ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

War, lies and censorship

போரும் பொய்களும் தணிக்கையும்

Andre Damon
13 April 2018

அமெரிக்காவும், பிரிட்டன் மற்றும் பிரான்சும் மத்திய கிழக்கில் ஒரு புதிய இரத்தஆறு ஓடச் செய்வதற்கான இறுதி கட்டங்களில் உள்ளன. ஒரு அமெரிக்க தாக்கும் கப்பற்படை, USS ஹேரி எஸ். ட்ரூமன் விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையில், பாரசீக வளைகுடா நோக்கி சென்று கொண்டிருக்கிறது, விமானங்களில் குண்டுங்கள் நிரப்பப்பட்டுள்ளன, துருப்புகளும் நகர்த்தப்பட்டு வருகின்றன, சிரியாவுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் இராணுவ தாக்குதலைத் தொடங்க தயாராகின்ற நிலையில் இது விரைவிலேயே அணுஆயுதமேந்திய ரஷ்யா உடனான ஒரு நேரடி மோதலாக அபிவிருத்தி அடையக்கூடும்.

ஆனால் ஏகாதிபத்திய போருக்கு சிப்பாய்களும் மற்றும் ஏவுகணைகளைளும் தேவைப்படுவதற்கு அப்பால் பொய்களால் அது பலப்படுத்தப்படுகின்றது.

கடந்த மாதத்தைப் பொறுத்த வரையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் அனைத்து பிரதான செய்தி ஊடக நிறுவனங்களும் 2003 ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட "பாரிய பேரழிவுகர ஆயுதங்கள்" சொல்லாடலைப் பயன்படுத்தி மக்களிடையே விற்பனை செய்வதற்காக, ஒன்று மாற்றி ஒன்றாக, தொடர்ச்சியாக பொய்களைப் பரப்புவதற்காக மேலதிகநேரம் செயற்பட்டுள்ளன.

பத்திரிகை சுதந்திரத்தின் ஜனநாயக கருத்துருவானது, அரசியல் ஸ்தாபகத்தின் கருத்துக்களை நோக்கி ஐயுறவுடனும் சுதந்திரமாகவும் இருக்கும் “நான்காவது தூண்" என்று அது அழைக்கப்படுவதை மையத்தில் கொண்டுள்ளது. ஆனால் இந்த போர்வெறி காய்ச்சலில், பத்திரிகையியலுக்கும் அரசு பிரச்சாரத்திற்கும் இடையே வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது.

பத்திரிகையியல் கேள்வி எழுப்பவும் விசாரிக்கவும் முனையும், அதேவேளையில் பிரச்சாரமோ பரபரபூட்டும், எளிமைப்படுத்தும் மற்றும் கிளர்ந்தெழ தூண்டிவிடும். பத்திரிகையியல் எல்லா வாதங்களையும் சந்தேகத்துடன் அணுகும்; பிரச்சாரமோ அரசின் அறிக்கைகளை புனிதமாகவும் ஏனைய அனைத்தையும் பொய்களாகவும் கையாளும்.

பிரிட்டிஷ் மண்ணில் முன்னாள் இரட்டை முகவர் சேர்ஜி ஸ்கிரிபால் மீது விஷத் தாக்குதல் நடத்துவதற்கான ரஷ்யாவின் முயற்சி என்று அவர்கள் எதை குறிப்பிட்டனரோ அதன் மீது சீற்றத்துடன் பத்திரிகைகள் கடந்த மாதம் ஓலமிட்டன. பத்திரிகைகள், ஒருநாள், விஷவாயு “ஸ்கிரிபாலின் BMW காரின் காற்றோட்ட இடைவெளி வழியாக செலுத்தப்பட்டதாக" நிச்சயமாக அறிவித்தன. மறுநாளே, அதேயளவுக்கு நிச்சயமாக, அதே பத்திரிகைகள், “சாலிஸ்பரியில் சேர்ஜி ஸ்கிரிபால் வீட்டு கதவு கைப்பிடியில் உயிராபத்தான விஷ மருந்து நோவிசோக் வைக்கப்பட்டிருந்ததாக" அறிவித்தன. மாறி கொண்டிருந்த இந்த இந்த கட்டுக்கதைகளை ஆய்வு செய்வதற்கு எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.

இந்த விஷ தாக்குதலின் பின்னால் ரஷ்யா இருந்தது என்பதில் பிரிட்டனின் போர்ட்டன் டவுன் இரசாயன ஆயுத ஆய்வகம் "முற்றிலும் ஆணித்தரமாக" இருப்பதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தபோது, அமெரிக்க ஊடகங்கள் அவர் அறிவிப்புக்கும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து அடுத்தடுத்து ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கும் உற்சாகத்தை வெளிப்படுத்தின. ஆனால் அதே ஆய்வகத்துடன் அவர் திட்டவட்டமாக முரண்பட்ட போதும், உலகின் மிகவும் பயங்கர உயிராபத்தான விஷங்களில் ஒன்று என்று கூறப்பட்டதில் இருந்து ஸ்கிரிபால் இருவரும் எதிர்பாராவிதமாக பிழைத்து வந்த போதும், பத்திரிகைகள் அப்படியே அச்சம்பவத்தை புதைத்துவிட்டு, அடுத்த பொய்புரட்டுகளுக்கு நகர்ந்தன.

ஜோன்சனுடன் பகிரங்கமாக முரண்பட்டு, போர்டன் டவுன் ஸ்கிரிபால் வனப்புரையைப் போட்டு உடைத்து வெறும் இரண்டு நாட்களுக்கு பின்னர், சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுத தாக்குதலில் டஜன் கணக்கானவர்களைக் கொன்றதாக அமெரிக்க-ஆதரவிலான பினாமிப் படைகளின் கூற்றுகளுக்கு ஆதாரமளிப்பதற்காக, வெண்ணிற தலைக்கவசம் (White Helmets) எனப்படும் சிஐஏ-பின்புலத்திலான பிரச்சார அமைப்பு அசைவின்றி கிடக்கும், கதறி அழுது கொண்டிருக்கும் மற்றும் உடலில் தண்ணீர் ஊற்றப்படும் குழந்தைகளின் படங்களை வெளியிட்டது. பல நாட்களாக, இந்த படங்கள் பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களில் இடம் பிடித்திருந்தன என்பதோடு முடிவின்றி செய்திகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.

இந்த தாக்குதலானது, போதுமானளவுக்கு சௌகரியமாக, அமெரிக்க துருப்புகள் விரைவில் சிரியாவில் இருந்து திரும்ப பெறப்படும் என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டி வெளியிட்ட ஓர் அறிக்கைக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் நடந்திருந்தது. அந்த கருத்து மீது அமெரிக்க ஊடகங்கள் சீற்றத்துடன் ஓலமிட்டன, “அமெரிக்கா திரும்ப வருவது ஒபாமா பாணியிலான வெற்றிடத்தை உருவாக்கும், அந்த இடத்தை ஈரான், ஹெஸ்புல்லா" மற்றும் "ரஷ்யா" “நிரப்பும்" என்று அறிவித்தன. இது சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல் என்று கூறப்பட்டதற்கு முதல் நாள் நடந்தது.

அடுத்த நாளே, இந்த வனப்புரை முற்றிலும் மாறியது. ரஷ்ய மற்றும் ஈரானிய "செல்வாக்கை" எதிர்கொள்வது மற்றும் "அமெரிக்க நலன்களை" பாதுகாப்பது என்ற பேச்சுகள் தொடங்கின. அந்த புள்ளியிலிருந்து, சிரியாவில் அமெரிக்காவின் ஒரே நோக்கம் ட்ரம்ப் அவரே குறிப்பிடுவதைப் போல "மிருகத்தனமான அசாத்திடம்" இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது என்றானது. அசாத் அரசாங்கம் தான் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது என்று செய்தி ஒளிபரப்பு நிறுவனங்கள் அனைத்தும் முற்றிலும் நிச்சயத்தன்மையோடு பிரகடனப்படுத்தின.

இந்த வாதத்திற்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்பதோ, அல்லது இதுபோன்ற தன்மையிலான முந்தைய கூற்றுகள் பின்னர் மறுத்தளிக்கப்பட்டன என்ற உண்மை குறித்தோ எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. இந்த பொய் அதன் விளைவை ஏற்படுத்தியது, அமெரிக்காவும், பிரிட்டன் மற்றும் பிரான்சும் போர் பாதையில் உள்ளன.

இப்போது ஊடக போர்வெறியர்களின் நோக்கம், அதிகபட்ச படுகொலைகளை உறுதிப்படுத்துவது தான். புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பிரெட் ஸ்டீபன்ஸ் சிரிய ஜனாதிபதி அசாத்தைப் படுகொலை செய்ய "உயிர்பறிக்கும் தாக்குதலை" (decapitation strike) மேற்கொள்ள அழைப்பு விடுத்தார், “இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சர்வதேச வழமையை நாம் மீட்டமைப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்றால், பின் இந்த வழமையை மீறியதற்கான தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார். ஸ்டீபன் வழியில் செல்வதானால், ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைன் மற்றும் லிபிய தலைவர் மௌம்மர் கடாபிக்கு அடுத்து அசாத்தின் மண்டைஓடு வெள்ளை மாளிகையின் கும்பத்தில் சொருக வேண்டியிருக்கும்.

ஒரு பலவீனமான நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்த ஒவ்வொரு சூறையாடும் போரும், பொய் பாசாங்குத்தனங்களின் கீழ் நடத்தப்பட்டன. 1846 மெக்சிகன் போர், ஜனாதிபதி போல்க் ஆல் மெக்சிகோ “நமது எல்லையை ஊடுருவி, அமெரிக்க மண்ணிலேயே அமெரிக்க இரத்தத்தைச் சிந்த வைத்தது” என்ற பொய் பிரகடனத்துடன் தொடங்கப்பட்டது. பிலிப்பைன்ஸை இரத்தச்சேற்றில் ஆக்கிரமிக்க இட்டுச் சென்ற ஸ்பானிய-அமெரிக்க போர், “மஞ்சள் பத்திரிகையியல்" என்று பாடப்புத்தகங்களில் வரையறுக்கப்படும் ஹேர்ஸ்ட் பத்திரிகையால் தூண்டிவிடப்பட்டது.

வியட்நாம் போரின் தீவிரப்பாடு, டொன்கின் வளைகுடாவில் வட வியட்நாமியர்களால் அமெரிக்க கப்பல் தாக்கப்பட்டது என்ற பொய்யைக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களைக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டது—அத்தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய அரபு கூட்டாளியான சவூதி முடியாட்சிக்கு நெருக்கமான தனிநபர்களால் நடத்தப்பட்டது என்பதோடு, அவர்கள் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த போதும், அவர்களது திட்டத்தைத் தயாரித்த போதும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளால் மும்முரமாக கண்காணிக்கப்பட்டார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வைப் பறித்த 2003 ஈராக் படையெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையில் கொலின் பாவலின் பொய்களைக் கொண்டும் மற்றும் பிரிட்டன் பிரதம மந்திரி டோனி பிளேயர் ஜோடித்த "போலி ஆவணங்களைக்" கொண்டும் நியாயப்படுத்தப்பட்டன.

ஆனால் பெரிய பொய்கள் மூலமாக வெளியுறவு கொள்கையை நடத்துவதில் உள்ள அடிப்படை பிரச்சினை அப்ரகாம் லிங்கனுக்கு உரிய பழைய பொன்மொழியில் உள்ளது: “எல்லோரையும் சில காலத்திற்கும், சிலரை எல்லா காலத்திற்கும் நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் எல்லாரையும் எல்லா காலத்திற்கும் உங்களால் ஏமாற்ற முடியாது.”

சிரியாவில் நேட்டோ போர்முனைவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. பிரிட்டனில், நாடாளுமன்ற வாக்கெடுப்பை அவர் ஒதுக்கி வைக்க முயல இருப்பதாக பிரதம மந்திரி தெரேசா மே அறிவித்துள்ளார், அங்கே மக்கள்தொகையில் வெறும் 22 சதவீதத்தினர் மட்டுமே சிரியாவுக்கு எதிரான ஓர் ஏவுகணை தாக்குதலை ஆதரிக்கின்றனர், அதேவேளையில் முக்கால்வாசி பேருக்கும் அதிகமானவர்கள் அதை எதிர்க்கிறார்கள் அல்லது தங்களின் கருத்தை வெளியிடவில்லை. அமெரிக்காவிலும் —ஒருவேளை பத்திரிகைகள் இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை நடத்த அக்கறை கொண்டால்— அங்கேயும் அந்த புள்ளிவிபரங்கள் இதேபோல தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சூறையாடும் போர்களை நியாயப்படுத்த வெட்கமின்றி பல ஆண்டுகளாக பொய்யுரைத்து வந்திருப்பதால், பிரதான ஊடகங்கள் மக்களின் ஆதரவை இழந்துள்ளன. மொன்மவுத் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, “பாரம்பரிய பிரதான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடக அமைப்புகள் 'போலி செய்திகளை' வெளியிடுவதாக 4 அமெரிக்கர்களில் 3 க்கும் அதிகமானவர்கள் நம்புகின்றனர்.”

எவ்வாறிருப்பினும் ஈராக் படையெடுப்பை அடுத்து, பிரதான செய்தி அமைப்புகள் மதிப்பிழந்து போனதுடன், அது மாற்று அரசியல் கண்ணோட்டங்கள் வெடித்தெழுவதற்கும், இணைய மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் மக்களுக்கு பன்முக செய்தி வெளியீடுகள் கிடைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நியூ யோர்க் டைம்ஸ் பாய்ச்சிய பிரச்சாரத்திற்கு மாற்று மருந்தாக, புலிட்ஜர் விருது பெற்ற செய்தியாளர் செமொர் ஹெர்ஸ் போன்ற உண்மையான பத்திரிகையாளர்கள், முந்தைய விஷவாயு தாக்குதல்கள் குறித்த அமெரிக்க ஊடகங்களின் கூற்றுகளை இணைய கட்டுரைகளில் மில்லியன் கணக்கானவர்களுக்கு கிடைக்கும் வகையில் துருவியெடுத்து அம்பலப்படுத்தினர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்க ஊடகங்களின் விஷமப் பிரச்சாரங்கள், “போலி செய்திகள்" என்று அவர்கள் எதை குறிப்பிடுகிறார்களோ அதை முடக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டுள்ளன. அரசு தணிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியூ யோர்க் டைம்ஸூம் வாஷிங்டன் போஸ்டும் அரசியல் உபதேசங்களின் மீது அவற்றின் ஏகபோகத்தை தக்க வைக்க முனைந்துள்ளன.

முன்னாள் ஒபாமா நிர்வாக அதிகாரி சமந்தா பவர் கடந்த ஆண்டு குறிப்பிட்டதைப் போல, “பெரும்பாலான அமெரிக்கர்கள், பனிப்போர் காலத்தில், மத்தியஸ்தம் செய்த தளங்கள் வழியாக அவர்களின் செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற்றார்கள். செய்தியாளர்களும் பதிப்பாசிரியர்களும் தொழில்ரீதியான வாயில்காவலர்களாக பாத்திரம் வகித்ததுடன் ஏறத்தாழ முழுமையாக ஊடங்களில் என்ன வருகிறதோ அதன் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்,” என்றார். மேற்கத்திய அரசாங்கங்களும் பிரதான பத்திரிகைகளில் அவர்களின் தலையாட்டிகளும் தண்டனையிலிருந்து விலக்கீட்டு உரிமையுடன் பொய்யுரைக்க முடிந்த அந்த ஆனந்தமான கடந்த காலத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு தான் ஊடக பிரச்சாரகர்கள் முயன்று வருகிறார்கள்.

துல்லியமாக இதுதான் ஜனநாயகக் கட்சியினர், பிரதான ஊடக அமைப்புகள் மற்றும் சிலிக்கன் மண்டலத்தில் உள்ள அவர்களது பங்காளிகள் தொடுக்கும் இணைய தணிக்கை பிரச்சாரத்தின் நோக்கமாக உள்ளது. கூகுள் அதன் தேடல் முடிவுகளில் மோசடி செய்து இணையத்தைத் தணிக்கை செய்யும் அதன் முயற்சிகளை, கடந்த ஜூலையில் இருந்து WSWS அம்பலப்படுத்திய போது, இணைய தணிக்கைக்கான பிரச்சாரம் கூர்மையாக தீவிரமாக்கப்பட்டுள்ளது, ஆனால் இத்துடன் தொழிலாள வர்க்க போராட்டமும், பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கொள்கைகளுக்கு எதிர்ப்பும் சேர்ந்து வளர்ந்துள்ளன.

செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை, பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் காங்கிரஸிற்கு முன்னால் விசாரணை விளக்கவுரை வழங்கினார், அதில் அவர் "போலி செய்திகள்" பரவுவதை தடுப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு சக்தி மூலமாக, உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளத்தில் பதியப்படும் அனைத்து தகவல்களையும் "மதிப்பீடு"செய்ய மற்றும் "பொலிஸ் வேலை" பார்க்க, அந்நிறுவனத்தின் திட்டங்களை விவரித்தார். எதிர்ப்பு பிரசுரங்கள் பரவுவதை மட்டுப்படுத்த அல்லது ஒட்டுமொத்தமாக அவற்றை மூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தணிக்கைப் பிரச்சாரத்தின் நிஜமான இலக்கு "போலி செய்திகள்" அல்ல, மாறாக உண்மையான செய்திகளாகும் — அதாவது, நிஜமான பத்திரிகையியல் மற்றும் சுதந்திரமான செய்தி அறிவித்தல் ஆகும், இவை அதன் இயல்பிலேயே வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸில் உள்ள போர்வெறியாளர்களின் பொய்களுடன் முரண்படுகின்றன.