ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German chancellor travels to Washington amid trade and geopolitical tensions

வர்த்தக மற்றும் புவியரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் ஜேர்மன் சான்சலர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்கிறார்

By Peter Schwarz
27 April 2018

ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அரசியல் மற்றும் பொருளாதாரப் பதட்டங்கள் பெருகிச் செல்வதன் மத்தியில் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் இன்று வாஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் ஒரு வேலைநிமித்தமான சந்திப்பிலும் மதிய உணவிலும் பங்கேற்கிறார்.

இரண்டு பிரச்சினைகள் முன்னிலையில் இருக்கின்றன: ஈரானுடனான அணு ஒப்பந்தத்தின் எதிர்காலம், இதனை ட்ரம்ப் திரும்பிப் பெற விரும்புகிறார், ஜேர்மனி அதனைத் தொடர்ந்து பராமரிக்க விரும்புகிறது, மற்றும், மே 1 அன்று முதல் திட்டமிட்டபடி ஐரோப்பாவில் இருந்தான உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது அமெரிக்கா தண்டத் தீர்வைகள் விதிக்கும் பட்சத்தில் ஒரு வர்த்தகப் போர் எழும் அச்சுறுத்தல்.

”வர்த்தகச் சச்சரவிலும் ஈரானுடனான அணு மோதல் விடயம் புதிய தீவிரத்துடன் எழுவதிலும் ஒரு புலப்படத்தக்க, நீடித்த தீர்வு இல்லாது போகுமாயின், ஐரோப்பிய-அமெரிக்க உறவு கடும் கொந்தளிப்பால் உலுக்கப்படுவதாக இருக்கும்” என்று Frankfurter Allgemeine Zeitung திங்களன்று கருத்திட்டது.

மேர்க்கெலின் விஜயத்திற்கு முன்பாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார், இதனை ஜேர்மன் ஊடகங்கள் அவநம்பிக்கை மற்றும் நம்பிக்கை இரண்டும் கலந்த கலவையுடன் செய்திவெளியிட்டிருந்தன.

மக்ரோன் ட்ரம்ப் உடனான தனது தனிப்பட்ட உறவைப் பயன்படுத்தி ஐரோப்பாவில் மேலாதிக்கமான வெளியுறவுக் கொள்கை ஆளுமையாக ஆகப் பார்க்கிறார், ”பெரியாட்கள் விடயங்களில் அவர்களுக்குள்ளாக உடன்பட்டுக் கொள்ள” ஜேர்மனியை “மீண்டும் வெளியுறவுக் கொள்கை விடயத்திலான அதன் பழைய இடத்திற்கு” தள்ளுவதற்கு பார்க்கிறார் (Der Spiegel) என்று சில சந்தேகம் வெளியிட்டன. மற்றவை ட்ரம்ப் விடயத்தில் மக்ரோனின் நெகிழ்வினை, வீணான அமெரிக்க ஜனாதிபதி, சலுகைகளை அளிக்கச் செய்வதற்கு பயன்படுத்திய ஒரு புத்திசாலித்தனமான தந்திரமாகக் கூறிப் பாராட்டின.

மக்ரோனும் மேர்க்கெலும் “மாறுபட்ட பாத்திரங்களை வகித்தாலும் கூட” அவர்களிடையே “பொதுவான இலக்குகளும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை”யும் இருப்பதாக ஜேர்மன் வெளியுறவுத் துறையில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்புக்குப் பொறுப்பானவரான பீட்டர் பேயர், Kölner Stadt-Anzeiger பத்திரிகைக்கு தெரிவித்தார். இந்த இருவரும் “மிக நன்றாக கைகோர்த்து செயல்பட முடியும்”.

ஆனால் மக்ரோன் எதையும் சாதிக்கவில்லை. ஜேர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் உடன்பட்ட ஒரு ஆலோசனையின் படி அவர், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மத்திய கிழக்கிலான அமெரிக்காவின் போர்களுக்கு இராணுவ ஆதரவை தொடர்வதற்கும் உறுதியளித்தார் என்றபோதினும், ட்ரம்ப் ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்கி நடக்கும் எந்த உறுதிப்பாட்டையும் அளிக்க விருப்பம் காட்டவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஒரு இறுதி முடிவை எட்டியிருக்கவில்லை என்றாலும், ட்ரம்ப் ஒப்பந்தத்திற்கு இணங்கி நடப்பார் என்று தான் நம்பவில்லை என்று மக்ரோன் தனது திரும்பிவரும் விமானப்பயணத்துக்கு முன்பாகத் தெரிவித்தார்.

வியாழக்கிழமையன்று, மேர்க்கெல் அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு சற்று முன்னால், தண்டத் தீர்வைகள் குறித்த முடிவு வாஷிங்டனில் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டிருந்ததாக ஜேர்மன் அரசாங்க வட்டாரங்களில் இருந்து கூறப்பட்டது. மே 1 முதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான உருக்கு இறக்குமதிகளுக்கு 25 சதவீதமும் அலுமினிய இறக்குமதிக்கு 10 சதவீத அளவிலும் தீர்வை விதிக்கப்பட இருக்கிறது.

எல்லாவற்றையும் விட, ஜேர்மன் வர்த்தகத் துறை தீவிரமான பின்விளைவுகளுக்கு அஞ்சுகிறது. 2017 இல், அமெரிக்காவுக்கு ஐரோப்பாவில் இருந்தான உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியின் அளவு மொத்தம் 6 பில்லியன் யூரோக்களாகும், இதில் ஜேர்மன் உருக்கு ஏற்றுமதியின் பங்கு மட்டும் 1.7 பில்லியன் யூரோக்கள் ஆகும். வர்த்தக பதில்நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்கள் ஒரு விரியக் கூடிய வர்த்தகப் போருக்கு அச்சுறுத்துகிறது.

வருடத்திற்கு 112 பில்லியன் யூரோக்கள் அளவுக்கான ஏற்றுமதியுடன், சென்ற ஆண்டில் ஜேர்மன் தயாரிப்புகளுக்கான மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருந்தது, இது பிரான்சை விட சற்று அதிகம், 86 பில்லியன் யூரோ அளவுக்கான சீனாவை விடவும் மிக அதிகம். ஜேர்மன் வெளிநாட்டு முதலீட்டிலும் அமெரிக்கா தலைமையிடம் பிடித்திருக்கிறது, 2015 இல் இதன் அளவு 225 பில்லியன் டாலர்களாய் இருந்தது.

குறிப்பாக, ஜேர்மன் கார் நிறுவனங்கள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைவது குறித்து அஞ்சுகின்றன. உதாரணமாக, BMW அமெரிக்காவில் அது தயாரிக்கும் கார்களில் ஐந்தில் ஒரு பங்கினை சீனாவில் விற்பனை செய்கிறது. Daimler விடயத்திலும் இது பொருந்தும்.

இந்த மோதல்களின் பார்வையில், மேர்கெல் மற்றும் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு மிகவும் பதட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சலுகைகளுக்கான பிரதிபலனாக இழப்பீட்டு நடவடிக்கைகளை ட்ரம்ப் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, அமெரிக்க வெளியுறவுத் துறையில் ஐரோப்பாவுக்குப் பொறுப்பான அதிகாரியான வேஸ் மிட்சேல் ஒரு சில நாட்களுக்கு முன்பாக பேர்லின் பயணம் செய்து “ஒரு விதமான எச்சரிக்கை”யை தாக்கல் செய்துவிட்டுப் போனதாக Spiegel Online தெரிவிக்கிறது. ட்ரம்ப் ஜேர்மனி-ரஷ்யா இடையிலான Nord Stream 2 எரிவாயுக் குழாய் திட்டத்தை நிறுத்திவைக்கக் கோரலாம் என்பதோடு, ஜேர்மன் இராணுவ செலவினத்தை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் என்ற நேட்டோவின் இலக்கை நோக்கி விரைவாக அதிகரிக்கக் கோரக் கூடும். குறிப்பாக நேட்டோவிலான ஜேர்மனியின் பங்களிப்பு அதிகரிப்பது ட்ரம்புக்கு மிக முக்கியமானதாகும் என்று ட்ரம்ப்பின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டனும் பேர்லினுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

ஒரு பாரிய இராணுவ நவீனப்படுத்தல் திட்டத்திற்கு மாபெரும் கூட்டணி உடன்பட்டிருக்கிறது, வரும் ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை செலவினத்தை அது கிட்டத்தட்ட இரட்டிப்பாக்க விரும்புகிறது என்றாலும் கூட, 9 பில்லியன் யூரோ அதிகரிப்புக்குப் பின்னரும் இராணுவச் செலவினம் இப்போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.21 சதவீதமாகவே இருக்கிறது. பேர்லின் Nord Stream குழாய் திட்டத்தைக் கைவிட விரும்பவில்லை, அது இல்லையென்றால் ஜேர்மனியின் எரிசக்தி விநியோகப் பாதுகாப்பு அபாயத்திற்குட்படும் என்று அது கருதுகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் மோதல்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்பார்க்கவியலாத தன்மை ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால், ட்ரம்ப் மற்றும் மேர்க்கெல் இடையிலான பேச்சுவார்த்தை இறுதியாக எவ்வாறு விளையும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால் வாஷிங்டன் மற்றும் பேர்லின் இடையே பெருகிச் செல்லும் பதட்டங்கள் வெறுமனே தனிமனித விசித்திர ஆசைகளது விளைபொருளல்ல. அவற்றுக்கான காரணம் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியிலும் உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியிலும் தங்கியுள்ளது.

அமெரிக்கா அதன் பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வலிமையைக் கொண்டு சரிக்கட்டுவதன் மூலமாக அதன் உலக மேலாதிக்கத்தைப் பாதுகாக்க முனைந்து வந்திருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக, வாஷிங்டன் கிட்டத்தட்ட முடிவில்லாத வரிசையான போர்களை நடத்தி வந்திருக்கிறது. அவ்வாறு செய்கையில், மேலெழுந்து வரும் பொருளாதார சக்தியான சீனாவும் இரண்டாவது பெரிய அணுஆயுத சக்தியான ரஷ்யாவும் அதன் பார்வையில் பட்டிருக்கிறது. ஜனவரியில் வெளியிடப்பட்ட புதிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மூலோபாயமானது, இனியும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” மீது அல்ல மாறாக “பெரும்-சக்திகளிடையிலான போட்டி”யில் தான் கவனம் குவிக்கிறது.

இது, ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. அது இனியும் அமெரிக்காவின் நிழலில் தனது உலகளாவிய வணிகத்தைப் பின்தொடர முடியாது. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான சண்டையில் அமெரிக்காவுக்கு தன்னை கீழ்ப்படுத்திக் கொள்வதா? அமெரிக்காவில் இருந்து சுயாதீனமான ஜேர்மன் மேலாதிக்கத்தின் கீழான ஐரோப்பிய மகா சக்தி கொள்கையை அது நம்பியிருப்பதா? அல்லது சீனா அல்லது ரஷ்யாவை நோக்கி நெருக்கமாய் நகர்ந்து செல்வதா?

இந்தப் பிரச்சினைகள் தொடர்பான சச்சரவுகள், ஜேர்மனியின் கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்குள்ளும் ஓடுகின்றன. உலகின் மறுபங்கீட்டுக்கான சண்டையில் ஓரத்தில் நின்றிருக்காதபடி இருப்பதற்கு, ஜேர்மனி மீண்டும் இராணுவவாதத்திற்குத் திரும்ப வேண்டும், இராணுவ செலவினத்தை பாரிய அளவில் அதிகரிக்க வேண்டும் இன்னும் போரும் கூட நடத்த வேண்டும் என்பதில் அத்தனை முகாம்களுமே உடன்படுகின்றன.

உதாரணமாக, செய்திவாரயிதழான Der Spiegel இன் சென்ற பதிப்பின் பிரதான செய்திக் கட்டுரை ஜேர்மன் அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையில் தோல்வியடைந்ததாகக் குற்றம்சாட்டுகிறது: ”ஒரேயொரு படைவீரரை அனுப்புவதற்கும் முன்பாக நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதங்களில் முதலில் ஈடுபட்டாக வேண்டிய ஒரு நாடு மேற்கை எப்படி பாதுகாப்பது?”

வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்திற்காக வேலைசெய்கிற Constanze Stelzenmüller, Süddeutsche Zeitung இல் எழுதிய ஒரு விருந்தினர் பத்தியில், ஜேர்மன் அரசாங்கமானது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வாக்குறுதியளிக்கப்பட்டவாறு, “சம சக்திகளில் ஒன்றாக, தவிர்க்கமுடியாத இருக்கின்ற அமெரிக்காவுடனான நமது உறவை மீண்டும் ஸ்தாபிக்கும் பொருட்டு” உலகில் “தனது அதிகரித்த சக்திக்கேற்றவாறு” கூடுதல் பொறுப்பை இறுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறார்.