ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP and IYSSE hold meeting on war, the class struggle and the fight against Internet censorship

சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பும் போர், வர்க்க போராட்டம் மற்றும் இணைய தணிக்கைக்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டம் நடத்தின

By our reporter
23 April 2018

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பும் (IYSSE) மிச்சிகன், டெட்ராய்டின் வாய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் நேற்று, தொழிலாள வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் இணையத்தைத் தணிக்கை செய்வதற்கான ஆளும் வர்க்கத்தின் முனைவு குறித்து ஒரு கூட்டம் நடத்தின.

அம்மாநிலம் எங்கிலுமான நான்கு பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள், டெட்ராய்டு மற்றும் ஃபிளிண்ட் இன் வாகனத்துறை தொழிலாளர்கள், மற்றும் அதில் கலந்து கொள்ள எல்லை கடந்து வந்திருந்த கனடாவின் ஒன்டாரியோ தொழிலாளர்கள் உள்ளடங்கலாக அக்கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டனர்.


தணிக்கை பிரச்சினையை "போலி செய்திகளுடன்" இணைத்துக் காட்டும் ஆண்ட்ரே டேமன்

ஃபோர்டின் வுட்ஹேவன் ஸ்டாம்பிங் ஆலையில் அக்டோபர் 20, 2017 இல் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களின் அலுவலகங்களுக்கு வெளியே, இதுவரையில் தெரிய-வராத சூழலில் உயிரிழந்த 21 வயதான போர்டு தொழிலாளர் ஜகோபி ஹென்னிங்ஸ் இன் அன்னை ஷிமெகா ஹென்னிங்ஸூம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அக்கூட்டத்தைத் தொடங்கி வைத்து, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் குறிப்பிடுகையில் விரைவாக தீவிரமடைந்து வரும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் அரசியல், புவிசார் அரசியல் மற்றும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் அக்கூட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

“சிரியா மற்றும் ரஷ்யா மீது இன்னும் ஆக்ரோஷ நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை மையத்தில் வைத்து, வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் மீது" ஆளும் வர்க்கத்தில் உள்ள ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், வாஷிங்டனில் ஒரு கடுமையான கன்னை மோதல் நடந்து வருகிறது என்றவர் குறிப்பிட்டார். ட்ரம்ப் நிர்வாகம் சிரியா மீது குண்டுவீசியதே இந்த கோரிக்கைகளைத் திருப்திப்படுத்த தான், ஆனால் "இதை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் சிரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைக் கூடுதலாக தீவிரப்படுத்துவதற்கு அழைப்புகள்" வந்துள்ளன, இது ரஷ்யாவுடன் உடனடியான மிகப்பெரியளவிலான ஒரு போர் அபாயத்தை முன்னிறுத்துகிறது என்று கிஷோர் குறிப்பிட்டார்.

“அரண்மனை சதியா அல்லது வர்க்க போராட்டமா: வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்" என்ற ஜூன் 2017 சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கையிலிருந்து கிஷோர் மேற்கோளிட்டார், அந்த அறிக்கை "பல்வேறு வடிவிலான சமூக அவலங்களில் பாதிக்கப்பட்டு வருகின்ற மற்றும் முற்றிலுமாக அரசியல் வாழ்விலிருந்து அன்னியப்படுத்தப்பட்டுள்ள பரந்த பெருந்திரளான மக்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையே—ஒட்டுமொத்தமாக வெவ்வேறு மோதல்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்றன,” என்பதை முன் கணித்தது. 2018 இல், இந்த மோதல் "பகிரங்கமாக வெடித்துள்ளது,” என்றவர் குறிப்பிட்டார்.

கிஷோர் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் புறநிலை வளர்ச்சியை மீளாய்வுக்கு உட்படுத்தினார். அவர் குறிப்பிட்டார், “ஒவ்வொரு இடத்திலும்,” “தொழிலாளர்கள் ஒரே மாதிரியான அடிப்படை நிலைமைகளை தான் எதிர்கொள்கிறார்கள்: அதுவாவது, விரைவாக வலதுக்கு நகர்ந்து வரும் ஓர் அரசியல் அமைப்புமுறை, செல்வ வளத்தை இன்னும் கூடுதலாக கைமாற்றுவதை ஒழுங்கமைக்க தீர்மானகரமாக உள்ள ஆளும் வர்க்கம், அரசு மற்றும் பெருநிறுவனங்களின் கருவிகளாக செயல்படும் தொழிற்சங்கங்கள்.” வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தி, “தொழிலாளர்களை அதிகரித்தளவில் நேரடியாக தொழிற்சங்கங்களுடன் மோதலுக்கு இட்டு வந்துள்ளது.”


ஜோசப் கிஷோர்

அவர் தெரிவித்தார்: “ஒரு புரட்சிகர தலைமையை, திட்டமிட்டு, நனவுபூர்வமாக, மும்முரமாக கட்டமைப்பது தான் எல்லாவற்றினும் மேலான பணியாகும். மனிதயினம் முகங்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைக்கு —அதாவது, சோசலிசமா காட்டுமிராண்டித்தனமா என்பதற்கு— ஒரு முற்போக்கான தீர்வு இப்பணியின் மீது தங்கியுள்ளது.”

கிஷோரின் அறிமுக கருத்துக்களைத் தொடர்ந்து SEP மற்றும் IYSSE அங்கத்தவர்களின் தொடர்ச்சியான அறிக்கைகள் வந்தன. இம்மாதம் ஒக்லஹோமா ஆசிரியர் வேலைநிறுத்தத்தில் தலையீடு செய்யவும், செய்தி சேகரிக்கவும் WSWS இன் தொழிலாளர் பிரிவு ஆசிரியர் ஜெர்ரி வைட் உடன் பயணித்த நைல்ஸ் நிமூத் அந்த வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகளை மீளாய்வுக்கு உட்படுத்தினார். அவர் ஆளும் உயரடுக்கின் இணைய தணிக்கைக்கும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொடர்பு கொண்டு போராட்டங்களை ஒழுங்கமைக்க தொழிலாளர்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்தியதன் மீதான ஆளும் உயரடுக்கின் அச்சங்களுக்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டினார்.

2016 இல் டொனால்ட் ட்ரம்ப் தேர்வான பின்னர் ஏற்பட்டுள்ள இணைய தணிக்கை முனைவின் அபிவிருத்தியையும் மற்றும் அமெரிக்காவுக்குள் அனைத்து அரசியல் எதிர்ப்பையும் ரஷ்ய "போலி செய்திகளின்" வேலை என்பதாக குறித்துக் காட்டுவதற்கு ஜனநாயக கட்சி மற்றும் உளவுத்துறை முகமைகளின் பிரச்சாரத்தையும் ஆண்ட்ரூ டேமன் மீளாய்வு செய்தார்.

ஜகோபி ஹென்னிங்ஸ் மரணம் மீது புலனாய்வு கோரி எழுதியுள்ள WSWS இன் தொழிலாளர் பிரிவு ஆசிரியர் ஜெர்ரி வைட் அக்கூட்டத்தில் ஷிமெகா ஹென்னிங்ஸை அறிமுகப்படுத்தியதுடன், அவர் மகனை நினைவுகூர்ந்து சில நிமிட நேரம் மவுனம் அனுசரிக்க கேட்டுக் கொண்டார்.


கூட்டத்தில் ஷிமெகா ஹென்னிங்ஸ் பேசுகிறார்

ஷிமெகா பின்வருமாறு தெரிவித்தார்:

“என் வாழ்வின் மிக மோசமான நாளான அக்டோபர் 20, 2017 க்கு பின்னர் நான் பலமிழந்து விட்டேன். ஆனால் உங்கள் குழந்தைகள் என்று வருகையில், பலமில்லை என்பது போன்ற விடயங்களைக் கூற முடியாது. அதுவும் குறிப்பாக அவர்களைப் பாதுகாக்க நீங்கள் போராடி கொண்டிருக்கிறீர்கள் என்று வருகையில்.

“என் குழந்தை அவமதிக்கப்பட்டு கொண்டிருந்த போது, அவரை குறித்து எல்லா விதமான போலி செய்திகளும் இட்டுக் கட்டப்பட்டு கொண்டிருந்த போது, அதில் தலையிட்டு, அங்கே நிறைய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன என்பதை கட்டுரையில் எடுத்துக்காட்டி, அவற்றிற்கு பதிலளிக்கப்பட வேண்டுமென கூறிய WSWS க்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை. 'என்னை மன்னித்து விடுங்கள்' என்று கூறுவதற்கு, இதுவரையில் எந்தவொரு தொழிற்சங்க நபரும் தொலைபேசியிலும் அழைக்கவில்லை, தனிப்பட்டரீதியிலும் என்னை வந்து பார்க்கவில்லை. 'உங்கள் இழப்புக்காக வருந்துகிறேன்' என்று கை பிடித்து ஆறுதல் கூறுவதற்கு ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து அவரின் ஈமச்சடங்கிற்கு கூட யாரும் வரவில்லை. அவர்களால் எப்படி இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது?

“நான் 20 ஆண்டுகள் கிறைஸ்லரில் வேலை செய்துள்ளேன், இப்போதெல்லாம் வேலைக்கு செல்வதென்பது எனக்கொரு பெரும் போராட்டமாக உள்ளது. அங்கே நானொரு மூத்த பணியாளராக உள்ளேன். இப்படியென்றால் ஒவ்வொரு நாளும் ஒரு தற்காலிக தொழிலாளர் வேலைக்கு போவதை யோசித்து பாருங்கள். நான் தற்காலிக தொழிலாளர்களுடன் தான் பணியாற்றுகிறேன், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். நாம் தொழிலாள வர்க்கமாக ஒருங்கிணைந்து வர வேண்டிய காலக்கட்டம் இது என்பதைக் கூற விரும்புகிறேன். நாம் ஒருங்கிணைந்து வராவிட்டால், எதுவும் மாறாது. தொழிற்சங்கங்கள் எங்கே நிற்கின்றன என்பது ஏற்கனவே நமக்கு தெரியும். நன்றி.”

ஷிமெகா பேசி முடித்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

அதை தொடர்ந்து ஒரு நேரடி விவாதம் நடந்தது, பல தொழிலாளர்களும் பங்களிப்பு செய்தனர், அவை தொழிலாள வர்க்க நனவின் பரந்த வளர்ச்சியையும், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரண்டிற்கும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பையும் எடுத்துக்காட்டின.


கிளாடியெஸ் வில்லியம்சன்

மிச்சிகன், ஃபிளிண்ட் இல் இருந்து ஓர் ஓய்வூபெற்ற ஜிஎம் வாகனத்துறை தொழிலாளரும், அம்மாநில அதிகாரிகளால், உள்ளாட்சி மற்றும் பெடரல் அதிகாரிகளால் ஃபிளிண்ட் நகர குடிநீர் வினியோகம் விஷமாக்கப்பட்டதை அம்பலப்படுத்துவதற்காக அங்கே வசிப்போரின் போராட்டத்தில் முன்னணியில் நின்றவருமான கிளாடியெஸ் பேசினார். அந்நகர குடிநீர் விஷமாக்கப்பட்டதை ஓர் இனப் பிரச்சினையாக வாதிட்டு ஃபிளிண்ட் நகரவாசிகளை இனரீதியில் பிளவுபடுத்த முயன்ற ஜனநாயக கட்சியின் முயற்சிகளை அவர் கண்டித்தார்.

“அவர்கள் தொடர்ந்து இதை இனரீதியிலானதாக ஆக்க முயன்றார்கள்,” என கிளாடியெஸ் தெரிவித்தார். “ஃபிளிண்ட் நகரில் ஐம்பத்தி நான்கு சதவீதத்தினர் கருப்பின மக்கள். ஆனால் இது நிறம் சம்பந்தப்பட்டதில்லை. இது தொழிலாள வர்க்கம் மற்றும் முதலாளித்துவம் சம்பந்தப்பட்டது. குடியரசுக் கட்சியினரை விட ஜனநாயகக் கட்சியிடம் இருந்து கை நிறைய சிறந்த சலுகை கிடைக்குமென நினைப்பவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆட்கள். இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் கழுத்தில் கால் வைத்து நெரித்து கொண்டிருக்கிறார்கள்.

“இதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்த்து நில்லுங்கள், நீங்கள் முதலாளித்துவத்திடம் போதுமானவு அனுவபவித்துவிட்டீர்கள் என்பதைக் கூறுங்கள். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரிடமும் போதுமானளவுக்கு அனுபவித்துவிட்டீர்கள். அவர்களும் சரி, UAW சங்கமும் சரி, தொழிலாளர்களைக் குறித்து கவலைப் பட மாட்டார்கள்.”

கனடாவின் ஒண்டாரியோவில் இருந்து அவரது முதல் SEP கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த 37 வயதான இயந்திர வல்லுனர் கிறிஸ், அவரின் இருக்கையில் இருந்தே பேசினார். ஆளும் வர்க்கத்தின் இணைய தணிக்கை குறித்து அவருக்கு எவ்வாறு தெரிய வந்தது என்பதை குறித்து அவர் விவரித்தார். “நான் சில மாதங்களாக தான் WSWS கட்டுரைகளை வாசித்து வருகிறேன்.” “உண்மையில் நான் குளோபல் ரிசர்ச் இன் கட்டுரைகள் நிறைய வாசிப்பேன். கூகுள் செய்தி ஓடை இருக்கிறது, அதன் தலைப்புகளில் ஒன்று குளோபல் ரிசர்ச் ஆக இருந்தது. அந்த செய்தி ஓடையில் வந்து கொண்டிருந்த அவர்களின் கட்டுரைகள் எதுவுமே இப்போது பிரசுரமாவதில்லை. அதில் பிரதான பத்திரிகை செய்திகளே வருகின்றன.

“முதலாளித்துவம் எவ்வாறு என்னை பாதித்துள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,” என்றவர் தொடர்ந்தார். “என் தந்தை ஹாமில்டனில் கேம்பகோ என்றழைக்கப்படும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். 1998 இல் அவர்கள் அதை மூடிவிட்டு மெக்சிகோவுக்கு உற்பத்தியை இடம் பெயர்த்த முடிவெடுத்தனர். அவர்கள் ஓய்வூதியங்களைக் குறைத்துவிட்டனர், அதனால் அவரின் ஓய்வூதியத்தின் ஒரு கணிசமான பகுதியை அவர் இழந்தார், அவரின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய, அவர் வாழ்வின் கடைசி காலத்தில் இன்னும் அதிகமாக வோல்மார்ட்டில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார். அங்கே அவர் ஆறு ஆண்டுகள் வேலை செய்தார், பின் மாரடைப்பில் இறந்து போனார். அதில் ஏற்பட்ட மனஅழுத்தம் தான் அவர் மரணத்திற்கு பெரிதும் காரணமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

“இது தான் முதலாளித்துவ அமைப்புமுறை. அவர் மரணித்த போது, அப்போது அவருக்கு சிறிது கடன் இருந்தது. வங்கி வந்து எங்கள் அம்மாவின் வீட்டை பறிமுதல் செய்துவிடாமல் இருக்க நானும் என் சகோதரரும் அதற்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் தான் இதை நிறுத்த வேண்டும் என்கிறேன், ஏனென்றால் வேறு யாருக்கும் இந்நிலைமை வரக் கூடாது.”

அக்கூட்டத்தில் SEP மற்றும் IYSSE அங்கத்தவர்களின் இன்னும் பல அறிக்கைகளும் பங்களிப்புகளும் இடம் பெற்றன. எரிக் இலண்டன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சமூக சமத்துவமின்மையின் அளப்பரிய வளர்ச்சியைக் குறித்து அறிக்கை அளித்ததுடன், ஒவ்வொரு நாட்டிலும் செல்வந்த தட்டுக்களின் பொருளாதார வாழ்வின் இயல்பு எவ்வாறு ஆளும் வர்க்கத்தை எதேச்சதிகாரத்திற்கு திருப்ப முனைந்து வருகிறது என்பதை விவரித்தார். IYSSE இன் தேசிய குழு உறுப்பினர் Genevieve Leigh அமெரிக்காவில் இளைஞர்களின் பாரிய போராட்டங்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் சமூக நிலைமைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டமைக்க மாணவர்களும் இளைஞர்களும் திரும்புவதற்கான IYSSE இன் முன்னோக்கை விவரித்தார்.

அக்கூட்டத்தைத் தொடர்ந்து, பல தொழிலாளர்களும் மேற்கொண்டு விவாதிப்பதற்கும் நூல்களை வாங்குவதற்கும் நின்றிருந்தனர். தொழிலாளர்கள், WSWS செய்தியாளர்களுக்கு கூறிய கருத்துக்களின் ஓர் அறிக்கை நாளை பிரசுரிக்கப்படும்.