ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US, Britain and France prepare onslaught against Syria

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸூம் சிரியாவுக்கு எதிராக கடுந்தாக்குதலுக்கு தயாராகின்றன

Statement of the World Socialist Web Site Editorial Board
12 April 2018

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை ஒரு ட்வீட் சேதியில், சிரிய ஆட்சி அகற்றுவதற்காக ஏழு ஆண்டுகால யுத்தத்தின் பெரும் விரிவாக்கத்திற்கு அச்சுறுத்தியதுடன், "சிரியாவிற்கு எதிரான அனைத்து ஏவுகணைகளையும் சுடுவதற்கு ரஷ்யா உறுதி கூறுகிறது. ரஷ்யாவுக்குத் தயாராகுங்கள், அவர்கள் மெதுவாக, புதிதாக, 'சாதுர்யமாக!' நுழைந்து கொண்டிருக்கிறார்கள்” என அறிவித்தார்.

ட்ரம்பின் அச்சுறுத்தல் சிரியாவுக்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான நடவடிக்கையின் குற்றவியல் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி தூண்டுதலற்ற ஓர் ஆக்கிரமிப்பைத் தொடங்க இருக்கிறார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் அவற்றின் சூறையாடும் போர் நோக்கங்களை நியாயப்படுத்த தடையின்றி பொய்யுரைக்கின்றன என்பதோடு, மிகவும் நம்பவியலாத அறிக்கைகளும் கூட பத்திரிகைகளால் சவால் செய்யப்படாமல் வெளியிடப்படுகின்றன.

சிரியா மீது திட்டமிடப்படும் இத்தாக்குதல், ஏப்ரல் 7 அன்று அசாத் ஆட்சி நடத்திய ஓர் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு விடையிறுப்பாகும் என்ற அமெரிக்காவின் கூற்றுகளுக்கு, எந்தவொரு சுதந்திரமான ஆதாரமும் இல்லை. அத்தாக்குதலை நேரில் பார்த்ததாக கூறுபவர்கள், சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான பினாமிப் படைகளாகும்.

அமெரிக்க மனிதாபிமான பாசாங்குத்தனங்கள் எந்தவொரு ஆழமான ஆய்விற்கும் தாக்குப் பிடிக்காது. காசாவில் இஸ்ரேலினால் நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையும் அமெரிக்கா ஆதரித்துள்ளதுடன், நடைமுறையளவில் மேற்கத்திய ஊடகங்களால் அது கண்டு கொள்ளாமல் கைவிடப்பட்டது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய அரபு கூட்டாளியான சவூதி அரேபியா யேமனில் ஒரு இனப்படுகொலை போரை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் அட்டூழியத்தால் மத்திய கிழக்கு முழுவதிலும் ஒட்டுமொத்த சமூகங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் இல்லாமல் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் நிதியுதவி வழங்கிய அல் கொய்தா தொடர்பிலான கிளர்ச்சியாளர்களை அசாத் ஆட்சி விரட்டியடிக்கும் விளிம்பில் இருக்கையில், அது எதற்காக ஒரு இரசாயன தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதற்கு எந்தவொரு நம்பகமான விளக்கமும் கூட வழங்கப்படவில்லை.

ஆனால் அதுபோன்றவொரு சம்பவத்தை நடத்துமாறு அல்லது இட்டுக்கட்டுமாறு அமெரிக்கா அதன் பினாமிகளுக்கு சொல்லி இருக்கலாம் என்பதற்கு அங்கே நிறைய காரணங்கள் உள்ளன. வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் டூமாவில் நடந்ததாக கூறப்பட்ட தாக்குதல் குறித்து நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம் குறிப்பிடுகையில், ட்ரம்ப் "சிரியாவில் ரஷ்யா தலையெடுக்க விட்டுத் தருகிறார்" என்றும், அந்நாட்டில் ஈரான் "கால் பதிக்க" அனுமதிக்கிறார் என்றும் குறைகூறியது. டைம்ஸ், “இது எவ்வாறு அமெரிக்க நலன்களுக்கு சேவையாற்றும்?” என்று வினவியது.

புதன்கிழமை காலை ட்ரம்ப் அவரின் ட்வீட்டரில் வெடித்தெழுந்த வெறும் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், அவர் அடுத்தடுத்த ட்வீட் சேதிகளில் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் வாஷிங்டனின் அரசியல் சக்திகளால் முடுக்கி விடப்படுவதாக ஒப்புக் கொண்டார். “ரஷ்யா உடனான பெரும்பாலான விரோத உணர்வு போலி & மோசடி ரஷ்ய விசாரணையால் ஏற்படுத்தப்படுகிறது, ஜனநாயகக் கட்சியின் அனைத்து விசுவாசிகள் அல்லது ஒபாமாவுக்காக செயல்பட்டவர்கள் தலைமை கொடுத்தனர்,” என்று ட்ரம்ப் எழுதினார்.

வாஷிங்டனை சுற்றி வளைத்து வரும் அதிகரித்தளவில் கடுமையான இந்த குறுங்குழுவாத சண்டைக்குப் பின்னால், வெளியுறவு கொள்கை மீதான கணிசமான விரிசல்கள் உள்ளன, இவை பல ஆண்டுகளாக கொதித்துக் கொண்டிருக்கும் சிரியா மோதலை மையத்தில் வைத்துள்ளன.

2011 இல் லிபியாவில் மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து தூக்கி வீசியதைத் தொடரும் முயற்சியாக, 2013 இல், சிரிய ஜனாதிபதி அசாத்திற்கு எதிராக ஆட்சி மாற்றம் நடத்த அமெரிக்கா ஒரு முழு-அளவிலான இராணுவ தாக்குதலின் விளிம்பில் இருந்தது. ஆனால் அதிகரித்த மக்கள் எதிர்ப்புக்கு இடையே, அத்தாக்குதலில் பிரிட்டன் பங்கெடுப்பதை அங்கீகரிக்கும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் தோல்வியடைந்த பின்னர், அமெரிக்கா இறுதியில் அதிலிருந்து பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டது. சிரியா மீதான ஒரு நேரடி தாக்குதலுக்குப் பதிலாக, அமெரிக்கா சிரியாவின் இரசாயன ஆயுத கிடங்குகளை அழிக்க ரஷ்யாவின் மத்தியஸ்தத்துடன் பேரம்பேசப்பட்ட ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டது.

அந்த உடன்படிக்கைக்குப் பின்னர் உடனடியாக, செப்டம்பர் 2013 இல் வழங்கிய ஓர் உரையில், உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு எச்சரித்தார்:

ஆனால் போர் தள்ளிப் போடப்பட்டிருப்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறை, தவிர்க்கவியலாத நிலைமையை குறைத்துவிடவில்லை. வாஷிங்டனில் இருந்து போர்வெறியூட்டும் அறிக்கைகள் வருகின்ற நிலையில், “இராணுவ தெரிவும் மேசையில் இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. இராணுவத் தாக்குதலுக்கான ஒரே இலக்காக இருப்பது சிரியா மட்டுமல்ல. சிரியாவுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகள் ஈரானுடன் ஒரு மோதலுக்கு களம் அமைக்கும். இதற்கும் மேலாக, உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முனைவின் தர்க்கம், ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் செல்கிறது.

இந்த எச்சரிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் "சிவப்பு கோட்டை" நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னடைவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் மிகப் பெரிய சங்கடமாக உணர்ந்தார்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடவில்லை.

இப்போது, சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய பினாமிகள், சிரிய அரசாங்கம், ஈரான் மற்றும் ரஷ்யாவின் கரங்களில் தோல்வியை முகங்கொடுக்கின்ற வேளையில், அமெரிக்க உளவுத்துறை முகமைகளோ அவற்றின் நீண்டகால போர் திட்டங்களை நியாயப்படுத்த பல்வேறு சாக்குபோக்குகளை இட்டுக்கட்டுகின்றன.

ஏப்ரல் 7 இல் சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கள், பிரிட்டிஷ் மண்ணில் ரஷ்யா ஓர் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது என்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வாதங்கள் பொறிந்து போன ஒரு சில நாட்களுக்குப் பின்னர் வந்துள்ளது. சிரியாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களை தாக்கிய சரீன் வாயுவை விட பத்து மடங்கு மிகவும் சக்தி வாய்ந்த அந்த நரம்பு வாயு கண்டறியப்படவே இல்லை என்பது மட்டுமல்ல, மாறாக பகிரங்கமான அறிக்கைகளில் குறிப்பிடுவதையும் பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். சாலிஸ்பரி மற்றும் டூமா சம்பவங்கள், ஒட்டுமொத்த ரஷ்ய-விரோத பிரச்சாரத்துடன் சேர்ந்து, சிரியா மீதான ஓர் இராணுவ தாக்குதலை மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக தீவிரப்பாட்டை சட்டபூர்வமாக்கும் நோக்கில் மிகவும் கவனமாக முடுக்கிவிடப்பட்ட பிரச்சார தாக்குதலின் பாகமாகும்.

பிரான்ஸ், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஈராக்கில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்தது, இது புஷ் நிர்வாகம் "பழைய ஐரோப்பா" என்று சாடுவதற்கும் மற்றும் பிரெஞ்சு பிரியர்கள் என்பதை "சுதந்திர பிரியர்கள்" என்று பெயர் மாற்றுமாறு அழைப்புவிடுவதற்கும் இட்டுச் சென்றது. அதற்கு பின்னர், பிரான்ஸ் முற்றிலும் அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதுடன், மத்திய கிழக்கை துண்டாடுவதில் பங்கெடுப்பதன் மூலமாக ஒரு காலனித்துவ சக்தியாக தன்னை மறுஸ்தாபகம் செய்து கொள்ள பேரார்வத்துடன் உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், பிரான்ஸ் "அதன் கடமையைச் செய்ய" தயாராக இருப்பதாக இப்போது அறிவிக்கிறார்.

போருக்கான புவிசார் அரசியல் நோக்கங்களே எதற்கும் குறைவின்றி உள்நாட்டு அரசியல் பரிசீலனைகளில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. போருக்கு தயாரிப்பு செய்து வரும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் அவற்றின் ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடிகளால் நொருங்கிப் போயுள்ளன என்பதோடு, தொழிலாள வர்க்க இயக்கமும் வளர்ந்து வருகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் வெறுக்கப்படும் நவ-தாராளவாத கொள்கைகள், போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுடன் மோதலை முகங்கொடுத்து, அவர் அரசாங்கம் சிக்கலில் சிக்கி உள்ள நிலையில் தான், அவர் அமெரிக்க போர் முனைவுக்கான தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளார். மாதக் கணக்கில் பின்புற அறைகளில் ஒருங்கிணைந்து உடன்படிக்கைகளை எட்டிய ஜேர்மனியின் வலதுசாரி மாபெரும் கூட்டணி அரசாங்கம், மிகக் குறைந்தளவே மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட்-ஆணைகளால் நெருக்கடியில் வீசப்பட்டுள்ள பிரிட்டிஷ் அரசு, அனைவராலும் வெறுக்கப்படும், அதிகாரமோ அல்லது சட்டபூர்வத்தன்மையோ இல்லாத ஒரு பிரதம மந்திரியால் தலைமை கொடுக்கப்படுகிறது. சிரியாவில் பிரிட்டிஷ் சம்பந்தப்படுவது மீது மக்கள் எதிர்ப்பு குறித்தும் மற்றும் 2013 இல் பிரதம மந்திரி டேவிட் கமரூனின் தோல்வி போல மீண்டும் வருமோ என்றும் தெரேசா மே மிகவும் பயந்துள்ளார் என்பதால் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு இல்லாமலேயே ஒரு தாக்குதலுக்கு முன்நகர்வதற்கான திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

வாட்டர்கேட் நெருக்கடி மற்றும் நிக்சனின் நிர்பந்திக்கப்பட்ட இராஜினாமா ஆகியவற்றிற்குப் பிந்தைய மிகப் பெரிய அரசியல் நெருக்கடியில் அமெரிக்கா சிக்கி உள்ளது, ஆசிரியர்களின் அதிகரித்து வரும் வேலைநிறுத்த அலை மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதிலும் அதிகரித்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றால் இது தீவிரமடைந்துள்ளது.

ரஷ்யா உடனான ஒரு மோதலை முன்னெடுக்க நேட்டோ முண்டியடித்து முன்நகர்வது, அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் நடைமுறையில் போர் தொடங்குவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது, இது இணையத்தை அவை தணிக்கை செய்யவும் மற்றும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை சட்ட விரோதமாக்குவதற்கான அவர்களின் முனைவைத் தீவிரப்படுத்துவதற்கும் ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்படும். நேட்டோ அதிகாரங்கள், எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளதோ அதேயளவுக்கு குற்றகரமான ஒரு போர் காய்ச்சலின் பிடியில் உள்ளன. அவற்றின் உள் நெருக்கடிகள் தீவிரமடைகையில், அவற்றின் இராணுவ ஆத்திரமூட்டல்கள் இன்னும் அதிகமாக பட்டவர்த்தனமாகும்.

புட்டின் அரசாங்கமும் அதன் பங்கிற்கு, அமெரிக்காவை எதிர்கொள்ள அழுத்தமளித்து வரும் இராணுவத்தினுள் இருக்கும் கூறுபாடுகளுக்கும் மற்றும் பொருளாதார தடையாணைகளால் நொருங்கி போய், அமெரிக்காவுடன் ஓர் ஏற்பாட்டை செய்து கொள்ள பெரும்பிரயத்தனத்தில் உள்ள சக்தி வாய்ந்த செல்வந்த தட்டுக்களுக்கும் இடையே சிக்கியுள்ளது. இதேபோல ஈரான் அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகளின் அழுத்தத்தின் கீழ் உள்ளது, இந்நடவடிக்கைகள் ரியால் இன் மதிப்பு 35 சதவீதம் சரிவதற்கு இட்டுச் சென்றுள்ளன.

லெபனானுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் புதனன்று கூறுகையில், “அமெரிக்கர்கள் தாக்கினால், பின்… அந்த ஏவுகணைகள் தகர்க்கப்படும், அந்த ஏவுகணைகளை ஏவியவர்களும் கூட தகர்க்கப்படலாம்,” என்றார், அதேவேளை ஜனாதிபதி புட்டினின், "சமயோசித உணர்வு" மேலோங்கும் என்றவர் நம்புவதாக அறிவித்து, பதட்டங்களைக் குறைத்துக் காட்ட முனைந்தார்.

ரஷ்ய அரசாங்கம் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவுகளை இப்போது முகங்கொடுத்து வருகிறது, இதன் இறுதி தர்க்கம் அந்நாட்டை ஓர் அரை-காலனி அந்தஸ்துக்கு குறைப்பதாக உள்ளது. மாஸ்கோவும் சரி தெஹ்ரானும் சரி, அவர்கள் என்ன விட்டுக்கொடுப்புகள் செய்தாலும் அவை அமெரிக்காவைத் திருப்திப்படுத்தாது என்ற உண்மையை எதிர்கொள்கின்றன, அவை முழுமையாக அடிபணிய வேண்டும் என்பதற்கு குறைவில்லாமல் அமெரிக்கா வேறெதையும் விரும்பவில்லை. ரஷ்ய முதலாளித்துவ வர்க்கமோ அல்லது ஈரானிய முதலாளித்துவ வர்க்கமோ எதுவும் உலக ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்க முடியாது.

ஏகாதிபத்திய சக்திகள் ஒரு புதிய உலகப் போரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பதையே சிரிய நெருக்கடியின் தீவிரப்பாடு எடுத்துக்காட்டடுகிறது. இந்த சமீபத்திய நெருக்கடியின் இறுதிவிளைவு என்னவாக இருந்தாலும், சிரியாவுக்கு எதிரான போர் தாக்குதல் என்பது, ஓர் அணுஆயுத மோதலில் மனிதயினத்தை நிர்மூலமாக்கும் அச்சுறுத்தலுடன், ஈரான், ரஷ்யா மற்றும் இறுதியில் சீனாவுக்கு எதிரான போருக்கு ஒரு முன்னோடியாக மட்டுமே இருக்கும்.

இந்த பேரழிவைத் தடுக்க ஒரே வழி, மேலெழுந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பதாகும்.