையாக உள்ளன. வாஷிங்டன் உடனான இந்திய முதலாளித்துவத்தின் இராணுவ-மூலோபாய கூட்டாண்மைக்கும், மற்றும் எப்போதும் அதிகரித்து வரும் போர் அபாயத்திற்கும் எதிரான ஒரு உலக சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தியை அவர்கள் மாற்றாக முன்வைக்கவில்லை, ஆனால், “பன்னாட்டு உலக ஒழுங்கிற்கும்” மற்றும் இந்திய உயரடுக்கு அதன் “மூலோபாய சுயாட்சி” ஐ உறுதிபடுத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது, எனவே, அது தனது சொந்த சூறையாடும் நலன்களை இன்னும் சுதந்திரமாக தொடர முடியும்.

இருப்பினும், இரு கன்னைகளும் நீண்டகால மோதல்களில் உள்ளன. உண்மையில், அதனால் தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் கசப்புடன் அவர்கள் பிளவுபட்டு இருந்தனர், எக்கணமும் பிளவு ஏற்படலாம் என்பதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாமல் இருந்தது.

இந்த வாரம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டிய அவரது முக்கிய அரசியல் தீர்மானத்தை மத்திய குழு நிராகரித்து, காரத் சமர்ப்பித்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், கட்சித் தலைவராக தனது இராஜினாமாவை யெச்சூரி ஜனவரியில் முறையாக அறிவித்தார்.

கட்சி தலைமையின் உத்திரவின் பேரில், அவரது பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு யெச்சூரி ஒப்புக்கொண்டார். ஆனால், அவரும் அவரது ஆதரவாளர்களும், இந்த வாரம் மாநாட்டில் காரத் பிரிவின் “தந்திரோபாய வழி” யை முறியடிக்கும் அவர்களது உரிமையை நிலைநாட்டுவர் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்தி ஊடக அறிக்கைகளின் படி, ஐம்பதிற்கும் மேலான பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஏழாயிரத்திற்கும் மேலான திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிக எண்ணிக்கையிலான திருத்தங்களுக்கான காரணமாக, அவை கட்சி தலைமைக்குள் இருக்கின்ற கொள்கை பிளவையே நேரடியாக சார்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

2015 இல் நடந்த கட்சியின் கடைசி மாநாட்டின் போதுதான் பொதுச் செயலாளர் பதவியை யெச்சூரி ஏற்றார் என்றாலும், மீண்டும் அவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை சவால் செய்யவும் காரத் பிரிவு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மத்திய குழு தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் என்பதுடன், மாநாட்டின் முடிவில் அது அறிவிக்கப்படும்.

ஆழ்ந்த கோஷ்டி பிளவுகளின் பின்னணியில் கட்சிக்கான தேர்தல் ஆதரவில் ஒரு பெரும் இழப்பு உள்ளது, அதற்கு காரணம், இக்கட்சி ஆட்சி அமைத்த மாநிலங்களில் வலதுசாரி கொள்கைகளை அது அமுல்படுத்தியது மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கங்கள் உடன் அது கொண்டிருந்த நெருங்கிய அடையாளம், மற்றும் இந்திய அரசியல் ஸ்தாபகத்திற்குள் அதற்கு இருக்கும் செல்வாக்கு போன்றவற்றின் விளைவுகள் தான்.

மிக சமீபத்தில் 2009 வரையிலும், இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய சக்தியாக சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி இருந்தது, மற்றும் 1977 முதல் ஆட்சி அமைத்திருந்த மேற்கு வங்கம் உட்பட மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்தது.

தற்போது, அதற்கு தேசிய பாராளுமன்றத்தின் மேல் சபையில் ஒரு டசினுக்கும் குறைவான இடங்கள் தான் உள்ளது, மேலும் கேரள மாநிலத்தில் மட்டுமே அரசாங்கம் அமைத்துள்ளது.

மேற்கு வங்கத்தை தளமாகக் கொண்ட யெச்சூரி பிரிவு, அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே அதிகரித்துவரும் தேர்தல் துருவமுனைப்பின் காரணமாக, காங்கிரஸ் கட்சி உடன் வெளிப்படையான தேர்தல் கூட்டணி அமைக்காவிட்டால் 2019 தேர்தல்களில் அது துடைத்துக் கட்டப்படும் என்று அஞ்சுகிறது.

மற்றொரு புறம், கேரளாவை தளமாகக் கொண்ட காரத் பிரிவு, அம்மாநிலத்தில் இடது முன்னணியின் பிரதான எதிரியாக காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், அதனுடனான எந்தவொரு வெளிப்படையான சிபிஎம் இன் கூட்டணியோ அல்லது “புரிதலோ” அவர்களது வாய்ப்புகளை அங்கு சேதப்படுத்தும் என்று நம்புகிறது.

இத்தகைய முரண்பட்ட தேர்தல் கட்டாயங்களுக்கு மேலாக, சிபிஎம் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மைய அதிகாரத்துவத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய காரத் கன்னை, காங்கிரஸ் உடன் சிபிஎம் கூட்டணி அமைப்பதால் உழைக்கும் மக்களிடையே அது இன்னும் அதன் மதிப்பை இழக்க நேரிடும் என்பதுடன், இச்சூழ்நிலைகளின் கீழ் இடதை நோக்கிய ஒரு விரைவான மாற்றமும் நிகழக்கூடும் என்ற அதன் அச்சத்தை கொண்டுள்ளது. இது தொடர்பாக, ஜேர்மி கோர்பினின் பிரிட்டிஷ் தொழிற் கட்சி (இடது) க்கு, அதாவது சிக்கன நடவடிக்கை மற்றும் போரை எதிர்ப்பதற்கான அவருடைய கூற்றுக்களுக்கு இருந்த பெரும் ஆதரவை காரத் முன்னிலைப்படுத்திக் காட்டினார்.

அள்ளி வீசப்பட்ட அதன் இடது வாய் வீச்சுக்கள் சிதைக்கப்பட்ட நிலையில், சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் அரசியல் ரீதியாக திசைதிருப்புவதிலும் அவர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பதை இந்திய முதலாளித்துவத்திற்கு நிரூபிப்பதன் மூலமாக ஸ்ராலினிஸ்டுகள் அவர்களது செல்வாக்கை மீட்டெடுக்க முடியும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் “மக்களின் இயக்கங்களை” கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துமாறு சிபிஎம் க்கு காரத் அழைப்பு விடுக்கிறார்.

தொழிலாள வர்க்கத்திடையே பெருகிவரும் எதிர்ப்பு தொடர்பான ஸ்ராலினிஸ்டுகளின் உண்மையான அணுகுமுறை நன்றாக எடுத்துக்காட்டப்பட்டது எதில் என்றால் இந்தியாவின் பூகோள அளவில் இணைக்கப்பட்ட உற்பத்தி தொழில்களில் நிலவுகின்ற மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு சவாலாக இருந்ததற்காக, ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை அவர்கள் கைவிட்டதில் தான்.

இந்தியா முழுவதிலும் உள்ள வேலை வழங்குநர்கள் வழமையாக “மாருதி சுசூகி நிறுவனத்தில் நடந்ததை” சுட்டிக்காட்டி தொழிலாளர்களை அச்சுறுத்தவும் தொழிலாளர் எதிர்ப்பை ஒடுக்கவும் முனைகின்றனர் என்பது பொதுவாக தெரிந்த விஷயமாக இருந்தாலும் கூட, மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் அவர்களது முயற்சிகளை தொடர்வதாக, ஸ்ராலினிஸ்டுகளின் 50 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்மானம், மாருதி சுசூகி தொழிலாளர்கள் பற்றிய அல்லது அவர்களது நிலைமை பற்றிய எந்தவொரு குறிப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.