ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Japanese PM weakened by Trump summit

ட்ரம்ப் சந்திப்பின் மூலம் ஜப்பானிய பிரதம மந்திரி பலவீனமடைந்தார்

By Peter Symonds 
21 April 2018

ஃபுளோரிடாவில் ட்ரம்பின் மர்-அ-லகோ எஸ்டேட்டில் வியாழனன்று முடிவுற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி சின்ஸோ அபே இடையேயான இரண்டு நாள் சந்திப்பில் மேலெழுந்தவாரியாக அவர்கள் சூடான மற்றும் நட்பு ரீதியான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருப்பினும், வட கொரியா மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து வெளிப்பட்ட அடிப்படை பதட்டங்களை எவ்வகையிலும் மறைக்க முடியாதுபோனது.

இப்பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவம், இரு தலைவர்களுமே, உள்நாட்டு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்பதையும், அதிலும் குறிப்பாக அபே சிக்கியுள்ளார் என்பதையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. ஜப்பானிய பிரதம மந்திரி, அவர் மீதான கருத்து கணிப்பு மதிப்பீடுகள் வீழ்ச்சி கண்டு, டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் அவரை இராஜினாமா செய்ய வலியுறுத்தி பெரும் போராட்டங்கள் எழுந்துள்ள நிலையில் தான் அமெரிக்காவுக்கு சென்றார். ட்ரம்ப் கூட, அவரது வெளியுறவுக் கொள்கையின் போக்கு குறித்து அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில் நிலவும் கடுமையான உட்மோதல்களுக்கு மத்தியிலான முற்றுகையில் உள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஐ சந்திப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு குறித்து ட்ரம்பும் அபேயும் பகிரங்கமாகவே அவர்களது உடன்பாட்டை வெளிப்படுத்தினர். இருப்பினும், இந்த சந்திப்பு தொடர்பாக அபேயும் அவரது அரசாங்கமும் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். மார்ச்சில் எதிர்பாராத விதமாக, ட்ரம்ப் அவரது சொந்த நிர்வாகத்திற்குள் எவரது ஆலோசனையுமின்றி, டோக்கியோ உடன் மட்டும் இணைந்து இதை அறிவித்தார். தற்போது ட்ரம்ப், அபேயை சந்திக்கும் வாய்ப்பை தேர்ந்தெடுத்து, சிஐஏ இயக்குநர் மைக் பொம்பியோ கிம் ஐ சந்திக்க பியோங்யாங்கிற்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதை தெரியப்படுத்தி, எரிச்சலூட்டும் விதமாக காயத்தின் மீது உப்பு தேய்த்தார்.

ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கூர்மையான புவியரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், ட்ரம்ப்-கிம் சந்திப்பின் விளைபொருள் என்ன என்பது பற்றி, அது நடந்தாலும் கூட, அதை முன்கணிப்பு செய்வது சாத்தியமல்ல. முடக்குகின்ற பொருளாதாரத் தடைகளையும் இராணுவ தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தல்களையும் வட கொரியாவை அணுவாயுதங்களை ஒழிக்க வலியுறுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்குமாறாக வாஷிங்டன் உடன் அது இன்னும் நெருக்கமாக இசைந்து செயல்பட வைக்கும் சாத்தியத்தையும் ட்ரம்ப் தூண்டுகிறார். மேலும், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு கிம் தலைவணங்க மறுக்கும் பட்சத்தில், போருக்கான சாக்குப்போக்காக மாறும் ஒரு ஆத்திரமூட்டலை அரங்கேற்ற இந்த சந்திப்பு பயன்படுத்தப்படக்கூடும்.

அமெரிக்காவால் ஜப்பான் ஓரங்கட்டப்பட்டு வருவதுடன், பியோங்யாங் உடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுமானால் இன்னும் கூட அதன் நலன்களும் புறக்கணிக்கப்படுமோ என்ற ஆழ்ந்த கவலைகள் டோக்கியோவில் நிலவுகின்றன. 2012 முதல் அதிகாரத்தில் இருந்துவரும் அபே, ஜப்பானிய இராணுவத்தின் ஆக்கிரோஷமான பயன்பாடு மீதான அதன் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர நாட்டின் அரசியலமைப்பை மறுசீரமைக்க அவர் கொடுக்கும் அழுத்தம் உட்பட, அவரது மறுஇராணுவமயமாக்கல் திட்ட நிரலை முன்னெடுப்பதற்காக வட கொரியாவால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல் என்பதை அவர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். பரவலான எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும் இந்த பிரச்சாரம் அணுவாயுத ஒழிப்பு குறித்த ஒப்பந்தத்தால் வலுவற்றத்தாக்கப்படும்.

அதே நேரத்தில், முழுமையான அணுவாயுத ஒழிப்பை தடுக்கும், அதாவது அமெரிக்காவை சென்று தாக்கும் திறன்படைத்த ஒரு அணுவாயுத ஏவுகணை அபிவிருத்தியை தடுக்கும், ஆனால் தென் கொரியாவையும் ஜப்பானையும் சென்று தாக்கக்கூடிய குறுகிய தூர ஏவுகணைகளை வட கொரியா கொண்டிருப்பதை தடுக்காமல் விட்டுவிடும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை கிம் உடன் ட்ரம்ப் ஏற்படுத்தக்கூடும் என்றும் டோக்கியோ கவலையடைகிறது. பொம்பியோ கடந்த வாரம் அவரது காங்கிரஸ் விசாரணையில் அத்தகைய சாத்தியக்கூறு பற்றி குறிப்பிட்டார்.

அபேயின் அதிதீவிர-தேசியவாத ஆதரவாளரின் முக்கியமான பிரச்சினையான, வட கொரியாவால் கடத்தப்பட்ட ஜப்பானிய குடிமக்களை மீட்டெடுப்பது குறித்து கிம் உடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்துவது உட்பட, அபேக்கு சில சலுகைகளை ட்ரம்ப் வழங்கினார். ஜப்பானிய கவலைகளுக்கு தலை அசைப்பதுபோல, அபேயுடன் இணைந்து நிற்கும் ட்ரம்ப், “அது பயனுள்ள ஒரு கூட்டமாக இருக்கப் போவதில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்று கூறி உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூட அறிவித்தார். என்றாலும், ட்ரம்பின் முன்கணிக்கவியலாத தன்மையை கருத்தில் கொண்டால், அத்தகைய உத்திரவாதங்கள் கூட அர்த்தமற்றவையே.

வர்த்தகம் என்று வரும்போது, வர்த்தகப் போர் குறித்த அவரது அச்சுறுத்தல்கள் வெறுமனே சீனாவிற்கு எதிராக மட்டுமல்லாமல், ஜப்பான் உட்பட அனைத்து பொருளாதார போட்டியாளர்களுக்கும் எதிராக தொடுக்கப்படுபவையாகும் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். உருக்கு மற்றும் அலுமினியம் மீதான  அமெரிக்காவின் கடும் தீர்வைகள் குறித்து அபே கோரிய விலக்கை வழங்குவதற்கு அவர் மறுத்துவிட்டார். மாறாக, ஜப்பானுடன் ஒரு இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததோடு, அமெரிக்காவுக்கு பாரிய சலுகைகள் வழங்கப்பட்டால் மட்டுமே அது பசிபிக் கடந்த கூட்டுக்கு (Trans Pacific Partnership-TPP) திரும்பக்கூடும் என்பதையும் வலியுறுத்தினார்.

பத்திரிகையாளர்களிடம் அபே இவ்வாறு தெரிவித்தார்: “அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தத்தில் ஆர்வமாக உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால், இரு நாடுகளுக்குமே TPP சிறந்தது என்ற பார்வையிலிருந்து விவாதங்களை அணுக நாங்கள் விரும்புகிறோம்.” இருப்பினும், ட்ரம்ப், ஜப்பான் மற்றும் பிற உறுப்பு நாடுகள் எதுவாயினும் “எங்களால் மறுக்கவியலாத ஒரு ஒப்பந்தத்தை” வழங்கவில்லை எனில், TPP க்கு திரும்பும் எந்தவொரு வாய்ப்பும் அளிக்கப்பட மாட்டாது என்றுக் கூறி ஒரேயடியாக நிராகரித்துவிட்டார்.

ட்ரம்பிடம் இருந்து எந்த சலுகையும் பெறத் தவறுவது என்பது, அதிலும் அபே க்கு அது ஒரு முக்கியமான, அபாயகரமான அரசியல் அடியாக விழும் சாத்தியமாக இருக்கும். இந்த இரண்டு நாள் சந்திப்பு ஜப்பானில் அவரது அரசியல் நிலைப்பாட்டை புதுப்பிக்கக்கூடும் என்றும், அவரது போட்டியாளர்களிடமிருந்து வரும் சவால்களை முறித்துக் கொள்ள வகைசெய்யும் என்றும் நம்பிக்கை வைத்தே அவர் அமெரிக்காவுக்கு வந்தார். அவரது இராஜதந்திரத்திற்கான மையமாக, வாஷிங்டனுடன் அதிலும் குறிப்பாக ட்ரம்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு, ஆளும் வட்டாரங்களின் மேலதிக விமர்சனங்களை இப்போது அபே எதிர்கொள்கிறார்.

Asahi Shimbun பத்திரிகையில் நேற்று வெளியான தலையங்கம், அபே-ட்ரம்ப் சந்திப்பு, “ட்ரம்ப், அவரது ‘அமெரிக்கா முதல்’ கொள்கையின் கீழ் அவரது கோரிக்கைகளை அமெரிக்காவின் விசுவாசமான நட்பு நாடுகள் கூட ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க முயற்சிக்க தொடர்ந்து தெளிவாக விருப்பம் கொண்டிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் இராஜதந்திரமிக்க கடுமையான யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது…” என அறிவித்தது. ட்ரம்பை மையப்படுத்தி செய்தித்தாள் மேலும் தொடர்ந்து, சீன, தென் கொரிய மற்றும் பிற பிராந்திய தலைவர்களுடனான இயங்கக்கூடிய உறவுகளை ஸ்தாபிக்க அபே தவறிவிட்டார் என்பதுடன், “இப்பிராந்தியத்தில் ஜப்பானுக்கு இருந்த இராஜாங்க செல்வாக்கையும் கீழறுத்துவிட்டார்” என தெரிவித்தது.

அமெரிக்காவில் இருந்து அபே புறப்படுவதற்கு சற்று முன்பு, அபே தனது வழிகாட்டியாக கருதி வந்திருக்கின்ற, முன்னாள் ஜப்பானிய பிரதம மந்திரி ஜூனிசிரோ கோய்ஸூமி, ஜூனில் அபே இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், செப்டம்பரில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party-LDP) தலைவராக அவரை மறுதேர்வு செய்யக் கூடாது என்றும் பரிந்துரைத்தார். ஒரு கால்நடை மையம் மற்றும் அதி-தேசியவாத பாலர்பள்ளி அமைப்பதில் நெருங்கிய கூட்டாளிகளுக்கு அரசாங்க நிதி ஆதாயங்களை அவர் வழங்கியுள்ளார் என்ற இரண்டு ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஏற்கனவே அபே சிக்கியுள்ளார்.

நிதி அமைச்சரகத்தின் ஒரு மூத்த அதிகாரியான நிர்வாக துணை நிதி அமைச்சர் ஜூனிச்சிரி ஃபுக்குடாவுக்கு எதிராக எழுந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களுடன் இந்த வாரம் மற்றொரு ஊழல் வெடித்தது. அமெரிக்கா மற்றும் பிற இடங்களிலும் எழுந்த இழிவான #MeToo பிரச்சாரத்திற்கு இணையாக, ஃபுக்குடா ஒரு பெயர் குறிப்பிடப்படாத பெண் நிருபரின் மார்பகங்களைத் தொடுவதற்கு கேட்டதாக கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். இந்த குற்றச்சாட்டுக்கள் ஃபுக்குடாவை எதிர்ப்பதற்கான நோக்கத்தில் மட்டும் தொடுக்கப்படவில்லை, மாறாக நிதி மந்திரி டாரோ ஆசா இந்த கூற்றுக்கள் மீது விசாரணை நடத்தத் தவறியதற்கும் எதிராக சேர்த்து தொடுக்கப்பட்டவை.

இந்த வாரம், அபேயின் கருத்து கணிப்பு மதிப்பீடுகள் சாதனைகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிறன்று நிப்பான் டிவி ஒளிபரப்பிய ஒரு ஆய்வு, டிசம்பர் 2012 இல் அபே பதவியேற்றதில் இருந்து மிகக் குறைந்த சதவிகிதமாக, அவருக்கு வெறும் 26.7 சதவிகித ஆதரவு இருப்பதாகக் காட்டியது. திங்களன்று, Asahi Shimbun செய்தித்தாளின் ஒரு கருத்து கணிப்பு அவருக்கு 30 சதவிகித ஆதரவு இருப்பதாக காட்டியது. சனியன்று, டோக்கியோ மற்றும் பிற நகரங்களில், 30,000 முதல் 40,000 வரையிலான மக்கள் ஈடுபாட்டுடன் எழுந்த ஆர்ப்பாட்டங்கள், அபேயை “ஒரு பொய்யர்” என்று முத்திரை குத்தியதோடு, பதவி விலகிடவும் அவருக்கு அழைப்பு விடுத்தன.

அபே மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பரந்த மக்கள் விரோதப் போக்கு அங்கு நிலவுகிறது, அது வெறுமனே ஊழல் மோசடிகள் மீதானவை மட்டுமல்ல, மாறாக இன்னும் அடிப்படையாக அவரது மறுஇராணுவமயமாக்கல் திட்டம் மற்றும் சீரழிந்துவரும் வாழ்க்கைத் தரங்கள் குறித்த பொறுப்பு மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதானவையாகும். இருப்பினும், LDP க்கு உள்ளேயும் உட்பட ஆளும் உயரடுக்கின் கன்னைகள், தலைவரை மாற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியில் இந்த ஊழல்களை சுரண்டி வருகின்றன.

கோய்ஸூமியின் மகன் ஷின்ஜுரோ கோய்ஸூமி உட்பட, LDP இன் பல பிரமுகர்கள், சாத்தியமான போட்டியாளர்களாக கூறப்பட்டு வருகின்றனர். இருந்தாலும், பெரும்பாலும் ஒரு மாற்றாக, இராணுவவாத முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகுரு இஷிபா உள்ளார், இவர், அரசியலமைப்பு திருத்தங்களுக்கு போதுமான அழுத்தம் கொடுக்க முனையவில்லை என்று அபேயை விமர்சித்துள்ளார்.

“போர்நாடும் உரிமையை” ஜப்பான் கொண்டிருக்க வேண்டுமென இஷிபா விவாதித்துள்ளார், அதாவது ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களை இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், அதன் சொந்த அணுவாயுதங்களை அதுவே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

வடகொரியாவுடன் ட்ரம்ப்பின் திரைமறைவு இராஜதந்திரம் [PDF]

[19 April 2018]

போர் மற்றும் உள்நாட்டு நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப்பும் அபேயும் சந்திக்கின்றனர் [PDF]

[18 April 2018]