ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Addressing US Congress, Macron backs neocolonial carve-up of Middle East

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மக்ரோன் மத்திய கிழக்கின் நவ-காலனித்துவ துண்டாடலை ஆதரிக்கிறார்

By Alex Lantier
26 April 2018

புதன்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் இமானுவல் மக்ரோன் வழங்கிய உரை ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியால் இதுவரையில் வழங்கப்பட்டிருக்கக் கூடிய மிகப் போர்த்தீவிர பகிரங்கமான அறிக்கைகளில் ஒன்றாக இருந்தது. ஏப்ரல் 14 அன்று சிரியா மீது வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரிஸால் நடத்தப்பட்ட ஆத்திரமூட்டலற்ற குண்டுவீச்சினை 21 ஆம் நூற்றாண்டுக்கான ஒரு புதிய உலக ஒழுங்கிற்கான முன்மாதிரியாக புகழ்ந்த மக்ரோன், ஈரான், வட கொரியா மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான அமெரிக்க போர் மிரட்டல்களுக்கு தனது ஆதரவை அறிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் அட்லாண்டிக் கடந்த கூட்டணியின் மிக ஆழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில், வாஷிங்டனுக்கு மக்ரோன் மேற்கொண்ட மூன்று நாள் விஜயத்தின் நிறைவாக இந்த உரை அமைந்திருந்தது. ஐரோப்பிய மற்றும் சீனப் பொருட்களின் மீது வர்த்தக தீர்வைகளை விதிக்கும் அமெரிக்க நடவடிக்கைகள் பதிலடிகளின் ஒரு சுழலையும் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரையும் அச்சுறுத்துவது குறித்தும், ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு வாஷிங்டன் அறிவித்திருக்கும் திட்டங்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் போர் வெடிப்பதற்கு அச்சுறுத்துவது குறித்தும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் பீதி பெருகிக் கொண்டிருக்கிறது. ஆயினும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது குறித்த வெற்று வாய்ச்சவடால்களால் மூடப்பட்ட மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்னும் கூடுதலாய் அழைப்புகள் விடுவதைத் தவிர்த்து மக்ரோன் முன்வைப்பதற்கு எதுவொன்றும் இருக்கவில்லை.

“நமது இரண்டு தேசங்களுமே ஒரே மண்ணிலேயே வேர்கொண்டிருக்கின்றன, அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகளின் ஒரே இலட்சியங்களிலேயே காலூன்றியிருக்கின்றன” என்று மக்ரோன் அறிவித்தார். “நமது பிணைப்புகளின் வலிமையே நமது பகிர்ந்த இலட்சியங்களுக்கான மூலவளமாக இருக்கிறது. இதுவே முதலாம் உலகப் போரின் போது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில், அதன்பின் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாஜிசத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்மை ஒன்றாக இணைத்தது. இதுவே ஸ்ராலினிச அச்சுறுத்தலின் சகாப்தத்தின் போது நம்மை மீண்டும் ஒன்றுபடுத்தியது, இப்போது பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் நாம் அதே வலிமையையே சார்ந்து நிற்கிறோம்.”

வாஷிங்டன் மற்றும் பாரிஸ் ஜனநாயகத்திற்கான ஒரு முடிவில்லாத போரை நடத்துவது குறித்த, அது நமது சகாப்தத்தில் இஸ்லாமியக் குழுக்களுக்கு எதிரான “பயங்கரவாதத்தின் மீதான போரின்” வடிவத்தை எடுப்பது குறித்த மக்ரோனின் வாய்வீச்சு; பொய்களின் ஒரு குவியல் ஆகும். பெரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக மோதல்களும், ஈரானுடன் ஐரோப்பாவின் பொருளாதார உறவுகளை முறிப்பதா மற்றும் மத்திய கிழக்கில் போரின் ஆபத்தை ஏற்பதா ஆகியவை குறித்த அமெரிக்க-ஐரோப்பிய மோதல்களும் பயங்கரவாதத்தில் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான மோதல்கள் அல்ல. அவை, இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மார்க்சிஸ்டுகள் விளக்கியதைப் போல, போட்டி தேசிய முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் வன்முறைமிக்க மோதிக்கொள்ளும் நலன்களில் வேரூன்றிய ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான மோதல்கள் ஆகும்.

அதன்பின் மக்ரோன், தனது சொந்த மோசடியான முன்வைப்புடன், அவரே முரண்படச் சென்றார். வாஷிங்டன் அதன் வர்த்தகப் போர் மிரட்டல்களைக் கைவிட்டு அதன் போர்க் கொள்கைகளை ஐரோப்பாவுடன் மிக நெருக்கமான விதத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் வாஷிங்டனிடம் விண்ணப்பம் செய்தார் — பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்காக அல்ல, மாறாக உலக அரசியலில் பெயர் குறிப்பிடாத பெரும் வல்லரசுப் போட்டியாளர்களுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கமான பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காக.

அவர் தெரிவித்தார், “நமக்கு இரண்டு சாத்தியமான வழிகள் முன்னிருக்கின்றன. தனிமைப்படல்வாதம், பின்வாங்கல் மற்றும் தேசியவாதத்தை நாம் தெரிவு செய்யலாம். அது ஒரு தெரிவு. நமது அச்சங்களுக்கான ஒரு தற்காலிகத் தீர்வாக அது நம்மை மிகவும் ஈர்க்கக் கூடும். ஆனால் உலகத்திற்கு கதவை மூடுவதால் உலகின் பரிணாம வளர்ச்சி நின்று விடப் போவதில்லை... நாம் விட்டுச்செல்லும் காலியான இடத்தை ஒரு வலுவான மூலோபாயமும் இலட்சியமும் கொண்டிருக்கக் கூடிய மற்ற சக்திகள் நிரப்பி விடும். 21 ஆம் நூற்றாண்டின் உலக ஒழுங்கை வடிவமைப்பதில் தமது சொந்த மாதிரியை மீண்டும் முன்கொண்டுவருவதற்கு ஏனைய சக்திகள் சற்றும் தயங்காது.”

“பன்முகத்தன்மையின் ஒரு புதிய வகையின் அடிப்படையில் இருபத்தியோராம் நூற்றாண்டு உலக ஒழுங்கு ஒன்றைக் கட்டியெழுப்புவதே” மேம்பட்ட வழி என்று மக்ரோன் தெரிவித்தார். இதற்கான ஒரு உதாரணமாக, அவர் கூறினார்: “சிரியாவில் நாம் நெருக்கமாய் வேலைசெய்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஆட்சியால் மக்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியத்துடனும் இணைந்து, இரசாயன வசதிகளை அழிப்பதற்கும் சர்வதேச சமுதாயத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் செயல்பட்டன. அந்த நடவடிக்கையானது இந்த வலிமையான பன்முகத்தன்மைக்கான சான்றாக இருந்தது.”

ஏப்ரல் 14 குண்டுவீச்சை எதிர்காலத்திற்கான ஒரு மாதிரியாக மக்ரோன் புகழ்வது சர்வதேசரீதியாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு எச்சரிக்கையை உள்ளடக்கியிருக்கிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை குறித்தான வெற்று வாய்வீச்சின் பின்னால், ஏகாதிபத்திய மையங்களில் இருக்கின்ற ஆளும் வர்க்கங்கள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற தமது புவிமூலோபாய எதிரிகளுக்கு எதிராக தமது மேலாதிக்கமான உலக நிலையை நிலைநாட்டுவதற்கும் பராமரிப்பதற்கும், சர்வதேசச் சட்டத்திற்கு முழு அலட்சியத்துடன், தாட்சண்யமற்று செயல்படுகின்றன.

ஏப்ரல் 14 தாக்குதலானது, டூமா நகரத்தில் அசாத் ஆட்சியின் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருந்ததாக நேட்டோ கூறிய பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர்க் குற்றமாகும். இந்தத் தாக்குதல் குண்டுவீச்சுக்கான ஒரு சாக்குப்போக்கினை வழங்குவதற்காக நேட்டோ-ஆதரவுடைய வெள்ளை தலைக்கவச ஆயுதக்குழுவால் (White Helmets) எனப்படுவதால் அரங்கேற்றப்பட்டதாகும் என்பதற்கான ஆதாரத்தை ரஷ்யா வழங்கிய நிலையில், வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரிஸ் இந்த இரசாயனத் தாக்குதலாகச் சொல்லப்பட்டது குறித்த ஐ.நா. விசாரணைகள் எதுவும் நடந்துவிடும் முன்பாக சிரியாவின் அரசுக் கட்டிடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை தொடுத்தன. இந்தத் தாக்குதலை மக்ரோன் பாராட்டுவது, அவர் எதிர்பார்க்கும் இருபத்தியோராம் நூற்றாண்டு ஒழுங்கானது ஏகாதிபத்திய சக்திகளின் முடிவற்ற, சட்டமற்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அடிப்படையில், மக்ரோன் யூரோஆசியா எங்கிலுமான இலக்குகளுக்கு எதிரான அமெரிக்க மிரட்டல்களுக்கு ஆதரவளிக்கின்றார். “அணுவாயுதங்களை பரப்பும் அச்சுறுத்தலுடன் சேரும்போது பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் அபாயகரமானதாகி விடுகிறது” என்றார் அவர். “பியோங்யாங்கை தடைகளின் மூலமாகவும் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவும் கொரிய தீபகற்பத்தை அணுவாயுதம் அற்றதாக்குவதை நோக்கி கொண்டுவருகின்ற அமெரிக்காவின் முயற்சிகளை பிரான்ஸ் முழுமையாக ஆதரிக்கிறது. ஈரானைப் பொறுத்தவரை எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது: ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்கள் கொண்டிருக்கக் கூடாது: இப்போதும், 5 வருடமானாலும், 10 வருடமானாலும், எப்போதும்.”

ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் இரத்து செய்தால், அதை ஏற்றுக் கொள்ளவிருப்பதை ஏற்கனவே நேற்று தான் கூறியதை சுட்டிக்காட்டியதன் மூலம், ஈரானுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கும் அமெரிக்காவின் ஒரு போரின் சாத்தியத்திற்கும் பாதை திறந்து விட்டதன் பின்னர், மக்ரோன் இப்படியொரு பரிதாபகரமான சமாதானத்தையும் சொல்லிக் கொண்டார்: “ஆயினும் இந்தக் கொள்கையானது ஒருபோதும் நம்மை மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் செல்லாது. ஒரு மாபெரும் நாகரிகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஈரான் உள்ளிட்ட தேசங்களின் ஸ்திரத்தன்மையை நாம் உறுதி செய்வதோடு அவற்றின் இறையாண்மைக்கு மரியாதையளிக்க வேண்டும். அந்த பிராந்தியத்தில் கடந்த கால தவறுகள் மறுபடியும் நடக்கவிடக் கூடாது.”

மக்ரோனின் வாதம் ஒரு இரட்டை வேட மோசடியாகும். ஒரு பக்கத்தில், “உலகம் முன்னெப்போதும் கண்டிராத நெருப்பு மற்றும் சீற்றத்துடன்”  வடகொரியாவை மிரட்டி வருகின்ற ட்ரம்ப்புக்கு ஒரு வெற்றுக்காசோலையைக் கொடுக்கிறார்; மறுபக்கத்தில், இத்தகைய கொள்கைகளால் விளையும் போரை அவர் ஆதரிக்கவில்லை என்று வலியுறுத்துகிறார். அதன்பின் “கடந்தகால தவறுகள்” என்று, கடந்த 25 ஆண்டு காலத்தின் மத்திய கிழக்கிலான ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகளை, அவை இருந்தன என்றும் கூறாமலேயே, அவை திரும்பவும் நடவாமல் தவிர்ப்பதற்கான ஒரு கையாலாகாத விண்ணப்பத்தை அவர் இணைத்துக் கொள்கிறார்.

1991 இல் ஸ்ராலினிஸ்டுகளால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்தை தொடர்ந்து, ஏகாதிபத்திய சக்திகள், மத்திய கிழக்கில் அவற்றின் நவகாலனித்துவ தலையீடுகளுக்கு எந்தவொரு உண்மையான இராணுவ எதிர்பலத்தையும் எதிர்நோக்குவதில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டன. ஈராக் தொடங்கி ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரை இந்த மூலோபாய மற்றும் எண்ணெய்வளம் செறிந்த பிராந்தியத்திலான வரிசையான குருதிகொட்டும் ஏகாதிபத்தியப் போர்கள் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்டதோடு பத்து மில்லியன் கணக்கான பேரை தங்கள் வீடுகளை விட்டு ஓடும்படி செய்தது. ஆயினும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்குமான அவசியத்தால் இவை ஊக்குவிக்கப்பட்டதாய் கூறும் ஏகாதிபத்தியப் பொய்களின் மூலமாக, இந்தப் போர்களை செலுத்திய வர்க்க நலன்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் குறித்த பெரும் பொய்யானது அடுத்துவந்த நவகாலனித்துவ போர்களுக்கான மாதிரியை அமைத்துக் கொடுத்தது.

இந்த பல தசாப்த காலத்துப் போரினால் தூண்டப்பட்ட புவியரசியல் நெருக்கடியானது பெரும் உலக சக்திகளுக்கு இடையிலான ஒரு இராணுவ மோதலாக தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிரியாவில் நேட்டோவின் ஆதரவு பெற்ற “கிளர்ச்சிப் படைகளுக்கு” எதிராக ரஷ்ய மற்றும் ஈரானியப் படைகள் சண்டையிட்டு வருகின்ற நிலையிலும், சீனா வர்த்தகம், தென் சீனக் கடல் மற்றும் வட கொரியா விடயங்களில் அமெரிக்க அச்சுறுத்தல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளுக்கு முனைகின்ற நிலையிலும், பெரும் அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் வெடிப்பதற்கான அபாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 14 தாக்குதல்கள் ஏன் திகைப்பூட்டக் கூடிய அளவுக்கு பொறுப்பற்றதாக இருக்கிறதென்றால், ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான ஒரு மோதலைத் தூண்டுகின்ற அபாயத்தை அவை கொண்டிருந்த காரணத்தால் தான்.

இந்தப் போர்களுக்கான நிதியளிப்பதற்கு அவசியமானதாய் இருக்கின்ற தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு அதிகரித்துவரும் எதிர்த்தாக்குதலை தூண்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஆசிரியர்களது பாரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், பிரான்சில் பரந்த மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்ரோன் பின்பற்றி வருகின்ற அவரது ஒரேயடியான சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர், பல்கலைக்கழக மாணவர்கள் தமது வகுப்பறைகளை ஆக்கிரமித்துப் போராடி வருகின்றனர்.

தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் இந்த அதிகரிப்பே, பிரான்சிலும் அமெரிக்காவிலும் இருக்கும் ஆளும் வர்க்கங்கள், வெளிநாடுகளில் தமது இராணுவ மூர்க்கத்தனத்தை தீவிரப்படுத்துவதற்கான முக்கிய காரணமாகும். அதன்மூலம் சமூகப் பதட்டங்களை திசைதிருப்பி ஒரு வெளிநாட்டு “எதிரி”க்கு எதிராக காட்டும் ஒரு முயற்சியில், சொந்த நாட்டில் எதிர்ப்பை நசுக்குவதற்கு அரசு வன்முறையையும் தணிக்கையையும் பயன்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றது.