ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: Public service trade union announces extension of protest strikes

ஜேர்மனி: பொது சேவை தொழிற்சங்கம் எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் நீடிக்குமென அறிவிக்கின்றது

By Ulrich Rippert 
4 April 2018

கடந்த சில வாரங்களாக, மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களில்  பணிபுரியும் 100,000 ற்கும் அதிகமான பொதுத்துறை ஊழியர்கள், “எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள்” என்றழைக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை பராமரிப்பு தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், சமூகசேவை தொழிலாளர்கள் மற்றும் பலரது மோசமான வேலை நிலைமைகள் மற்றும் குறைவூதியங்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடுவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.


ஊர்வலத்தில் தீயணைப்பு வீரர்கள்

மார்ச் 28 அன்று, வேர்டி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவரான பிராங்க் பியர்ஸ்க, ஈஸ்டர் விடுமுறைக்கு பின்னர் இந்த எச்சரிக்கை வேலைநிறுத்தங்களை கணிசமானளவு விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தார். சார்ப்ரூக்கன் நகரத்தில் ஒரு பேரணியில், பியர்ஸ்க, பொது வேலைவழங்குநர்கள் சங்கம் இது குறித்து எந்தவித வாய்ப்பையும் உருவாக்க தவறுமானால், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9 அன்று பரந்த, தேசியளவிலான அணிதிரட்டல் ஒன்று நடாத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த வேலைநிறுத்த அலை, குழந்தை பராமரிப்பு, கழிவு அகற்றல், விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் தேக்கநிலையிலோ அல்லது விழ்ச்சியடைவதாகவோ உள்ள நிலையில், ஊழியர் மத்தியில் தொடர்ந்த ஆட்குறைப்பையும் அதிகரித்த வேலைப்பளுவையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத அவர்களிடையே அதிகரித்துவரும் கோபம் மற்றும் போர்க்குணம் மீதான வேர்டியின் பதிலிறுப்பாகவே மேலதிக வேலைநிறுத்தங்களின் அறிவிப்பு உள்ளது.

நகராட்சி வேலைவழங்குநர்கள் சங்கம் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு மீதான பியர்ஸ்கவின் வேலைநிறுத்த அறிவிப்பினாலும் அவரது விமர்சனத்தினாலும், அனைத்து முந்தைய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் நடந்துகொண்டதைப் போல இதிலும், வேலைவழங்குநர்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கம் தான் வேர்டி நிற்கிறது என்ற உண்மையை மறைக்க முடியவில்லை. மேலும், இத்தொழிற்சங்கம், சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party-SPD) மற்றும் பழமைவாதக் கட்சிகள் கொண்ட ஒரு புதிய பெரும் கூட்டணியை தோற்றுவிப்பதை தீவிரமாக ஆதரித்துள்ளததோடு, அரசாங்கத்தையும் தீவிரமாக ஆதரித்து வருகிறது. கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக, சிறு அளவிலான எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் பலனற்ற “ஊசிகுத்தும்” தன்மையிலான செயல்பாடுகள் மீதான அதன் பிரதிபலிப்பை கட்டுப்படுத்தி, தொழிற்சங்கம் தற்போதைய தொழிலாளர் பிரச்சினையை “மிகக்குறைந்த மட்டத்தில்” வைத்துள்ளது.

உண்மையில், பதிலளிப்பதற்கு “வேலைவழங்குநர்களின் மறுப்பு” என்பது பற்றி பியர்ஸ்க சீற்றத்துடன் காட்டிய வியப்பு முற்றிலும் பாசாங்குதனமானது. இப்போராட்டம் தொடங்கிய உடனேயே,  வேலைவழங்குநர்கள் உடனான மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை, புதிய உள்துறை மந்திரி பதவியேற்று ஒரே நாளில் மார்ச் 12 அன்று நடத்தப்பட்டது என்ற நிலையில், பதவிவிலகிச்செல்லும் அமைச்சர் ஒரு வாய்ப்பை வழங்கமாட்டார் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. ஊடகங்களில் அதிகளவு ஊக்குவிக்கப்பட்டு, ஏப்ரல் 15/16 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்ற போதிலும், அடுத்தக்கட்ட எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள் குறித்த சமீபத்திய அறிவிப்பு முடிவான பேரம் பேசலுக்கான தயாரிப்பாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.

தொழிற்சங்கம் ஒப்பந்த பேரம்பேசலுக்கு அணுகியபோதே அதன் நன்கு வடிவமைக்கப்பட்ட தந்திரோபாயங்களை பற்றி பல பொதுத்துறை ஊழியர்கள் தன்கு பரிச்சயமாகியிருந்தனர். ஒரு நெருக்கமான குடும்பஉறவு ஆதிக்க வலைப்பின்னல், உடந்தையாக இருத்தல் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்கனவே உள்ள கையூட்டு நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் போன்ற நிலைமைகளுக்கு மத்தியில், வேர்டி மற்றும் நகராட்சி மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு இடையேயான நெருங்கிய தொடர்புகளைப் பற்றி அவர்கள் நன்கறிவர். தொழில் முறையில் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாதையாகவே வேர்டியின் அதிகாரத்துவ ஏணி உள்ளது.

பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் பல வருடங்களாக ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். பிராங்க் பியர்ஸ்க முன்னதாக வேலைவழங்குநர்கள் பக்கம் இருந்ததோடு, ஹனோவெரில் ஒரு முன்னாள் பணியாளர் இயக்குநராக அவர் செயலாற்றிய போது வேலை வெட்டுக்களையும் திணித்தார். நகராட்சி வேலைவழங்குநர்கள் சங்கத்தின் (VKA) தற்போதைய தலைவரான தோமஸ் போலே, SPD இல் உறுப்பினராக இருப்பதோடு, வேர்டியிலும் உறுப்பினராக உள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கட்சி அரசாங்கத்தின் மூலமாக தொடங்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மற்றும் வேர்டியின் நெருங்கிய ஒத்துழைப்புடன் அடுத்தடுத்த அனைத்து நிர்வாகங்களினாலும் அவை செயல்படுத்தப்பட்டமை ஆகியவற்றின் நேரடி விளைவுகளாகவே ஒட்டுமொத்த பொதுத்துறையின் துன்பகரமான வேலை நிலைமைகள் இருந்தன. “கடன் தடை” என்றழைக்கப்படும், கடன்பெறுதலை மட்டுப்படுத்தப்படும் அரசாங்க கொள்கை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் செலவின வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் போன்றவைகள் வேலைகளின் பெரும் இழப்புக்கு வழிவகுத்தன.

கடந்த ஆண்டு இறுதியில் ARD தொலைக்காட்சி சேனலில் வெளியான ஒரு நிகழ்ச்சி, பொது சேவைகளில் 100,000 க்கும் அதிகமான வேலைகள் குறைவாக இருப்பதாக செய்தி வெளியிட்டது. சமீபத்திய ஒரு ஆய்வின்படி, பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் ஆகியவற்றில் மட்டும், 52,000 கூடுதல் திறமைவாய்ந்த தொழிலாளர்களின் தேவை உள்ளது. மேலும், அறிக்கையின் மூலம் பெறப்பட்ட இறுதி முடிவாக, பொது சேவைகள் நிதி பற்றாக்குறையில் இருந்து வருவதோடு, தொடர்ந்து அழிவிற்கும் முகம்கொடுக்கிறது.

குறிப்பாக நோயாளி பராமரிப்பு துறையில் நிலைமை மிகமோசமாக உள்ளது. மருத்துவமனைகள், ஓய்வு மற்றும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவை ஒன்றையடுத்து மற்றொன்று என சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை எதிர்கொள்கின்றன. வேலைநிறுத்தக்காரர்கள் WSWS இடம், 6 சதவிகித ஊதிய உயர்வு கோரிக்கை என்பது முக்கியமானது என்று தெரிவித்தனர். அவர்களுக்கு தேவைப்படும் வேலையை நிறைவேற்ற எவரும் தயாராக இருப்பது மிக அரிதானது என்ற நிலையில் தற்போதைய ஊதிய நிலை மிகக் குறைவானதாகும். அதிகரித்துவரும் வேலைப்பளு, கூடுதல் நேரம் பணிசெய்ய அழுத்தம் கொடுப்பது ஆகியவை நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கின்றன. இதுபோன்ற கடுமையான பணிச்சுமை, பல தாதியர்களையும் பராமரிப்பு தொழிலாளர்களையும், தவிர்க்கமுடியாமல் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பினும், தற்காலிக வேலைவாய்ப்புக்காக நிரந்தர வேலையிடங்களை விட்டு மாறுவதற்கு கூட இட்டுச்சென்றுள்ளது. அநேகருக்கு, தாங்கமுடியாத மனஅழுத்தங்களில் இருந்து தப்பிக்க இது ஒன்று மட்டுமே வழியாக உள்ளது.

இது தொடர்பாக, புதிய கூட்டாட்சி சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் (CDU) க்கு கோபமுற்ற ஒரு செவிலித்தாய் எழுதிய ஒரு கடிதம் குறிப்பிடத்தக்கது. ஒரு அறுவை சிகிச்சை செவிலித்தாயாக இருக்கும் ஜானா லாங்கர், “நான் எனது பொறுமையை இழக்க முன்பு, முதலில் திரு. ஸ்பான் இந்த கடிதத்தைப் பெறுவார்” என்று எழுதுகிறார். அத்தகைய ஒரு முக்கிய அமைச்சரகத்திற்கு தலைமை தாங்கும் எந்தவொரு தகுதியும் இல்லாத அமைச்சர் என்று அவர் குற்றம்சாட்டினார், மேலும், புதிய மந்திரி உடனடியாக, ஏழைகளும் வேலையில்லாதவர்களும் அற்பமான ஹார்ட்ஸ் IV சமூகநலக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு எதிராக தாக்குதலை நடத்தினார் என்று அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்.

“நமது சமூக பாதுகாப்பை அவசர தேவையாக கொண்டுள்ள மக்கள் மீது சமீபத்திய வாரங்களில் திணிக்கப்பட்ட உங்களது அறியாமை நிறைந்த மற்றும் அவதூறான அறிவிப்புகளை விட மனித நலத்திற்கு இன்னும் அதிக தேவையுள்ளது என்பதை நாம் தெளிவுபடுத்துவது மிக முக்கியமானது,” என்று குறிப்பிடுகிறார்.

பின்னர், அவர் சுகாதார பராமரிப்பு முறையில் உள்ள வணிகமயமாக்கத்தை பற்றி குறிப்பிடுகிறார். “நோயைத் தாண்டி பணம் சம்பாதிப்பது என்பது உங்களுக்கு நன்மையானதாக இருக்கலாம், அத்துடன் உங்களது பணப்பையை நன்கு நிரப்புவதாகவும் இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரை இது நியாயமற்றது மற்றும் கண்டனத்திற்குரியது”. மேலும் லாங்கர், “நோய்க்கு அப்பாற்பட்டு பெருமளவு இலாபங்களை உருவாக்குவதற்கு என்ன அவசியம்? இந்த தனியார்மயமாக்கம் அதிகரித்தளவில் ஏன் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது? அதிலும், வசதிபடைத்த பங்குதாரர்களும் மேலாளர்களும் தானே இந்த அமைப்பு முறையின் பயனாளிகளாக இருக்கின்றனர். நோயாளிகளோ அல்லது குடியிருப்பாளர்களோ இந்த கொள்கையினால் பயனடைய போவதில்லை என்பது தானே உண்மை?” என்றெல்லாம் கேள்விகளை எழுப்புகிறார்

தனியார்மயமாக்கலின் விளைவுகள் பேரழிவுகரமானவையாக உள்ளன. இலாபங்களை அதிகரிப்பதற்காக, பணியாளர்களின் இழப்பில், அதிலும் குறிப்பாக செவிலியர் மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் இழப்பில் பணியாளர்கள் மற்றும் செலவுகள் குறித்து வெட்டுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இது நீண்டகாலத்திற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நானும் “எனது ஆயிரக்கணக்கான சக ஊழியர்களும்” “இந்த அமைப்பு முறையில் தலைகீழான மாற்றத்தை” எதிர்பார்த்தோம்.

ஜானா லாங்கர் இந்த கடிதத்தை முகநூலில் பிரசுரித்து சில மணி நேரங்களிலேயே, பல்லாயிரக்கணக்கான சக ஊழியர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து உற்சாகமிக்க ஆதரவை பெற்றார்.

லாங்கர் அவரது கடிதத்துடன், மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் பொதுத்துறை முழுவதிலும் நிலவும் வேலை நிலைமைகளின் பெருமளவிலான சீரழிவிற்கு எதிராக போராடுவதற்கு, அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது என்ற நீண்டகால விளைவுகளைக் கொண்ட ஒரு பிரச்சினை பற்றியும் குறிப்பிட்டார்.

புதிய நிர்வாகம், முந்தைய அரசாங்கங்களை விட இன்னும் இயன்ற அளவிற்கு பொது மக்கள் கருத்துகளையும், எதிர்ப்பையும் தடுக்கவும் எதிர்த்து நிற்கவும் தீர்மானித்துள்ளது. அதன் இராணுவ மறு ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக, இது, சமூக செலவினங்களில் மேலதிக கடுமையான வெட்டுக்களை செயல்படுத்தவும் மற்றும் பொலிஸ்-அரசு வழிமுறைகளுடன் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கவும் திட்டமிடுகிறது.

வேர்டி, முந்தைய அரசாங்கங்களுடன் நடந்து கொண்டது போலவே தற்போதைய அரசாங்கத்துடனும் நெருக்கமாக பணியாற்றுகிறது. இந்த எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள் பொதுத்துறை பணியாளர்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றன. மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் 6 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, தெருக்களை துப்புரவாக வைத்தல், குப்பை சேகரித்தல் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து குறித்த பொறுப்புக்களுடன், விமான நிலையங்களிலும் மற்றும் நகரங்களிலும் பணியாற்றுகிறார்கள், மேலும், தினசரி பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக வசதியிடங்களிலும், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களிலும், நூலகங்களிலும், திரையரங்குகளில் அல்லது வயது வந்தோர் கல்வி மையங்களிலும், நிர்வாக பொறுப்பிலும், நீச்சல் குளங்கள், காடு வளர்ப்பு, தீயணைப்பு நிலையங்கள் போன்றவற்றிலும் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் வேர்டியோ இந்த தொழிலாளர் சக்தியை அணிதிரட்டுவதற்கு நோக்கம் கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, இத்தகைய சக்தியை கட்டுப்படுத்துவதும் நசுக்குவதும் தான் அதன் வேலையாகவுள்ளது. சிறந்த ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்காக போராடுவதற்காகவும், அவர்களது உரிமைகள் மற்றும் சமூக நலன்களை பாதுகாக்கவும், பொதுத்துறை ஊழியர்கள் தொழிற்சங்கத்துடனான தொடர்பை முறித்துக்கொண்டு, சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய குழுக்கள், இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளுடனும் மற்றும் பிற நாடுகளுடனும் ஒரு கூட்டு போராட்டத்தை ஒழுங்கமைக்க தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.