ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the brink of war: US and NATO prepare military strike on Syria

போரின் விளிம்பில்: அமெரிக்காவும் நேட்டோவும் சிரியா மீது இராணுவ தாக்குதலுக்கு தயாரிப்பு செய்கின்றன

Keith Jones
10 April 2018

அமெரிக்காவும் நேட்டோவும் சிரியா போரை மிகப் பெரியளவில் தீவிரப்படுத்துவதன் விளிம்பில் உள்ளன.இது அணு-ஆயுதமேந்திய ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

கூர்மையான உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளோடு சேர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர் கிளர்ச்சி அலைக்கு இடையே, ஆளும் உயரடுக்குகள் மத்திய கிழக்கில் தொடர்ச்சியான புவிசார் அரசியல் பின்னடைவுகளை மாற்றிவிடுவதற்காக மட்டுமல்ல, மாறாக அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் போரை ஒரு வழிவகையாக காண்கின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அனைத்துமே, அரசியல் ஸ்தாபகம் மற்றும் அரசுக்குள் நிலவும் நெருக்கடி மற்றும் கொந்தளிப்புக்கு இடையே அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தால் உலுக்கப்பட்டு வருகின்றன. சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவரது தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்தித்த அதே நாளில், FBI ட்ரம்பின் பிரத்தியேக வழக்கறிஞரின் அலுவலகம் மற்றும் வீட்டை சோதனையிட்டது, இது அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் சீறிக் கொண்டிருக்கும் மோதலைத் தீவிரப்படுத்தியது.

சிரியாவுக்கு எதிரான ஒரு போரில் மிகப் பெரியளவில் விளைவுகள் ஏற்படும். ரஷ்ய இராணுவ தலைவர் வலரி ஹெராசிமோவ் கடந்த மாதம் கூறுகையில், “எங்கள் இராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சம்பவத்தில், அதற்காக பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுவீசிகளுக்கு எதிராக ரஷ்ய ஆயுதப்படைகள் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கும்,” என்று அறிவித்து, சிரியாவில் ரஷ்ய துருப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் பதிலடி கொடுக்கப்படுமென சூளுரைத்தார்.

திங்களன்று ஹெராசிமோவ் மீண்டும் பின்வருமாறு எச்சரித்தார், “சிரியாவில் இராணுவ தலையீட்டை… முற்றிலும் ஏற்றுக் கொள்ளவியலாது என்பதோடு அது மிகவும் பேராபத்தான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை நாங்கள் மீண்டுமொருமுறை கூறிக் கொள்கிறோம்,” என்றார்.

இதுபோன்ற அறிக்கைகள், உலகம் எந்தளவுக்கு அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போரின் விளிம்பில் உள்ளன என்பதை அடிக்கோடிடுகின்றன என்பதோடு, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வையும் மனிதயின நாகரீகத்தையே கூட அச்சுறுத்துகின்றன.

சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல், அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு தான் இந்த தீவிரப்பாட்டிற்கான சாக்குபோக்காக உள்ளது. இந்த குரூரமான ஜோடிப்புகள் போர் தயாரிப்பிற்கு காரணமாக கூறப்படுகின்றன. அசாத் ஆட்சி அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை டமாஸ்கஸின் எல்லைப்புறங்களில் இருந்து விரட்டியடித்து, அமெரிக்கா தூண்டிவிட்ட உள்நாட்டு போரின் ஆரம்ப கட்டங்களுக்குப் பிந்தைய அதன் பலமான நிலையில் இருக்கின்ற நிலைமைகளின் கீழ் அது இதுபோன்றவொரு தாக்குதலை நடத்துவதற்கு என்ன சாத்தியமான காரணம் இருக்கக்கூடும்?

இரசாயன வாயு தாக்குதல் என்று குற்றஞ்சாட்டப்படும் இந்த ஊடக விஷமப் பிரச்சாரம், ரஷ்யாவுக்கு எதிரான இடைவிடாத ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் வரிசையில் உள்ளது—இந்த பிரச்சாரம், சமீபத்திய வாரங்களில் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் இரட்டை உளவாளி சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவர் மகள், சாலிஸ்பரில் இரசாயன விஷத்தால் தாக்கப்பட்டதற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறப்பட்ட வாதங்கள் மதிப்பிழந்து போய் ஒருசில நாட்களுக்குள் இந்த குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.

“கொடூரமான" குற்றங்களுக்கு சிரிய அரசுதான் குற்றவாளி என்று அறிவிக்கும், ரஷ்யா மற்றும் ஈரானை உடந்தையாக குற்றஞ்சாட்டியும், இதற்கெல்லாம் பொறுப்பானவர்கள் "பெரிய விலை" கொடுக்க வேண்டியிருக்கும் என்று சூளுரைத்தும் ட்ரம்ப் தொடர்ச்சியாக பல ட்வீட் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடங்களும், இராணுவ-உளவுத்துறை எந்திரமும், அரசியல் ஸ்தாபகமும் இரத்தவெறி பிடித்து அலைகின்றன. ட்ரம்பின் செயலிழந்த நிலையால் தான் சிரியாவில் வாஷிங்டனின் எதிரிகள் "துணிவு பெற்றிருப்பதாக" குடியரசு செனட்டர் ஜோன் மெக்கெயின் சாடினார். பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர் நான்சி பிலொசி சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு அவர் ஆதரவை சமிக்ஞை செய்த அதேவேளை, ட்ரம்ப் நிர்வாகம் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியைத் தூக்கி வீச "இறுதியாக ஒரு சாதுரியமான, பலமான மற்றும் நிலையான மூலோபாயத்தை வழங்க" வேண்டுமென கோரினார்.

பிரான்சும் பிரிட்டனும், கேட்டுக் கொள்ளப்பட்டால், அவை சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் இணைவதாகவும், இல்லை அவர்களின் சொந்த தாக்குதல்களை கூட நடத்தலாமென தெரிவித்துள்ளன. "பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முதலில் நடத்தாமல் இருக்க" சிரியா மீது அமெரிக்கா தாக்குதலை நடத்த வாஷிங்டன் அழுத்தத்தை உணர்கிறது என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டது.

அமெரிக்க துருப்புகள் விரைவில் சிரியாவிலிருந்து "நாட்டுக்கு திரும்பும்" என்று ட்ரம்ப் கூறியதற்கு எதிராக பென்டகன், சிஐஏ, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சி தலைமையின் பெரும்பான்மையினர் வெற்றிகரமாக அக்கூற்றை பின்வாங்கச் செய்த போது, கடந்த வாரம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மிகவும் உயர்மட்டங்கள் உட்பட அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் கொந்தளிப்பான பிரச்சினைகளைக் கண்டது. அதுபோன்று பின்வாங்குவது ரஷ்யாவுக்கு ஆதாயமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை முறிப்பதன் மூலம் ஈரான் மீது பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களைத் தீவிரப்படுத்துவதற்கான ட்ரம்பின் திட்டங்களையும் குறுக்காக வெட்டும் என்று அப்பட்டமாக ட்ரம்புக்குக் கூறப்பட்டது.

விளாடிமீர் புட்டினும் அவர் தலைமை கொடுக்கும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் ஆட்சியும் நீண்டகாலமாகவே வாஷிங்டனுடன் சமரசத்திற்கு முனைந்துள்ளன. ஆனால் அடுத்தடுத்து வந்த நிர்வாகங்களின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியமோ ரஷ்யாவை அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு அடிபணிய செய்தால் மட்டுமே அது திருப்தியடையும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

அதன் எல்லைகளில் நேட்டோவின் விரிவாக்கத்தையும், அண்டை நாடுகளில் அமெரிக்கா ஊக்குவிக்கும் "வண்ணப் புரட்சிகளையும்", வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, பால்கன்கள் மற்றும் மத்திய ஆசியா எங்கிலும் ஒரு கால்-நூற்றாண்டு அமெரிக்க போர்களை முகங்கொடுக்கும் மாஸ்கோ, உக்ரேன் மற்றும் சிரியாவில் தலையீடு செய்து வாஷிங்டனின் திட்டங்களைத் தொந்தரவு படுத்தியதை வாஷிங்டனும் வோல் ஸ்ட்ரீட்டும் பொறுத்துக் கொள்ளவியலாததாக காண்கின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்களின் நிஜமான காரணங்களுக்கும் அமெரிக்க அரசியலில் ரஷ்ய "தலையீடு" அல்லது விஷ வாயு தாக்குதல் என்ற குற்றச்சாட்டு ஆகியவற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய ஒரு கால் நூற்றாண்டில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் வீழ்ச்சிகண்டு வரும் உலகளாவிய பொருளாதார இடத்தை ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலமாக திரும்ப அடைய முனைந்தது. அமெரிக்கா, உலக மேலாதிக்கத்திற்கான அதன் வேட்கையில், லிபியா மற்றும் ஈராக் போன்ற ஒட்டுமொத்த நாடுகளையும் தரைமட்டமாக்கி உள்ளது. ஆனால் வாஷிங்டனின் ஒருபோதும்-முடிவில்லா போர்கள் அதன் வீழ்ச்சியை மாற்றிவிடவில்லை. அதற்கு பதிலாக, அவை ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான இராணுவ-மூலோபாய தாக்குதல்களாகவும், அமெரிக்கா ஒரு புதிய வல்லரசு மோதல் சகாப்தத்தில் ஈடுபட்டுள்ளது என்று வாஷிங்டனிடம் இருந்து வரும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாகவும் உருவெடுத்துள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் எழுச்சி ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால் தீவிரப்படுத்தபடுகிறது. “உலகளாவிய வளர்ச்சி கதையில் வெடிப்பு வடிவங்கள், முதலீட்டாளர்களின் ஆரவாரம்,” என்று தலைப்பில் திங்களன்று பிரசுரித்த ஒரு கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எச்சரிக்கையில், “நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய ஒருமித்த வளர்ச்சி ஒரு ஒருமித்த தேக்கமாக மாறக்கூடும் என்ற அச்சங்களுக்கு இடையே, முதலீட்டாளர் நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது,” என்று குறிப்பிட்டது.

மிக முக்கியமாக, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை நசுக்க உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆளும் வர்க்கம் போரை மிகவும் தகுதியான வழிவகையாக பார்க்கிறது. “வெளிநாட்டு பிரச்சாரங்களை" மற்றும் "போலி செய்திகளை" ஒடுக்குவதற்கு மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்னும் அதிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இடையே, செவ்வாயன்று பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் காங்கிரஸ் சபை முன்னால் விசாரணை விளக்கம் அளிக்க உள்ளார். ஒரு மிகப் பெரிய புதிய இராணுவ மோதலின் பின்புலத்தில், அரசியல் எதிர்ப்பைத் தடுக்க அழைப்புகள் இரட்டிப்பாக்கப்படும்.

ஆனால் துல்லியமாக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கம் தான் ஏகாதிபத்திய போருக்கு நேரெதிரான நடவடிக்கையை பிரதிநிதித்துவம் செய்கிறது. வர்க்கப் போராட்டம் இன்னும் இன்னும் அதிகமாக உலகெங்கிலும் தொழிலாளர்களின் பொதுவான நலன்களை எடுத்துக்காட்டி வருகிறது. உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (ICFI) தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போருக்கு எதிரான போராட்டத்தை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைத்து இந்த இயக்கத்தை அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்க போராடி வருகின்றன.