ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU foreign ministers push for regime change in Damascus following Syria attack

சிரிய தாக்குதலைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டமாஸ்கஸில் ஆட்சி மாற்றத்திற்கு அழுத்தமளிக்கின்றனர்

By Peter Schwarz
17 April 2018

சிரியா மீதான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் திங்களன்று ஓர் "அரசியல் தீர்வுக்கு" அழைப்புவிட்டனர். இப்போது பெரிதும் தோற்கடிக்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களின் உதவியோடு அவர்களால் எட்ட முடியாததை, அதாவது டமாஸ்கஸில் ஆட்சி மாற்றத்தை, ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் அழுத்தமளிப்பதன் மூலமாக செய்ய கருதுகின்றனர்.

சிரியா மீதான தாக்குதல் தெளிவாக சர்வதேச சட்டத்தை மீறியிருந்தது என்றபோதும், லுக்சம்பேர்க்கில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அக்கூட்டம் வெளிப்படையாகவே அதை ஆமோதித்தது. “சிரியாவில் இரசாயன ஆயுத ஆலைகள் மீது அமெரிக்கா, பிரெஞ்சு மற்றும் பிரிட்டனின் இலக்கு வைக்கப்பட்ட விமானத் தாக்குதல்களானது, சிரியாவின் ஆட்சி இரசாயன ஆயுதங்கள் மற்றும் இரசாயன பொருட்களை அதன் சொந்த மக்களைக் கொல்வதற்கான ஆயுதங்களாக மேற்கொண்டு பயன்படுத்துவதைத் தடுப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட பிரத்யேக நடவடிக்கைகளாக இருந்தன,” என்று ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம் அறிவித்தது. “இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாக கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் இக்குழு ஆதரவளிக்கிறது.”

அக்கூட்டத்தின் போது ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஹெய்கோ மாஸ் கூறுகையில், சிரிய அரசாங்கம் தவிர, அப்பிராந்தியத்தில் செல்வாக்கு கொண்டுள்ள ஒவ்வொரு நாடும் அரசியல் தீர்வில் ஈடுபட வேண்டும். ஆனால் தங்களின் சொந்த மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் எவரொருவரும் இத்தீர்வின் பாகமாக இருக்க முடியாது என்றவர் அறிவித்தார்.

ரஷ்யாவுக்கு தடுப்பதிகாரம் (வீட்டோ அதிகாரம்) இருப்பதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை சாசனங்களுக்கு உட்பட்ட ஒரு தீர்மானம் சாத்தியமில்லை, ஆகவே இப்போது வேறு வழியைப் பார்க்க வேண்டியுள்ளது என்று கூறுமளவுக்கு சென்றார், மாஸ். ஆனால் மாஸ்கோ இல்லாமல் சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஜேர்மன் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஸ்ரெபன் சைய்பேர்ட் பேர்லினில் இதே தொனியில் பேசினார். அவர் ஓர் இடைமருவு காலகட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை என்றாலும், “ஆகவே எங்களின் பார்வையில் அசாத் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஒரு நீண்டகால தீர்வு ஏற்படும்,” என்றவர் வலியுறுத்தினார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பல பிரெஞ்சு ஊடக அமைப்புகளில், ரஷ்யா மற்றும் துருக்கியை நோக்கிய ஒரு புதிய இராஜாங்க நடவடிக்கையின் மத்தியஸ்தராக அவர் சேவைகளை வழங்கினார். “ஒவ்வொருவரிடமும் பேசும்" பணியை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது என்றவர் தெரிவித்தார்.

“துல்லியமாக நடத்தப்பட்ட" அந்த விமானத் தாக்குதல்கள் ஒரு முழுமையான வெற்றி என்று மக்ரோன் பெருமைபீற்றினார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெற வேண்டாமென்றும், தாக்குதல்களை இரசாயன ஆயுத தளங்களோடு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நம்பச்செய்ததாக அவர் தெரிவித்தார்.

பேர்லின் மற்றும் பாரீஸின் கணக்கீடுகள் தெளிவாக உள்ளன. ஒரு சமரசத்தை எட்டுவதற்கு பல சந்தர்ப்பங்களில் தனது விருப்பத்தைச் சுட்டிக்காட்டியுள்ளவரும், அமெரிக்க தடையாணைகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சிரமங்களின் காரணமாக அதிகரித்த அழுத்தத்தின் கீழ் இருப்பவருமான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பின்னுக்கு வளைந்து கொடுப்பாரென அவை எதிர்பார்க்கின்றன.

ஆனால் மாஸ்கோ எவ்வாறு விடையிறுக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், இதுவும் சிரிய மோதலை மேற்கொண்டு தீவிரப்படுத்த மட்டுமே சேவையாற்றும். ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் உட்பட, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முன்னணி பிரதிநிதிகள், கடந்த 25 ஆண்டுகளாக போர் நடத்தி வந்துள்ள மத்திய கிழக்கில் வாஷிங்டன் அதன் சவாலுக்கிடமற்ற மேலாளுமையை மீண்டும் ஸ்தாபிக்கும் வரையில் அவர்கள் ஓயப்போவதில்லை என்பதை தெரியப்படுத்தி உள்ளனர்.

அப்பிராந்தியத்தின் முன்னாள் காலத்துவ சக்தியான பிரான்ஸூம், மற்றும் ஜேர்மனியும் திட்டவட்டமான ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுத்து வருகின்றன. டூமா விஷவாயு தாக்குதல் குறித்து கூறப்படுவதற்கு எந்த நம்பகமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்ற நிலையிலும், அது போரைத் தீவிரப்படுத்துவதற்கு வேண்டுமென்றே ஓர் ஆத்திரமூட்டலாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேலை அடுத்து வந்த மாஸ் ஐ விட அமெரிக்காவுக்கு அதிக விரோதமானவராகவும் அதிக ரஷ்ய-நட்புறவாளராகவும் பார்க்கப்படும் காப்ரியேலே கூட சமீபத்திய நாட்களில் கட்டுரைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சிரியா மோதலில் ஒரு கடுமையான போக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாளிதழ் Tagesspiegel இன் ஒரு கருத்துரை கட்டுரையில், சமூக ஜனநாயக கட்சியின் அந்த அரசியல்வாதி சமீபத்திய தாக்குதல்களை மிகவும் உவப்போடு புகழ்ந்து தள்ளினார். “அசாத் ஆட்சிக்கும் மற்றும் அவ்விதத்தில் அதுபோன்ற அதிகார மற்றும் இராணுவ கட்டமைப்பு முறைகளைக் கொண்ட மற்றவர்களுக்கும், நாங்கள் கண்டுகொள்ளாமல் விலகி நிற்க மாட்டோம், உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட,” அது "சரியானதும், அவசியமானதும்" ஆகும் என்றவர் எழுதினார்.

“மேற்கிடம் சிரியாவுக்கான ஒரு மூலோபாயம் இல்லை" என்று குறைகூறிய காப்ரியேல், இதை கொண்டு அவர் ஒரு பலமான இராணுவ தலையீட்டை அர்த்தப்படுத்துகிறார் என்பதை தெளிவாக்கினார். “ஏற்கனவே இந்த மோதலின் தொடக்கத்தில்,” “ஒட்டுமொத்த மேற்கும் —ஜேர்மனி மற்றும் ஐரோப்பா உட்பட— சிரிய இராணுவத்தின் மீது விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட ஒரு பகுதியைக் கொண்டு வர கூட தயாரிப்பு செய்து கொள்ளவில்லை,” என்று சாடினார்.

2011 இல், விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை ஏற்படுத்துவது என்பதுதான் ஒரு மூர்க்கமான அமெரிக்க-நேட்டோ வான்வழி போருக்கான மூடுமறைப்பாக இருந்தது, அப்போர் லிபியாவில் கடாபி ஆட்சியைத் தூக்கிவீசி, அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்து, முற்றிலுமாக அதை ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிபணிய செய்தது.

செயற்படாமல் இருந்தன் விளைவுகளை இப்போது ஐரோப்பா எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக காப்ரியேல் தொடர்ந்து குறிப்பிட்டார். “நாம் எப்போது தேவைப்பட்டோமோ, அப்போது நாம் அங்கே இல்லை. இன்று, மாமிச வெறியர்களின் உலகில், சைவ உணவினரான நம்மைப் பற்றி ஒருவரும் அக்கறைப்படவில்லை. நாம் மோதலின் பக்கவாட்டில் ஒதுங்கி நிற்கிறோம் ஏனென்றால் 'உலகை தூய்மைப்படுத்து, ஆனால் நனையாமல் தூய்மைப்படுத்து' என்ற மூலோபாயம், உள்நாட்டு போரின் பின்னரான விளைவுகளைக் கையாளும் பொறுப்பு ஐரோப்பியர்களாகிய நம் மீது தான் விழுந்தது... ஆனால் மோதலின் போக்கில் நம் செல்வாக்கு ஒன்றுமே இல்லை. என்ன செய்வதென்று துருக்கி மற்றும் பிரான்சின் ஜனாதிபதிகளுடனும் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரியுடனும் டொனால்ட் ட்ரம்ப் கலந்தாலோசித்த அதேவேளையில், எல்லோருக்கும் கடைசியாக கூட ஜேர்மன் அரசாங்கத்துடன் அவர் கலந்தாலோசிக்கவில்லை.”

வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஜேர்மனியின் வல்லரசு அபிலாஷைகளை மிகவும் ஆக்ரோஷமாக பின்தொடர்வதற்கு அறிவுறுத்திய காப்ரியேலுக்கு, அவர் என்ன பேசுகிறார் என்பது நன்றாகவே தெரியும். “அபாயத்திலிருந்து வெளி வருவதற்கு, பொதுவான பகுத்தறிவைப் பயன்படுத்தி, புதிய வழிகளைத் தேடுவதற்கு" “இந்த உலகின் சக்தி வாய்ந்தவராக" ஆக வேண்டுமென முறையிட்ட Carl-Friedrich von Weizsäcker அமைப்பின் அறிக்கையில் முதன்முதலில் கையெழுத்திட்டவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக ஓர் அணுஆயுத உலக போர் அபாயத்தை எச்சரிக்கிறது. “ஆயுதப்போட்டியின் மீள்வருகையுடன் சேர்ந்து, பிரதான சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்கள் மற்றும் இராணுவ மோதல்களின் ஒரு சகாப்தம் தொடங்கி [வருகிறது],” என்றது குறிப்பிடுகிறது. மரபார்ந்த ஆயுத தளவாடங்கள் மற்றும் அணுஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த ஆயுதமயமாக்கலின் உள்ளார்ந்த இயக்கவியல் "முன்பினும் நெருக்கமாக 'திரும்பவியலாத புள்ளிக்கு' நெருங்கி சென்று கொண்டிருக்கிறது, உண்மையிலேயே அதற்கு அப்பால் யாரும் துணிய முடியாது அல்லது அதற்கு அப்பால் செல்ல விரும்ப மாட்டார்கள்,” என்றது குறிப்பிடுகிறது.

“முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற கட்டமைப்புரீதியான காரணங்களில் எதுவுமே உண்மையில் தீர்க்கப்படவில்லை,” என்று அந்த அறிக்கை தொடர்கிறது. இதுவொரு குறிப்பிடத்தக்க ஒப்புதலாகும்.

துல்லியமாக இந்த கட்டமைப்புரீதியான காரணங்கள் என்பவை எவை? முதலாளித்துவம் அதன் ஏகாதிபத்திய கட்டத்திற்கு மாறுவது, ஏகபோகமயமாக்கல்களின் எழுச்சி, தொழில்துறை மூலதனம் மீது நிதி மூலதனத்தின் மேலாதிக்கம், இவற்றிலிருந்து விளையும் உலக மறுபங்கீட்டிற்கு பிரதான சக்திகளுக்கு இடையே போராட்டம் ஆகியவையாகும்.

முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போரில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, “பொதுவாக பகுத்தறிவைப் பயன்படுத்துவதன்" மூலம் போர் அபாயத்தைத் தடுத்துவிடலாம் என்ற கூற்று அர்த்தமற்றதாகும். இது இந்த அறிக்கையில் முதலில் கையெழுத்திட்டவர்களைக் காண்கையிலும் மறுத்தளிக்கப்படுகிறது, இவர்களில் சில கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் சேர்ந்து, இராணுவ மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முன்னணி நபர்கள் உள்ளடங்கி உள்ளனர்.

இந்த அறிக்கை, ஜேர்மன் இராணுவத்தின் முன்னாள் ஜெனரல் இன்ஸ்பெக்டர் மற்றும் நேட்டோ இராணுவக் குழு தலைவர் ஹரால்டு குஜத் ஆகியோரால் தொடங்கப்பட்டது. முன்னாள் SPD உள்துறை அமைச்சர் ஒட்டோ ஷல்லி, இராணுவ சஞ்சிகையான ஐரோப்பிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வறிக்கையின் பதிப்பாசிரியர் ஹார்ட்முட் பூல், வலதுசாரி தீவிரவாத வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, மற்றும் ஹேர்பேர்ட் குவாண்ட் BMW அமைப்பின் முன்னாள் தலைவர் ஜீர்கன் கோரோபொக் உள்ளடங்கலாக வணிக பிரதிநிதிகள் பலரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

காப்ரியேல் பொது நிகழ்ச்சிகளில் தோன்றும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துவதைப் போல, இவர்கள் போரைத் தவிர்க்க அக்கறை கொண்டவர்கள் கிடையாது, மாறாக முதலாம் உலக போருக்கு முன்னர் கூறியதைப் போலவே, ஜேர்மனிக்கு "சூரியனில் இடத்தை" பெறுவதற்கும் மற்றும் அதை மீள்இராணுவமயப்படுத்துவதற்கும் அக்கறை கொண்டவர்கள்.

காப்ரியேல் Tagesspiegel இல் எழுதினார், “ஒரு பலவீனமான ஐரோப்பாவை,” “யாரும் மதிக்க மாட்டார்கள். பலமான நாடுகளும் சரி —அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா— பலவீனமான நாடுகளும் சரி, சான்றாக, பல ஆபிரிக்க நாடுகள். சிரியா போன்ற சங்கடமான மற்றும் உயர்-அபாய சூழ்நிலைகளில் முன்பை விட இன்னும் அதிகமாக நாம் ஒன்றிணைந்து நின்றால் மட்டுந்தான், ஐரோப்பாவினால் உலகில் அதன் இடத்தை, மதிப்புகளை மற்றும் நலன்களை மீளப் பெற முடியும்,” என்றார்.