ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Major strikes in France challenge Macron’s right-wing reforms

பிரான்சின் பொது வேலைநிறுத்தம் மக்ரோனின் வலது-சாரி சீர்திருத்தங்களை சவால் செய்கிறது

By Peter Schwarz and Eric London
3 April 2018

இரயில்பாதை தொழிலாளர்கள் 2ம் தேதி இரவு வேலைகளை நிறுத்தியதன் பின்னர், இன்று காலை பிரான்சின் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை தொடங்கின. அரசுக்கு சொந்தமானதாய் இருக்கும் SNCF (பிரெஞ்சு தேசிய இரயில் நிறுவனம்) ஐ தனியார்மயமாக்குவதற்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முன்மொழிவை எதிர்க்கும் இரயில்வண்டித் தொழிலாளர்கள், இன்றுவரையான காலத்தில் மக்ரோனுக்கும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலான மிகப்பெரும் பலப்பரிசோதனையாக கூறப்படுகின்ற ஒன்றுக்கு தலைமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Le Figaro இந்த வேலைநிறுத்தத்தை “இரயில்பாதை யுத்தம்” என்று பெயரிட்டதென்றால், Le Monde, “இரயில்வண்டி, விமானம், மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் மீண்டும் ஆற்றல் பெற்றிருக்கின்றனர்” என்று கவலை தொனிக்க எழுதியது. தொடர்ந்து எழுதியது: “ஏப்ரல் 3 செவ்வாயன்று தொடங்கப்பட்ட ஒரு வேலைநிறுத்த இயக்கத்தினால் ஏராளமான துறைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் அவர்களது குறைகள் ஏராளமாய் இருக்கின்றன: இரயில்பாதை தொழிலாளர்களுக்கு SNCF சீர்திருத்தம், ஏர் பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய அதிகரிப்புக்கான கோரிக்கைகள்”.

வேலைநிறுத்த அழைப்பு பரவலாக பின்பற்றப்படுமென SNCF எதிர்பார்க்கிறது. உயர்-வேக TGV இரயில்வண்டிகளில் எட்டுக்கு ஒன்று மட்டுமே பிரான்ஸ் எங்கிலும் ஓடும் என்றும், பிராந்திய இரயில் வண்டிகளில் ஐந்தில் ஒன்று மட்டுமே ஓடும் என்றும் அது எதிர்பார்க்கிறது. பத்துக்கு எட்டு நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தை பின்பற்றி வருவதாக ஆரம்பகட்ட செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட இருக்கின்றன, அத்துடன் துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சார பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலையத் தொழிலாளர்களும் வேலைகளை நிறுத்தியிருப்பதால் மின்சாரப் பராமரிப்பும் குப்பைகள் சேகரிப்பும் மிகக் குறைவாகவே இருக்கும்.

இந்த வேலைநிறுத்தம் “பரவலாக பின்பற்றப்படக் கூடும்” என்பதில் Le Parisien கவலை கொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் ஏற்கனவே Hauts-de-Seine, Gironde மற்றும் Rennes இல் நடைபெற்று வரும் அஞ்சல்துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுடன் இணைப்புக் காணக்கூடும் என்பது குறித்த கவலைகள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுக்குள்ளாக அதிகரித்து வருகின்றது. சில்லறை விற்பனை நிறுவனமான Carrefour தொழிலாளர்களும் சென்ற வார இறுதியில் வேலைவெட்டுகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர்.

CGT, Unsa, CFDT மற்றும் SUD ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் தனியார்மயமாக்க ஆலோசனைகளுக்கு எதிரான வேலைத்தள நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. தொழிற்சங்கங்கள், உறுப்பினர்களிடம் இருந்தான கடுமையான அழுத்தத்தின் கீழ், ஒரு முழுமையான காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விட மறுக்கின்றபோதும், 28 ஜூன் வரையில் SNCF இல் இரண்டுநாள் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுவது பின் மூன்று நாட்களுக்கு வேலைசெய்வது என்ற வகையில் போராடவிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் இதனை, எதிரியை களைத்து ஓயச் செய்யும் தந்திரமாகவும் (attrition tactic) வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளவர்களை பாதுகாப்பதற்கான ஒரு வழிவகையாகவும் -பிரான்சில் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு வேலைநிறுத்த ஊதியம் கிடையாது- சித்தரிக்கின்றன.

ஜேர்மன், பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிய முதலாளித்துவங்களும் அதிகரித்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு முகம்கொடுத்து நிற்கின்ற நிலையில், இந்த வேலைநிறுத்தம் ஐரோப்பாவெங்கிலும் கவலைகளை எழுப்பியிருக்கிறது. தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பின்பனிக்கால “எச்சரிக்கைப் போராட்டங்களின்” ஒரு வரிசைக்கு தாயகமாகி இருந்த ஜேர்மனியில், வாரப் பத்திரிகையான Die Zeit, ”மக்ரோன் அவருக்கு முன்பு பதவியில் இருந்த பலரைப் போலவே வீதிகளில் இருந்தான எதிர்ப்புக்கு தலைவணங்கி, [இரயில்பாதை தனியார்மயமாக்கத் திட்டங்கள்] வெறும் விருப்பங்களாக இருப்பதைத் தாண்டி மேலே போகப்போவதில்லை என்றாகப்போகிறதா, அல்லது பிரான்ஸ் உண்மையாகவே மாறவிருக்கிறதா” என்பதை பிரெஞ்சு வேலைநிறுத்தம் தீர்மானிக்கும் என்று எழுதியது.

“வரவிருக்கும் நாட்களில் இரயில்வே நிறுவனத்தின் சீர்திருத்தத்தை விடவும் மிக அதிகமானவை” பணயத்தில் இருக்கப் போகிறது என ஜேர்மனியின் Handelsblatt கருத்திட்டது. “இரயில்வே சீர்திருத்தத்தின் ஒரு குறைந்தளவிலான தீவிர வடிவமோ அல்லது அதனை முற்றிலுமாக நிறுத்தி விடுவதோ, ஓய்வூதியத் திட்டத்திலான ஒரு திறம்பட்ட சீர்திருத்தம் உள்ளிட்ட மக்ரோனின் மற்ற திட்டங்களுக்கும் முடிவு கட்டி விடும்” என்று வேலைநிறுத்தம் செய்பவர்கள் நம்புகின்றனர். “மாறாய், வேலைநிறுத்தம் ஒரு சில நாட்களில் உருக்குலைந்து போகுமானால், பிரான்ஸை நவீனப்படுத்துவதற்கு மக்ரோனுக்கு பாதை திறக்கப்படுவதாக இருக்கும்.”

ஐக்கிய இராஜ்ஜியத்தில் -இங்கு ஆசிரியர்கள் ஒரு தேசிய வேலைநிறுத்தத்திற்கான வாக்கெடுப்புக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல வாரங்களாக வேலைநிறுத்தத்தில் இருக்கின்றனர்- ஃபைனான்சியல் டைம்ஸ் பிரான்சின் வேலைநிறுத்த அலையை “ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சீர்திருத்த திட்டநிரலுக்கான மிகப்பெரும் பலப்பரிசோதனை” என்று அழைத்தது.

மக்ரோனின் “சீர்திருத்த” மற்றும் “நவீனமயமாக்க” திட்டங்கள் என்பதன் பொருள் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் பல தசாப்த கால கடுமையான போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்திருந்த சமூகநல வேலைத்திட்டங்களையும் உரிமைகளையும் அழித்தொழிப்பது என்பதாகும்.

சென்ற ஆண்டில் மக்ரோன் அரசாங்கம் தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் ஒன்றை நிறைவேற்றியது, இது பாரிய வேலையிழப்புகளுக்கு பாதைதிறப்பதோடு ஆபத்தான வேலை நிலைமைகளை இன்னும் விரிவுபடுத்துகிறது. இந்தச் சட்டத்திற்கு எழுந்த வெகுஜன எதிர்ப்பை மக்ரோனும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளும் தொழிற்சங்கங்களின் உதவியுடனும் போலிஸின் தாக்குதல்களைக் கொண்டும் ஒன்றுபடவிடாமல் சிதறடித்து ஒடுக்கின.

மக்ரோனின் சமீபத்திய தனியார்மயமாக்க முயற்சிகள் தான் இதுவரை வந்தவற்றில் மிகத் தாட்சண்யமற்றவை ஆகும். SNCF ஐ மறுகட்டமைப்பு செய்வதே முக்கிய திட்டமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பில் இருந்து பாதுகாப்பையும் முன்கூட்டி ஓய்வு பெறுகின்ற தெரிவையும் -இருபதாம் நூற்றாண்டின் பாதையில் ஐரோப்பாவிலான வர்க்கப் போராட்டங்களில் வென்றதன் தெளிவான அடையாளம் கொண்டிருப்பவை- வழங்குகின்ற “ஊழியர் சட்டப்பிரிவு” ஐ அகற்றுவதற்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கம் முனைந்து வருகிறது.

அரசாங்கம் அரசின் இரயில்வே நிறுவனத்தை, நெட்வொர்க், இரயில் செயல்பாடுகள், இரயில்வே நிலையங்கள் என மூன்றுவகையான பங்குதாரர் நிறுவனங்களாகப் பிரித்து அதனை சர்வதேசப் போட்டிக்காகத் திறந்து விட விரும்புகிறது. ஊழியர்களின் முதுகுக்குப் பின்னால் SNCF இன் செலவினம் 27 சதவீதம் வெட்டப்பட்டு, அதன் கடன் 50 பில்லியன் யூரோ (61 பில்லியன் டாலர்) குறைக்கப்படவிருக்கிறது.

இந்த வேலைநிறுத்தம் 1995 நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது, அச்சமயத்தில் இரயில்வே தொழிலாளர்கள் நாடெங்கிலும் மூன்று வாரங்களுக்கு மூடச் செய்து பழமைவாத பிரதமரான அலன் ஜூப்பே முன்வைத்த ஒரு ஓய்வூதியச் சீர்திருத்தத்தை திரும்பப் பெறச் செய்தனர். இந்த முறை, தொழிலாளர்களுடன் சேர்ந்து சம்பள ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றுள்ளனர்.

இரயில்வே தொழிலாளர்கள் மீதான அவரது தாக்குதலின் அதேசமயத்தில், பொதுத் துறை வேலைகளை கணிசமாக வெட்டுவதற்கும், வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்கள் கடுமையான நிதி அபராதங்களது அச்சுறுத்தலின் கீழ் புதிய வேலையை ஏற்றுக் கொள்வதற்கு நிர்ப்பந்தம் செய்யும் விதமாக வேலைவாய்ப்பின்மை காப்பீட்டில் சீர்திருத்தம் செய்வதற்கும் திட்டமிட்டு வருகிறார். பல்கலைக்கழக கல்வி மிகவும் செலவுபிடிப்பதாக மற்றும் கிடைக்கக் கடினமானதாக ஆகும் வகையிலான ஒரு கல்வி மற்றும் பயிற்சி சீர்திருத்தம் ஒன்றையும் அரசாங்கம் முன்மொழிகிறது.

மக்ரோனின் திட்டங்களை எதிர்த்து மார்ச் 22 அன்று பல நூறாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

ஏர் பிரான்சிலும் 6 சதவீத ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்த நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புனித வெள்ளியன்று நடந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தின் பின்னர், தொழிற்சங்கங்கள் இன்றும், ஏப்ரல் 7, 10, மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் மேலதிக வேலைநிறுத்தங்களுக்கு அழைத்துள்ளன.

நீண்ட தூர மற்றும் மத்திய தூர விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி இன்று இரத்து செய்யப்படலாம், அதேபோல குறைந்த தூர விமானங்களில் 15 சதவீதம் இரத்து செய்யப்படலாம் என ஏர் பிரான்ஸ் எதிர்பார்க்கிறது. இரயில் போக்குவரத்தும் பெருமளவுக்கு முடங்கியிருக்கும் என்பதால், வீதிகளில் பெரும் குளறுபடியும் போக்குவரத்து நெரிசல்களும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மக்ரோனும், அவரது அரசாங்கமும், அவரது LRM கட்சியும் வேலைநிறுத்த இயக்கத்தை எதிர்த்து நிற்பதற்கான தமது உறுதியை இதுவரை வெளிக்காட்டி வந்திருக்கின்றனர். “இரயில்வண்டி பயணிகளுக்கு கடுமையான பின்விளைவுகளைக் கொண்டுவரக் கூடிய ஒரு மிகப் பரவலான, வலிமையான சமூக இயக்கத்தை நாங்கள் எதிர்பாக்கிறோம்” என்று அரசாங்க ஆதாரம் ஒன்று தெரிவித்ததாக Le Point பத்திரிகை மேற்கோளிடுகிறது. “நாம் நமது தேர்ந்தேடுத்த பாதையை உறுதியாகத் தாங்கி நிற்பதை இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.”

மார்ச் 14 அன்று, SNCF சீர்திருத்தத்தை சடுதியில், அவசியமானால், உத்தரவாணையின் மூலமாக, அமலுக்குக் கொண்டுவர அனுமதிக்கின்ற ஒரு வழிவகைச் சட்டத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது. அரசாங்கக் கட்சி பெரும்பான்மை கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தில் முதலில் இது நிறைவேற்றப்பட இருக்கிறது.

அரசாங்கம் அதன் தாக்குதல்களை நடத்துவதற்கு எல்லாவற்றையும் விட தொழிற்சங்கங்களையே நம்பியிருக்கிறது. தொழிற்சங்கங்களுக்கு, சென்ற ஆண்டின் தேர்தலில் அவை ஆதரவு அளித்திருந்த ஜனாதிபதி மக்ரோனுக்கு தொந்தரவு கொடுப்பதற்கு எந்த ஆர்வமும் இல்லை. தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் நிறைவேற்றப்படுவதில் இவை உதவின என்பதோடு, தொழிலாள-வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களை பிளவுபடுத்துவதிலும் சிதறடிப்பதிலும் பல தசாப்த கால அனுபவம் கொண்டவை.

ஆயினும், வளர்ந்து செல்லும் இயக்கத்தை எதிர்த்து நிற்குமளவுக்கு மக்ரோனுக்கு வலிமையிருக்கிறதா என சில வருணனையாளர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்ட Die Zeit கட்டுரை “அவரது திட்டநிரலுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு, அவரது தேர்தல் முடிவுகள் காட்டுமளவுக்கு வலிமையானதாக இல்லை” என்பதை சுட்டிக்காட்டியது.

2017 ஜனாதிபதித் தேர்தலின் முதல்சுற்றில் “75 சதவீதம் பேர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்” என்பதைக் குறிப்பிட்ட அந்த செய்தித்தாள், அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் “அவரது கட்சியான La Republique en Marche க்கு” “பிரான்சின் பெரும்பான்மைவித தேர்தல் அமைப்புமுறையின் காரணத்தினாலும் குறைந்த வாக்குப்பதிவின் அளவினாலும் ஒரு அறுதிப் பெரும்பான்மைக்கு தகுதியான வாக்காளர்களில் வெறும் 13 சதவீதத்தின் ஆதரவு மட்டுமே” அவசியமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தி விடுவதில் வெற்றி கண்டு விடுவது எந்தவிதத்திலும் நிச்சயமானதில்லை. பிரான்சின் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசத் தாக்குதலின் —அமெரிக்காவில் ஆசிரியர்கள், பிரிட்டன், இலங்கை, அல்ஜீரியா, துனிசியா மற்றும் கென்யாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஜேர்மனியில் தொழிற்துறை மற்றும் பொதுத்துறை தொழிலாளர்கள், ஸ்பெயினில் அமசன் தொழிலாளர்கள், மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகள்— பகுதியாகும்.

சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் பாதுகாப்பான பாதைகளுக்குள் திருப்பிவிடுவதில் போலி-இடதுகள் தலைமையான பாத்திரம் வகிக்கிறனர். பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியானது, சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமையின் பின்னால், அதாவது ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ் மக்ரோனின் இப்போதைய சுற்றுத் தாக்குதல்களுக்கான மேடையமைத்துத் தந்த ஊதியங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களிலான வெட்டுக்களை நடத்திய அதே கட்சியின் பின்னால், தொழிலாளர்கள் “ஒன்றுபடுவதற்கு” கோரும் ஒரு பொது அறிக்கையை மார்ச் 19 அன்று விடுத்தது. “[அராஜகவாத] Libertarian Alternative முதல் [ஜோன் லூக் மெலோன்சோனின்] அடிபணியா பிரான்ஸ் இயக்கம் ஊடாக [2017 சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்] பெனுவா அமோன் வரையிலும் பல்தரப்பட்ட சக்திகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிற... ஒரு அரசியல் விண்ணப்பத்திற்கான முன்முயற்சியை” எடுத்ததற்காக NPA இன் Léon Crémieux அவரது கட்சியைப் பாராட்டினார்.

இது தொழிலாளர்களின் வளர்ந்து செல்லும் வேலைநிறுத்த இயக்கத்திற்கு மரண தண்டனையாக இருக்கும். எங்கெங்கினுமான தொழிலாளர்களின் கோரிக்கைகள், அவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் மட்டுப்படுத்தும் தேசியவாத முன்னோக்கைத் தாண்டி வந்து தமது போராட்டங்களை சோசலிசத்துக்கான ஒரு சர்வதேச இயக்கத்துடன் இணைப்பதற்கான சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை கட்டுவதன் மூலமாக மட்டுமே பூர்த்தியாகும்.